http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : கண்ணாமூச்சி ரே ரே - திரில் தொடர் - பகுதி - 11

பக்கங்கள்

சனி, 4 ஜூலை, 2020

கண்ணாமூச்சி ரே ரே - திரில் தொடர் - பகுதி - 11

கரடுமுரடான மலைச்சரிவில் கார் மேல்நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது.. கதிர் காரோட்டிக் கொண்டிருந்தான்.. அவனுக்கருகே ஆதிரா கைகட்டி அமர்ந்திருந்தாள்.. இருவருடைய முகத்திலும் ஒரு கெட்டிப்பட்ட அமைதி..!! கதிர்தான் முதலில் அந்த அமைதியை குழைத்தான்..!! "அட்ரஸ் வச்சிருக்கிங்கள்ல ஆதிரா..??"

 "இல்ல கதிர்.. அவர் அட்ரஸ்லாம் தரல..!!" "அப்புறம்..??" "சர்ச்ல இருந்து லெஃப்ட்ல போற ரோட்ல.. லாஸ்டா, தனியா இருக்குற வீடுன்னு சொன்னார்.. வொய்ட் கலர் பில்டிங்காம்..!!" "ஓ.. சரி சரி..!!" ஆதிராவும் கதிரும் நேற்று அகல்விழியின் வீட்டில் இருந்து கிளம்புகையிலேயே.. தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதித்தனர்..!!

அந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் நகலை எப்படியாவது கைப்பற்றுவதுதான் அவர்களது நோக்கமாக இருந்தது..!! 'பட்டப் படிப்புக்கென ஆரம்பிக்கப்பட்ட ஆராய்ச்சிதானே இது.. தாமிராவின் கல்லூரியில் இதுபற்றி விசாரித்துப் பார்த்தால் என்ன..?' என்று அவர்களுக்கு தோன்றியது..!! அதன்படியே.. குன்னூரில் இருக்கிற அந்த கலைக் கல்லூரிக்கு கால் செய்து.. விஷயத்தை தெளிவாக விளக்கி விசாரித்தனர்..!!


தாமிராவும், அகல்விழியும் மேற்கொண்ட அந்த ஆராய்ச்சிக்கு.. அந்த கல்லூரியை சேர்ந்த ப்ரொஃபஸர் ஒருவர் கைடாக பணிபுரிந்த தகவல் கிடைத்தது.. 'மேலும் தகவல் பெற அவரை அணுகுங்கள்' என்று கல்லூரியில் இருந்து அவரை கைகாட்டிவிட்டனர்..!!

அவருடைய தொடர்பு எண்ணை பெற்றுக்கொண்டு கால் செய்து பேசினர்..

அவரிடம் நேரில் சந்தித்து பேச அனுமதி வாங்கினர்..!! அவரது வீடும் அகழியின் சுற்று வட்டாரத்திலேயேதான் அமைந்திருந்தது.. அங்குதான் இப்போது கதிரும், ஆதிராவும் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள்..!! ஆதிரா சொன்ன சர்ச் வந்ததும், இடதுபுறம் காரை திருப்பினான் கதிர்.. மிக குறுகலான மண்சாலை.. மிதமான வேகத்தில் அதே சாலையில் ஐந்து நிமிடங்கள் பயணிக்க.. தனியாக நின்றிருந்த அந்த வெண்ணிற கட்டிடம் பார்வைக்கு வந்தது..!!

ஆதிராவின் வீடு அளவிற்கு அரண்மனை போல இல்லாவிடிலும்.. செல்வச் செழுமையுடனே அழகுற காட்சியளித்தது அந்த வீடு..!! காரை வெளியே நிறுத்திவிட்டு.. கேட் திறந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள்.. கோரைப் புற்களுக்குள் கால்பதித்து நடந்தார்கள்..!! வீட்டை சுற்றிலும் ஒரே நிசப்தம்.. தூரத்து நீர்வீழ்ச்சியின் ஓசை மட்டும், இங்குவரை சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது..!!

 கதவுக்கு பக்கவாட்டில் பெயர்ப்பலகை தெரிந்தது.. பேராசிரியர் மணிமாறன்.. Ma, Mphil, PhD-யுடன் இன்னும் ஏதோ ஒரு புரியாத படிப்பை படித்திருந்தார்..!! பெயர்ப்பலகைக்கு கீழே காட்சியளித்த காலிங் பெல்லை கதிர் அழுத்தினான்..!! "க்க்க்ர்ர்ர்ர்ர்...!! க்க்க்ர்ர்ர்ர்ர்...!! க்க்க்ர்ர்ர்ர்ர்...!!" மூன்று நான்குமுறை காலிங்பெல் சத்தம் ஒலித்தும், உள்ளிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை.. கதவு திறக்கப்படவில்லை.. ஆதிராவும், கதிரும் சற்றே குழப்பமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..!!

 "அவர் நம்பருக்கு வேணா கால் பண்ணி பாருங்க ஆதிரா..!!" "இருங்க.. பண்ணிப் பாக்குறேன்..!!" ஆதிரா தனது கைப்பையில் இருந்து செல்ஃபோனை எடுத்துக் கொண்டிருக்கும்போதே, கதிர் அவளை தடுத்தான். "ஒரு நிமிஷம் இருங்க.. வீட்டுக்கு பின்னாடி ஏதோ பேச்சு சத்தம் கேக்குற மாதிரி இல்ல..??" கதிர் குழப்பமாக சொன்னதும், ஆதிராவும் நெற்றி சுருக்கத்துடன் தனது காதை உன்னிப்பாக்கி கவனித்தாள்.. ஆமாம்.. வீட்டுக்கு பின்புறம் இருந்து மிக சன்னமாக ஒரு பேச்சுக் குரல்.. ஆனால், தெளிவில்லாமல்..!! "ஆமாம்.. கேக்குது..!!"

 ஆதிராவும் கதிரும் வாசலில் இருந்து நகர்ந்தார்கள்.. மீண்டும் கோரைப்புற்களில் கால் பதித்து நடந்து, வீட்டை சுற்றிக்கொண்டு, பின்பக்கமாக சென்றார்கள்..!! வீட்டுக்கு பின்புறம் அமைந்திருந்த தோட்டம் இப்போது அவர்களது பார்வைக்கு வந்தது..!! நெருக்க நெருக்கமாய் வளர்ந்திருந்த பச்சை செடிகள்.. அந்த செடிகளில் கொத்துக் கொத்தாய் மலர்ந்திருந்த பலவண்ண பூக்கள்..!! தோட்டத்தை பார்த்ததுமே.. கண்ணுக்குள் ஒரு குளுமையும், நெஞ்சுக்குள் ஒரு இனிமையும் பரவுவதை உணர முடிந்தது..!! செடிகளுக்கு நடுவே, வெண்ணிற பனியன் அணிந்திருந்த அவர் அமர்ந்திருந்தார்.. மணிமாறன்.. நாற்பது வயதை தாண்டியவர்.. தலைமுடி கருத்திருக்க, தாடி மட்டும் நரைத்திருந்தது..!!

கையிலிருந்த செடியை தரையில் ஊன்றி மண் நிரப்பிக்கொண்டே.. யாரிடமோ புன்னகை முகத்துடன் பேசிக்கொண்டிருந்தார்..!! "......... புரியுதா..?? இனிமே இதுதான் உன் இடம்.. வேற எங்கயும் போகணும்னு நெனைக்க கூடாது..!!" யாரிடம் பேசுகிறார் என்று இவர்கள் ஆர்வமாக பார்த்தனர்.. அவரை தவிர அங்கு வேறு யாரும் இல்லை.. தனியாகத்தான் பேசிக்கொண்டிருந்தார்..!! "சமத்தா இங்கயே இருக்கணும்.. என்கூடவே இருக்கணும்.. எப்போவும்.." தானாக பேசிக் கொண்டிருந்தவர், அருகில் நிழலாடுவதை உணர்ந்ததும் பேசுவதை நிறுத்தினார்.. தலையை திருப்பி இவர்களை ஏறிட்டார்..

உடனடியாய் முகத்தில் ஒரு குழப்பரேகை பரவ.. "நீ..நீங்க..??" என்று கேள்வியாக பார்த்தார். "நான்.. ஆதிரா.. தாமிராவோட அக்கா.. நேத்து கால் பண்ணினேனே..??" ஆதிரா சொன்னதும் அவர் முகத்தில் குழப்பம் மறைந்து, பட்டென ஒரு மலர்ச்சி தோன்றியது. "ஓ.. நீங்களா.. வாங்க வாங்க..!! இவ்வளவு சீக்கிரம் வந்து நிப்பிங்கன்னு எதிர்பாக்கல.. அதான்..!!" சொன்னவாறே எழுந்து கொண்டவர், "வாங்க.. வீட்டுக்குள்ள போய் பேசலாம்..!!" என்றவாறே அவர்களை வீட்டுக்கு முன்பக்கமாக அழைத்து சென்றார்.

நடக்கும்போதே, "என்னடா.. பைத்தியக்காரன் மாதிரி தனியா பேசிட்டு இருக்கான்னு பாத்திங்களா..?? ஹாஹா..!!" என்று சிரிப்புடன் கேட்டார். "ச்சேச்சே.. அப்படிலாம் இல்ல ஸார்..!!" "ஹ்ம்ம்.. என் வொய்ஃப் போனப்புறம்.. இந்த தோட்டம்தான் எனக்கு இருக்குற ஒரே துணைன்னு ஆகிப்போச்சு.. இந்த செடிகளும் பூக்களும் எனக்கு ஃப்ரண்ட்ஸ் மாதிரி..!! ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணினா.. இப்படி வந்து உக்காந்து பேசிட்டு இருப்பேன்.. மனசுக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்..!!"

 "ம்ம்.. புரியுது ஸார்..!! என்னோட அப்பாவுக்கு கூட இந்த மாதிரி செடிக கூட பேசுற பழக்கம் இருக்கு..!!"

 "ஹாஹா..!! நெஜமாவா..?? தாமிரா அதைப்பத்தி எங்கிட்ட சொன்னதே இல்லயே.. ஹாஹாஹா.. குட் குட்.. வெரி குட்..!!" இருவரையும் வீட்டுக்குள் அழைத்து சோபாவில் அமரவைத்தார் மணிமாறன்.. சமையலைறைக்குள் புகுந்தவர், ஐந்து நிமிடங்கள் கழித்து மூன்று தேநீர் கோப்பைகளுடன் வெளிப்பட்டார்..!!

 "பால் கலக்காத க்ரீன் டீ-தான் எங்க வீட்ல எப்போவும்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க..!! ஹாஹா..!!" என்று சிரிப்புடனே கோப்பைகளை இவர்களிடம் நீட்டினார்..!! மூவரும் தேநீர் உறிஞ்ச ஆரம்பித்ததுமே.. "ம்ம்.. சொல்லுங்க.. என்ன விஷயமா என்னை பாக்க வந்திருக்கீங்க..??" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
ஆதிராவே பேசினாள்.. தாங்கள் வந்திருக்கிற விஷயம் பற்றி அவருக்கு விளக்கி கூற ஆரம்பித்தாள்..!!

 "......... அந்த ஆராய்ச்சிக்கு நீங்கதான் கைடா இருந்திருக்கீங்க.. கரெக்டா..??" "ஆமாம்.. ஆரம்பத்துல வேற டாபிக் சொன்னாங்க.. அப்புறம் தாமிரா திடீர்னு வந்து குறிஞ்சியை பத்தி ரிசர்ச் பண்ணப் போறதா சொன்னா..!!"

"ம்ம்..!!" "குறிஞ்சியை பத்தி ரிசர்ச்னதும்.. எனக்கும் மொதல்ல கொஞ்சம் தயக்கமாத்தான் இருந்துச்சு..!!"
 "ஏன்..??"

 "ஏன்னா.. எப்படி சொல்றது.. ம்ம்ம்.." சொன்ன மணிமாறன் சில வினாடிகள் அப்படியே அமைதியாகிப் போனார்.. கையிலிருந்த தேநீர் கோப்பையையே கூர்மையாக வெறித்தார்..!! ஆதிராவும், கதிரும் அவருடைய முகத்தையே புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க.. அப்புறம் ஒரு நீண்ட பெருமூச்சுடன் மீண்டும் பேச ஆரம்பித்தார்..!!

 "ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்..!! ஏழு வருஷத்துக்கு முன்னாடி இந்த ஊர்ல வந்து நான் செட்டில் ஆறப்போ.. குறிஞ்சியை பத்தி ஊர் ஜனங்க சொன்ன கதைலாம் மொதமுறையா கேள்விப்பட்டேன்..!! ரொம்ப பயமுறுத்தினாங்க.. 'தனியா எங்கயும் போகாதிங்க, குறிஞ்சி தூக்கிட்டு போய்டுவா, பஸ்பம் ஆக்கிருவா, ஆவியா மாத்திருவா' அப்படி இப்படின்னு..!!"

 "......................."

 "ஹாஹா.. அதெல்லாம் கேக்குறப்போ அப்போ எனக்கு சிரிப்புதான் வந்துச்சு.. பைத்தியக்கார ஜனங்கன்னு தோணுச்சு..!! ஆனா.. என் வொய்ஃப்க்கே அது நடந்தப்பதான்.. அவங்க சொன்னதோட சீரியஸ்னஸ் புரிஞ்சது..!!" மணிமாறன் தளர்ந்த குரலில் சொல்ல,

 "......................." ஆதிராவும் கதிரும் வாயடைத்துப் போய் அவரை பார்த்தனர்.

 "என் வொய்ஃப் ரொம்ப தைரியசாலிமா.. நல்ல துணிச்சலான பொம்பளை..!! குறிஞ்சி கதையை அவ குண்டுமணி அளவுக்கு கூட நம்பல.. எங்க போனாலும் தனியாத்தான் போவா.. தனியாத்தான் வருவா..!! அவளோட தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. ஆனா.. அந்த தைரியமே அவளுக்கு ஆபத்தா முடியும்னு நான் கொஞ்சம் கூட நெனைக்கல..!!"

 "......................."

 "களமேழி போறேன்னு சொல்லிட்டு கெளம்புனவ.. காத்துல கரைஞ்ச மாதிரி மாயமா மறைஞ்சு போய்ட்டா.. கார் மட்டும் தனியா காட்டுக்குள்ள நின்னுட்டு இருந்துச்சு..!!"

 "......................."

 "ஐஞ்சு வருஷம் ஆச்சும்மா..!! நான் உசுரையே வச்சிருந்த என் வொய்ஃப், இப்படி என்னை பைத்தியக்காரன் மாதிரி பொலம்ப விட்டுட்டு போய் அஞ்சு வருஷம் ஆச்சு..!! போலீஸால இதுவரை ஒன்னும் புடுங்க முடியல..!!"

 "......................."

 "ஹ்ம்ம்ம்ம்..!! குறிஞ்சின்ற ஒரு விஷயம் மேல எனக்கு பயம் வந்ததே அதுக்கப்புறம்தான்மா..!! அதான்.. உன் தங்கச்சி வந்து குறிஞ்சியை பத்தி ரிசர்ச்னதும்.. ஆரம்பத்துல எனக்கு பயமா இருந்துச்சு..!!" "ம்ம்ம்..!!" "அப்புறம் அவ எக்ஸ்ப்லைன் பண்ணதும் எனக்கும் இன்ட்ரஸ்ட் வந்தது.. இவ்வளவு ஹைப் க்ரியேட் பண்ணிருக்குற அந்த குறிஞ்சியோட உண்மையான கதையை தெரிஞ்சுக்கணும்னு.. எனக்கும் ஒரு இன்ட்ரஸ்ட் வந்துடுச்சு..!! நல்லா பண்ணுங்கம்மான்னு ரெண்டு பேரையும் என்கரேஜ் பண்ணினேன்..!!"

 "ம்ம்.. எங்களுக்கு அந்த ரிசர்ச் ஆர்டிக்கிளோட காப்பி வேணும் ஸார்.. கெடைக்குமா..?? உங்கட்ட இருக்கா..??"

 "இல்லம்மா.. அந்த மாதிரி எங்கிட்ட எந்த காப்பியும் இல்ல.. ரிசர்ச் முடிஞ்சுதான் அதை சப்மிட் பண்றதா இருந்தது.. அதுக்கு முன்னாடிதான் என்னன்னவோ ஆகிப்போச்சே..!! ரெண்டு பேரும் மன்த்லி ரிப்போர்ட் சப்மிட் பண்ணுவாங்க.. ரிசர்ச்சோட ப்ராக்ரஸ் பத்தி.. அவ்வளவுதான்..!! அதுலாம் எங்க காலேஜ் சம்பந்தப்பட்ட ஃபார்மாலிட்டி.. உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்காதுன்னு நெனைக்கிறேன்..!!" மணிமாறன் இயல்பாக சொல்ல, ஆதிராவின் முகத்தில் அப்பட்டமாய் ஒரு ஏமாற்றம் தெரிந்தது..!!

அதன்பிறகும் சிறிது நேரம் ஆதிரா அவரை கேள்விகளால் துளைத்தெடுத்தாள்.. தனக்கு தெரியாத ஏதாவது தகவல்களை, தாமிரா அவருடன் பகிர்ந்திருக்கிறாளா என்கிற ஆர்வத்துடன் அமைந்திருந்தது அவளது கேள்விகள்..!! ஆனால்.. அவருடைய பதில்கள் எதுவும் அவளுக்கு உபயோகமாக இல்லை.. தாமிரா பகிர்ந்துகொண்ட தகவல்கள் என, அவர் சொன்ன விஷயங்கள் எல்லாமே.. ஆதிரா ஏற்கனவே அறிந்த விஷயங்களாகவே இருந்தன..!!

 இருவரும் வெறுங்கையுடன் அங்கிருந்து கிளம்பினார்கள்.. இருவரிடமுமே ஒருவித சலிப்பும், ஏமாற்றமும்.. ஆதிராவிடம் சற்று அதிகப்படியாகவே காணமுடிந்தது..!! காரில் ஏறி அமர்ந்ததும் கதிர் கேட்டான்..!!

 "நேரா வீட்டுக்குத்தானா..??" "இல்ல கதிர்.. ஸ்டேஷன் போலாம்.. செம்பியன் அங்கிள பார்த்துட்டு போய்டலாம்..!!" "ப்ரொஃபஸாராலேயே யூஸ்ஃபுல்லா எந்த இன்ஃபர்மேஷனும் தர முடியல.. செம்பியன் அங்கிள்ட்ட என்ன கெடைச்சிடப் போகுது..??" "பாக்கலாம்.. பேசிப்பார்ப்போம்..!!" சுவாரசியம் இல்லாமலே சாவி திருகி காரை ஸ்டார்ட் செய்தான் கதிர்..!! வந்த வழியிலேயே சிறிது நேரம் திரும்ப சென்று.. பிறகு அந்த சர்ச்சை தாண்டியதும்.. வேறு திசையில் கார் தடதடவென வேகமெடுத்து ஓட ஆரம்பித்தது..!!

 "ரெண்டு புள்ளைகளும் அந்த ஸ்டேஷன் மாஸ்டரைத்தான் போய் அடிக்கடி பாத்துட்டு வருங்க..!!"
நேற்று.. தனது புலம்பல்களுக்கு நடுவே அகல்விழியின் அம்மா உதிர்த்த வார்த்தைகள்தான்.. தற்போது இவர்களது இந்த பயணத்திற்கு காரணம்..!! இருபுறமும் வளர்ந்திருந்த அடர்ந்த மரங்கள், நீண்ட சாலையை நிழலால் நிறைத்திருந்தன.. வெளிச்சம் குறைவாக இருந்த போதிலும், வேகமாகவே காரை செலுத்தினான் கதிர்..!! நேர்திசையில் சென்றுகொண்டிருந்த சாலை.. சிறிது தூரத்தில் ரயில் தண்டவாளங்கள் குறிக்கிட்ட இடத்தில் சற்றே வளைந்து.. பிறகு அந்த தண்டவாளங்களுக்கு பக்கவாட்டில் நீளமாக ஓடியது..!!

 ஆதிரா தலையை திருப்பி கார் ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள்.. சரசரவென கடந்து எதிர்ப்பக்கம் செல்கிற மரங்களுக்கு இடையே, சரளைக் கற்களில் படுத்தவாறு கூடவே வருகிற தண்டவாளங்கள் காட்சியளித்தன..!! அந்த தண்டவாளங்களை பார்க்க பார்க்க.. குழந்தைப் பருவ நினைவொன்றில் மெல்ல மெல்ல மூழ்க ஆரம்பித்தாள் ஆதிரா..!!

 “ஜிக்குபுக்கு ஜிக்குபுக்கு ரயில் வண்டி..
திருச்சிக்கு போற ரயில் வண்டி..!!
குபுகுபு குபுகுபு ரயில் வண்டி..
குன்னூருக்கு போற ரயில் வண்டி..!!”

 அதோ அந்த தண்டவாளத்தில்.. ஆதிரா, தாமிரா, சிபி, கதிர் என நால்வரும்.. ஏழு, எட்டு வயது பிள்ளைகளாக இருந்தபோது.. ஒருவர் பின் ஒருவராக நின்று.. ஒருவர் சட்டையை அடுத்தவர் பற்றிக்கொண்டு.. பாடிக்கொண்டே திடுதிடுவென ஓடியவாறு.. ரயில்விட்டு விளையாடிய நினைவு..!!

 "கடகட கடகட ரயில் வண்டி..
கடலூருக்கு போற ரயில் வண்டி..!!”

 "ஏய் பிள்ளைகளா.. எறங்குங்க பிள்ளைகளா..!!" அவர்களுக்கு பின்னால் கத்திக்கொண்டே ஓடி வருவார் செம்பியன்.. சரளை கற்களை பொறுக்கி எடுத்து, இவர்கள் மீது எறிவது போல பாவ்லா காட்டி, குறிபார்த்து வேறெங்கோ எறிவார்..!! குழந்தைகளை பயமுறுத்துவதுதான் அவரது நோக்கம்.. காயப்படுத்துவது அல்ல..!!

 "இப்போ எறங்க போறிகளா இல்லையா..?? ஏய்.. சொல்றேன்ல.. எறங்குங்க.. வேறபக்கம் போய் வெளையாடுங்க.. போங்க..!!"

 "தடதட தடதட ரயில் வண்டி..
தஞ்சாவுருக்கு போற ரயில் வண்டி..!!"

 குழந்தைகளின் பாடல் தொடர்ந்துகொண்டே இருக்கும்.. அவர்களது ரயில் ஓட்டமும் நிற்காது..!! பக்கவாட்டில் திரும்பி செம்பியனுக்கு அழகு காட்டியவாறு.. தொடர்ந்து அந்த தண்டவாளங்களில் ஓடிக்கொண்டே இருப்பார்கள்..!!

 "இந்தா.. ரயிலு வரப்போகுது இப்போ..!!" பயமுறுத்தி பார்ப்பார் செம்பியன். "வந்தா வரட்டும்..!!" ஓடிக்கொண்டே கத்துவாள் கடைசியாக செல்கிற குட்டித்தாமிரா. "மோதப்போகுது..!!" தாமிரா இப்போது நின்று திரும்பி பார்ப்பாள்.. கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்து ஸ்டைலாக நின்றவாறு.. தன்னை நோக்கி ஓடிவருகிற செம்பியனிடம் கேலியாக சொல்வாள்..!!

 "மோதினா என்ன..?? ஓ.. எங்கமேல மோதினா உங்க ஓட்டை ரயிலு ஒடைஞ்சு போய்டும்னு பயமா..??" தாமிராவின் கேலி செம்பியனை செம டென்ஷனாக மாற்றும்.

"அடிக்க்க்... குட்டிக்கழுதை..!!! என்ன பண்றேன் பாரு இப்போ..!!" ஆவேசமாக கத்துகிற செம்பியன், மீண்டும் குனிந்து சரளை கற்களை பொறுக்கிக் கொள்வார்.. ஓடுகிறவர்களை தொடர்ந்து விரட்டிக்கொண்டே செல்வார்.. குழந்தைகள் செல்கிற திசையை விட்டுவிட்டு, குறிபார்த்து வேறு திசையெல்லாம் கல் எறிவார்..!!

 பழைய நினைவில் இருந்து மீண்ட ஆதிராவுக்கு, அவளையும் அறியாமல் உதட்டில் ஒரு புன்னகை அரும்பியது.. எவ்வளவு இனிமையான குழந்தைப் பருவம் என்று தோன்றியது.. மீண்டும் அந்தக் காலங்கள் திரும்ப வராதா என ஏக்கமாக இருந்தது..!! அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர்கள் அகழி ரயில் நிறுத்தத்தில் இருந்தனர்.. அலுவலகம் சென்று செம்பியனை சந்தித்தனர்..!!

சிறிய அலுவலகம்தான்.. ஒரு நாளைக்கே நாலு ரயில்கள்தான் இந்த நிறுத்தத்தில் நிற்கும்.. எனவே.. ஐந்தே ஐந்து அலுவலர்களை மட்டுமே கொண்ட மிகச்சிறிய அலுவலகம்தான்..!! ஆரம்ப நல விசாரிப்புகளுக்கு பிறகு.. ஆதிரா வந்த விஷயம் பற்றி கேட்டார் செம்பியன்..!!

அவளும்.. தாமிரா மேற்கொண்ட ஆராய்ச்சி பற்றியும், அது தொடர்பாக அவள் இவரை அடிக்கடி வந்து சந்தித்தது பற்றியும் சொல்லிவிட்டு, பிறகு அந்தக் கேள்வியை கேட்டாள்..!! "தாமிரா என்ன விஷயமா உங்களை வந்து பாத்தான்னு தெரிஞ்சுக்கலாமா அங்கிள்..??"

 "ஒன்னுல்லம்மா.. சில தகவல்கள்லாம் கேட்டு தெரிஞ்சுப்பா.. அவ்வளவுதான்..!!!" "எந்த மாதிரி தகவல்கள்..??" ஆதிரா அவ்வாறு கேட்டதும், செம்பியன் சட்டென அமைதியானார்.. மனதில் இருக்கிற விஷயங்களை ஒன்று சேர்த்து ஒழுங்குபடுத்த, நேரம் எடுத்துக் கொள்கிறார் என்று தோன்றியது..!! சில வினாடிகள் இடைவெளிவிட்டு, அதன்பிறகே பேசினார்..!!

 "ஹ்ம்ம்.. உனக்கே தெரியும்ல.. எனக்கு ஆவி நம்பிக்கைலாம் ரொம்ப ஜாஸ்தி.. ஆவிகள் இந்த உலகத்துல நிச்சயமா இருக்குன்னு நம்புறவன் நான்..!! ஆவிகளை பத்தி நெறைய விஷயங்கள் படிச்சிருக்கேன்.. தெரிஞ்சு வச்சிருக்கேன்.. சின்ன சின்ன ஆராயச்சிலாம் பண்ணிப் பாத்திருக்குறேன்..!!" "ம்ம்.. அதுலாம் தெரியும் அங்கிள்..!!"

 "ஆவிகளை பத்தி பொதுவான ஆராய்ச்சி மட்டும் இல்லாம.. நம்ம ஊரே பயந்து நடுங்குற குறிஞ்சியை பத்தியும், நெறைய விஷயங்கள் நான் சேகரிச்சு வச்சிருக்கேன்..!! இப்போன்னு இல்ல.. சின்ன வயசுல இருந்தே எனக்கு அந்த இன்ட்ரஸ்ட் உண்டு.. எனக்கு ஏனோ குறிஞ்சியை பத்தி தெரிஞ்சுக்குறதுல ஒரு ஈடுபாடு.. முப்பது முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சது இதுலாம்..!!!"

 "ம்ம்..!!"

 "குறிஞ்சி தூக்கிட்டுப் போயிட்டான்னு சொல்லப்படுறவங்களோட வீட்டுக்குலாம் போவேன்.. அவங்க குடும்பத்தாரோட பேசுவேன்.. என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சு வச்சுப்பேன்.. எல்லாத்தையும் டைரில எழுதி வச்சுப்பேன்..!! இதுவரை.. இந்த அகழில காணாம போனவங்களோட மொத்த லிஸ்டும்.. கிட்டத்தட்ட மொத்தமா எங்கிட்ட இருக்கு..!!

 "ஓ..!!"

 "அதெல்லாம் பத்திதான் பெரும்பாலும் தாமிரா கேட்பா..!! அதாவது.. நடுவுல ஒரு இருபது வருஷம் எந்த பிரச்சினையும் இல்லாம இருந்தது இல்லையா.. அதுக்கு முந்தி காணாம போனவங்களோட டீடெயில்ஸ், எந்த மாதிரி எந்த சூழ்நிலைல காணாம போனாங்க, அவங்களோட வம்சாவளி என்ன.. இதெல்லாம் கேட்பா.. நானும் சொல்வேன்..!! நான் சொல்றதுல அவளுக்கு தேவையான விஷயங்களை நோட் பண்ணிப்பா.. அவ்வளவுதான்..!!" "ஹ்ம்ம்ம்ம்..!!" ஆதிரா அதற்குள்ளாகவே ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருந்தாள்.. 'அவ்வளவுதானா' என்பது போல இருந்தது அவள் பெருமூச்சு விட்டவிதம்..!! அவளுடைய மனதில் ஏற்பட்டிருந்த சலிப்பு, அதைத்தொடர்ந்து அவள் பேசிய பேச்சிலும் தென்பட்டது..!!

 "ப்ச்.. எனக்கு நெறய விஷயம் புரியலை அங்கிள்.. ஒரே கொழப்பமா இருக்கு.. ஆவி பத்தியும், இந்த குறிஞ்சி பத்தியும்..!!"

 "என்னம்மா புரியல உனக்கு..?? எங்கிட்ட கேளு.. எனக்கு தெரிஞ்சா சொல்றேன்..!!"

 "மொதல்ல.. மத்த ஊர்ல பேய்களை பத்தி சொல்றதுக்கும், நம்மூர்ல குறிஞ்சி பத்தி சொல்றதுக்கும் ரொம்பவே வித்தியாசம்..!! மத்த ஊர்லலாம்.. பேய் கொன்னுடுச்சுன்னு சொல்வாங்க.. அடிச்சுப்போட்டு போய்டுச்சுன்னு சொல்வாங்க.. பேயை பாத்து ரத்த வாந்தி எடுத்து செத்துப் போய்ட்டார்ன்னு சொல்வாங்க..!! ஆனா.. இங்க.. இந்த மாதிரி.. ஆள் இருந்த சுவடே தெரியாம.. ஒரு சின்ன ட்ரேஸ் கூட இல்லாம.. மனுஷங்க மாயமா மறைஞ்சு போறாங்க.. ஒரு ஆவியால இது முடியுமா..?? அந்தமாதிரி தூக்கிட்டு போற சக்திலாம் ஆவிங்களுக்கு இருக்கா..?? இதெல்லாம் சாத்தியம்தானா..??"

 "ஹ்ம்ம்.. சில வெளிநாடுகள்ல ஒரு நம்பிக்கை இருக்கு ஆதிரா.. பூகிமேன்'னு ஒரு கெட்டசக்தி இருக்குறதா நம்புறாங்க.. அந்த பூகிமேனோட குணாதிசயம், நம்ம குறிஞ்சியோட குணாதிசயத்தோட ரொம்பவே ஒத்துப் போகுது..!! பிரேஸில் நாட்டுல சொல்லப்படுற பூகிமேன் கதைகள் இந்த மாதிரிதான்.. எங்க போனாங்கன்னே ட்ரேஸ் பண்ண முடியாத மாதிரி.. அப்டியே ஒரு மேஜிக் மாதிரி.. மனுஷங்களை தூக்கிட்டு போய்டுவானாம் அந்த பூகிமேன்..!!"

 "ஓ..!!"

 "அதேமாதிரி.. குறிஞ்சி ரெட் கலர் அங்கி போட்டுக்கிட்டு வருவான்னு எல்லாரும் சொல்றாங்கள்ல..??"

 "ஆமாம்..!!"

 “குறிஞ்சிக்கும் அந்த அங்கிக்கும் என்ன சம்பந்தம்னு எனக்கு தெரியல.. ஆனா.. ஐரோப்பிய நாடுகள்ல இந்த மாதிரி ஒரு நம்பிக்கை இருக்கு.. ரெட்ன்றது ஈவிலோட கலர் அப்படின்னு.. பேய்கள்லாம் செவப்பு கலர் ட்ரஸ் போட்டுட்டு வரும்னுதான் அவங்க நம்புறாங்க..!!"
 "ஓ..!!"
 "இதெல்லாம் ஏதோ வேற நாட்டு மக்களோட வெத்து நம்பிக்கைன்னு நெனைக்காம.. மனுஷங்களோட உலகம், ஆவிகளோட உலகம்னு.. அந்த ரெண்டை மட்டும் மனசுல வச்சு யோசி ஆதிரா.. நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியும்..!!"
 "ஹ்ம்ம்.. சாத்தியம்தான்னு தோணுது..!!"
 "கரெக்ட்..!!"
 "சரி.. அப்படியே குறிஞ்சிக்கு அந்த சக்தி இருக்குதுன்னு வச்சுக்கிட்டாலும்.. அவ ஏன் தாமிராவை தூக்கிட்டு போகணும்..?? இந்த ஊரே அந்த குறிஞ்சியை பத்தி கேவலமா சொல்லிட்டு இருந்தப்போ.. அவ நல்லவன்னு சொன்ன ஒரே ஆள் என் தங்கச்சி தாமிராதான்..!! அவ மேல குறிஞ்சிக்கு என்ன கோவம்.. அவளை ஏன் குறிஞ்சி தூக்கிட்டு போகணும்..??"

 "ஹாஹா.. இப்படி கேட்டா நான் என்ன பதில் சொல்றது..??"

 "ஏன் அங்கிள்..??"

 "இதுதான் பேய், இப்படித்தான் ஆவிகள்'னு.. நம்மால அவ்வளவு ஈசியா எந்த முடிவுக்கும் வந்துட முடியாது..!! மனுஷங்களோட மனநிலைமை, குணாதிசயம், நியாயதர்மம்லாம்.. ஆவிகளுக்கு பொருந்தாது ஆதிரா.. அதனாலத்தான் அதை அமானுஷ்ய சக்தின்னு சொல்றோம்..!! பேய்ங்க எந்த நேரத்துல எதை நெனைக்கும், என்ன பண்ணும்னு.. எப்படி நம்மா உறுதியா சொல்ல முடியும்..?? ஆவிகளோட நியாயம் அதுகளுக்குத்தான் புரியும்.. நாம புரிஞ்சுக்கணும்னு நெனைச்சா.. அது ரொம்ப கஷ்டம்..!!"

 "ஹ்ம்ம்.. கொஞ்சம் புரியுது..!! அப்போ.. எல்லாத்துக்கும் காரணம் குறிஞ்சிதான்னு சொல்றிங்க..??"

 "ஆமாம்மா.. அப்படித்தான் நான் நம்புறேன்.. குறிஞ்சிதான் எல்லாம் பண்ணிட்டு இருக்குறா..!!" என்று உறுதியான குரலில் சொன்ன செம்பியன் சற்றே நிறுத்தி, "ஆனா....." என்று இழுத்தார்.

 "என்ன அங்கிள்..??"

 "எனக்கு ஒரே ஒரு சின்ன உறுத்தல் மட்டுந்தான்..!!"

 "என்ன உறுத்தல்..??"

 "இந்த உறுத்தலை தாமிராட்ட சொன்னப்போ.. அவளுமே 'அப்படியா'ன்னு ரொம்ப ஆச்சர்யமா கேட்டுக்கிட்டா..!!"

 "என்னது அது.. சொல்லுங்க அங்கிள்..!!"

 "எப்படி சொல்றதுனா.. இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி காணாம போனவங்க லிஸ்டையும்.. இப்போ அஞ்சு வருஷமா காணாம போனவங்க லிஸ்டையும்.. ஒண்ணா வச்சு கம்பேர் பண்ணி பாத்தோம்னா.. ஒரு விஷயம் ரொம்ப உறுத்தலா இருக்கு..!!"

 "எது..??"

 "இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி காணாம போனவங்கள்ல.. எல்லா டைப்பும் இருந்தாங்க.. பொறந்த கொழந்தைங்க.. திடமான ஆம்பளைங்க.. வயசான கெழடுங்க.. எல்லாரும் அதுல அடக்கம்..!! ஆனா.. போன அஞ்சு வருஷமா காணாம போனவங்களை பாத்தோம்னா.. மொத்தம் பதினெட்டுப் பேரு.. அத்தனை பேரும் கன்னிப்பொண்ணுங்க, இல்லனா ஹவுஸ்வொய்ஃப்ங்க..!!" செம்பியன் இயல்பாக சொல்லிக்கொண்டிருக்க, ஆதிராவும் கதிரும் அப்படியே திகைத்துப் போய் அவரை பார்த்தார்கள்..!!

 அதன்பிறகும் சிறிது நேரம் அவருடன் பேசி இருந்துவிட்டு.. ஆதிராவும் கதிரும் அங்கிருந்து கிளம்பினார்கள்..!! தேடிவந்த விஷயத்தில் தெளிவேதும் பிறக்கவில்லை.. கூடக்கொஞ்சம் மனதுக்குள் குழப்பமே அதிகரித்திருந்தது..!! "செம்பியன் அங்கிள் ரொம்ப கொழப்பிட்டாரு..!!" ஆதிரா சொன்னாள்.

 "ம்ம்.. என்னையுந்தான்..!! இத்தனை நாளா இந்த ஆங்கிள்ல யோசிக்கவே இல்லைன்னு நெனைக்கிறப்போ.. ரொம்பவே கேவலமா இருக்கு..!!"

 "எனக்கும் இப்போ புதுசு புதுசா என்னன்னவோ தோணுது..!!" "என்ன தோணுது..??" "குறிஞ்சியை பத்தி ஆராய்ச்சி பண்ண போறேன்னு சொல்லிட்டு.. இந்த ரெண்டு பொண்ணுகளும் புதுசா எதையோ கண்டு பிடிச்சிடுச்சுங்களோ.. அதனால ஏதாவது ஆபத்தோன்னு தோணுது..!!" "அல்ரெடி எனக்கும் அந்த டவுட் வந்துடுச்சு..!!!" "ம்ம்..!!" "ஹ்ம்ம்..!! அடுத்து எங்க ஆதிரா..?? வீட்டுக்கா.. இல்ல வேற எங்கயும் போகனுமா..??"

 "சிங்கமலை வரை போயிட்டு வீட்டுக்கு போலாமா..??" "சிங்கமலைக்கா.. அங்க எதுக்கு..??" "காலைல தாமிரா வரைஞ்ச ஒரு ஓவியத்தை பார்த்தேன் கதிர்..!! அதே மாதிரி ஓவியத்தை சிங்கமலைல நான் பாத்திருக்குறேன்.. இப்போ அதை திரும்ப பாக்கணும் போல இருக்கு..!! புதுசா ஏதாவது ஞாபகம் வருதா பாக்கலாம்..!!"

 "ஓ..!! சரிங்க.. போலாம்..!!" ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இருவரும் காரில் கிளம்பினார்கள்.. சிங்கமலையை நோக்கி பயணித்தார்கள்..!!

சிங்கமலையின் உச்சி வரைக்கும் காரில் செல்ல முடியாது.. ஒரு கி.மீ தொலைவிலேயே காரை நிறுத்திவிட்டு, இருவரும் நடந்தேதான் சிங்கமலை உச்சியை அடைந்தார்கள்..!! சிங்கமலையில்.. சிங்கமுக சிலைக்கு பக்கவாட்டில்.. மலையை குடைந்து உருவாக்கப் பட்டிருந்தது அந்த குகை.. மதியநேரத்தில் கூட சுத்தமாக வெளிச்சமற்றுப் போய் காட்சியளித்தது..!! கையோடு எடுத்து வந்திருந்த டார்ச்லைட்டின் வெளிச்சத்திலேதான்.. குகைச்சுவர்களில் வரையப்பட்டிருந்த அந்த உளிச்சித்திரங்களை.. ஆதிரா கதிருக்கு காட்டினாள்..!!

 குறிஞ்சியின் வாழ்க்கை நிகழ்வுகளை குறிப்பால் உணர்த்துவதுபோல பொறிக்கப்பட்ட சித்திரங்கள்..!! கல்யாணமாகி கணவனுடன் அகழிக்கு வருகிற குறிஞ்சி.. அவர்களது தாம்பத்யம், இல்வாழ்க்கை.. கணவனின் பிரிவு.. புவனகிரியின் ஆக்கிரமிப்பு.. தீர்த்தபதியின் நட்பு.. ஊர்க்கூட்டம்.. தாமிரா வரைந்து வைத்திருந்த அதேவகை சித்திரம்.. தீப்பற்றி எரிகிற உடலுடன் ஆற்றில் குதிக்கிற குறிஞ்சி..!! முக்கியமான நிகழ்வுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருந்தன..!!

 அவற்றை கவனமாக பார்த்துக் கொண்டிருந்த ஆதிராவின் முன்பாக.. திடீரென தாமிரா தோன்றினாள்.. ஒருவரும் முன்பாக அக்காவுக்கு உரைத்ததையே இப்போதும் உரைத்தாள்..!! "நல்லா பாரு.. நான் சொன்னப்ப நம்பலைல.. பாரு இதெல்லாம்..!! நானா இதெல்லாம் வரைஞ்சேன்..?? யாரோ விஷயம் தெரிஞ்சவங்கதான் இதெல்லாம் வரைஞ்சிருக்காங்க.. நம்ம பாட்டனார் எழுதி வச்சதோடவும், நான் சொன்னதோடவும் எவ்வளவு கரெக்டா மேட்ச் ஆகுது பாரு..!! நான்தான் சொன்னேன்ல.. குறிஞ்சி ரொம்ப அப்பாவிக்கா.. நல்லவ..!!"

அக்காவிடம் சொல்லிக்கொண்டே, கையிலிருந்த கேமராவால் அந்த சித்திரங்களை, புகைப்படச் சுருளுக்குள் சிறைபிடித்தாள் தாமிரா..!! "இத்தனை வருஷமா இந்த ஊர்ல இருந்திருக்கேன்.. இதெல்லாம் என் கண்ணுலேயே பட்டதே இல்ல ஆதிரா..!!" கதிர் திடீரென பேசி ஆதிராவை நனவுக்கு கொண்டுவந்தான். "ஹ்ம்ம்.. உங்களுக்கு மட்டும் இல்ல கதிர்.. இந்த ஊர்ல யார் கண்ணுக்குமே இதெல்லாம் தெரியல.. எனக்கும் சேர்த்துதான் சொல்றேன்..!! தாமிரா ஒருத்திக்குத்தான் எல்லாம் தெரிஞ்சிருக்கு..!!"
பேசிக்கொண்டே இருவரும் அந்த குகையை விட்டு வெளியே வந்தார்கள்.. மலைச்சரிவில் இறங்கி, கார் இருந்த திசையை நோக்கி மெல்ல நடந்தார்கள்..!!

கதிர் சற்றே விரைவாக முன்னால் நடக்க.. ஏதோ ஒரு சிந்தனையுடன் ஆதிரா அவனுக்கு பின்னால் நடந்து கொண்டிருந்தாள்..!! அப்போதுதான் அவளுடைய செல்ஃபோன் கிணுகிணுத்தது..!! ஆதிரா கைப்பை திறந்து செல்ஃபோனை வெளியே எடுத்தாள்.. ஏதோ அன்னோன் நம்பரில் இருந்து கால் வந்திருந்தது.. எதுவும் யோசிக்காமல் கால் பிக்கப் செய்து காதில் வைத்தாள்..!!

 "ஹலோ..!!" என்றாள். "க்க்ர்ர்க்க்...க்க்கர்ர்ர்க்க்க்க்... க்க்கர்ர்ர்க்க்க்க்... க்க்ர்ர்க்க்...!!!!" அடுத்தமுனையில் அந்த ஓசை.. எந்த மாதிரியான ஓசை என்றே புரிந்துகொள்ள முடியாத மாதிரியான ஒருவகை வினோத ஓசை..!!

 "ஹலோ.. யாரு..??" "க்க்ர்ர்க்க்... கண்... க்க்ர்ர்க்க்... க்க்கர்ர்ர்க்க்க்க்... ர்ர்ர்ர்ர்ர்ஈஈ..!!!!" அந்த ஓசையை கேட்டு ஆதிரா இப்போது எரிச்சலானாள்..!!

"ஹலோ.. யாருன்னு கேக்குறேன்ல..?? யாரு வேணும் உங்களுக்கு..??" என்று குரலை உயர்த்தி கத்தினாள்.. அவள் அவ்வாறு கத்தியதும், அடுத்த முனையில் இப்போது அந்த ஓசை கொஞ்சம் பிசிறில்லாமல் ஒலித்தது.. ஆதிராவும் சற்று காதை உன்னிப்பாக்கி கேட்க.. ஒலித்த வார்த்தைகள் அவளுடைய காதில் தெளிவாக வந்து விழுந்தன..!!

"க்க்க்க்கண்ணாமூச்சி.. ர்ர்ர்ர்ரே.. ர்ர்ர்ர்ரே..!!" அவ்வளவுதான்..!!!! அந்த வார்த்தைகளை கேட்டு ஆதிரா அப்படியே அதிர்ந்து போனாள்..!! முகத்தில் எக்கச்சக்கமாய் ஒரு திகைப்பு கொப்பளிக்க.. அந்த செல்ஃபோனையே மிரட்சியாக பார்த்தாள்..!!

 ஓரிரு வினாடிகள்..!! பிறகு ஏதோ ஞாபகம் வந்தவளாய்.. பதற்றத்துடன் செல்ஃபோனை இயக்கி கால் ஹிஸ்டரி எடுத்துப் பார்த்தாள்..!! அகழி வந்த முதல் நாளன்று.. அவளது செல்ஃபோனுக்கு வந்த அதே கரகர குரல் கால்.. அதே எண்ணில் இருந்துதான் இந்த காலும் வந்திருந்தது..!! யாராக இருக்கும் என்று குழப்பமாக நெற்றி தேய்க்க ஆரம்பித்தாள்..!!

 அதற்குள்ளாகவே.. அவளது முகமாற்றத்தை கவனித்திருந்த கதிர்.. இப்போது அவளை நெருங்கியவாறே கேட்டான்..!!

"எ..என்னாச்சுங்க ஆதிரா..??"

 "யா..யாரோ எனக்கு கால் பண்ணி விளையாடுறாங்க கதிர்..!!"

 "யார் அது..??"

 "யார்னு தெரியல.. ஸம் அன்னோன் நம்பர்..!!"

 "ஓ.. என்ன விளையாடுறாங்க..??"

 "எ..என்ன சொல்றாங்கன்னே புரியல.. கரகரன்னு ஒரே சத்தம்..!!"

 "ம்ம்..!! நீங்க திரும்ப கால் பண்ணி பாத்திங்களா..??"

 "இல்ல..!!"

 "பண்ணி பாருங்க..!!" ஆதிரா இப்போது அந்த எண்ணுக்கு திரும்ப டயல் செய்து பார்த்தாள்..!!

'நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தற்போது உபயோகத்தில் இல்லை' என்று பதில் வந்தது..!! அந்த பதிலில் ஆதிரா இன்னும் குழம்பிப் போனாள்..!!

 "என்னாச்சுங்க..??" கதிர் ஆர்வமாய் கேட்டான்.

 "இந்த நம்பர் இப்போ யூஸ்ல இல்லைன்னு வருது..!!"

 "ஓ..!! எங்க.. அந்த நம்பரை கொஞ்சம் சொல்லுங்க..!!" ஆதிரா சொல்ல சொல்ல.. கதிர் தனது செல்ஃபோனில் அந்த எண்ணை டைப் செய்து கொண்டான்.. டைப் செய்த வேகத்தில் அப்படியே டயல் செய்து பார்த்தான்..!! ஆதிராவுக்கு கிடைத்த அதே ரெஸ்பான்ஸ்தான் அவனுக்கும் கிடைத்தது.. அவனுமே குழம்பிப் போனான்..!!

"எனக்கும் அதேதான் சொல்லுது..!!"
சொல்லிவிட்டு காலை கட் செய்ய சென்ற கதிர்.. எதேச்சையாகத்தான் தனது செல்ஃபோன் டிஸ்ப்ளே பார்த்தான்.. பார்த்ததுமே பக்கென்று ஒரு அதிர்ச்சியை உள்வாங்கினான்.. கண்ணால் காண்பதை நம்ப முடியாமல், இமைகளை அகல விரித்து அந்த செல்ஃபோனையே உற்றுப்பார்த்தான்..!!

 "என்னங்க ஆச்சு..??" ஆதிரா கேட்க, கதிர் இப்போது தனது செல்ஃபோன் ஸ்க்ரீனை அவள்பக்கமாக திருப்பி காட்டினான்.. திக்கித் திக்கி திணறலாக சொன்னான்..!!

 "நீ..நீங்க தந்த நம்பர்.. உ..உங்களோட ஓல்ட் நம்பர் ஆதிரா..!!"

 இப்போது ஆதிராவும் அரண்டுபோய் அந்த செல்ஃபோனையே வெறித்தாள்..!!

 "வாட்..????"கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக