http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : ஐ ஹேட் யூ, பட் - பகுதி - 3

பக்கங்கள்

வியாழன், 19 மார்ச், 2020

ஐ ஹேட் யூ, பட் - பகுதி - 3

அப்புறம் வந்த சில நாட்கள்.. தினமும் மாலை அசோக்கும் ப்ரியாவும் கவிதாவை கழட்டிவிட்டு ஸ்குவாஷ் ஆடினார்கள். 'ஒரே ஒரு கேம் கவிதா..' என்று அவளிடம் சொல்வார்கள். ஒரு மணி நேரம் தாண்டியும் கெக்கபிக்க என கனைத்தபடியே விளையாடிக்கொண்டு இருப்பார்கள். இரண்டு நாட்கள் இவர்கள் கண்ணாடி அறைக்குள் விளையாடுவதையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்த கவிதா, மூன்றாம் நாள் 'இல்ல ப்ரியா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நீங்க போயிட்டு வாங்க..' என்று டீசண்டாக ஒதுங்கிக் கொண்டாள். மேலும் இரண்டு வாரங்கள் ஓடின.. ஃப்ரேம்வோர்க் டெலிவர் செய்யும் நாள் நெருங்கி கொண்டே இருந்தது. அசோக் தனக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த காம்பனன்ட் டிசைனை இரண்டு நாட்கள் முன்னதாகவே முடித்துவிட்டான். உடல்நிலை சரியில்லாமல் இரண்டு நாட்கள் லீவ் போட்டுவிட்ட ஹரியின் வேலையை எடுத்து செய்து கொண்டிருந்தான். ப்ரியா தனது வேலையை முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். அவளுக்கு வந்து வாய்த்த காம்பனன்ட் காப்ளிகேட்டடாக அமைந்து போக, கஷ்டப்பட்டாள். அப்போது ஒரு நாள் மாலை.. அவர்கள் ஆபீஸ்.. நேத்ரா அவசரமும், பதட்டமுமாய் அசோக்கின் இடத்திற்கு வந்தாள். அவளுடைய குரலிலும் ஒருவித அவசரம்..!!"ஹே அசோக்.. ஐ நீட் எ ஹெல்ப் ஃபரம் யூ..!!" என்றாள். "சொ..சொல்லு நேத்ரா..!!" "உன் பைக்ல கொண்டு போய்.. என்னை ஹோசூர்ல ட்ராப் பண்ண முடியுமா..??" "ஹோசுரா..?? ஹோசூர் எதுக்கு போற நீ..??" "அது.. நாலு நாள் ஹாலிடே வருதுல..?? எங்க காலேஜ் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் ஒண்ணா சேர்ந்து கொடைக்கானல் ட்ரிப் போகலாம்னு ப்ளான் பண்ணிருந்தோம்.. இன்னைக்கு ஈவினிங் செவன் ஓ க்ளாக் ட்ரைன்..!! ஆக்சுவலா இன்னைக்கு சீக்கிரமே கெளம்பி மெஜஸ்டிக் போக நெனச்சிருந்தேன்.. லாஸ்ட் மொமன்ட்ல 'அதை முடிச்சுட்டு போ'ன்னு இந்த ரவி பயங்கர டார்ச்சர் பண்ணிட்டான்.. அல்ரெடி இங்கயே செவன் ஆயிடுச்சு.. அதான் ஹோசூர் ஸ்டேஷன் போய் ட்ரெயினை புடிச்சிடலாம்னு..!! ப்ளீஸ் அசோக்.. ஹெல்ப் பண்ணுடா..!!" "சரி பண்றேன்.. பட் ஒன் கண்டிஷன்..!!" "என்ன..??" "உன் ஃப்ரண்ட்ஸ்லாம் எனக்கு இன்ரொட்யூஸ் பண்ணி வைக்கணும்..!!" சொல்லிவிட்டு அசோக் கண்சிமிட்ட, "அடச்சை.. ஜொள்ளு..!!" நேத்ரா முகத்தை சுளித்தாள். "அப்போ போ.. என்னால முடியாது..!!" "சரி.. சரி..!! இன்ரொட்யூஸ் பண்ணி வைக்கிறேன்.. வந்து தொலை..!!" அடுத்த பத்து நிமிடங்களில் அசோக்கும், நேத்ராவும் ஆபீசில் இருந்து பைக்கில் கிளம்பினார்கள். ஹோசூர் ரயில்வே ஸ்டேஷனை அடைந்தபோது மணி 7.45. அவர்கள் சென்று அரை மணி நேரம் கழித்துத்தான் ட்ரெயின் வந்தது. நேத்ராவின் ஃப்ரண்ட்ஸ் என்றதும் பத்து பதினைந்து கன்னடக்கிளிகள் வரப் போகின்றன என்று கனவில் இருந்தான் அசோக். ஆனால் வந்தது என்னவோ தடி தடியாய் நான்கைந்து பையன்களும், இரண்டே இரண்டு அல்ட்டாப்பு ராணிகளும்..!! அந்த அல்ட்டாப்பு ராணிகள் இவனை கண்டுகொள்ளாமல் நேத்ராவுடன் கன்னடத்தில் பேசின. தடியர்கள் விரோதியை பார்ப்பது போல இவனை முறைத்தனர்..!! நொந்து போனான்..!! ஒரு வழியாய் நேத்ராவை வழி அனுப்பி வைத்தான். பசியெடுக்க ஆரம்பிக்கவே, ஹோசூர் அவுட்டோரிலேயே ஒரு ரெஸ்டாரன்டில் வண்டியை நிறுத்தி, வாணியம்பாடி பிரியாணி வாங்கி வயிற்றுக்குள் தள்ளினான். 'ஆபீஸ் சென்று பேக் எடுத்துவிட்டு, வீட்டுக்கு கிளம்பிவிட வேண்டியதுதான்..' என்ற எண்ணத்துடன் பெங்களூர் நோக்கி பைக்கை சீற விட்டான்.ஆபீசை அடைந்தபோது மணி பத்தை தாண்டியிருந்தது. அவர்கள் வேலை பார்க்கும் ஃப்ளோருக்குள் நுழைந்தான். அமைதியே எங்கும் நிறைந்து போய் இருந்தது அந்த தளம். ஏ.ஸி நிறுத்தப்பட்டிருந்தது. பெரும்பாலான விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே ஒரு சில விளக்குகள் மட்டும் வெள்ளை நிறத்தில் வெளிச்சத்தை சிந்திக் கொண்டிருந்தன. அந்த வெளிச்சத்தின் அடியில், தலையைப் பிடித்தவாறு மானிட்டரை வெறித்தனர் சிலர்.. அமெரிக்காவில் இருக்கும் க்ளயன்ட்டின் ஆங்கிலம் புரியாமல் தடுமாறினார் சிலர்.. பிஸ்ஸா கடித்தவாறு யூட்யூப் பார்த்தனர் சிலர்..!! அசோக் தனது இடத்தை அடைந்து தன் பேகை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டான். ஓடிக்கொண்டிருந்த ப்ரோக்ராம்களை எல்லாம் கில் செய்து, சிஸ்டத்தை ஷட்டவுன் செய்தான். கிளம்ப போகையில்தான் எதேச்சையாய் கண்களை சுழற்றியவனின் பார்வையில் ப்ரியா பட்டாள். கம்ப்யூட்டர் திரையை வெறித்தவாறு ஏதோ டைப் செய்து கொண்டிருந்தாள். ப்ரியாவை கண்டதும் அசோக்கிற்கு லேசாக ஆச்சரியம். 'என்றும் ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி ஓடிவிடுவாளே.. இன்று இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாள்..?' என்று குழப்பமுற்றான். மெல்ல நடந்து ப்ரியாவின் இடத்தை நெருங்கினான். "ஹேய் லூசு.. இன்னும் என்ன பண்ணிட்டு இருக்குற இங்க..?? வீட்டுக்கு கெளம்பலையா..??" என்று எப்போவும் போல ஒரு இயல்பான கேலிக்குரலிலேயே கேட்டான். "இல்ல அசோக்... கொஞ்சம் வேலை இருந்தது.. அதான்..!! அதுசரி.. நீ எங்க போய் சுத்திட்டு வர்ற..??" ப்ரியாவின் குரலில் ஒருவித களைப்பு தெரிந்தது "சுத்தலாம் இல்ல.. நேத்ராவை ஹோசூர் வரை பைக்ல கொண்டுபோய் விட்டு வந்தேன்..!!" "ஹோசூரா..?? அவ ஹோசூர் எதுக்கு போறா..??" "ஃப்ரண்ட்சொட கொடைக்கானல் டூர் போறாளாம்.. ட்ரெயின் மிஸ் பண்ணிட்டா.. ஹோசூர் ஸ்டேஷன் போய் ட்ரெயினை புடிச்சோம்....!!" "ஹ்ம்ம்.. எல்லாம் நல்லா என்ஜாய் பண்றீங்க போல..?? நான் மட்டும் இங்க கெடந்து முட்டிட்டு இருக்குறேன்.. எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி நடக்குதோ..??" ப்ரியா ஒருமாதிரி விரக்தியாக சொல்ல, "ஹேய்.. என்னாச்சு இப்போ..?? ஏன் இப்படிலாம் பேசுற..??" அசோக்கும் இப்போது சற்றே சீரியஸானான். "ஆமாம்.. உங்க எல்லாருக்கும் நல்லா ஈசியான காம்பனன்ட்டா அமைஞ்சு போச்சு.. எல்லாம் சீக்கிரம் முடிச்சுட்டு ஊர் சுத்த கெளம்பிட்டீங்க..!! எனக்கு மட்டும் இப்படி காம்ப்ளிக்கேட்டடான காம்பனன்ட் வந்து மாட்டிக்கிச்சு.. எப்படி முடிக்கிறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன்..!! ச்சே.. வாழ்க்கையே வெறுத்துடும் போல இருக்கு..!!" "ப்ச்.. சும்மா லூசு மாதிரி உளறாத..!! உனக்கு என்ன காம்பனன்ட்.. 'சிங்கிள் ஸைன் ஆன்'தான..?? அது ஒன்னும் காம்ப்ளிக்கேடட்லாம் இல்ல.. சிம்பிள்தான்..!!" "ஆமாமாம்.. உனக்கு எல்லாம் சிம்பிள்தான்..!! எங்களுக்குத்தான் அதுல இருக்குற கஷ்டம் புரியும்..??" "ஹ்ம்ம்.. சரி விடு.. காம்ப்ளிக்கேட்டட்தான்.. ஒத்துக்குறேன்.. சந்தோஷமா..?? இப்போ கெளம்பு.. வீட்டுக்கு போகலாம்..!!" "இல்ல அசோக்.. நான் வரல.. நீ கெளம்பு..!!" "வரலையா..?? அல்ரெடி டென் ஆகிடுச்சுடி.. வீட்ல தேட போறாங்க..!!" "அப்பாட்ட சொல்லிட்டேன் அசோக்.. வர லேட் ஆகும்னு..!! இன்னைக்கு நான் கெளம்ப எப்படியும் ரெண்டு ஆயிடும்..!!" "ப்ச்.. கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு..?? ரெண்டு மணி வரை இங்க தனியா உக்காந்திருக்க போறியா..?? சொல்றதை கேளு.. வேலை பாத்தது போதும்.. கெளம்பு..!!" "இதை முடிக்கனுன்டா.. மண்டே டெலிவர் பண்ணனும்..!!" "பாத்துக்கலாம் வா..!!" "என்னத்த பாத்துக்க சொல்ற..?? இன்னைக்கு மட்டும் இல்ல.. நாலு நாள் ஹாலிடேஸும் எனக்கு ஆபீஸ்தான் போகப்போகுது போல.. அப்படியும் முடிக்க முடியுமான்னு தெரியல..!!” படபடவென சொன்ன ப்ரியா சட்டென நிறுத்தினாள். அசோக் அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது ப்ரியா சற்றே வெறுப்பான பாவத்துடன், தன் தலையை அழுத்தி பிடித்துக் கொண்டாள். குரலில் ஒருவித சோகம் தொணிக்க தொடர்ந்தாள். "தம்பி நாளைக்கு சென்னைல இருந்து வர்றான் அசோக்.. அவன் ஃப்ரண்ட் யாரோ கூட கூட்டிட்டு வர்றான்.. எல்லாம் சேர்ந்து நாளைக்கு மைசூர் போறதா ப்ளான்..!! இப்போ என்னால எல்லாம் போச்சு.. வந்து என்னை கேவலமா திட்டப் போறான்..!! ச்ச.. எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா..??" அசோக்கிற்கு ப்ரியாவின் மனநிலை புரிந்தது. குடும்பத்துடன் ஜாலியாக ஊர் சுற்றலாம் என்று திட்டமிட்டிருப்பாள். இப்போது அது இல்லை என்றதும் குழந்தை மாதிரி பரிதவிக்கிறாள். ப்ரியாவின் சோகம் அவனை வாட்டியது. அவளுக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது. ஒரு சில வினாடிகள், அவளையே சலனமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்த அசோக், அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவனாய் சொன்னான்."ஓகே.. நான் ஒன்னு சொல்றேன்.. செய்றியா..??" "என்ன..??" ப்ரியா தலையை நிமிர்த்தி கேட்டாள். "உன் சிஸ்டம் ஐ.பி அட்ரசும், பாஸ்வேர்டும் எனக்கு மெயில் அனுப்பு..!!" "எ..எதுக்கு..??" "அனுப்பு.. சொல்றேன்..!!" ப்ரியாவிற்கு அரைகுறையாய் ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. கொஞ்ச நேரம் அசோக்கின் முகத்தை மலங்க மலங்க பார்த்தவள், அப்புறம் படபடவென மெயில் டைப் செய்து, அவன் கேட்ட விவரங்களை அவனுடைய ஐடிக்கு அனுப்பினாள். "ம்ம்.. அனுப்பியாச்சு..!!" என்றாள் மெலிதாக. "குட்..!! இப்போ என்ன பண்ற.. சிஸ்டத்தை அப்படியே லாக் பண்ணிட்டு.. உன் பேக் எடுத்துட்டு கெளம்பு.. வீட்டுக்கு போலாம்..!!" "ஐயோ.. இதை முடிக்கணும் அசோக்..!!" "எல்லாம் நான் பாத்துக்குறேன்.. நீ கெளம்பு..!! எதைப்பத்தியும் வொர்ரி பண்ணிக்காத.. நாளைக்கு மைசூர் போ.. அப்பா, தம்பியோட நல்லா ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணு.. நாலு நாள் நல்லா என்ஜாய் பண்ணு.. மண்டே வர்றப்போ உன் காம்பனன்ட் ரெடியா இருக்கும்..!!" "அசோக்.. இது நீ நெனைக்கிற மாதிரி ஈசி இல்ல.. நான் ஒரு மாசமா உக்காந்து முட்டிட்டு இருக்கேன்.. ஒரு எழவும் புரியலை..!!" "ப்ச்.. அதுதான் நான் பாத்துக்குறேன்னு சொல்றேன்ல..?? மண்டே நீ வர்றதுக்குள்ள.. உன் காம்பனன்ட்டை முடிச்சு வைக்க வேண்டியது என் பொறுப்பு.. போதுமா..??" "நெஜமா..??" "ப்ராமிஸ்..!!!" அசோக் அவனது வலது கையை விரித்து ப்ரியாவின் தலையில் வைத்தவாறு சொன்னான். உடனே ப்ரியாவின் முகத்தில் ஒரு புதுவித மலர்ச்சி. அவ்வளவு நேரம் அவளுடைய கண்களில் தெரிந்த கவலை நீங்கி ஒரு புதுவித பிரகாசம். தனது செவ்விதழ்களை விரித்து, அசோக்கை பார்த்து அழகாக புன்னகைத்தாள். "ஹ்ம்ம்.. இப்படி சிரிக்கிறப்போ முகம் எப்படி அழகா இருக்கு..? அதைவிட்டு சும்மா சாக்லேட்டை பறிகொடுத்த சின்னப்புள்ள மாதிரி உர்ருன்னு மூஞ்சியை வச்சுக்கிட்டு..!!" "ஹாஹாஹாஹாஹாஹா..!!" "சரி கெளம்பு.. டைமாச்சு..!! லேட்டாச்சுனா.. அப்புறம் அதுக்கு வேற என் அண்ணன்.. ஐ.டி இண்டஸ்ட்ரி பத்தி தமிழ் எம்.ஏ மாதிரி தாறுமாறா திட்ட ஆரம்பிச்சுடுவான்..!!" "ஹாஹா..!! ஓகே ஓகே.. ஒன் செக்..!!" ஒரு வினாடி நேரம் கேட்டவள், முழுதாக பத்து வினாடிகள் எடுத்துக் கொண்டாள். சிஸ்டம் லாக் செய்து, பேக் எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு, 'போலாமா..??' என்று புன்னகைத்தாள். இருவரும் கிளம்பினார்கள். போகிற வழியில் அசோக் தனது இடத்தில் நின்று, தனது சிஸ்டத்தையும் ஆன் செய்து வைத்தான். "உன் சிஸ்டம் எதுக்கு ஆன் பண்ணின..??" "வீட்ல இருந்து கனெக்ட் பண்ணி வொர்க் பண்ண போறேன்.. ஏதாவது ரெஃபர் பண்ண என் சிஸ்டமும் தேவைப்படலாம்..!! "ஓ.. அப்போ நீ ஆபீஸ் வரப் போறது இல்லையா..??" "நான் ஏன் ஆபீஸ் வர்றேன்..?? நாலு நாளைக்கு இந்த ஏரியா பக்கமே ஒரு ஈ எறும்பு கூட இருக்காது..!! வீட்ல ஒன்னுக்கு ரெண்டு லேப்டாப் இருக்குது.. ஏர்ட்டெல் ப்ராட்பேண்ட் இருக்குது.. வீட்ல இருந்தே பாத்துப்பேன்..??" "ஹ்ம்ம்.. என்னால உன் வீகென்ட் இப்படி ஸ்பாயில் ஆயிடுச்சு..!!" "இட்ஸ் ஓகே ப்ரியா..!!" இருவரும் ஐடி கார்டை ஸ்வைப் செய்துவிட்டு வெளியே வந்தார்கள். வெளியே இருந்த ரெஜிஸ்டரில் வேறு ஆளுக்கொரு என்ட்ரி போட்டார்கள். 'ஹேப்பி வீகென்ட் ஸார்.. ஹேப்பி வீகென்ட் மேடம்..' என்று சிரித்த செக்யூரிட்டியை பார்த்து புன்னகைத்தார்கள். லிப்ஃட் ஏறினார்கள். ஏழாவது தளத்தில் இருந்து லிஃப்ட் மெல்ல கீழிறங்கிக் கொண்டிருந்தது.சில வினாடிகள் ஃப்ளோர் இன்டிகேட்டரையே கவனித்துக் கொண்டிருந்த அசோக், பிறகு இயல்பாக பார்வையை திருப்பினான். தனக்கு பக்கவாட்டில் நின்ற ப்ரியா, தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததை அறிந்ததும், புருவத்தை சுருக்கினான். அவன் அவ்வாறு தன்னை பார்த்த பின்னரும், ப்ரியா தன் விழிகளை அவன் மீதிருந்து விலக்கிக்கொள்ளவில்லை. "ஹேய்.. ப்ரியா.. என்னாச்சு..??" அசோக் புன்னகையுடன் கேட்டான். "தேங்க்ஸ்டா..!!" ப்ரியா நன்றிப் பெருக்குடன் சொன்னாள். "ச்சீ.. லூசு.." அசோக் அவளுடைய தலைமுடியை கலைத்து விட்டான். அசோக்கின் பைக்கிலேயே அவனும் ப்ரியாவும் ஆபீசில் இருந்து கிளம்பினார்கள். ட்ராஃபிக் குறைந்து போன சாலையில் மிதமான வேகத்தில், பைக் சில்க்போர்ட் நோக்கி சீறிக் கொண்டிருந்தது. அசோக் ப்ரியாவின் மைசூர் திட்டம் பற்றி கேட்டுக்கொண்டு வந்தான். அவளும் 'அதை பாக்கப் போறோம்.. இதை பாக்கப்போறோம்..' என்று சிறு குழந்தை மாதிரியான ஒரு குதுகுலத்துடன் சொல்லிக்கொண்டு வந்தாள். உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தவள் திடீரென "ரொம்ப நாளுக்கப்புறம் மைசூர் போறோம் அசோக்..!! நான் சின்னப்பொண்ணா இருக்குறப்போ.. அம்மா எங்க கூட இருக்குறப்போ.. போனது..!!" என்று சொல்லிவிட்டு பட்டென அமைதியாகிப் போனாள். அப்புறம் எதுவும் பேசவே இல்லை அவள். அம்மாவின் நினைவில் மூழ்கிப் போயிருந்தாள். அவளுடைய மனநிலையை உடனே புரிந்து கொண்ட அசோக்கும், அதற்கு மேல் கேள்வி கேட்டு அவளை தொந்தரவு செய்யவில்லை. அமைதியாக வண்டியை செலுத்தினான். சில்க் போர்டை அடைந்தார்கள். 'வீட்டில் கொண்டு வந்து விடுகிறேன்..' என்று சொன்ன அசோக்கை, 'இல்ல அசோக்.. உனக்கு எதுக்கு சிரமம்.. அல்ரெடி ரொம்ப லேட் ஆயிடுச்சு.. நீ வீட்டுக்கு கெளம்பு.. நான் ஆட்டோ புடிச்சு போய்க்குறேன்..' என்று ப்ரியா தடுத்தாள். அசோக்கும் மேலும் வற்புறுத்தாமல், ஒரு ஆட்டோ பிடித்து அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்தான். ஹெல்மெட் மாட்டிக்கொண்டு கிக்கரை உதைத்தான். ஆட்டோ சென்ற திசைக்கு எதிர்த்திசையில் பறந்தான். அடுத்த நாள் காலையே அசோக் ப்ரியாவுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த அந்த வேலையை ஆரம்பித்துவிட்டான். வி.பி.என் மூலமாக தனது லேப்டாப்பில் இருந்து ஆபீஸ் நெட்வொர்க் கனெக்ட் செய்தான். ப்ரியா தந்த பாஸ்வேர்டை உபயோகித்து அவளது சிஸ்டத்தில் லாகின் செய்தான். முதலில், ஒரு மாதமாக அவள் செய்திருந்த வேலைகளை கவனமாக மேற்பார்வையிட்டான். இடியாப்பத்தை பிழிந்து வைத்த மாதிரி அவள் எழுதியிருந்த கோட்-ஐ பார்த்து தலையலடித்துக் கொண்டான். மொத்த காம்பனன்ட்டையும் ரீ-டிசைன் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். நான்கு நாட்கள் அந்த வேலையில்தான் முழுநேரமும் மூழ்கியிருந்தான். கூகிளின் உதவியை நாடினான்.. நிறைய டெக்னிகல் கட்டுரைகளை வாசித்தான்.. தன்னுடைய சிஸ்டம் கனெக்ட் செய்து சில விஷயங்கள் ரெஃபர் செய்தான்.. செல்பில் அடுக்கப்பட்டிருந்த தனது பழைய டிசைன் கைடை தூசி தட்டினான்.. விழிகளை மூடி நெற்றியை கீறியவாறு நெடுநேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்..!! ப்ரியா தன் குடும்பத்துடன், மைசூரில் பிருந்தாவன் கார்டன், மகாராஜா அரண்மனை என்று.. முகத்தில் எப்போதும் சிரிப்புடன் சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில்.. இவன் இங்கே அவளுக்காக.. தனது மூளையை துன்புறுத்தி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். வியாழக்கிழமை ஆரம்பித்த வேலையை ஞாயிறு மாலைதான் முடித்தான். டிசைன், கோட் என்று பக்காவாக ரெடி செய்தான். டிசைனை எளிமையாக விளக்கக்கூடிய டாகுமன்ட்டும் ப்ரிப்பேர் செய்து முடித்தான். மொத்த வேலைகளையும் முடித்துவிட்டு நிமிர்ந்தபோது, 'அப்பாடா..!!!' என்று நிம்மதியாக இருந்தது. அண்ணி போட்டுத்தந்த காபியை கொஞ்சம் கொஞ்சமாய் உறிஞ்சி தன்னை ஆசுவாப்படுத்திக் கொண்டான். அப்போதுதான் அவனுக்கு திடீரென அந்த எண்ணம் தோன்றியது. ப்ரியாவுடைய சிஸ்டத்தின் கண்ட்ரோல் இப்போது தன்னிடம்..!! அவள் தனது கம்ப்யூட்டரில் ஏதாவது பர்சனல் ஃபைல்கள் வைத்திருக்கிறாளா என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அவனை தொற்றிக் கொண்டது. உடனே அதை செயல்படுத்த முடிவு செய்தான். ஒவ்வொரு ஃபோல்டராக பொறுமையாக தேடிப்பார்த்தான். ஒரு ஃபோல்டர் சிக்கியது..!! அதற்குள் எக்கச்சக்கமாக சப்-ஃபோல்டர்கள்.. கொள்ளை கொள்ளையாய் ஃபோட்டோக்கள்..!! சிறு வயதில் இருந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் ஒரே இடத்தில் போட்டு வைத்திருந்தாள் ப்ரியா. ஓரிரு புகைப்படங்களை பார்த்ததுமே அசோக்கிற்கு புரிந்து போனது. தங்கவேட்டையில் ஜெயித்தது போல குஷியாகிப் போனான். முதல் வேலையாக மொத்தத்தையும் தனது சிஸ்டத்திற்கு ஒரு காப்பி அனுப்பினான். அப்புறம் பொறுமையாக ஒவ்வொரு ஃபோல்டராக திறந்து, ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கிற ப்ரியாவை ரசித்தான். இரட்டை ஜடையுடன் ஸ்கூல் சிறுமியாய்.. இரண்டு கைகளிலும் ஸ்போர்ட்ஸில் ஜெயித்த கப்புகளுடன்.. கல்லூரி நண்பர்களுடன் வாயில் எதையோ போட்டு அரைத்துக்கொண்டு.. தனக்கு இருபக்கமும் நிற்கிற அப்பா, தம்பியின் தோள்களில் கைபோட்டவாறு, இதயத்தை கொள்ளை கொள்கிற சிரிப்புடன்..!! பொக்கிஷம்தான் அந்த ஃபோல்டர் அவனைப் பொறுத்தவரை..!! ஒவ்வொரு படமாக பார்த்துக்கொண்டே வந்தவன், ஒரு படம் வந்ததும் அப்படியே அசையாமல் உறைந்து போனான். ப்ரியா கொள்ளை அழகாய் இருந்தாள் அந்தப்புகைப்படத்தில். எதோ ஒரு மலையடிவாரத்தின் பின்னணியில்.. மஞ்சள் நிற புடவையை சுற்றிக்கொண்டு.. மயக்குகிற மாதிரி ஒரு பார்வையை வீசியவாறு..!! ‘ஸ்டன்னிங்..!!’ என்று தோன்றியது அசோக்கிற்கு..!! அடுத்த படத்துக்கு கடந்து போக மனமில்லாதவனாய், விரித்த இமைகளை மூடவும் மறந்து போனவனாய் அந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.


"இது யாரு..??" திடீரென தனக்கு அருகே அந்த சத்தம் கேட்கவும் பக்கென பதறிப் போனான் அசோக். அப்புறம் அது தம்புதான் என்று உணர்ந்ததும், சற்றே நிம்மதியாக பெருமூச்சு விட்டான். தம்பு அசோக்குக்கு பின்பக்கமாக வந்து, தனது கைகளை பின்னால் கட்டிக்கொண்டு, லேப்டாப் திரையையே பார்த்தவாறு அவ்வாறு கேட்டிருந்தான். "தம்பூ.. இங்க என்னடா பண்ணிட்டு இருக்குற..??" அசோக் கேட்க, தம்பு அதை மதியாமல் "இது யாரு சித்தப்பா..??" என்று லேப்டாப்பை நோக்கி விரல் நீட்டினான். "இ..இதுவா..?? இ..இது.. இது.." என்று ஒருகணம் தடுமாறிய அசோக், பிறகு தைரியம் வந்தவனாய், "இதுதான் உன் சித்தி..!!" என்றான். "இவங்க பேரு..??" "ப்ரியா..!! ப்ரியா சித்தி..!!" "ஓ..!! ப்ரியா சித்தி சூப்பரா இருக்காங்க..!!" தம்பு அப்படி சொன்னதும் அசோக் அப்படியே பூரித்துப் போனான். அவனுடய கன்னத்தை பிடித்து கொஞ்சி முத்தமிட்டான். "சித்தியை உனக்கு பிடிச்சிருக்கா தம்பூ..??" "ம்ம்.. ரொம்ப பிடிச்சிருக்கு.. அழகா இருக்காங்க..!!" "சித்தப்பா இவங்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரவா..??" "ம்ம்.. கூட்டிட்டு வாங்க.. எனக்கு ஓகே..!!" தம்பூ தலையாட்டினான். அசோக் புன்னகைத்தான். "ஓகே .. சித்தப்பா கூடிய சீக்கிரம் கூட்டிட்டு வர்றேன்.. சரியா..?? ம்ம்ம்ம்.... சாப்டியா தம்பூ..??" "ம்ம்.. சாப்டேன் சித்தப்பா.. பூரி..!!" என்றவன் அசோக் கேட்காமலேயே தனது சட்டையை தூக்கி, வீங்கிப் போயிருந்த வயிறை காட்டினான். "ஹாஹா.. சட்டையை கீழ போடுடா.. தொப்பைச்சாமி..!! போ.. ஹால்ல போய் விளையாடு போ..!!" "ராஜேஷ் டாடி உங்களை அங்க வர சொன்னா..!!" "ஓ..!! டாடிட்ட போய்.. சித்தப்பா ரொம்ப முக்கியமான வேலையா இருக்காங்களாம்.. இப்போ வர முடியாதாம்னு சொல்லு..!!" "ஹ்ம்.. ஹ்ம்.. வாங்க சித்தப்பா.. டாடி வர சொன்னா..!!" தம்பு அடம்பிடித்தான். "ப்ச்.. தம்பூ..!! சித்தப்பா சொல்றேன்ல..??" "ம்ஹூம்.. வாங்க.. வாங்க சித்தப்பா..!!" தம்பு கையை பிடித்து இழுக்க, அசோக்கால் அதற்கு மேலும் மறுக்க முடியவில்லை. லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு, அவனுடன் நடந்தான். போகிற வழியில் கிச்சனுக்குள் பிஸியாக இருந்த செல்வி கண்ணில் பட்டாள். கிச்சனை கடந்து ஹாலுக்குள் நுழைய, சோபாவில் அமர்ந்ததுகொண்டு பனியனுக்குள் கைவிட்டு அக்குளை சொறிந்து கொண்டிருந்த ராஜேஷ் பார்வைக்கு கிடைத்தான். "என்னடா.. கூப்டியா..??" அசோக் கேட்டதும் ராஜேஷ் நிமிர்ந்து அவனை பார்த்தான். கண்ணுக்கு அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி டீப்பாயில் வைத்தவன், அந்த டீப்பாயின் மீதே இருந்த பிரவுன் கவரை எடுத்து அசோக்கிடம் நீட்டினான். "என்ன இது..??" குழப்பத்துடனே அசோக் அந்த கவரை கையில் வாங்கினான். "பொண்ணு ஃபோட்டோ..!!" "எந்த பொண்ணு..??""ஹ்ம்ம்.. வெளக்கமா சொல்லனுமா உனக்கு..?? மடிவாலால 'சங்காத்தி மேட்ரிமோனியல் சென்டர்னு' ஒரு ஏஜன்சி இருக்கு.. மேரேஜ் ப்ரோக்கர்ஸ்..!! போன வாரம் உன் ஃப்ரோபைல் அங்க ரெஜிஸ்டர் பண்ணினேன்.. இந்த வாரம் இந்த பொண்ணோட ஃபோட்டோ அனுப்பிருக்காங்க.. முதமுதலா உன் மூஞ்சிக்கு வந்திருக்குற வரன்..!! எனக்கு பொண்ணை புடிச்சிருக்கு.. நீ பாத்து எப்படி இருக்கான்னு சொல்லு..!!" ராஜேஷ் சொல்ல சொல்லவே அசோக்கின் முகத்தில் டென்ஷன் ஏறிக்கொண்டே சென்றது. கண்களை உருட்டி அண்ணனை முறைத்தவன், கோபமான குரலில் அவனிடம் சீறினான். "உன்னை யாரு இந்த வேலைலாம் பாக்க சொன்னது..??" "ம்ம்ம்..?? மிஸ்டர் முத்துச்சாமி..!!" ராஜேஷின் குரலில் ஒரு கிண்டல். "அது யாரு..??" அசோக் ஒருவேகத்தில் படக்கென கேட்டுவிட, "டேய்.. நம்ம அப்பாடா..!!" என்று ராஜேஷ் பதறினான். "ஷ்ஷ்.. ஸாரி..!! " என்று நாக்கை கடித்துக்கொண்ட அசோக், உடனே "ம்ம்ம்ம்... யாரு சொன்னா என்ன..?? நான் சொல்றதை இப்போ நல்லா கேட்டுக்கோ..!! இன்னைக்கோட இந்த பொண்ணு பாக்குற வேலையைலாம் நிறுத்திடு..!!" என்றான். "ஆங்.. நிறுத்திட்டு..??? ஒரு வருஷத்துக்குள்ள உனக்கு ஒரு பொண்ணை பாத்து முடிக்கணும்னு.. அப்பா எங்கிட்ட வேலையை விட்டிருக்காரு..!! அவருக்கு யாரு பதில் சொல்றது..??" ராஜேஷ் எரிச்சலாக கேட்க, அசோக் இப்போது அடிக்குரலில் சொன்னான். "உனக்கு என்ன.. ஒரு வருஷத்துக்குள்ள உனக்கு ஒரு பொண்ணு வேணும்.. அவ்வளவுதான..?? நானே கொண்டுவந்து நிறுத்துறேன்.. போதுமா..??" "டேய்.. நீயா பொண்ணு பாக்குறேன்னு தெரிஞ்சா.. அ..அப்புறம்.. பிரச்னை ஆயிடும்டா.. அப்பா ஒத்துக்க மாட்டாரு..!!" "அவருக்கு தெரிஞ்சாத்தான..?? பொண்ணு நான் பாக்குறேன்.. உன்கிட்ட கூட்டிட்டு வர்றேன்.. நீயே கஷ்டப்பட்டு தேடி கண்டுபுடிச்ச பொண்ணுன்னு அப்பாகிட்ட சொல்லி.. நீ பேர் வாங்கிக்கோ..!! டீல் ஓகேவா..??" "ஏய்.. இதுலாம் ரொம்ப ஓவருடா..!! நாங்கல்லாம் இப்படியா தனியா பொண்ணு பாத்துட்டு திரிஞ்சோம்.. வீட்ல பாத்த பொண்ணை கட்டிக்கல..??" "நீ ஒரு ஈனா கூனா.. எல்லாரும் அப்படியா இருப்பாங்க..??" அசோக் சொன்னதைக்கேட்டு ராஜேஷ் டென்ஷனானான். ஹாலில் அந்தமாதிரி சத்தம் அதிகரித்துக்கொண்டே செல்லவும், இப்போது கிச்சனில் நின்றிருந்த செல்வி, அங்கிருந்து வெளிப்பட்டு ஹாலுக்குள் நுழைந்தாள். அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையில் என்ன நடக்கிறது என்று புரியாதவளாய்.. "என்னங்க.. என்னாச்சு..??" என்றாள். "ஒண்ணுல்ல அண்ணி..!!" என அசோக் உடனடியாய் சமாளித்தான். அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு அங்கு ஒரு அமைதி. யாரும் எதுவும் பேசாமல் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்தார்கள். தம்புச்சாமியோ எதுவும் புரியாமல், தலையை அண்ணாந்து திருதிருவென விழித்துக் கொண்டிருந்தான். ராஜேஷ்தான் அந்த அமைதியை குலைத்தவாறு, ஆத்திரமும் சற்றே குறைந்து போனவனாய் மெல்லிய குரலில் ஆரம்பித்தான். "இங்க பாரு அசோக்.. என்னதான் நீயா பொண்ணு பாத்தாலும்.. பெரியவங்களா பாக்குற மாதிரி வராது.. அவங்களுக்கு இருக்குற அனுபவம் உனக்கு இருக்காது..!!" "நீங்க உங்களுக்குன்னு நெறைய கண்டிஷன்ஸ் வச்சுக்கிட்டு.. உங்க இஷ்டத்துக்கு ஏதோ ஒன்னை இழுத்துட்டு வந்து நிறுத்துவீங்க.. அதையெல்லாம் என்னால கட்டிக்க முடியாது..!! எனக்கு வரப்போறவ.. என் டேஸ்ட்படி இருக்கனும்..!!" "நீ மொதல்ல அந்த கவரை பிரிச்சு பாரு.. என் டேஸ்ட் பத்தி உனக்கு நம்பிக்கை வரும்..!!" "ம்க்கும்.. உன் டேஸ்ட் பத்தித்தான் ஆறு வருஷம் முன்னாடியே எனக்கு தெரிஞ்சு போச்சே..??" என்று அண்ணியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே சொன்னவன், அந்த கவரை தூக்கி டீப்பாயில் விட்டெறிந்தான். அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமல் செல்வி விழித்தாள். ஆனால் ராஜேஷ் புரிந்துகொண்டு அசோக்கை கடுப்புடன் முறைத்தான். வேறொன்றும் புரிந்துபோன மாதிரி இருக்க, அவசரமாய் கேட்டான். "யாருடா அந்தப்பொண்ணு..??" "எந்தப்பொண்ணு..??" "அதான்.. நீ லவ் பண்ற பொண்ணு..!!" "நா..நான் யாரை லவ் பண்றேன்.. அ..அப்டிலாம் யாரும் இல்ல..!!" அசோக் தடுமாற்றமாய் சொன்னான்."ஹே.. எல்லாம் எனக்கு தெரியும்.. ஐ.டில வேலை பாக்குறவனுகலாம் இப்படித்தானடா இருக்குறிங்க..??" "இப்போ எதுக்கு தேவை இல்லாம ஐ.டியை இழுக்குற நீ..?? அப்படி என்ன பண்றோம் நாங்க..??" "ஆங்.. எல்லாம் செட்டு செட்டாத்தானடா அலையுறீங்க..!! எவ, எப்படின்னு எதுவும் தெரியாம.. எவளையாவது புடிச்சுக்க வேண்டியது.. வீட்டுக்கு தெரியாம பார்க், ரெஸ்டாரன்ட், சினிமான்னு ஊர் சுத்த வேண்டியது..!! நீ யார் கூட அந்த மாதிரி ஊர் சுத்துறேன்னு சொல்லு..!!" ராஜேஷ் அவ்வாறு கேட்கவும், அசோக் நிஜமாகவே பயங்கர கடுப்புக்கு உள்ளானான். அண்ணனின் முகத்தையே எரிச்சலும், கோபமுமாய் முறைத்தவன், அப்புறம் கண்களை இடுக்கி அவனை கூர்மையாக பார்த்தவாறு, குரலை சற்றே தாழ்த்திக்கொண்டு கேட்டான். "கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லு.. ஐ.டில வேலை பாக்குறவனுக மட்டுந்தான்.. வீட்டுக்கு தெரியாம பொண்ணோட ஊர் சுத்துறானுகளா..??" அவ்வளவுதான்..!! அசோக்கின் பார்வையிலும், கேள்வியிலும் இருந்த கூர்மை.. ராஜேஷை சுருக்கென்று தாக்கி.. அவனை ஸ்தம்பித்துப் போக செய்தது..!! 'தேரே மேரே பீச் மே.. கேஸா ஹே யே பந்தன்.. அஞ்சானா..!!' என பின்னணியில் பாடல் ஒலிக்க, டெல்லியில் தன்னுடன் கைகோர்த்து சுற்றித் திரிந்த, ஒரு மைதா மாவின் முகம் படக்கென அவன் மூளையில் பளிச்சிட்டது..!! தடுமாறிப் போனான்..!! மனைவி வேறு அருகில் இருப்பதை உணர்ந்ததும்.. டரியல் ஆகிப் போனான்..!! அவசர அவசரமாய்.. "சரி சரி விடு.. உன் இஷ்டப்படி என்னவேணா பண்ணித்தொலை.. இனி உன்னை நான் எதுவும் சொல்ல மாட்டேன்..!!" என்று சமாளித்தான். "ம்ம்.. அந்த பயம் இருக்கணும்..!!" என்று தனது வழக்கமான பஞ்ச்சை உதிர்த்த அசோக், எதுவும் புரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டிருந்த செல்வியிடம் திரும்பி, "நான் கொஞ்சம் வெளில போயிட்டு வர்றேன் அண்ணி.. நாலு நாளா வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கெடந்தது ஒரு மாதிரி இருக்கு..!! எனக்கு சாப்பாடு வேணாம்.. இன்னைக்கு நான் வெளிலயே சாப்பிட்டுக்குறேன்..!!" என்று சொல்லிவிட்டு, சுவற்றில் தொங்கிய பைக் சாவியை எடுத்துக்கொண்டு, அதை சுழற்றியவாறே வீட்டை விட்டு வெளியேறினான். செல்வி அதற்குமேலும் தனது ஆர்வத்தை அடக்க முடியாதவளாய், அவசரமாய் வந்து தன் கணவனுக்கருகே சோபாவில் அமர்ந்தவாறே கேட்டாள். "ஏங்க.. அவன் என்னங்க சொல்லிட்டு போறான்.. எனக்கு ஒண்ணுமே புரியலை..!!" "என்ன புரியலை உனக்கு..?? 'உன் சமையலை தின்னு தின்னு வெறுத்து போச்சு.. இன்னைக்கு ஒருநாளாவது வெளில சாப்பிட்டு பொழைச்சுக்குறேன்'னு.. நல்லா தெளிவாத்தான சொல்லிட்டு போறான்..??" "ஐயோ அது இல்லைங்க..!!" "அப்புறம்..??" "அதுக்கு முன்னாடி சொன்னது.. ஏதோ ஐ.டில வேலை பாக்குறவங்க மட்டுந்தான்.. பொண்ணுகளோட.." செல்வி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, "ஆமாம்.. இப்போ ரொம்ப முக்கியம்..?? போடீ.. போய் பூரியை பொறிச்சு எடு.. போ..!!" என இவன் சட்டியில் போட்ட பூரி மாதிரி பொறிந்தான். "ஏங்க இப்படி கோவப்படுறீங்க..??" செல்வி பாவமாக கேட்டாள். "பின்ன என்ன..?? அவன் ஏதோ என் டேஸ்ட் சரியில்லன்னு நக்கல் அடிச்சுட்டு போறான்.. நீயும் அதை நோண்டி நோண்டி கேட்டுட்டு இருக்குற..?? என் டேஸ்ட்க்கு என்னடி குறைச்சல்..??" "ஆமாம்.. அதான..?? உங்க டேஸ்ட்க்கு என்ன குறைச்சல்..?? இந்தா.. நம்ம தம்பூ போட்டுருக்குற பூப்போட்ட ஜட்டி கூட உங்க செலக்ஷன்தான்.. எவ்ளோ அழகா இருக்கு..??" செல்வி சீரியசாக சொல்ல, ராஜேஷ் அவளை உக்கிரமாக முறைத்தான். "அதை சொல்லலடி.. இதை சொன்னேன்.. இந்த பொண்ணுக்கு என்னடி குறைச்சல்..??" என்றவாறு ராஜேஷ் அந்த கவரை பிரித்து உள்ளே இருந்த போட்டோவை எடுத்து மனைவியிடம் காட்டினான். "ம்ம்ம்.. நல்லாத்தான் இருக்குறா..!! ஆனா.. நம்ம லக்ஷ்மியை விட கொஞ்சம் கலர் கம்மிதான்.. இல்லைங்க..??" செல்வியின் ஆசை அவளையும் அறியாமல் அவளது வார்த்தைகளில் வெளிப்பட்டுவிட, ராஜேஷ் இப்போது தனது தலையை நாப்பத்தஞ்சு டிக்ரியில் டேப்பராக திருப்பி, முன்பை விட கடுமையாக மனைவியை முறைத்தான். அவனது பார்வையின் அர்த்தம் செல்விக்கு புரிந்து போக, உடனே சமாளிக்க முயன்றாள். "இ..இல்லைங்க.. நான் ஏதோ என் மனசுக்கு பட்டதை சொன்னேன்..!! நீங்களாச்சு.. உங்க தம்பியாச்சு.. அவருக்கு புடிச்சிருந்தா கட்டி வைங்க.. எனக்குலாம் ஒன்னும் இல்ல..!!" என்றவாறு சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள். "தம்பூ.. நீ வா.. ஹோம் வொர்க் பண்ணனும்.. டைம் ஆச்சு..!! நாளைக்கு ஸ்கூல்.. ஞாபகம் இருக்குல..??" என்று தம்புச்சாமியை இழுத்துக்கொண்டு, உள்ளறைக்குள் நடந்தாள். மனைவியின் முதுகையே எரிச்சலும், சலிப்புமாய் முறைத்த ராஜேஷ், பிறகு கையிலிருந்த புகைப்படத்தை தூக்கி டீப்பாயில் போட்டான். அந்த புகைப்படத்தில்.. எதோ ஒரு மலையடிவாரத்தின் பின்னணியில்.. மஞ்சள் நிற புடவையை சுற்றிக்கொண்டு.. மயக்குகிற மாதிரி ஒரு பார்வையை வீசியவாறு.. மந்தகாசமாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.. ப்ரியா..!!!அத்தியாயம் 6 திங்கட்கிழமை ஆபீசுக்கு வந்து சிஸ்டம் திறந்து பார்த்த ப்ரியா, நிஜமாகவே அதிசயித்துப் போனாள். அவளுடைய வேலையை அழகாகவும், நேர்த்தியாகவும் அசோக் முடித்து வைத்திருப்பதை பார்த்து மனம் பூரித்தாள். என்ன செய்திருக்கிறான் என்பதை, எளிதாக புரியும்படியாக அவன் ப்ரிப்பேர் செய்து வைத்திருந்த டாகுமன்ட்டும், அவளுக்கு மிக வசதியாக இருந்தது. அவளே அனைத்தும் செய்து முடித்த மாதிரியாக, எல்லா கோட்-யும் செக்கின் செய்தாள். தன்னுடைய வேலையை முடித்துவிட்டதாக ரவிப்ரசாத்துக்கு, கெத்தாக ஒரு மெயில் அனுப்பினாள். 'இதெல்லாம் எங்களுக்கு ரஸ்க்கு சாப்பிடுற மாதிரி..!!' என்கிற ரீதியில். டீமில் உள்ள மற்றவர்களை CC-யில் போட்டுக் கொண்டாள். 'கலக்குறடி ப்ரியா..!!' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள். எழுந்து அசோக்கின் இடத்துக்கு நடந்து சென்றாள். பின்பக்கமாக இருந்து அவனுடைய தோளை ஸ்நேகமாக பற்றினாள். பதட்டத்துடன் திரும்பி பார்த்த அசோக், ப்ரியா என்று தெரிந்ததும் பதட்டம் நீங்கி புன்னகைத்தான். "ஹேய்.. மைசூர் ட்ரிப்லாம் எப்படி இருந்தது..??" அவனுடைய கேள்வி ப்ரியாவின் காதில் விழவே இல்லை. "தேங்க்ஸ்டா.. தேங்க்ஸ் எ லாட்.. இந்த ஹெல்ப்பை நான் மறக்கவே மாட்டேன்..!!!" என்று கண்களில் நீர் துளிர்க்க சொன்னாள். மேலும் ஒரு இரண்டு வாரங்கள் ஓடின. க்ளையன்ட்டுக்கு ஃப்ரேம்வொர்க் டெலிவர் செய்து அப்ரூவல் வாங்கி, அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பித்திருந்தனர். யூஸர் இன்டர்ஃபேஸ்-க்கான ப்ரோட்டோடைப் தயார் செய்யும் பணி. ப்ரோட்டோடைப் என்றால், அவர்கள் இறுதியாக உருவாக்கப்போகிற அப்ளிகேஷனின் ஆரம்ப டம்மி வடிவம். ஸ்க்ரீன்களும், அதற்கான லிங்க்குகளும் தயார் செய்யவேண்டும். ஃப்ரேம்வொர்க் வேலையை போல சிக்கலான வேலை கிடையாது. எளிமையான வேலைதான். அதனால் அதிக மென்டல் ப்ரெஷர் இல்லாமலே அனைவரும் ஆபீசுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒரு நாள் மதியம்..!! அவர்கள் ஆபீஸ் கேஃப்டீரியா..!! அசோக், ப்ரியா, ஹரி, கவிதா, நேத்ரா ஐந்து பேரும் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். பேச்சு பொதுவாக சென்று கொண்டிருக்கையில், ஹரிதான் முதலில் அந்த விஷயத்தை ஆரம்பித்தான். அசோக்கிடம் கேட்டான். "மச்சி.. உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா..??" "என்னடா..??" "ரெகயர்மன்ட் கேதரிங்கு ரவியை அனுப்பலயாம்..!!" "ஹாஹா.. அவனை அனுப்ப மாட்டாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியுன்டா..!! அவன் பேப்பர் போட்டுட்டு.. எட்டு மணி நேரம் ஆபீசுக்குள்ள உக்காந்திருக்குறதே பெரிய விஷயம்.. அவனை நம்பி ஆன்சைட்லாம் எவன் அனுப்புவான்..??" "ம்ம்..!! அப்போ நம்ம டெவலப்மன்ட் டீம்ல இருந்துதான் யாரையோ அனுப்ப போறாங்க..??" "ஹ்ம்ம்.. ஆமாம்.. அப்படித்தான் இருக்கும்..!!" "யாரை அனுப்புவாங்கன்னு நீ நெனைக்கிற..??" "என்னை கேட்டா..?? எனக்கு எப்படி தெரியும்..??" "ஆக்சுவலா பாத்தா.. உன்னைத்தான் அனுப்பனும் அசோக்.. நம்ம டீம்ல நீதான் அதுக்கு டிஸர்வ்டான ஆளு.. ஆனா.." என்று இழுத்த ஹரி, திடீரென வேறெங்கேயோ கவனத்தை திருப்பியவன்.. "வந்துட்டான்யா வந்துட்டான்.. கழுகுக்கு மூக்கு வேர்த்தமாதிரி வந்துட்டான்..!! தர்பூஸ் தலையன்..!!" என்று கத்தினான். தூரமாக.. அப்போதுதான் மதிய உணவுக்காக கேஃப்டீரியாவுக்குள் நுழைந்துகொண்டிருந்த கோவிந்தை பார்த்துத்தான்.. அவன் அவ்வாறு கத்தியது..!! "யாரைடா சொல்ற..??" அசோக் பின்பக்கமாக திரும்பி பார்க்க, அவனோடு சேர்ந்து எல்லோரும் வாசலுக்கு பார்வையை வீசினார்கள். கோவிந்த் வருவதை கண்டுகொண்டார்கள். "அவன்தான்..!! கோ.. கோ.. கோவிந்த்து..!!" ஹரி கோவிந்த் மாதிரி கேலியாக திக்கி திக்கி பேசிக்காட்ட, கவிதா அவனுடைய புஜத்தில் பட்டென தட்டினாள். முறைத்த முகத்துடன் கணவனை கடிந்து கொண்டாள். "ச்ச.. இதுதான் உங்ககிட்ட எனக்கு சுத்தமா புடிக்கிறது இல்ல..!! அடுத்தவங்களோட டிஸேபிலிட்டியை மென்ஷன் பண்ணி கிண்டல் பண்றது..!! எல்லாருக்கும் பேரு வச்சிருக்குறதை பாரு.. தர்பூஸ் தலையன், ஸ்ப்ரிங்கு மண்டையன், குமுட்டி வாயன்னு..!!" "ஏன்.. இதுல என்ன இருக்கு..??" "என்ன இருக்கா..?? இதெல்லாம் தப்பு..!!" "என்ன தப்பு.. நாம பேசுறது அவன் காதுல விழுந்தாத்தான் தப்பு.. விழலைன்னா எதுவும் தப்பு இல்ல..!!" ஹரி சப்பைக்கட்டு கட்டினான். "நாம பேசுறதை அவன் கேக்காட்டாலும்.. நமக்கா ஒரு பேஸிக் கர்ட்டஸி வேணாமா..??" "ஓஹோ..?? அவனுக்கு மட்டும் அந்த கர்ட்டஸிலாம் இருக்கா.. அவன் என்ன பண்ணுனான்னு உனக்கு தெரியுமா..??" "என்னடா பண்ணுனான்..??" அசோக் இப்போது ஆர்வமானான். அதற்குள் சாப்பாட்டு ப்ளேட்டை கையில் ஏந்தியவாறு கோவிந்த் இவர்கள் அமர்ந்திருக்கிற டேபிள் நோக்கி, ஒரு அப்பாவிப் புன்னகையுடன் வந்து கொண்டிருந்தான். அதை கவனியாத அசோக், "கேக்குறேன்ல.. சொல்லுடா.. என்ன பண்ணுனான் அவன்..??" என்று ஹரியை அவசரப் படுத்தினான். "ஹேய்.. இருடா.. அவன் இங்கதான் வந்துட்டு இருக்குறான்..!!" ஹரி கிசுகிசுப்பாக சொன்னான். "ஷ்ஷ்ஷேல் ஐ ஜாயின் வித் யூ..??"


புன்னகையுடன் அவர்களை பார்த்து பொதுவாக கேட்டான் கோவிந்த. அவனது பார்வை காலியாக கிடந்த அந்த ஒரு சேரின் மீது பதிந்திருந்தது. இப்போது அசோக் அமர்ந்திருந்த எல்லோர் முகத்தின் மீதும் ஒருமுறை பார்வையை வீசினான். அப்புறம் கோவிந்திடம் திரும்பி, "ஸாரி கோவிந்த்.. இங்க ஆள் வர்றாங்க..!!" என்று இறுக்கமான குரலில் தயவு தாட்சணியம் இல்லாமல் சொன்னான். "ஓ..!! இ..இட்ஸ் ஓகே.. இட்ஸ் ஓகே..!! நான் இன்னொரு எடம் பாக்குறேன்..!!" கோவிந்த் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு சொன்னான். வேறொரு மூலையில் ஒரு காலியிடம் இருக்க, அதை நோக்கி நகர்ந்தான். "ஹேய்.. ஸாரிப்பா.. சீரியஸா எடுத்துக்காத..!!" அசோக் கத்தவும், "நோ.. நாட் அட் ஆல்..!!" அவன் திரும்பி ஒருமுறை அசோக்கைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மெல்ல நடந்தான். சற்றே தூரமாக காலியாக கிடந்த ஒரு டேபிளில் சென்று அமர்ந்து கொண்டான். தனியாக அமர்ந்து கொண்டு, பரிதாபமாக சுற்றி முற்றி பார்த்துக்கொண்டு, தட்டில் இருந்த வெள்ளரி ஸ்லைசை எடுத்து கடித்துக்கொண்டான். "ஹேய் அசோக்.. இப்போ எதுக்கு அவனை நீ இப்படி அவாய்ட் பண்ணின..??" நேத்ரா இப்போது அசோக்கிடம் சீறினாள். "ப்ச்.. நீ கொஞ்சம் சும்மா இருக்குறியா.. அவனைப் பத்தி பேசிட்டு இருக்குறோம்.. அவனை வச்சுக்கிட்டு எப்படி பேசுறது..?? ஹேய்.. நீ சொல்லுடா..!!" அசோக்கின் பதிலில் நேத்ராவுக்கு திருப்தியில்லை. பாவமான பிள்ளையாக வெள்ளரி கடித்துக் கொண்டிருந்த கோவிந்தையே ஓரிரு வினாடிகள் இங்கிருந்தே வெறித்தாள். அப்புறம்.. "அச்சோ..!! பாபா அவனு.. நானு ஹோகி அவ்னிகே கம்பெனி கொட்த்தினி...!!" என்றவாறு நேத்ரா சேரில் இருந்து எழுந்து, தனது ப்ளேட்டை கையில் எடுத்துக்கொண்டு, கோவிந்துக்கு கம்பெனி கொடுக்க சென்றாள். "ஆமாம்.. அவன் பாபா.. இவ சந்திரமுகி.. கம்பெனி குடுக்க கெளம்பிட்டாங்க..!! போடீ போ.. அவனை பத்தி உனக்கு இன்னும் சரியா தெரியலை..!!" ஹரி அவளை கிண்டல் செய்தான். "ஹேய்.. அவ கெடக்குறா விடு.. நீ சொல்லு.. என்ன மேட்டர்.. அவன் என்ன பண்ணினான்..??" அசோக் மீண்டும் ஆரம்பித்தான். "ஹ்ம்ம்.. என்னத்த சொல்றது..?? எனக்கு என்னவோ இவனைத்தான் ஆன்சைட் அனுப்ப போறாங்கன்னு தோணுது மச்சி..!!" "எ..எப்படி சொல்ற..??" "இந்த பஃபல்லோ வாயன்.. பக்-க்கு நல்லா சோப்பு போட்டு வச்சிருக்கான் மச்சி.. ஏற்கனவே நாலஞ்சு தடவை இவன் ஆன்சைட் போறது மிஸ் ஆயிடுச்சு.. இந்தத்தடவை எப்படியும் போயிடணும்னு வெறியோட இருப்பான்..!! அதில்லாம நான் இப்போ சொல்றதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்கு..!!" "என்ன..??" "இன்னைக்கு காலைல.. இவன் பக் ரூம்க்கு போயிருந்தான்..!! ரெண்டு பேரும் ஒரு மணி நேரத்துக்கு மேல.. குசுகுசுன்னு உள்ள பேசிட்டு இருந்தானுக.. கண்டிப்பா ஆன்சைட் பத்தித்தான் பேசிருப்பானுக..!! கூடவே இருந்துட்டு.. அவன் மட்டும் தனியா போய் பேசி.. நமக்குலாம் குழி பறிக்கிறான் பச்சி..!!" "ஓ..!!" அசோக் இப்போது முகத்தில் ஒரு சீரியஸ்னசுடன் நெற்றியை கீறிக்கொண்டான். தூரத்தில் நேத்ராவுடன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருக்கிற கோவிந்த்தை இங்கிருந்தே ஒரு முறை முறைத்தான். இப்போது கவிதா இவர்களுடைய பேச்சுக்கு இடையில் புகுந்து சொன்னாள். "ஹேய்.. அவனை அனுப்பினா அனுப்பிட்டு போறாங்க.. இதை ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்குறீங்க..??" என்றாள். உடனே ஹரி தன் மனைவியிடம் திரும்பி சொன்னான். "அதெப்படி அப்படி விட முடியும்..?? அவன் நேத்து வந்தவன்.. நாங்கல்லாம் அஞ்சாறு வருஷமா இந்த டீம்ல கெடந்திருக்கோம்..!!" "ப்ச்.. அதனால இப்போ என்ன..??" "என்னது.. அதனால இப்போ என்னவா..?? என்ன பேசுற நீ..?? இப்போ.. நீ வீட்ல இருக்குறப்போ.. உன்னை விட்டுட்டு.. உன் தங்கச்சியை எனக்கு கட்டி வச்சிருந்தாங்கன்னு வை.. நீ உன் அப்பா, அம்மாவை சும்மா.." அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, கவிதா அவன் தொடையில் நறுக்கென கிள்ளி வைக்க, ஹரி "ஆஆஆஆஆ...!!!" என்று அலறினான். "அப்டிலாம் வேற உங்களுக்கு கேடு கெட்ட நெனைப்பு இருக்கா..??" கண்களை உருட்டி கணவனை முறைத்தாள். "ஐயோ.. ஒரு உதாரணத்துக்கு சொன்னன்டி..!! அது மாதிரிதான் இதுவும்.. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தள்ளிட்டு போறதா..??" வலியோடு முகத்தை சுருக்கிக்கொண்டே சொன்ன ஹரி, அசோக்கிடம் திரும்பி "மச்சான்.. நான் சொல்றதை சொல்லிட்டேன்.. நீ கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ.. இல்லனா ஆன்சைட் ஆப்பர்ச்சூனிட்டியை.. இந்த தர்பூஸ் தலையன் தட்டிட்டு போயிடுவான்.. பாத்துக்கோ..!!" என்று பற்றவைத்துவிட்டு, பிசிபேலாபாத்தை கையில் அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். அசோக் சாப்பிட மனமில்லாதவனாய் சாதத்தை ஸ்பூனால் கிளறிக் கொண்டிருந்தான். அவன் மூளையில் சில குழப்பமான எண்ணங்கள். அப்புறம் எதேச்சையாக பக்கவாட்டில் திரும்பி பார்த்தவன், சற்றே எரிச்சலுற்றான். அவர்கள் பேசியதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல, ப்ரியா தன் ப்ளேட்டில் கிடந்த நூடுல்சை அள்ளி வாய்க்குள் திணிப்பதிலேயே கவனமாக இருந்தாள். வாயில் இருந்து தப்பித்து செல்ல நினைத்த ஒற்றை நூடுலை, உதடுகளை குவித்து, சர்ரென கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளிழுத்துக் கொண்டாள். கடுப்பான அசோக் நறுக்கென அவள் தலையில் ஒரு குட்டு வைத்தான். "ஆஆஆ.. ஏண்டா..??" ப்ரியா தலையை தேய்த்துக் கொண்டாள். "இங்க எவ்வளவு முக்கியமான மேட்டரு பேசிட்டு இருக்குறோம்..?? நீ பாட்டுக்கு எனக்கென்னடான்னு.. நூடுல்சை 'ஊஊஊ'ன்னு உறிஞ்சிக்கிட்டு இருக்குற..??" "ப்ச்.. போடா.. இதெல்லாம் தெரிஞ்சுட்டு நான் என்ன பண்ணப் போறேன்..?? நிம்மதியா சாப்பிட கூட விடமாட்டீங்கடா நீங்க..!!" என்று சலித்துக்கொண்டாள். அன்று மாலை நாலரை மணி இருக்கும். அன்றைய வேலையை முடித்துவிட்ட அசோக், சும்மா இராமல் தனது பர்சனல் ஃபைல்களை மேய்ந்து கொண்டிருந்தான். அப்போதுதான் அவனுக்கு திடீரென அது ஞாபகம் வந்தது. அன்று ப்ரியாவின் ஃபோட்டோக்களை எல்லாம் தன்னுடைய சிஸ்டத்தில் காப்பி செய்து வைத்தது. இப்போது அதை எடுத்து பார்க்கலாம் என்று தோன்றியது. திரும்பி ஒருமுறை தூரத்தில் அமர்ந்திருந்த ப்ரியாவை பார்த்தான். அவள் ஆர்வமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க, சற்றே தைரியமுற்றான். ஒவ்வொரு ஃபோல்டராக திறந்து உள்ளே சேமிக்கப்பட்டிருந்த ஃபோட்டோக்களை பார்த்தான். ப்ரியாவின் அழகை பயந்து பயந்து ரசித்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவன் கண்ணில் அந்த ஃபோல்டர் பட்டது. MM என்று மொட்டையாக பெயர் சூட்டப்பட்டிருந்த ஃபோல்டர்..!! உள்ளே என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தவன், ஆச்சரியமுற்றுப் போனான். உள்ளே ஒரே ஒரு ஃபோட்டோ.. இவனுடைய ஃபோட்டோ..!! அந்த ஃபோட்டோ எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்பது கூட இப்போது அவனுக்கு நினைவில்லை. கம்பெனியில் ஏதோ பார்ட்டி கொடுக்கப்பட்டபோது எடுத்த படமாக தோன்றியது. அழகாக வசீகரமாக சிரித்துக் கொண்டிருந்தான் அந்த ஃபோட்டோவில்..!! அசோக்கிற்கு இப்போது சந்தோஷமும், குழப்பமும் ஒன்று கலந்த மாதிரியான ஒரு உணர்வு. 'என் ஃபோட்டோவை இவள் எதற்கு எடுத்து வைத்திருக்கிறாள்..?? ஒருவேளை இவளும் என்னை மாதிரி..??' அசோக்கிற்கு அந்த கேள்வியே அவன் மனதிற்கு ஒரு தித்திப்பை ஊட்டுவதாக இருந்தது. நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது மாதிரி ஒரு பரவசம்..!! ஒருமுறை திரும்பி ப்ரியாவை பார்த்தான். அவள் தன் வேலையிலேயே இன்னும் கவனமாக இருந்தாள். 'அவளிடமே கேட்டுவிடலாமா..??' மனதில் ஒரு ஆர்வம் இப்போது அவனை அரிக்க ஆரம்பித்திருந்தது. 'ஒருவேளை அவள் சாதாரணமாக எடுத்து வைத்திருந்து.. அதை நான் போய் கேட்டு.. அவள் தவறாக நினைத்துவிட்டால்..?? இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது..?? எதேச்சையாக பார்த்தேன்.. எதற்காக வைத்திருக்கிறாய் என்று கேட்பதில் எந்த தவறும் இல்லை..!! கேட்டுப் பார்க்கலாம்.. அவள் என்ன சொல்கிறாள் என்று தெரிந்து கொள்ளலாம்..!!!' குழம்பி குழம்பி இறுதியாக அசோக் ஒரு முடிவுக்கு வந்தான்.அன்று ஐந்து மணியளவில் காபி ப்ரேக் சென்றபோது அசோக்கிற்கு ப்ரியாவுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. 'ஹேய் ப்ரியா.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..' என்று கிசுகிசுத்தவன், அவளை தனியாக அழைத்து சென்றான். "என்ன அசோக்..??" ப்ரியா புரியாமல் கேட்டாள். "அ..அது.. அது வந்து..!!" அசோக் ஆரம்பிக்கவே தயங்கினான். "ம்ம்.. சொல்லு..!!" "ஆ..ஆக்சுவலா நான் வேணுன்னு பண்ணல ப்ரியா.. ஆக்சிடண்டாத்தான்.." "ஹாஹா.. நீ என்ன சொல்ல வர்றேன்னே எனக்கு ஒன்னும் புரியலை..!!" "இரு.. புரியிற மாதிரி சொல்றேன்.. அன்னைக்கு நீ எனக்கு பாஸ்வேர்ட் கொடுத்தல..??" "ம்ம்ம்.." ப்ரியா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அசோக்கின் செல்போனுக்கு அந்த கால் வந்தது.. ரவிப்ரசாத்திடம் இருந்து..!! அசோக் காலை பிக்கப் செய்து காதில் வைக்க, அடுத்த முனையில் அவன் கரகர குரலில் கத்தினான். "ஹேய்.. வேர் ஆர் யூ கைய்ஸ்..??" "வாட் ஹேப்பன்ட் ரவி.. வீ ஆர் இன் பேன்ட்ரி..!!" "கம் குயிக்லி டூ மீட்டிங் ஹால்..!! வீ ஹேவ் குவாட்டர்லி அப்டேட் மீட்டிங் நவ்.. கம் ஃபாஸ்ட்..!!" "ஓ..!! ஓகே ரவி..!!" அசோக் சொல்லிவிட்டு காலை கட் செய்தான். "என்னாச்சு அசோக்..??" ப்ரியா குழப்பமாக அசோக்கை ஏறிட்டாள். "மூணு மாசத்துக்கு ஒரு தடவை.. நம்ம டெலிவரி யூனிட் பெருந்தலைகள்லாம் ஒண்ணா கூடி.. மீட்டிங்ன்ற பேர்ல உயிரை எடுப்பானுகல்ல..?? இன்னைக்குத்தானாம் அது.. இப்போ ஆரம்பிக்க போகுதாம்.. ரவி உடனே வர சொல்றான்..!!" "ப்ச்.. ச்ச.. நான் மீட்டிங் ரெக்வஸ்ட் பாத்தேன்.. மறந்தே போயிட்டேன்..!! சரி வா.. போலாம்..!!" ப்ரியா அவசரமாக நகர, அசோக் அவள் கையை எட்டிப் பிடித்தான். ஒருமாதிரி ஏக்கமாக பார்த்தான். "என்ன அசோக்..??" ப்ரியா இமைகள் படபடக்க கேட்டாள். "ஒ..ஒண்ணுல்ல ப்ரியா.. வா.. போலாம்..!!" அசோக் தடுமாற்றமான குரலில் சொன்னான். இருவரும் அவசரமாய் நடை நடந்து, மீட்டிங் ஹாலை அடைந்தனர். உள்ளே நுழைந்தனர். ஆயிரம் பேர் அமரக்கூடிய வசதியுள்ள பிரம்மாண்டமான ஹால் அது. அதற்குள்ளாகவே நிரம்பி வழிந்தது. மேடையில் இடப்பட்டிருந்த இருக்கைகளில், அவர்களுடைய டீம் அங்கம் வகிக்கிற நார்த் அமெரிக்கன் டெலிவரி யூனிட்டில், முக்கியமான பதவிகளை வகிக்க கூடியவர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். பால கணேஷும் அதில் ஒருவர். ஏற்கனவே ஒருவர் வரவேற்புரையை ஆற்ற ஆரம்பித்திருந்தார். அசோக்கும், ப்ரியாவும் நகர்ந்து நகர்ந்து.. ஒரு மூலையில் அருகருகே காலியாக இருந்த இரண்டு இருக்கைகளில் சென்று அமர்ந்து கொண்டார்கள்..!! இரண்டு வரிசைகள் தள்ளி அமர்ந்திருந்த ரவிப்ரசாத், இவர்களை திரும்பி பார்த்து, கட்டிவிரலை உயர்த்திக்காட்டி புன்னகைத்தான்..!! இவர்கள் பதிலுக்கு ஒரு புன்னகையை வீசிவிட்டு, மேடை மீது பார்வையை வீசினார்கள்..!! நார்த் அமெரிக்கன் டெலிவரி யூனிட்டில் இவர்களை தவிர இன்னும் எக்கச்சக்கமான டீம்கள் இருக்கின்றன. எல்லா டீமிலும் உள்ளவர்கள்தான் ஆயிரம் பேர் அமரக்கூடிய அந்த அரங்கை இப்போது நிறைத்திருந்தனர். அசோக் சொன்னமாதிரி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த மீட்டிங் நடக்கும். டெலிவரி யூனிட்டில் இந்த மூன்று மாதங்கள் நடந்த முக்கியமான விஷயங்களை, மேனேஜ்மன்ட் எம்ப்ளாயிக்களோடு பகிர்ந்து கொள்ளும். மேஜர் ஆபரேஷன்கள்.. கிடைத்த லாபங்கள்.. அடுத்த மூன்று மாதங்களுக்கான திட்டங்கள்.. இவையெல்லாம்தான் இந்த மீட்டிங்கின் சாராம்சங்கள்..!! ஒரு மணி நேரத்தும் மேலாக எல்லோரும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அசோக்கின் மனம் அவர்கள் பேச்சிலே லயிக்கவே இல்லை. அவனுடைய எண்ணம் முழுவதும், ப்ரியாவுடனான தனிமையையே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது. அடிக்கடி பக்கவாட்டில் அமர்ந்திருந்த ப்ரியாவை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டான்..!! ஒன்றரை மணி நேரம் ஆகி.. எல்லோரும் கட்டுப்படுத்த முடியாமல் கொட்டாவி விட ஆரம்பித்த நேரத்தில்தான்.. கம்பனியின் சீனியர் வைஸ் பிரசிடன்ட்.. மைக் பிடித்து அந்த அறிவிப்பை மேற்கொண்டார்..!! அதன் தமிழாக்கம்..!!"இப்போ அவார்ட் டைம்..!! பெர்ஃபார்மர் ஆப் திஸ் குவார்ட்டர்..!! ரீசண்டா நம்ம பெங்களூர் டீம் ஒன்னு.. யூ.எஸ்ல இருக்குற நம்ம க்ளயன்ட்டுக்கு.. ஒரு ஃப்ரேம்வோர்க் டெலிவர் பண்ணினாங்க..!! அதுல நம்ம டெவலப்பர் ஒருத்தர் டிசைன் பண்ணின காம்பனன்ட்டை.. 'தி பெஸ்ட்..!!' அப்டின்னு க்ளையன்ட் சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காங்க..!! அவங்க நம்மோட புது க்ளையன்ட்.. அவங்ககிட்ட இருந்து நாம இன்னும் எக்கச்சக்கமான ப்ராஜக்ட்ஸ் எதிர்பார்த்துட்டு இருக்கோம்.. இந்த மாதிரி ஒரு க்ரிட்டிகல் நேரத்துல.. நம்ம கம்பனி மேலேயே அவங்களுக்கு நல்ல கான்ஃபிடன்ட் வர்ற அளவுக்கு.. அந்த காம்பனன்ட் டிசைன் இருந்திருக்கு..!! அது மட்டும் இல்ல.. அவங்க கொடுத்த ஃபீட்பேக் வச்சு.. இங்க இருக்குற நம்ம ஆர்க்கிடெக்ட்ஸ் டீம்கும் அதை அனுப்பி வச்சோம்..!! அவங்களும் அதை பெஸ்ட் டிசைன்னு சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க..!! இனிமே அந்த காம்பனன்ட்டை நம்மோட நெறைய ப்ராஜக்ட்ஸ்ல யூஸ் பண்ணப்போறோம்.. நமக்கு கிடைச்சிருக்குற பெரிய சொத்தா அந்த காம்பனன்ட்டை கம்பெனி ட்ரீட் பண்ணுது..!! இன்னைக்கு இந்த அவார்டும்.. அந்த காம்பன்ட் டிசைன் பண்ணின டெவலப்பருக்குத்தான் போகப் போகுது..!! அவங்க பேரை நான் வாசிக்கலாமா..??" என்று நீண்ட பேச்சுக்கு ஒரு சிறு ப்ரேக் கொடுத்தவர், அப்புறம் பெரிய குரலில் கத்தினார்.


"மிஸ் ப்ரியா ஃப்ரம் யூ.பி.ஸி டீம்..!!!!! கேன் யூ ப்ளீஸ் கம் ஆன் டு த ஸ்டேஜ் ப்ளீஸ்..?? எவ்ரிபடி.. ப்ளீஸ் கிவ் ஹர் எ பிக் ஹேன்ட்..!!!!!" அவ்வளவுதான்..!! அந்த ஹாலில் கைதட்டல் ஓசை காதைப்பிளந்தது..!! ப்ரியா இன்ப அதிர்ச்சியில் வாயை ஆ'வென பிளந்தாள்..!! ரவிப்ரசாத் மீண்டும் பின்னால் திரும்பி புன்னகைத்தான்..!! அருகில் அவளை அடையாளம் கண்டுகொண்டவர்கள், அவளுக்கு கைகொடுத்து வாழ்த்து சொன்னார்கள்..!! 'போ.. போ.. ஸ்டேஜுக்கு போ..' என்று அவளை கிளப்பி விட்டார்கள்..!! அவள் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள்..!! ப்ரியாவுக்கு பட்டென ஒரு புது உலகத்துக்குள் புகுந்து விட்ட மாதிரியான உணர்வு..!! நடப்பெதல்லாம் கனவு போல ஒரு தோற்றம்..!! சுற்றி என்ன இருக்கிறது என்று கூட அவள் பார்வையில் படவில்லை.. அருகில் இருந்த அசோக்கும் அவள் கண்ணுக்கு தெரியவில்லை..!! எந்திரம் மாதிரி மேடையை நோக்கி விறுவிறுவென நடந்து சென்றாள்.. இல்லை இல்லை.. மிதந்து சென்றாள்..!! அசோக் ஸ்தம்பித்துப் போய் அமர்ந்திருந்தான்..!! அவனை சுற்றி நடப்பதை அவனால் நம்பவே முடியவில்லை..!! தன்னுடைய மூளையை மிகவும் கஷ்டப்படுத்தி உழைத்து.. தான் உருவாக்கிய ஒரு விஷயத்தை.. இன்னொரு பெண்ணின் உழைப்பாக கருதி.. எல்லோரும் கை தட்டுகிறார்கள்.. பாராட்டுகிறார்கள்..!!

அவன் பேயறைந்த மாதிரியான முகத்துடன்.. இன்னும் தொடர்ந்து கை தட்டிக் கொண்டிருப்பவர்களை.. தலையை திருப்பி திருப்பி பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தான்..!! அவார்ட் கொடுத்து முடித்த சிறிது நேரத்திலேயே மீட்டிங்கும் முடிந்தது. அதன்பிறகும் விடாமல், ஆளாளுக்கு ப்ரியாவிடம் சென்று அவளுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து பேசியவாறே இருந்தார்கள். ப்ரியாவும் எல்லாரிடமும் முகத்தில் ஒரு மலர்ச்சியுடன், எளிருகள் தெரிய சிரித்தவாறு பேசிக்கொண்டிருந்தாள்.அசோக் ப்ரியாவை நெருங்கி அவளுடன் பேசலாமா என நினைத்தான்..!! ஆனால் என்னவென்று சொல்ல இயலாத ஒரு புதுவித உணர்வு, இப்போது அவன் மனதைப்போட்டு பிசைந்து, அவனை நெருங்கவிடாமல் செய்தது..!! தூய்மையாக இருந்த அவனது மனக்கம்ப்யூட்டரில்.. ஈகோ எனும் வைரஸ் இப்போது விழுந்து.. துடித்துக் கொண்டு கிடந்தது..!! நெருங்க நினைத்தவன், விலகி நடந்தான்..!! ஐந்தரை வருடங்களாக எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்று கொண்டிருந்த அசோக்-ப்ரியா நட்பில்.. அவர்களே எதிர்பாராமல்.. அவர்களையும் அறியாமல்.. விழுந்த முதல் விரிசல் அது..!!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக