http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : ஆண்மை தவறேல் - பகுதி - 14

பக்கங்கள்

புதன், 24 ஜூன், 2020

ஆண்மை தவறேல் - பகுதி - 14

அந்தக் காரை போல அல்லாமல் அடுத்து வந்த ஒரு மாதம் அவசரமில்லாமலே நகர்ந்தது. 'அந்த வேலையை விட்ரும்மா.. எதுக்கு தேவையில்லாம கஷ்டப்படுற..?' என்று மஹாதேவன் கல்யாணத்துக்கு முன்பே நந்தினியிடம் சொல்லியிருந்தார்.

அவர் சொல்லை ஏற்று கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்பு, தான் பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறிய வருமானம் உள்ள வேலையையும் ரிஸைன் செய்துவிட்டாள். அப்பாவுக்கு பிசினஸ் நொடித்து வறுமையில் உழன்ற காலத்திலேயே, தொடர்பில் இருந்த சில நண்பிகளும் அவளை விட்டு தொலை தூரம் சென்றிருந்தார்கள். எனவே நந்தினி முழு நேரமும் புகுந்த வீட்டிலேயேதான் கழிக்க வேண்டியிருந்தது.
புது இடத்தில் தன்னை பொருத்திக்கொள்ள நந்தினிக்கு அந்த ஒரு மாத அவகாசம் தேவைப்பட்டது.

அசோக் மட்டுமில்லாது, மஹாதேவன், கௌரம்மா, ராமண்ணா என அந்த வீட்டில் இருந்தவர்களையும், அவர்களது குணங்களையும் அறிந்து கொள்ள அவசியமாயிருந்தது. ஒரு மாதம் முடிந்த தருவாயில் அவளுக்கு அந்த புது வாழ்க்கை ஓரளவு பழகிப் போயிருந்தது. மஹாதேவன் எப்போதும் போல அவள் மீது அன்பை பொழிந்தார்.

மகனுடைய செயல்கள் மருமகளை காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அவள் சாப்பிட்டாளா, தூங்கினாளா, புது இடத்தில் வசதியாய் இருக்கிறாளா என அடிக்கடி கேட்டு அறிந்து கொண்டார். கௌரம்மாவும் அதேமாதிரி நந்தினியை உள்ளங்கையில் வைத்து தாங்கியது, நந்தினிக்கு சற்று ஆச்சரியமாகவே இருந்தது. நந்தினியை எந்த வேலையும் செய்ய விடவில்லை கௌரம்மா. 'நீ விடும்மா.. நான் பண்ணிக்கிறேன்..' என்பாள். நந்தினியே அடம் பிடித்து ஒவ்வொரு வேலையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்ய வேண்டி இருந்தது.

ராமண்ணா அதிகம் பேச மாட்டார். கேட்பதற்கு மட்டும் புன்னகையுடன் பதில் சொல்வார். மற்றபடி அமைதியின் சின்னம் அவர். எந்த நேரமும், மஹாதேவனுடனே இருந்தார். வெளியில் சென்றால் அவருக்கு கார் ஓட்டிக்கொண்டு.. வீட்டில் இருந்தால் அவருக்கு உதவிகள் செய்துகொண்டு..!! அசோக்கை பற்றியும் அவளால் அந்த ஒரு மாதத்தில் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது…!! காலையில் எழுந்து குளித்துவிட்டு அசோக்கிற்கு காபி போடுவதில் இருந்து நந்தினியின் வேலை ஆரம்பமாகும். அப்புறம் கௌரம்மாவுடன் சேர்ந்து சமையல்கட்டில் பிஸியாகி விடுவாள்.

அசோக் குளித்துவிட்டு வந்ததும், உடன் இருந்து அவனுக்கு காலை உணவு பரிமாறுவாள். அவன் ஆபீஸ் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் மீண்டும் சமையலறை..!! கௌரம்மாவுடன் ஏதாவது கதையடித்துக்கொண்டே மதிய உணவு தயார் செய்வாள். ஹாட் பாக்ஸில் போட்டு எடுத்துக்கொண்டு, அடையாறு ஆபீசுக்கு செல்வாள். நந்தினி இந்த மாதிரி அவனுக்காக சமைப்பது, ஆபீசுக்கு அதை கொண்டு வருவது, அவனுடைய வேலைகளை அவள் செய்வது எல்லாம் ஆரம்பத்தில் அசோக்கிற்கு பிடிக்கவில்லை.

மனைவி என்ற உரிமையை எடுத்துக்கொள்ள முயலுகிறாளோ என்று சந்தேகித்தான். முதல் நாள் அவள் சாப்பாடு கட்டிக்கொண்டு ஆபீசுக்கு வந்தபோது சற்று கடுமையாகவே சொன்னான். "இங்க பாரு நந்தினி.. இதுலாம் நீ செய்யணும்னு அவசியம் இல்ல.. இதெல்லாம் நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கவும் இல்லை..!!

நாளைல இருந்து நீ சாப்பாடு கொண்டு வர வேணாம்.. நான் எப்போவும் போல வெளிலயே சாப்பிட்டுக்குறேன்..!!" "ஹையோ.. இதுல என்னங்க இருக்கு..?? எனக்கும் வீட்டுல ரொம்ப போரடிக்குது.. எவ்வளவு நேரம்தான் சும்மா தின்னுட்டு தின்னுட்டு தூங்குறது..?? எனக்கும் பொழுது போக வேணாமா..??" 

"பொழுது போறதுதான் உனக்கு பிரச்னையா..?? புக்ஸ், ம்யூசிக், டிவி, வீடியோ, இன்டர்நெட்னு வீட்டுல என்னன்னவோ இருக்கு.. அதெல்லாம் விட்டுட்டு எனக்காக எதுக்கு அலைஞ்சு கஷ்டப்பட்டுட்டு இருக்குற..?" "இதுல என்ன கஷ்டம் இருக்கு..?? ராமண்ணாட்ட சொல்லப்போறேன்.. அவர் கார்ல கூட்டிட்டு வந்து திரும்ப கூட்டிட்டு போக போறாரு..!!

வீட்டுலையே அடைஞ்சு கெடக்குறது கஷ்டமா இருக்கு அசோக்.. இப்படி வந்துட்டு போனா எனக்கும் கொஞ்சம் நல்லாருக்கும்..!! அதில்லாம.. நான் ஆபீசுக்குள்ள நடந்து வர்றப்போ, எல்லாரும் எந்திரிச்சு நின்னு எனக்கு வணக்கம் சொல்றாங்க.. எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா..?" நந்தினி பெருமையான குரலில் சொல்ல, அசோக் இப்போது கிண்டலாக கேட்டான்.

 


"ஓ..!! அப்போ வீட்டுல உனக்கு போரடிக்கிறதாலயும், ஆபீஸ்ல எல்லாம் உனக்கு சல்யூட் அடிக்கிறதாலயுந்தான்.. டெயிலி சாப்பாடு கொண்டு வர்றேன்னு சொல்றியா..?" "அச்சச்சோ.. அதுலாம் ஸைடு.. மெயின் ரீஸன் வேற.." "என்ன..?" "ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு என் பிரண்டோட உடம்பு கெட்டு போயிட கூடாதே.. அதான்..!!" சொல்லிவிட்டு நந்தினி குறும்பாக கண்சிமிட்ட, அசோக்கும் சிரித்தான்.

அவளை தினமும் மதியம் தனக்கு சாப்பாடு கொண்டு வர அனுமதித்தான். அசோக் அவ்வாறு அனுமதி அளித்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு வெறுத்து போயிருந்த அவனுக்கு, நந்தினியின் கைப்பக்குவ சாப்பாடு அமிர்தமாக தோன்றியது. அப்புறம்.. சாப்பிடும்போது அவளுடன் ஏதாவது சிரித்து பேசிக்கொண்டே சாப்பிடுவது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
நந்தினி மாலை நேரங்களை பெரும்பாலும் வீட்டு தோட்டத்தில்தான் கழிப்பாள். செடிகளுக்கும், புற்களுக்கும் நீரூற்றுவது.. வண்ண வண்ணமாய் பூத்து குலுங்கும் மலர்களின் அழகை ரசிப்பது.. கௌரம்மாவுடன் பேசிக்கொண்டே கொஞ்ச நேரம் காலாற நடப்பது.. இதமாகவே கழியும் நந்தினியின் மாலை நேரம்..!! இரவுதான்.. அசோக் எப்போது திரும்புவான் என்பது உறுதியாக சொல்ல முடியாத விஷயமாக இருந்தது.

சில நேரங்களில் மிகவும் தாமதமாக தள்ளாடிக்கொண்டே வருவான். சில நேரங்களில் குடிக்காமல் சீக்கிரமாகவே வீட்டுக்கு திரும்பி நந்தினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பான். ஆனால் அவன் வருவதற்கு எவ்வளவு நேரம் ஆனாலும், நந்தினி அவனுக்காக விழிப்புடன் காத்திருப்பாள்.

அவன் வந்த பிறகே இருவரும் உண்டுவிட்டு உறங்க செல்வார்கள். அசோக் தனது பேச்சுக்கு மதிப்பு கொடுத்து, இரவு வெளியே தாங்காமல் வீட்டுக்கு திரும்புகிறான் என்பதே நந்தினிக்கு மிகவும் நிம்மதி அளிக்கும் விஷயமாக இருந்தது. அவன் சீக்கிரமே வீட்டுக்கு திரும்பி விடும் நாட்களில், இரவு அவனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருப்பாள்.

அவன் தனது லேப்டாப்பில் ஏதாவது புது காம்பனன்ட் டிசைன் செய்து கொண்டிருந்தால், இவளும் அருகில் இருந்து கவனிப்பாள். 'இந்த எடத்துல பென்டிங் மொமன்ட் ஜாஸ்தியா இருக்கும்ல..? எப்படி தாங்கும்..?' என்று மழுங்கிப் போயிருக்கும் தனது எஞ்சினியரிங் மூளையை கூர்தீட்ட முனைவாள்.

'அதுக்கு இந்த எடத்துல ஒரு சப்போர்ட் கொடுக்க போறேன் டியர்..!!' என்று அசோக்கும் அவனது புத்திசாலித்தனத்தை காட்டுவான். சில நேரங்களில் விளக்கை அணைத்து படுக்கையில் வீழ்ந்த பின்பும் கூட, இருவரும் நெடுநேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். நந்தினி முதல் நாளே முடிவு செய்த மாதிரி கீழே ஒரு பெட்ஷீட் விரித்து அதில்தான் படுத்துக் கொள்வாள்.

இவள் கீழே அவன் மேலே.. இரவு விளக்கின் வெளிச்சம்.. இமைகள் தானாக யாரோ ஒருவருக்கு மூடிக்கொள்ளும் வரையில்.. பேசிக்கொண்டிருப்பார்கள்..!! எதுபற்றி பேசினாலும் இலகுவாக சிரித்துக்கொண்டே உடன் பேசும் அசோக், அவர்களுடைய கல்லூரி கதை பற்றிய பேச்சை எடுத்தால் மட்டும் எரிந்து விழுந்தான்.

அது ஏனோ அவனுக்கு அந்தப்பேச்சு சுத்தமாக பிடிக்கவில்லை. அதை அறியாத நந்தினி ஒருமுறை.. "நம்ம காலேஜ்ல.. மெக்கானிக்ஸ் ஆஃப் சாலிட்ஸ் எடுப்பாரே.. ஒரு வழுக்கைத்தலை.." என்று ஆரம்பிக்க, "ப்ளீஸ் நந்தினி.. காலேஜ் பத்தி எதுவும் தயவு செஞ்சு எதுவும் என்கிட்டே பேசாத.. எதையும் திரும்ப நெனச்சு பாக்குற ஐடியா எனக்கு இல்ல.." என்று பட்டென அவளை இடைமறித்தான்.

 அப்புறம் நந்தினி மன்னிப்பு கேட்டுக்கொண்டு, பேச்சை வேறு பக்கம் திருப்பியபோதும், அசோக் வேண்டா வெறுப்பாகவே பேசுவது போல அவளுக்கு தோன்றியது. நந்தினி வாரம் ஒருமுறை பெருங்குடி சென்று அம்மாவை பார்த்து திரும்புவாள். அவளுடைய பிறந்த வீட்டு செலவை மஹாதேவனே ஏற்றுக் கொண்டார். அவர் சொன்ன மாதிரியே வந்தனாவுக்கும் கல்லூரியில் இடம் வாங்கி கொடுத்தார். அவளும் உற்சாகமாக கல்லூரி செல்ல ஆரம்பித்து விட்டாள்.

வந்தனா எப்போதாவது அக்காவை பார்க்க ஈஞ்சம்பாக்கம் வருவதுண்டு. ஆனால் அமுதா எப்போதும் வருவதில்லை. அவளுடைய உடல்நிலையும் அதற்கு அனுமதிக்கவில்லை. அசோக்கை பொறுத்தவரை.. காலையில் விஸ்கி சாப்பிடும் பழக்கத்தை விட்டுவிட்டது.. மதியம் நந்தினியுடன் சேர்ந்து உணவருந்துவது.. இரவு எவ்வளவு நேரமானாலும் வீட்டுக்கு திரும்பி விடுவது.. இது தவிர அவனுடைய அன்றாட பழக்க வழக்கங்களில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.

இன்னொரு ஜீவன் அவனுடன் வாழ்கிறது என்பதை தவிர அவனது இயல்பு வாழ்க்கை எந்த வகையிலேயும் பாதிக்கப்படவில்லை. எப்போதும் போலவே தனியாகவோ, நாயருடனோ ஊர் சுற்றி திரிந்தான். ஆனால் மஹாதேவனோ, மகனுடைய அந்த சிறிய மாற்றத்திற்கே மனமகிழ்ந்து போனார். அசோக் மாற ஆரம்பித்து விட்டான் என்று எண்ணிக்கொண்டார். நந்தினிதான் அதற்கு காரணம் என்று நினைத்தார்.

கூடிய சீக்கிரமே அவன் முழுமையாக மாறி விடுவான் என்று நம்பிக்கை வளர்த்துக் கொண்டார். அசோக் நந்தினியை எங்கும் வெளியில் கூட்டி செல்வது கிடையாது. ஒரே ஒருமுறை மஹாதேவனின் குடைச்சல் தாங்காமல் நந்தினியின் பிறந்த வீட்டுக்கு கூட்டி சென்று, ஒருநாள் அங்கே தங்கி இருந்துவிட்டு வந்தான்.

அவ்வளவுதான்..!! அசோக்கிற்கு எல்லாம் அவனுடைய திட்டப்படி நடப்பதாக மேலோட்டமாக தோன்றினாலும், அவனையும் அறியாமல் நந்தினி அவனுக்குள் ஊடுருவ ஆரம்பித்திருந்தாள். நந்தினியிடம் பேசுவது அவனுக்கு பிடித்திருந்தது..!! அவளுடைய குறும்பான கேலிப்பேச்சு.. அவளுடைய குழந்தைத்தனமான முகம்.. அவளுடைய மத்தாப்பு சிரிப்பு.. அவனுக்கு ஒரு இதத்தை கொடுத்தது..!! நந்தினிக்கு அவன் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தான். அந்த ஒரு மாத இறுதியில் நடந்த ஒரு சம்பவத்தை சொன்னால் ஓரளவு உங்களால் புரிந்து கொள்ள முடியும். அன்று இரவு அசோக் வீடு திரும்பும்போது மணி பனிரெண்டை தாண்டியிருந்தது. வீட்டுக்கு அவன் ஒரு சாவி தனியாக வைத்திருப்பான்.

கதவு திறந்து உள்ளே நுழைந்தவன், நந்தினி இருட்டுக்குள் தனியாக டைனிங் டேபிளிலேயே அமர்ந்திருப்பதை பார்த்து, சற்றே ஆச்சரியப்பட்டு போனான். விளக்கை உயிர்ப்பித்தான். வீடே மிதமிஞ்சிய அமைதியில் இருந்தது. நந்தினியை தவிர வீட்டில் மற்றவர்கள் அனைவரும் நித்திரையில் ஆழ்ந்திருந்தார்கள்.

நந்தினிக்கும் தூக்கம் கண்களை முட்டுகிறது என்று அவளுடைய முகத்திலேயே தெளிவாக தெரிந்தது. "ஹேய்.. நீ இன்னும் தூங்கலையா..?" அசோக் ஆச்சரியமாக கேட்டான்.

 
"இல்ல.. உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.." நந்தினி சேரில் இருந்து எழுந்துகொண்டே சொன்னாள். "சாப்பிட்டியா.. இல்லையா..?" "இன்னும் இல்ல.." "ப்ச்.. நான்தான் வர லேட் ஆகும் நீ சாப்பிட்டு தூங்கிடுனு சொல்லிருந்தேன்ல..? அப்புறமும் ஏன் முழிச்சுட்டு இருக்குற..?"

 "பரவால.. கை கழுவிட்டு வாங்க.. சாப்பிடலாம்..!!" சொல்லிக்கொண்டே நந்தினி ஹாட்பாக்சை திறந்தாள். "நான் சாப்பிட்டேன்.." அசோக் அமைதியாக சொல்ல, நந்தினியின் முகத்தில் ஒரு ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது. "ஓ.. சாப்டாச்சா..? ஓகே..!!" என்று அமைதியாக சொன்னவள், ஹாட்பாக்சை மூடி வைத்தாள். அவர்களது படுக்கை அறையை நோக்கி விடுவிடுவென நடந்தாள். அசோக் ஒருகணம் எதுவும் புரியாமல் அங்கேயே நின்றான்.

அப்புறம் அவனும் நடந்து படுக்கையறைக்கு சென்றான். உள்ளே நந்தினி தனது பெட்ஷீட் எடுத்து தரையில் விரித்துக் கொண்டிருந்ததை பார்த்ததும் எரிச்சலுற்றான்.

 "நீ சாப்பிடலையா..?"
 "இல்ல.. எனக்கு வேணாம்.."
 "ஏன்..?"
 "பசியில்ல.."
 "ப்ச்.. பொய் சொல்லாத நந்தினி.. என் மேல இருக்குற கோவத்தை ஏன் சாப்பாடு மேல காட்டுற..? போ.. போய் சாப்பிடு.."
 "எனக்கு என்ன கோவம்..? அதுலாம் ஒண்ணுல்ல.."
 "அப்புறம் ஏன் சாப்பிட மாட்டேன்ற..?"
 "அதான் பசியில்லைன்னு சொல்றேன்ல..? விடுங்க..!!" சொல்லிக்கொண்டே நந்தினி படுகையில் விழ முற்பட, அசோக் அவளது புஜத்தை பற்றி தடுத்தான்.

 "அப்படியே அறைஞ்சுடுவேன்.. வா..!!" அவளை அறை வாசல் நோக்கி இழுத்தான்.

 "ஐயோ.. என்னங்க இது.. விடுங்க.."

 "நீ மொதல்ல சாப்பிடு.. வா.."
 "எனக்கு தூக்கம் வருது.."
 "மொதல்ல சாப்பிடு.. அப்புறமா தூங்கலாம்..!!"
 "ப்ச்.. அப்புறம் எனக்கு தூக்கம் வராது.." "நான் தாலாட்டு பாடி தூங்க வைக்கிறேன்.. வா..!!" அவளை இழுத்துக்கொண்டு சென்று டைனிங் டேபிளில் அமர வைத்தான்.

ப்ளேட் எடுத்து அவளுக்கு முன்பாக தள்ளிவிட்டான். ஹாட் பாக்ஸ் திறந்து சாப்பாடு அள்ளி தட்டில் போட்டான். அவள் சாப்பிட ஆரம்பிப்பாள் என்று சில வினாடிகள் காத்திருந்து ஏமாந்தான். பொறுமையிழந்த அசோக், தலை குனிந்தவாறு அமர்ந்திருந்த நந்தினியிடம் சற்றே கடுமையான குரலில் சொன்னான்.
 "ம்ம்.. சாப்பிடு.."
 "........................." நந்தினி அமைதியாக இருந்தாள்.
 "கமான் நந்தினி.. சாப்பிடு.." "........................." "இப்போ நீ சாப்பிட போறியா.. இல்லையா..?"
 "........................." நந்தினியிடம் எந்த அசைவும் இல்லை.
 "இங்க பாரு நந்தினி.. நீ இந்த மாதிரி பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை.."
"எந்த மாதிரி பண்றது..?"
 "புடிவாதம் புடிக்கிறது..!! எனக்காக நீ உன்னை கஷ்டப் படுத்திக்கிறது..!!" 

"எனக்குத்தான கஷ்டம்.. உங்களுக்கு என்ன..?" நந்தினியின் கேள்வி அசோக்கை ஒரு கணம் திகைக்க வைத்தது.

‘ஆமாம்.. அவளுக்குத்தானே கஷ்டம்..?? எனக்கு என்ன..?? சாப்பிடாவிட்டால் போகிறாள் என்று விடாமல், நான் ஏன் இவளிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்..??’ அசோக்கிற்கு புரியவில்லை..!! ஆனால் அவள் தனக்காக கஷ்டப்படுகிறாள் என்பதை ஏனோ அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..!!
 "என்ன பேசுற நீ..?? எனக்காக நீ ஏன் பட்டினியா கெடக்கணும்..?? ஒழுங்கா சாப்பிடு.."
 "எனக்கு வேணாம்.."
 "அறைஞ்சுடுவேன் நந்தினி.. சும்மா அறிவில்லாம அடம் புடிக்காத..!!" அசோக் இப்போது எகிற,
 "நான் என்ன அறிவில்லாம அடம் புடிக்கிறேன்..??" நந்தினியும் சீறினாள்.

 "பின்ன என்ன..? நான்தான் 'வெளில போறேன்.. வர லேட்டாகும்.. சாப்பிட்டு வந்துடுவேன்..'ன்னு சொன்னேன்ல..? அப்புறமும் நீ இப்படி சாப்பிடாம உக்காந்திருந்தா என்ன அர்த்தம்..??"

 "வர லேட்டாகும்னுதான் சொன்னீங்க.. சாப்பிட்டு வந்துடுவேன்லாம் சொல்லலை..!!"
 "சரி.. தப்புதான்.. மன்னிச்சுக்கோ.. இனி வெளில சாப்பிடுற மாதிரி இருந்தா.. உன்கிட்ட முன்னாடியே சொல்லிர்றேன்.. சாப்பிடு.." நந்தினி அதன்பிறகும் அமைதியாகவே இருந்தாள்.

தட்டில் இருந்த சாதத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அசோக்கிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தலையை பிடித்துக் கொண்டான். "இப்போ என்னதான் நீ எங்கிட்ட இருந்து எதிர்பார்க்குற..? என்னதான் வேணும் உனக்கு..?"

 "எனக்கு எதுவும் வேணாம்.."

 "அப்புறம் ஏன் இப்படிலாம் பண்ற..?"

 "நான் என்ன பண்றேன்..? உங்களோட சேர்ந்து சாப்பிடலாம்னு நெனச்சிருந்தேன்..!! அது இல்லைன்றப்போ.. சாப்பிடனும்ன்ற இன்ரஸ்டே போயிடுச்சு.. அவ்வளவுதான்..!! ஒருநாள் சாப்பிடாம இருந்தா என்ன இப்போ..??" நந்தினி வெறுப்பாக சொல்ல,

இப்போது அசோக் தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, கொஞ்ச நேரம் நந்தினியின் முகத்தையே அமைதியாக பார்த்தான்.

அப்புறம் மெல்லிய குரலில் சொன்னான்.


"உனக்கு என்கூட சேர்ந்து சாப்பிடனும்.. அவ்வளவுதான..?? சரி.. இனி நான் வெளில சாப்பிடலை.. போதுமா..?? எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டுக்கு வந்து உன் கூட சேர்ந்து சாப்பிடுறேன்.. ஓகேவா..? ம்ம்..?? இப்போ சாப்பிடு..!!" அசோக் சொல்ல, நந்தினி சில வினாடிகள் தலையை குனிந்தவாறு அமைதியாக இருந்தாள். அப்புறம் மெல்ல தன் கையை நீட்டி, சாதத்தட்டை தன் பக்கமாக இழுத்தாள்.
சாம்பாருடன் சாதத்தை பிசைந்து சாப்பிட ஆரம்பித்தாள். அசோக் தன் மனைவியை பார்த்து மெலிதாக, நிம்மதியாக புன்னகைத்தான்.

 'இவள் ஏன் இப்படி செய்கிறாள்..?' என்று அசோக்கிற்கு ஒரு சலிப்பான எண்ணம் தோன்றியது. இவளுக்கு என்னை பிடித்திருக்கிறது என்று எனக்கு புரிகிறது. எனக்காக தன்னை வருத்திக் கொள்கிறாள். ஏன் என்று கேள்வி எழுப்பினால், கல்யாணத்திற்கு கண்டிஷன் போடுகையில் தான் சொன்ன அந்த 'நட்பு ரீதியான உரிமை..' என்ற ஒற்றை சொல்லை பிடித்துக்கொண்டு தொங்குகிறாள்.

இது வெறும் நட்பு மட்டுந்தானா..? இல்லை.. இவள் அதையும் தாண்டி செல்ல முற்படுகிறாளா..?? நானுந்தான் என்னையுமறியாமல் இவள் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் வளைந்து கொடுக்கிறேனா..?? சேச்சே.. இல்லை இல்லை.. அப்படி என்ன இவள் பெரிதாக ஆசைப்பட்டுவிட்டாள்..? வீட்டில் மற்றவர்களை விட என்னை இவளுக்கு பிடித்திருக்கிறது.. தினமும் என்னுடன் அமர்ந்து உண்ணவேண்டும் என்று எண்ணுகிறாள்..

அது இன்று இல்லை என தெரிந்ததும், அவளுக்குள் ஒரு கோபம்.. பிடிவாதம்..!! நானுந்தான் இப்போது பெரிதாக என்ன இழந்து விட்டேன்..?? வெளியில் சாப்பிடுவதை இனி இவளுடன் அமர்ந்து சாப்பிட போகிறேன்..?? முடியாத சூழ்நிலையில் 'முடியாது' என்று ஃபோன் பண்ணி சொல்லப் போகிறேன்.. அவ்வளவுதானே..?? இது ஒரு பெரிய விஷயமா..?? அசோக் அந்த மாதிரி குழப்பத்தின் பிடியில் சிக்கிக்கொண்டிருக்க, நந்தினியோ குழம்பை பிசைந்து மொக்கிக்கொண்டிருந்தாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக