http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : கண்ணாமூச்சி ரே ரே - திரில் தொடர் - பகுதி - 1

பக்கங்கள்

வெள்ளி, 3 ஜூலை, 2020

கண்ணாமூச்சி ரே ரே - திரில் தொடர் - பகுதி - 1

கண்ணாமூச்சி ரே ரே - தமிழில் ஒரு திரில் தொடர் - பாகம் - 1 அத்தியாயம் 1 ஆண்டு: கி.பி 1896 இடம்: மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கிற அகழி என்கிற மலை கிராமம். மழைமேகம் திரண்டிருக்க.. மாலை வானம் இருண்டிருந்தது..!!

சுற்றிலும் அடர்த்தியாய் வளர்ந்திருந்த காட்டுமரங்கள்.. சூரியனின் வெளிச்சத்தை சுத்தமாய் உறிஞ்சியிருந்தன..!! மேல்வானத்தில் பளிச்சென்று ஒரு மின்னல் கீற்றோடு.. மேற்குமூலையில் திடுமென ஒரு இடி முழக்கம்..!! உறைந்திருந்த மேகங்கள் இப்போது கொஞ்சம் உருக ஆரம்பிக்க.. ஊசிக்கற்றைகளாய் தூறல் துளிகள் மரங்களை ஊடுருவின..!! அந்த காட்டு மரங்களுக்கு உட்புறமாக.. அகலமாய் உயரமாய் இருந்த அந்த கல்மேடையை சுற்றிலும்.. அகழியின் எழுபத்து சொச்ச குடும்பத்தின் பிரதிநிதிகள் குழுமியிருந்தனர்..!!

அதில் எழுபது சதவீதம் பேருக்கு மேல்சட்டை இல்லை.. பாதிப்பேர் பவ்மயமாக கைகளை கட்டியிருந்தனர்..!! பக்கவாட்டில் மூலைக்கொரு தூண்களுடனும்.. பாறையை செதுக்கி அமைத்த கூரையுடனும்.. காட்சியளித்தது அந்த கல்மேடை..!! நான்கு தூண்களில் ஒன்றில் சன்னதக்காரர் சாய்ந்திருந்தார்.. சாமியாடி முடித்த களைப்பில் கண்கள் செருகியிருந்தார்..!! கல்மேடையின் மையத்தில், கைத்தடியை ஊன்றியவாறு புவனகிரி நின்றிருந்தார்.. அவருக்கு பின்புறமாக வேல்க்கம்பு ஏந்திய நான்கு அடியாட்கள்..!!

அவருடைய பார்வை ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக் கொண்டிருந்தது.. சிவந்து போயிருந்த அந்த கண்களில் ஒருவித அனல்கக்கும் வன்மம்..!! வெல்வட் துணியாலான இறுக்கமான உடை அணிந்திருந்தார்.. தடிமனாக கழுத்தில் தொங்கிய தங்கச்சங்கிலியில், நீலநிறக்கல் பதிக்கப்பட்ட பதக்கம் தகதகத்தது..!! இரண்டு விரல்களை மட்டும் மூளியாக்கி, எட்டு விரல்களுக்கு முரட்டு மோதிரங்கள்.. வலது கையில் ஒரு தங்க காப்பு.. கால்களுக்கு முனை நிமிர்ந்த தோல்செருப்பு..!! அப்போதுதான் நீளமாக பேசி முடித்திருந்தார் புவனகிரி..!! நெஞ்சில் எரிந்து கொண்டிருந்த ஆத்திரத்தை ஜீரணிக்க.. சிறிது அவகாசம் தேவையென அமைதியாகிப் போயிருந்தார்..!! அவருடைய முகத்தையே பயமும், பக்தியுமாய் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம்.. அடுத்து அவர் சிந்தப்போகிற வார்த்தைகளுக்காக.. இப்போதே காது தீட்டி கவனமாய் காத்திருந்தது..!!

 'டமார்' என்ற சப்தத்துடன் இப்போது மீண்டும் ஒரு இடியோசை..!! அதைத்தொடர்ந்து.. வாள் கொண்டு வானத்தை கிழித்துவிட்டது போல.. 'ச்ச்சோ'வென்று மழை மேலிருந்து கொட்ட ஆரம்பித்தது..!! நனைய ஆரம்பித்த மனிதகூட்டம்.. இம்மியளவும் நகர முனையவில்லை..!!




கி.பி 1896..!! இந்திய நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த காலகட்டம் அது..!! ஒட்டுமொத்த பிரிட்டிஷ் இந்தியாவில்.. இருபத்தியொரு நிலப்பரப்புகள் மட்டுமே.. தனித்த அரசு எந்திரமும், நிர்வாக சுதந்திரமும் பெற்றிருந்தன..!! ஆங்கிலேயரின் நேரடி ஆதிக்கத்துக்கு உட்படாமல்.. அவர்களுடைய மறைமுக ஆட்சி என்கிற மாயப்போர்வையின் கீழ்.. இற்றுப்போன இறுமாப்புடன் இயங்கிக் கொண்டிருந்தன..!!

சமஸ்தானங்கள் என்று அழைக்கப்பட்டன அத்தகைய நிலப்பரப்புகள்..!! அந்த இருபத்தியொரு சமஸ்தானங்களில்.. மிகப்பெரியதும், மிகமுக்கியமானதுமான ஒன்றுதான்.. மைசூர் சமஸ்தானம்..!! நிலவரியை மக்களிடம் நேரடியாக வசூல் செய்த மைசூர் அரசு.. அதில் ஒருபகுதியை ஆங்கிலேய அரசுக்கு கப்பமாக கட்டிவிடும்..!! மைசூர் அரசால் பிற்காலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சில தமிழர் வாழ்கிற பாளையங்கள்.. நிலவரி செலுத்தாமல் முரண்டுபிடிக்கவே.. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வரிவசூல் செய்கிற முறை அறிமுகப் படுத்தப்பட்டிருந்தது..!!

அவ்வாறு வரி வசூல் செய்வதற்கென்றே.. பகுதிவாரியாக பல குழுக்கள் அமைக்கப்பட்டு.. அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிற அதிகாரிகள் அதற்கென நியமிக்கப் பட்டிருந்தனர்..!! 1876 முதல் 1878 வரை.. பெரிய அளவில் நிலவிய பஞ்சத்தினாலும்.. பசி பட்டினியாலும்.. பரவிய காலராவினாலும்.. ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான உயிர்கள்.. கொத்துக்கொத்தாய் செத்து மடிந்தன..!! மைசூர் சமஸ்தானம் மிகப்பெரிய பொருளாதார சீர்குலைவை சந்தித்தது..!! அந்த சீர்குலைவில் இருந்து அரசு கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு கொண்டிருந்த சமயம்..

1894-ல்.. மைசூர் மஹாராஜா ஐந்தாம் சாமராஜேந்திர உடையாரின் அகால மரணம்..!! அப்போது அவருடைய மகன் கிருஷ்ணராஜ உடையாருக்கு பத்தே வயது..!! மகன் வளர்ந்து வாலிபம் பெறும் வரைக்குமாக.. மஹாராணியே வேறுவழியன்றி அரியணையில் அமர நேர்ந்தது..!! நாட்டில் நிலவிய பொருளாதார சீர்குலைவு ஒருபுறம்.. ஆட்சிப் பொறுப்பில் ஏற்பட்ட திடீர் குழப்பம் மறுபுறம்..!! வரி வசூல் செய்ய நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.. அப்பாவி மக்களிடம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருந்தனர்.. சிற்சிறு கிராமங்களை தங்களுடைய முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்..!! அகழியும் அதுமாதிரியான ஒரு கிராமம்தான்..

அதனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த அதிகாரிதான்.. இந்த புவனகிரி..!! மக்கள் புவனகிரியின் வார்த்தைகளுக்காக காதுதீட்டி காத்திருக்க.. அவருடைய காதுகளுக்குள்ளோ.. அவரது மகன் தீர்த்தபதி நேற்று ஆவேசமாக பேசிய வார்த்தைகள், இப்போது திரும்பவும் ஒலித்தன..!! "அவளைத்தான் நான் திருமணம் செய்துக்க போறேன்.. அதை யாராலயும் தடுக்க முடியாது..!!" அந்த வார்த்தைகள் அவருடைய காதுகளுக்குள் ஒலித்ததுமே.. அவர் தனது தலையை சரக்கென சிலுப்பிக் கொண்டார்..!! அவரது பிடரியில் வழிந்த கேசம்.. அப்படியும் இப்படியுமாய் அலை பாய்ந்தது.. கன்னத்து சதைகளும், காதணிகளும் கிடுகிடுத்தன..!! நனைந்து கொண்டிருந்த மக்களை நிமிர்ந்து பார்த்தார்.. நாடி நரம்பெல்லாம் புடைக்க ரௌத்திரமாக கத்தினார்..!!

 "சொல்லுங்க.. அவ இந்த ஊருக்கு தேவையா..??" "தேவையில்ல.. தேவையில்ல..!!" கூட்டத்தினர் ஒருசேர கத்தினர். "சன்னதக்காரர் சொன்னதை கேட்டிங்கள்ல..??" "கேட்டோம்.. கேட்டோம்..!!" "உங்க கஷ்டத்துக்கெல்லாம் யார் காரணம்..??" "அவதான்.. அவதான்..!!" "என்ன செய்யலாம் அந்த வேசை முண்டையை..??" வெறுப்பை உமிழ்ந்தார் புவனகிரி "கொல்லனும்.. கொல்லனும்..!!" வெகுவாக ஒத்துழைத்தது ஊர்ஜனம். முகத்தில் இப்போது ஒருவித மலர்ச்சி பரவ ஆரம்பிக்க.. புவனகிரி தலையை திருப்பி பின்னால் பார்த்தார்.. வன்மம் மிக்க அவரது கண்களில் ஒருவித குரூர கூர்மை..!! அவருடைய அந்த சைகைக்குத்தான் காத்திருந்த மாதிரி.. அவருக்கு பின்னால் நின்றிருந்த அந்த நால்வரும் இப்போது உடனடியாய் பரபரப்பாயினர்.. கையிலிருந்த வேல்க்கம்பை சுழற்றியவாறு, கல்மேடையில் இருந்து குதித்தனர்..!!

 புவனகிரிக்கு தன் மகன் தீர்த்தபதி மீது பெரிய அன்போ அக்கறையோ எப்போதும் இருந்ததில்லை.. சிறுவயதில் இருந்தே அவனுக்கு தன்மீது அவ்வளவாக ஒட்டுதல் இல்லை என்பதையும் அவர் நன்கறிவார்..!! ஆனாலும்.. அவனுடைய திருமணம் தனக்கு பிடித்த வகையிலே அமையவேண்டும் என்பதில் அவர் ஆரம்பத்தில் இருந்தே உறுதியாக இருந்தார்.. அதற்கென பல திட்டங்களும் வைத்திருந்தார்..!! திடீரென மகன் வந்து அவ்வாறு உரைத்ததும் உள்ளம் கொதித்து போனார்.. அதிலும் அவன் திருமணம் செய்துகொள்ளப் போவதாக சொன்ன அந்தப்பெண்..!! அவளுடைய பெயரை கேட்டதுமே இவரது ஆத்திரம் கட்டுக்கடங்காமல் போயிற்று.. அவளுக்கென அவன் வாக்குவாதம் செய்ததில் இவர் மூர்க்கமாகிப் போனார்..!!

 உடனடியாய் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டார்.. உள்ளத்தில் பொங்கிய ஆத்திரம், குரூரமாய் ஒரு திட்டம் தீட்ட அவரை தூண்டியது..!! ஊரில் பரவிய தொற்றுநோயும்.. நிலச்சரிவால் நேர்ந்திட்ட சில துர்மரணங்களும் அவருடைய நினைவுக்கு வந்தன.. சாமியருள் வந்து சாபமும் வரமும் தருகிற சன்னதக்காரர் ஞாபகத்துக்கு வந்தார்..!! இரண்டையும் சேர்த்து ஒரு முடிச்சு போட்டார்.. இதோ அவரது திட்டம் எதிர்பார்த்த பலனை தந்துவிட்டது..!! இவரது சுயவெறுப்புக்கு அவளை காவு தர.. ஊர் மக்களை தயார் செய்துவிட்டார்..!! திட்டம் பலித்ததில் மிகவும் திருப்தியுடனே காணப்பட்டார் புவனகிரி..!!

கல்த்தூணில் சாய்ந்திருந்த சன்னதக்காரரை ஒருமுறை திரும்பி பார்த்தார்.. அவரோ ஒருவித குற்ற உணர்வுடன் தலையை கவிழ்த்துக் கொண்டார்..!! அதே நேரத்தில்.. அகழியின் ஊர் எல்லையை ஒட்டிய சமவெளி பிரதேசத்தில்.. அடுத்த ஊருக்கு இறங்குகிற மலைச்சரிவு ஆரம்பமாகிற இடத்தில்.. மசமசப்பான விளக்கு வெளிச்சத்துடன், மழைநீரில் நனைந்தவாறு காட்சியளித்தது அந்த வீடு..!! குழல் மூங்கில்களால் கட்டப்பட்ட குடில் வீடு.. வேசியென புவனகிரி வெறுப்பை உமிழ்ந்த குறிஞ்சியின் வீடு..!! கல்மேடையில் இருந்து குதித்த அடியாட்களின் பரபரப்பு.. வீட்டுக்குள் இருந்த குறிஞ்சியிடமும் காணப்பட்டது..!!

தரையில் முழங்காலிட்டு அமர்ந்திருந்தவள்.. கட்டிலுக்கு அடியில் இருந்த அந்த தகரப்பெட்டியை வெளியே இழுத்தாள்..!! 'க்றீச்ச்ச்' என்ற ஒலியுடன் வெளியே வந்த பெட்டியை திறந்து.. உள்ளிருந்த பொருட்களை பரபரவென தரையில் வாரி இறைத்து எதையோ தேடினாள்..!! அவளுக்கு பின்னால் நின்றிருந்த தீர்த்தபதி.. இப்போது கவலை தோய்ந்த குரலில் சொன்னான்..!! "எ..என்னை மன்னிச்சுடு குறிஞ்சி..!!" தீர்த்தபதி அவ்வாறு சொன்னதும் குறிஞ்சி அவனை ஏறிட்டு ஒருகணம் கூர்மையாக பார்த்தாள்.. பிறகு மீண்டும் தலையை குனிந்து.. தகரப்பெட்டிக்குள் தனது தேடுதலை தொடர்ந்தவாறே.. ஆதங்கமான குரலில் கேட்டாள்..!!

 "ஏன் இப்படி செஞ்சீங்க.. என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம..??" "எ..எல்லாம்.. உன் மேல இருக்குற ஆசைலதான் குறிஞ்சி..!!" "ஆசை இருந்தா அதை என்கிட்ட சொல்லிருக்கலாமே.. நான் தீர்த்து வச்சிருப்பேனே..??" "இல்ல.. நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட..!!" "நீங்கதான் தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க..!! அவரோட பையனா இருந்தும்.. ஆணவம்ன்றது கொஞ்சம் கூட இல்லாம நீங்க பேசின விதம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. அதனாலதான் நானும் உங்ககூட பேசினேன் பழகினேன்..!! மற்றபடி அந்த மாதிரி எண்ணம் உங்க மேல எனக்கு எப்போவும் வந்தது இல்ல..!!"

 "எனக்கு தெரியும்..!!" "அப்புறம் எப்படி உங்க அப்பாகிட்ட அப்படி நீங்க சொல்லலாம்..??" "உன்னை எப்படியாவது கல்யாணம் செய்துக்கணும்னு எனக்கு ஆசை குறிஞ்சி..!! அப்பாவை சமாதானம் செய்து சம்மதிக்க வைக்க முடியும்னு நெனைச்சேன்.. கடைசில சண்டை போட வேண்டியாதா போயிடுச்சு..!! அப்பா இந்த மாதிரி செய்வார்னு.." தீர்த்தபதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, குறிஞ்சி சரக்கென முகத்தை திருப்பி அவனை பார்த்தாள்.. அவனுடைய கண்களை தனது கண்களால் கூர்மையாக சந்தித்தவாறே இறுக்கமான குரலில் சொன்னாள்..!!

 "வேற என்ன செய்வார்னு எதிர்பார்த்திங்க..?? உங்க அப்பாவை பத்தி உங்களை விட எனக்கு நல்லா தெரியும்..!!" என்றவள் சற்றே நிறுத்தி, "புரியுதா..??" என்று அழுத்தமாக கேட்டாள்.




வார்த்தைகளில் வெளிப்படாத ஒருவகை அர்த்தம்.. குறிஞ்சியின் அந்த கூர்மையான பார்வையில் வெளிப்பட்டது..!! தீர்த்தபதியாலும் அந்த அர்த்தத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.. அவனையும் அறியாமல் அவனது தலை கவிழ்ந்துகொண்டது..

இப்போது சற்றே கம்மலான குரலில் சொன்னான்..!! "மன்னிச்சுடு குறிஞ்சி.. இப்படி ஆகும்னு நான் எதிர்பாக்கல..!!" "ப்ச்.. தப்பு பண்ணிட்டிங்க.. பெரிய தப்பு பண்ணிட்டிங்க..!!" சலிப்பாக சொன்ன குறிஞ்சி, அந்த தகரப்பெட்டியில் தொடர்ந்து எதையோ தேடினாள்.. பிறகு மரத்தாலான அந்த சிறிய பெட்டியை உள்ளிருந்து வெளியே எடுத்தாள்..

சிறுக சிறுக சேர்த்த சில நகைகள் அடங்கிய பெட்டி..!! பச்சை நிறத்தாலான ஒரு துணியை கட்டிலில் விரித்து, அதன் மையமாக அந்த பெட்டியை வைத்தாள்.. கூரையில் தொங்கிய பானைக்குள் கைவிட்டு பணமுடிப்பை வெளியே எடுத்தாள்.. கொடியில் தொங்கிய சில உடைகளை அள்ளிக்கொண்டாள்..!! அவ்வளவையும் அந்த பச்சைத்துணியால் சுற்றி சிறு மூட்டையாக்கினாள்.. முதுகுக்கு குறுக்காக அந்த மூட்டையை அணிந்துகொண்டாள்..!!

 "இந்தா.. இதையும் வச்சுக்கோ..!!" அணிந்திருந்த பொன் நகைகளை கழற்றியிருந்த தீர்த்தபதி.. அவற்றை உள்ளங்கையில் வைத்து குறிஞ்சியிடம் நீட்டினான்..!! அவனை கூர்மையாக ஏறிட்ட குறிஞ்சி.. தலையை மெலிதாக அசைத்து 'வேண்டாம்' என்று மறுத்தாள்..!! அவன் மீதிருந்த பார்வையை விலக்காமலே.. அலமாரியில் இருந்து அந்த குறுவாளை எடுத்து தன் இடுப்பில் செருகிக் கொண்டாள்..!! 'உன்னால் எனக்கு எத்தனை இடர்பாடுகள் பார்..' என்பது மாதிரி இருந்தது அவள் தீர்த்தபதியை பார்த்த பார்வை..!!

 "நேரம் ஆயிட்டு இருக்கு குறிஞ்சி.. எந்த நேரமும் அவங்க இங்க வரலாம்.. நீ சீக்கிரம் புறப்படு..!!" தீர்த்தபதி சொல்ல, குறிஞ்சி நீளமாக ஒரு பெருமூச்சினை வெளிப்படுத்தினாள்.. சாளரத்தின் வெளியே சடசடத்த மழையை ஒருமுறை திரும்பி பார்த்தாள்.. கட்டிலில் கிடந்த அந்த சிவப்பு நிற அங்கியை கையில் எடுத்தாள்.. தனது உடலை முழுதும் போர்த்தும்படியாக தலையை சுற்றி அணிந்து கொண்டாள்.. கழுத்துப் பகுதியில் இருபுறமும் தொங்கிய நாடாக்களை சரக்கென இழுத்து முடிச்சிட்டாள்.. அவசரமாய் வாசலை நோக்கி நடந்தாள்..!! தீர்த்தபதி பின்தொடர வீட்டிலிருந்து வெளிப்பட்டாள்..!!

கும்மிருட்டு.. ஜிவ்வென்று கொட்டுகிற மழை.. மின்னல் வெளிச்சத்துடன் இடிமுழக்கம்.. ஏதோ ஒரு காட்டு விலங்கின் தூரத்து ஓலம்..!! மழையில் நனைந்து நடந்த குறிஞ்சி.. தலைகுனிந்து தயாராய் நின்றிருந்த அந்த குதிரையை நெருங்கினாள்.. அதன் முதுகில் கைபதித்து லாவகமாக மேலேறினாள்..!! "பார்த்து கவனமா போ குறிஞ்சி..!!" கனிவுடன் சொன்ன தீர்த்தபதியை ஒருகணம் சலனமில்லாமல் பார்த்தாள்..!! பிறகு.. குதிரையின் கடிவாளத்தை பிடித்து சரக்கென இழுத்தவள்.. 'ஓவ்' என்று சப்தமெழுப்பியவாறு கால்களை விரித்து குதிரையின் விலாப்பகுதியை உதைக்க.. அது உடனடி வேகமெடுத்து 'விர்ர்ர்ர்ர்' என்று கிளம்பியது..!!

மழை நீரின் அடர்த்தியையும் மீறி, எதிர்க்காற்றின் அசுர வேகத்தில்.. அவள் அணிந்திருந்த சிவப்பு அங்கி உயரெழும்பி பறந்தது..!! 'தடக்.. தடக்..' என குளம்படி ஓசையுடன் பறந்து செல்கிற குதிரையை.. பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் தீர்த்தபதி..!! குறிஞ்சியின் குதிரை அந்த இடத்தை விட்டு கிளம்பிய சில நொடிகளிலேயே.. வேறு திசையில் இருந்து அதே 'தடக்.. தடக்..' ஓசையுடன் நான்கு குதிரைகள் வந்தன.. கடிவாளம் இழுக்கப்பட்டு குறிஞ்சியின் வீட்டின் முன்பாக வந்து நின்றன..!!

குறிஞ்சியை இழுத்து செல்ல இத்தனை சீக்கிரம் வருவார்கள் என்று தீர்த்தபதி சற்றும் எதிர்பார்த்திரவில்லை.. குழம்பிப் போனான்..!! கையிலிருந்த நகைகளை உடனே பின்புறமாக மறைத்தவன்.. "அ..அவளை இழுத்து செல்லத்தான் நானும் வந்தேன்.. அதற்குள்ள விஷயம் தெரிஞ்சு அவ தப்பிச்சுட்டா..!!" என்று தடுமாற்றமாக சொன்னான்..!! தொடர்ந்து.. அவள் சென்ற திசையென தவறான திசையை காட்ட எண்ணி அவன் கையை உயர்த்துகையிலேயே..


"அதோ.. அங்க போறா பாரு..!!" குதிரையில் வந்தவர்களில் ஒருவன்.. குறிஞ்சி சென்ற திசையை சரியாக கண்டறிந்து கொண்டான்..!! சற்றும் தாமதியாமல்.. நால்வரும் அதே திசையில் தங்கள் குதிரைகளை முடுக்கி விரைந்தனர்..!!

'குறிஞ்சி இந்த ஊரை விட்டு சென்றால் போதும்' என்று எண்ணியிருந்த தீர்த்தபதியின் நெஞ்சில் இப்போது ஒருவித கலக்கம்.. குற்ற உணர்வு ஒன்று அவனுடைய மனதில் மெலிதாக பரவ ஆரம்பித்தது..!! கடும் மழை பொழிகிற மலைப்பிரதேசம்.. கரி பூசிவிட்ட மாதிரியாக அடர்இருள்.. நெருக்கமாய் வளர்ந்திருக்கிற காட்டுமரங்கள்.. அதற்குள்ளே வளைந்து நெளிந்து செல்கிற குறுகலான சாலை..!! அந்த சாலையில்.. சிவப்பு நிற அங்கி காற்றில் படபடக்க.. வெள்ளை நிற குதிரையில் குறிஞ்சி பறந்து கொண்டிருந்தாள்..!! சிறிது தூர இடைவெளியில்.. இன்னும் நான்கு குதிரைகளில்.. புவனகிரியின் ஆட்கள் அவளை விரட்டிக் கொண்டிருந்தனர்..!! குறிஞ்சி குதிரையேற்றம் அறிந்தவள் என்றாலும், கைதேர்ந்தவள் என்று சொல்ல முடியாது..!!

பின்தொடர்ந்து சென்றவர்களுக்கோ அது அன்றாட பணியும் பயிற்சியுமாக இருந்தது..!! குறிஞ்சிக்கும் அவர்களுக்கும் இடையிலான இடைவெளி குறைந்துகொண்டே வந்தது..!! குதிரையை விரட்டிக்கொண்டே.. குறிஞ்சி தலையை மெல்ல திருப்பி பின்னால் பார்த்தாள்..!! துரத்துபவர்கள் இப்போது தனக்கு இன்னும் நெருக்கமாக வந்திருப்பதை அறிந்ததும்.. அவளுக்குள் ஒரு நடுக்கம் பரவியது..!! மாட்டிக்கொள்வோமோ என்பது மாதிரியான ஒரு பயம்.. அவளுடைய மனதினை வந்து கவ்விக்கொண்டது..!!

குதிரையின் வயிற்றை உதைத்து.. அதனை வேகம்கொள்ள தூண்டினாள்..!! இடைவெளி நிறைய குறைந்து போனதும், நால்வரில் ஒருவன் திடீர் முடிவெடுத்தான்.. கையிலிருந்த வேல்க்கம்பை சுழற்றி, காற்றில் சரக்கென வீசினான்..!! மழைநீரை கூர்மையாக கிழித்து பறந்த அந்த வேல்க்கம்பு.. சரியாக சென்று குறிஞ்சியின் தோள்ப்பட்டையில் சதக்கென்று பாய்ந்தது..!! "ஆஆஆஆஆஆ...!!!!" குருதி பீய்ச்சியடிக்க அலறிக்கொண்டே குறிஞ்சி ஒருபக்கமாக சரிந்தாள்.. சமநிலை கிடைக்காத குதிரையும் அவளுடன் சேர்ந்து சரிந்தது..!! குதிரை சென்ற வேகத்துக்கு.. குறிஞ்சி தரையில் தூக்கி விசிறப்பட்டாள்..!!

கல்லிலும் முள்ளிலும் காட்டுச்செடியிலும் கடகடவென உருண்டவள்.. கரும்பாறை ஒன்றில் சென்று நச்சென்று மோதவும்.. கண்கள் செருக சுய நினைவை இழந்தாள்..!! விரட்டி வந்தவர்கள் குதிரையின் வேகத்தை குறைத்து தரையில் குதித்தனர்..!! அதே நேரத்தில்.. தீர்த்தபதி தனது நண்பன் முத்தழகனின் வீட்டில் இருந்தான்..!! குறிஞ்சியை விரட்டிக்கொண்டு அந்த நால்வரும் சென்றபிறகு.. தனது குதிரையை எடுத்துக்கொண்டு கிளம்பியவன்.. நேராக நண்பன் வீட்டில்தான் வந்து நின்றான்..!!

 வீட்டுக்குள்ளே.. கடும்குளிருக்கு கம்பளி போர்த்தியவாறும்.. காய்ந்துபோன தொண்டையுடன் 'லொக் லொக்' என்று இருமியவாறும்.. கட்டிலில் படுத்திருந்தாள் அந்த பெண்மணி.. முத்தழகனின் தாய்..!! தன்னை பெற்றெடுத்த தாயை சிறுவயதிலேயே இழந்திருந்த தீர்த்தபதி.. தனக்கு கடவுள் அளித்த இன்னொரு தாயாக கருதுபவள்..!! "அம்மாவுக்கு இப்போ எப்படி இருக்கு..??" தீர்த்தபதி கேட்க, "அப்படியேதான் இருக்கு..!!" கவலையாக பதில் சொன்னான் முத்தழகன். தீர்த்தபதி இப்போது நடந்து சென்று அந்த அம்மாவை நெருங்கினான்.. கட்டிலுக்கு குனிந்து அவளுடைய கையை வாஞ்சையாக பற்றிக்கொண்டான்..!!

இமைகளை மெல்ல பிரித்து அவள் இவனை பார்க்க.. இவன் அவளை பாசமிகு பார்வை ஒன்று பார்த்தான்..!! முத்தழகனின் தந்தை ஒரு சுகபோகி.. குறிஞ்சியின் அழகில் அவருக்கு ஒரு மயக்கம்..!! குடித்தது சூதாடியது போக தனது வருமானத்தின் ஒரு பெருமானத்தை.. குறிஞ்சியின் அழகை சுகிப்பதற்கென்று செலவழிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தார்.. குறிஞ்சியின் குடிலிலேயே பெரும்பொழுதை கழித்தார்.. கட்டிய மனைவியை உதாசீனப்படுத்தியே வந்தார்..!! நண்பனின் குடும்பத்துக்கு பொருளாதார ரீதியிலான உதவிகளை மட்டுமே தீர்த்தபதியால் செய்ய முடிந்தது.. கணவனின் போக்கை கண்டு நண்பனின் அம்மாவுக்கு ஏற்பட்ட மனநோயை தீர்க்க, தீர்த்தபதிக்கு வழியேதும் தெரியவில்லை..!!

'இது மனதில் உண்டான காயம்.. மருந்துக்கு குணப்படாது..' என்று மருத்துவர் சொன்னது இன்னமும் அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது..!! அம்மாவின் மனநோய் நீங்கவேண்டும் எனில்.. குறிஞ்சி இந்த ஊரில் இருக்கக்கூடாது என்பதை சிலநாட்கள் முன்புதான் நன்கு புரிந்து கொண்டிருந்தான்..!! இப்போது.. அந்த அம்மாவின் கையை இதமாக தடவிக் கொடுத்தவாறே.. உலர்ந்து போன குரலில் சொன்னான்..!! "உங்ககிட்ட சொன்னதை செய்து முடிச்சுட்டேன் அம்மா..!! இனிமே அவ இந்த ஊர்ல இருக்க மாட்டா.. அவளால உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.. உங்க கணவர் உங்களை விட்டு எங்கயும் போக மாட்டார்..!! உங்களுக்கு சீக்கிரமே சரி ஆகிடும் அம்மா.. கவலைப்படாதீங்க..!!"

 தீர்த்தபதி அவ்வாறு சொன்னதை கேட்டதும், அந்த பெண்மணியின் கண்களில் ஒரு மின்னல் கீற்று.. உதடுகள் பிரித்து பலவீனமாக ஒரு நன்றிப்புன்னகையை உதிர்த்தாள்..!! உள்ளுக்குள் அரித்த குற்ற உணர்வை மறைத்துக்கொண்டு.. தீர்த்தபதியும் பதிலுக்கு புன்னகைத்தான்..!! அடுத்தநாள் காலை.. காதுகளுக்கு உகாத ஓசையுடன் கதவு திறக்கப்பட.. கதிரவனின் வெளிச்சம் குறிஞ்சியின் முகத்தில் படர்ந்தது..!! இரவு முழுதும் தூங்காத அவளது விழிகள்.. அதிகாலையில்தான் சற்று அயர்ந்திருந்தன..!! அவளது நெற்றியிலிருந்தும் தோள்ப்பட்டையிலிருந்தும் வழிந்து உறைந்து போயிருந்த ரத்தத்தில் ஈக்களின் ரீங்காரம்..!! இமைகளை வெளிச்சத்துக்கு சுருக்கியவள், பிறகு கண்களை மெல்ல திறந்து பார்த்தாள்.. இரண்டு ஜோடி கால்கள் அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது..!! உடனே விருட்டென்று எழுந்து அமர்ந்தாள்.. கைகள் இரண்டையும் தன் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டாள்..!!





அவளுடைய கால்களில் ஒன்று இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்தது.. மேலாடையற்ற முதுகுப்புறத்தில் ஆங்காங்கே ரத்த விளாறுகள்.. கீழாடை கூட கிழிந்து கந்தலாகி போயிருந்தது..!! கன்னத்தில் காய்ந்துபோன கண்ணீர் தடம்.. சிவந்த உதடுகளின் ஒரு ஓரம், காயத்தில் கருத்து தடித்து போயிருந்தது..!! இரவு முழுவதும் நான்கைந்து மனித மிருகங்களால், பாலியல் ரீதியான சித்திரவதைகளை அனுபவித்து இருந்ததில்.. அவளுடைய உடலும் மனதும் சோர்ந்து போயிருந்தன..!!

 "எழுந்திருடி வேசை..!!" வந்தவர்களில் ஒருவன் குறிஞ்சியின் தலைமுடியை கொத்தாகப் பற்றி மேலே தூக்க, "ஆஆஆஆஆஆஆஆ..!!" வேதனையில் துடித்தவாறே அவள் மேலெழுந்தாள். அகழியில் மிக உயரமான இடம்.. உச்சிமலை எனப்படுகிற இடம்..!! வானை முட்டுவது போல நிற்கும் உச்சிமலையின் முகடு.. கடந்து செல்கிற மேகத்திரள்கள் சிறிது நேரம் தங்கியிருந்து.. தழுவி முத்தமிட்டிருந்து.. பிறகு பிரிய மனமில்லாமலேயே அந்த மலைமுகட்டை பிரிந்து செல்வன..!! உச்சிமலையின் ஒருபுறம்.. பச்சை பசேலென மரங்களுடன் கூடிய அடர்காடு..!!

மறுபுறம்.. கரடுமுரடான கரும்பாறைகளுடன் கூடிய பள்ளத்தாக்கு.. உளி கொண்டு செதுக்கியது மாதிரி செங்குத்தான பள்ளத்தாக்கு.. ஆயிரத்து ஐநூறு அடிக்கும் அதிகமான அதல பாதாள வீழ்ச்சி..!! அந்தமலையின் அடிவாரத்தில் இருக்கிற சமவெளி நிலத்தில்.. அழகு வாய்ந்த குழலாறு ஓடும்..!! சமவெளியில் சலனமில்லாமல் ஓடுகிற குழலாறு.. சற்று தூரம் சென்றதும் சரேலென அருவியாய் வீழும்.. காடு மலை கடந்து போய் கபினியாற்றில் கலக்கும்..!! ஊருக்குள்ளிருந்து உச்சிமலைக்கு செல்கிற சாலையும் சற்று கரடு முரடானததுதான்.. வீதியின் ஒருபுறம் ஆங்காங்கே குடிசைகள்.. மறுபுறம் நிலைக்குத்தான மலைச்சரிவு..!!

காற்று இப்போது பலமாக வீசிக்கொண்டிருக்க.. காய்ந்த சருகுகள் வீதியில் பறந்துகொண்டிருந்தன..!! அந்த வீதியில்தான் குறிஞ்சி இழுத்து செல்லப்பட்டாள்..!! மேலாடையற்ற திறந்த மார்புகள்.. இடுப்புக்கு கீழே பெயருக்கு ஒட்டிக் கொண்டிருக்கிற கீழாடை..!! இரவு முழுதும் காலை பிணைத்திருந்த இரும்பு சங்கிலி.. இப்போது அவளது கைகளை பின்புறமாக இணைத்து பிணைத்திருந்தது..!! தளர்ந்துபோன கால்களுடன் தள்ளாடி தடுமாறி நடந்தாள்..!! வீசியடித்த காற்றுக்கு அவளுடைய கருங்கூந்தலும் கீழாடையும் தடதடத்துக் கொண்டிருந்தன..!! வீதியின் ஒருபுறம் நின்று வேடிக்கை பார்க்கிற ஊர்மக்களை.. மூக்கு நுனியில் ஊசலாடுகிற ரத்ததுளியுடன் பார்த்தாள் குறிஞ்சி..!!

இந்த ஊருக்குள் முதல்முதலாய் அடியெடுத்து வைத்த அந்த நிகழ்வு.. அவளுக்கு இப்போது ஞாபகம் வந்தது..!! மாலைக்கழுத்தும், மஞ்சள் தாலியுமாய்.. தகரப்பெட்டியும், சுருட்டிய பாயுமாய்.. கணவனின் தோள் உரசி, கனவுகள் சுமந்த கண்களுமாய் நடந்து வந்த ஞாபகம்..!! அப்போதும் இப்படித்தான் வேடிக்கை பார்த்தனர் இந்த ஊர்மக்கள்..!!

 'எத்தனை கனவுகளுடன் வந்தேன் இந்த ஊருக்கு..?? எத்தனை எதிர்பார்ப்புகள் என்னெஞ்சில் அப்போது..?? இனி நான் வாழப்போகிற ஊர் என்று ஆசையாசையாய் பார்த்தேனே..?? இனி நான் பேசப்போகிற மக்கள் என்று பெருமையாய் உங்களை நினைத்தேனே..?? இதற்குத்தானா.. இந்தநிலையை எனக்கு தரத்தானா இத்தனை நாளாய் காத்திருந்தீர்கள்..??' - குறிஞ்சியின் மனதில் அடக்கமுடியாத ஒரு ஆதங்கம்..!! அந்த ஊரில் யாருக்கும் ஆரம்பத்தில் இருந்தே அவளிடம் ஒட்டுதல் இல்லை..

அவளுடைய அழகுதான் அதற்கு முழுமுதற்காரணம்.. கொள்ளை கொள்ளும் அவளது அழகு மற்றவர்களிடம் இருந்து அவளை தனியாக பிரித்தே வைத்திருந்தது..!! பெண்களுக்கோ அவளிடம் ஒருவித பொறாமை உணர்வு.. அவளை நெருங்கவே தயங்கினார்கள்..!! ஆண்களுக்கோ அவளைக்கண்டால் வேறு மாதிரியான உணர்வு.. அவர்களது வக்கிர பேச்சுக்களை வெளிப்படுத்த கிடைத்த ஒரு வாய்ப்பாக அவள் அமைந்து போனாள்..!!

 குறிஞ்சியின் கணவனுக்கு பிறந்த நாட்டின் மீதிருந்த பற்று கட்டிய மனைவியிடம் இல்லை..!! திருமணமான இரண்டாம் வருடமே, ஆங்கிலேயர்களை அடித்து விரட்டப் போகிறேன் என்று.. தீவிரவாத குழுவை சேர்ந்த இருவருடன் கிளம்பி சென்றவன்தான்..!! ஆறு வருடங்கள் ஆயிற்று.. அவன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்பதற்கே இன்னும் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை..!! அவன் விட்டுச்சென்ற செல்வம் எட்டு நாள் செலவுக்கு கூட போதவில்லை..!! பணம் சம்பாதிக்க பசுமாடு வங்கி பால் கறந்து விற்றுப் பார்த்தாள்.. பலனேதும் இல்லை..!!

ஊரை பீடித்த நோய் மாட்டையும் பீடித்து மரணிக்க செய்தது..!! தனிமை.. வறுமை.. பசி.. அச்சுறுத்தல்.. உயிர்ப்பயம்..!! உயிருக்கு பயந்துதான் முதலில் தன் கற்பை தொலைத்தாள்.. பிறகு மெல்ல மெல்ல தனது உடலழகை காசாக்க கற்றுக்கொண்டாள்..!! "என்னோட தயவு இல்லாம.. இந்த ஊர்ல மட்டும் இல்ல.. எந்த ஊர்லயும் நீ வாழ முடியாது..!!" பயந்து நடுங்கிய குறிஞ்சியை படுக்கையில் வீழ்த்தி கசக்கியெறிந்து.. முதன்முதலாய் அவளது கற்பை சூறையாடியது இதே புவனகிரிதான்..!! உடலை விற்று அவள் பிழைப்பு நடத்தக்கூடிய சூழ்நிலைக்கு முதலில் வித்திட்டவர் அவர்தான்..!!

 பயந்து பயந்து அவரிடம் படுத்து படுத்து.. உடல் மரத்துப் போனது அவளுக்கு.. வெட்கம் இற்றுப் போனது..!! பயத்தின் காரணமாக இழந்த உடலை.. பசியை தாளாமல் மற்றவர்களுக்கு விற்கவும் துணிந்தாள்..!! ஆரம்பித்து வைத்தது புவனகிரி என்றால்.. அவளை முழுவதுமாக இந்த வாழ்க்கைக்கு தள்ளியது.. இதோ.. வேடிக்கை பார்க்கிற இதே ஊர்தான்..!! வேடிக்கை பார்த்த கூட்டம்.. குறிஞ்சி முன்னால் நகர நகர.. அவளுக்கு பின்னால் சேர்ந்து கொண்டது.. ஊர்வலம் செல்வது மாதிரி..!!

செல்கிற வழியில்.. அவளை கல்லால் அடித்தனர் சிலர்.. காறி உமிழ்ந்தனர் சிலர்..!! ஒருசில மூடர்கள் அவளை சூழ்ந்துகொண்டு தாக்கினர்.. பெண்களும் அந்த மூடர் கூட்டத்தில் அடக்கம்..!! "செத்து ஒழிடி முண்டை.. செத்து ஒழி..!!" - விளக்குமாற்றால் அடித்தாள் ஒரு பெண். "சீவி சிங்காரிச்சு இந்த ஊரை மயக்குனது போதுமடி..!!" - குறிஞ்சியின் கூந்தலை அறுத்தான் ஒரு ஆண். "இந்த ஊரை பிடிச்சிருந்த பீடை இன்னைக்கோட போகட்டும்..!!" - சாணத்தை கரைத்து குறிஞ்சியின் தலையில் ஊற்றினாள் ஒரு அறிவிழந்தவள்.

 "உடம்பை வித்து பொழப்பு நடத்துற வேசை..!!" - சாட்டையை அவளுடைய மார்புகளில் சுழற்றினான் ஒரு இரக்கமில்லாதவன். வலி தாளாமல் கத்துவதற்கு கூட குறிஞ்சியின் தொண்டையில் திராணி இல்லை.. வேதனையை பிரித்துக் காட்டுகிற திறனை கூட அவளுடைய உடல் இழந்து போயிருக்க.. உணர்வுகள் செத்திருந்தன..!! அடியும், உதையும், அருவருப்பான சொற்களும், அவமான வழி நடத்தலுமாய்.. உச்சிமலைக்கு இழுத்து வரப்பட்டாள் குறிஞ்சி..!!

 உச்சிமலையில் ஊரின் மீதி ஜனம் குழுமியிருந்தது.. நடுநாயகமாக நின்றிருந்தார் புவனகிரி..!! சன்னதக்காரர் தனது நடிப்பை இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தார்.. 'அவளை காவு குடுங்கடா.. அவளை எனக்கு காவு குடுங்க..' என்று நாக்கை துருத்தி கத்திக் கொண்டிருந்தார்..!! மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெரிய எண்ணெய்க்கலம் மையமாக வைக்கப்பட்டிருந்தது.. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பிரதிநிதி.. தங்களது ஈவான மூன்று ஆழாக்கு எண்ணெயை.. வரிசையாக வந்து அந்த எண்ணெய்க்கலத்தில் ஊற்றிக் கொண்டிருந்தனர்..!!

 ஊருக்குள் இருந்ததை விட உச்சிமலையில் காற்றின் வேகம் இன்னுமே அதிகமாக இருந்தது.. சடசடவென காற்றின் சப்தமே பெரிதாக கேட்டது..!! நடக்கவிருக்கிற கொடுஞ்செயலை புரிந்துகொண்டாற்போல.. காட்டு மரங்கள் வெட்கி தலைகுனிந்து கொண்டன.. காகங்களும் குருவிகளும் சிறகடித்து வேறூருக்கு பறந்தன.. மலையடிவாரத்து குழலாறு ஓடமனமில்லாமல் உறைந்து போயிருந்தது..!!


இழுத்து வந்து நிறுத்தப்பட்ட குறிஞ்சி தன் தலையை மெல்ல உயர்த்தினாள்.. களைப்பு மிகுந்த கண்களை சுழற்றி, சுற்றியிருந்த கூட்டத்தை ஒருமுறை பார்த்தாள்..!!

இதில் எத்தனை பேர் தன்னுடன் படுக்கையில் புரண்டிருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பது போல இருந்தது அவளது பார்வை..!! 'வேசி வேசியென்று என்னை தூற்றுகிறார்களே.. அந்த வேசித்தொழில் செய்ய என்னை தூண்டியவர்கள் இதில் எத்தனை பேர்..??' என்பது மாதிரி இருந்தது அந்த பார்வை..!! கண்களால் நடத்திய கணக்கெடுப்பின் பலனாக கணிசமான ஒரு தொகை கிடைத்தது.. சாமியருள் வந்துவிட்டதாய் பாசாங்கு புரிகிற சன்னதக்காரரும் அதில் அடக்கம்..!!

 விழிகளில் வன்மமும், இதழ்களில் எள்ளலுமாய்.. குறிஞ்சியின் முன்பாக வந்து நின்றார் புவனகிரி..!! "பேராசைக்கு என்ன கூலின்னு இப்போவாவது உனக்கு புரிஞ்சதா..??" அவர் சொல்லி முடிக்கும் முன்பே, "த்த்தூதூ..!!!" அவருடைய முகத்தில் காறி உமிழ்ந்தாள் குறிஞ்சி. அவ்வாறு காறி உமிழ்ந்த அடுத்த நொடியே.. அவளுடைய பின்னந்தலையில் சத்தென்று உருட்டுக்கட்டையால் ஒரு அடி விழுந்தது.. தரையில் பொத்தென்று சுருண்டு விழுந்தாள் குறிஞ்சி..!! விழுந்தவளின் உச்சிமயிரைப் பற்றி, கரடுமுரடான பாறையில் தரதரவென இழுத்து சென்றான் ஒரு அடியாள்..!!

முகத்தில் வழிந்த உமிழ்நீரை துடைத்த புவனகிரியின் கண்களில்.. அவமான உணர்வென்பது துளியும் இல்லை.. அத்தனை திருப்தியான ஒரு பார்வை பார்த்தார்..!! இழுத்து செல்லப்பட்ட குறிஞ்சியை இரண்டு பேர் உயர்த்தி நிறுத்தினர்.. ஒற்றையாய் நின்றிருந்த கல்த்தூணில் கயிறு கொண்டு அவளை கட்டினர்..!! புவனகிரி கண்ஜாடை காட்டியதும்.. மரக்கலத்தை எடுத்து அதிலிருந்த எண்ணெய்யை குறிஞ்சியின் தலையில் கொட்டி கவிழ்த்தனர்..!! அவர் கை நீட்டியதும்.. நெருப்புப்பந்தம் ஒன்று அந்தக்கையில் திணிக்கப்பட்டது..!!

ஊர் மக்கள் எல்லாவற்றையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்..!! "இந்தப்பாவம் உங்களை எல்லாம் சும்மா விடாது..!!" - ஆவேசமாக கர்ஜித்தாள் குறிஞ்சி. அடுத்தநொடியே.. கையிலிருந்த பந்தத்தை புவனகிரி தூக்கியெறிய.. குறிஞ்சியின் உடலில் குப்பென்று தீப்பற்றிக் கொண்டது..!! உயிருடன் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தாள் குறிஞ்சி.. உடனடியாய் சதைகள் பொசுங்கிப்போக, உள்ளடங்கிய ரத்தநாளங்கள் வெடித்து சிதறின..!! "ஆஆஆஆஆஆஆஆஆ..!!" ஆவிகொதிக்க அலறி துடித்தாள் குறிஞ்சி. மலையுச்சியில் சூறைக்காற்று இப்போது திடீரென சுழற்றி அடித்தது.. நிலையாக நிற்கக்கூட முடியாமல் அனைவரும் தடுமாறினார்..

கையை முகத்துக்கு முன்னர் கொண்டு வந்து காற்றை மறைத்தனர்..!!

"ஆஆஆஆஆஆஆஆஆ..!!" அலறிக்கொண்டே குறிஞ்சி உடலை முறுக்கி திமிறினாள்.. கட்டி வைத்திருந்த கயிறு இப்போது இற்றுப்போய் அற்றுக்கொண்டது..!! அக்னிஜுவாலை பற்றி எரிய.. அங்கும் இங்கும் அலறியடித்து ஓடினாள் குறிஞ்சி..!! ஊர்மக்கள் மிரண்டு போய் அந்த கோரக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கையிலேயே.. திகுதிகுவென தீப்பற்றிய தேகத்துடன் மலையுச்சியில் இருந்து கீழே பாய்ந்தாள்..!! அடித்த சுழல்காற்றுக்கு.. அவள் நேற்று அணிந்திருந்த சிவப்பு நிற அங்கி.. எங்கிருந்தோ இப்போது பறந்து வந்தது..!! பள்ளத்தாக்கில் அவள் பாய்ந்த திசையிலேயே.. அந்த அங்கியும் வீழ்ந்து அவளுடன் பயணித்தது..!!


 ஆயிரத்து ஐநூறு அடி உயரமான சரிவில்.. அங்கமெங்கும் எரிகிற நெருப்புடன்.. ஆங்காங்கே பாறைகளில் முட்டி மோதியவாறு.. குறிஞ்சி கீழே சென்று கொண்டேயிருந்தாள்..!! இறுதியாக சமதளத்தை அடைந்து.. குழலாற்றின் தெளிந்த நீரை கிழித்துக்கொண்டு தொப்பென்று விழுந்தாள்.. அந்த ஆறும் அதற்காகத்தான் காத்திருந்தமாதிரி அவளை தனக்குள் வாங்கி புதைத்துக்கொண்டது..!! பறந்து சென்ற சிவப்பு அங்கியும்.. அவள் விழுந்த இடத்திலேயே சென்று விழ.. ஆற்றுச்சுழல் அதனை உள்ளிழுத்துக் கொண்டது..!!










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக