http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : கண்ணாமூச்சி ரே ரே - திரில் தொடர் - பகுதி - 6

பக்கங்கள்

வெள்ளி, 3 ஜூலை, 2020

கண்ணாமூச்சி ரே ரே - திரில் தொடர் - பகுதி - 6

அகழி வந்து ஒருநாள் கூட ஆகவில்லை.. அதற்குள்ளாகவே ஆதிராவின் மனதில் ஒரு கலக்கம் உருவாகி இருந்தது.. அவளுடைய மனம் ஒருவித குழப்பத்தில் உழல ஆரம்பித்திருந்தது..!!

அகழி வருவதற்கு முன்பாக.. குறிஞ்சிதான் தாமிராவை கொண்டுபோய் விட்டாள் என்று கூறப்பட்டதை.. அவளால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது..!! ஆனால் இப்போது.. வனக்கொடி தான்கண்ட காட்சியினை மலையுச்சியில் வைத்து அவளுக்கு விவரித்தபிறகு.. வீட்டுக்குள் வீசிய அதே வாசனையை இந்த சிங்கமலையிலும் நுகரநேர்ந்தபிறகு.. ஆதிராவின் மனதில் சற்று ஆழமாகவே குறிஞ்சி இறங்கியிருந்தாள்.. குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாள்..!!

மனதில் இருந்த குழப்பத்தை வெளியில் சொல்ல ஆதிரா விரும்பவில்லை.. அதேநேரம், அந்த குழப்பத்திற்கான விடையை தெரிந்துகொள்கிற ஆர்வமும், அவளுக்குள் இப்போது மூண்டிருந்தது..!! குழப்பத்தையும் ஆர்வத்தையும் மனதுக்குள் போட்டு மூடியவள்.. வனக்கொடியிடம் திரும்பி வறண்ட குரலில் சொன்னாள்..!! "நேரமாச்சும்மா.. கெளம்பலாம்..!!" "ம்ம்.. சரி ஆதிராம்மா.. கெளம்பலாம்..!!

சிபித்தம்பி வேற எந்திரிச்சிருக்கும்னு நெனைக்கிறேன்..!!" ஆதிராவும் வனக்கொடியும் சிங்கமலையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார்கள்.. சரிவாகவும் சறுக்கலாகவும் இருந்த அந்த குறுகியபாதையில் மிகப்பொறுமையாக இறங்கினார்கள்.. ஆதிரா முன்னால் நடக்க, அவள் பின்னே வனக்கொடி..!! ஆதிராவின் கால்கள் நடைபோட்டுக் கொண்டிருந்தாலும்.. அவளுடைய மனம் வேறெதையோ அசைபோட்டுக் கொண்டிருந்தது.. அந்த மனம் முழுதையும் அவளுடைய தங்கையே இப்போது ஆக்கிரமித்திருந்தாள்..!!

ஆதிராவும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. இந்த மலைப்பாதையிலும், அந்த காட்டுமரங்களுக்கு இடையிலும்.. இருவரும் ஓடித்திரிந்து விளையாடியதெல்லாம் இப்போது ஆதிராவின் ஞாபகத்திற்கு வந்தன..!!
அடர்ந்த மரங்களும் அதிகாலைப் பனியும் செறிந்திட்ட அந்த மலைப்பாதையில்.. ஆதிரா இப்போது நடந்துசெல்ல.. அவளுக்கு எதிரே உதயமானாள் சிறுமி தாமிரா..!!

எட்டுவயது குட்டிப்பெண்ணாய்.. பட்டுப்பாவாடை கட்டிக்கொண்டு.. ரெட்டைஜடை போட்டுக்கொண்டு.. கைவிரல்களை விரித்து ஆட்டிக்கொண்டு.. கண்ணிமைகளை வெடுக்கென வெட்டிக்கொண்டு.. மழலைக்குரலில் பாட்டொன்றை பாடிக்கொண்டு..!! "ஆக்குபாக்கு வெத்தலபாக்கு தாம்தூம் தஸம்..!!" தங்கை பற்றிய நினைவுடனே நடந்து சென்ற ஆதிராவுக்கு.. எட்டுவயது தாமிரா நிஜமாகவே எதிரேதோன்றி பாடுவது போல ஒரு மாயத்தோற்றம்..!! 

"தஸ்ஸைதூக்கி மேலபோட்டா செட்டியார்வீட்டு நண்டு..!!" பாடலுடன் சேர்த்து நளினமாக ஆடிக்கொண்டே.. அந்த மலைப்பாதையில் ஆதிராவை வழிநடத்தி கூட்டிச்செல்வது போல ஒரு மருட்சி..!! "நண்டைதூக்கி மேலபோட்டா நாகரத்ன பாம்பு..!!" அழகாக கைவிரல்களை ஆட்டிஆட்டி குட்டித்தாமிரா பின்னோக்கி நடந்து செல்ல.. ஆதிரா அவளுடைய முகத்தை ஏக்கமாக பார்த்துக்கொண்டே முன்னோக்கி நடந்தாள்..!! "பாம்பைதூக்கி மேலபோட்டா பஞ்சவர்ணக் கிளி..!!" பச்சரிசி பல்வரிசை மின்ன காந்தச்சிரிப்பு சிரித்தாள் தாமிரா..!!

தளர்வாக நடைபோட்ட ஆதிராவின் உதடுகள் இப்போது தடதடத்தன.. 'தாமிராஆஆ' என்று ஒருவித ஆதங்கத்துடன் முணுமுணுத்தன..!! நெஞ்சைப் பிசைவது மாதிரியாய் அவளுக்குள் ஒரு உணர்வு..!! "கிளியைதூக்கி மேலபோட்டா கிருஷ்ணனோட கொண்டை..!! ஹாஹாஹாஹா.. ஹாஹாஹாஹா..!!"பாடிமுடித்த தாமிரா கலகலவென கைகொட்டி சிரித்தாள். "தாமிராஆஆஆ..!!" வாய்விட்டே அழைத்துவிட்ட ஆதிரா, கைநீட்டி வேறு தங்கையின் மாயவுருவை பிடிக்க முயன்றுவிட்டாள்..!! அவளுடைய கைக்குள் அகப்படாமல் தாமிரா பட்டென்று மறைந்துபோக.. அடுத்தகணமே நிஜவுலகுக்கு வந்து ஆதிரா திருதிருவென விழித்தாள்..!!

 "ஆதிராம்மாஆஆ.. என்னம்மா ஆச்சு..??" பின்னால் நடந்து வந்த வனக்கொடி, பதற்றத்துடன் வந்து ஆதிராவின் தோள்பற்றினாள். "ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்லம்மா..!! ஏ..ஏதோ.. பழைய ஞாபகம்..!! வா..வாங்க.. போலாம்..!!" தடுமாற்றமாகவும் சமாளிப்பாகவும் சொன்ன ஆதிரா.. தாமதம் சிறிதும் செய்யாமல் விடுவிடுவென முன்னால் நடந்தாள்..!! அவள் செல்வதையே ஓரிரு வினாடிகள் திகைப்பாக பார்த்த வனக்கொடி.. பிறகு ஓடிச்சென்று அவளுடன் இணைந்துகொண்டாள்.. ஆறுதலாக ஆதிராவின் கையை பற்றிக்கொண்டாள்.. இப்போது இருவரும் சேர்ந்து நடைபோட்டார்கள்..!!

வனக்கொடி அவ்வாறு வந்து கைபற்றிக்கொண்டது, ஆதிராவுக்கு இதமாக இருந்தது.. அவளுடைய மனதில் மெலிதாக ஒரு நிம்மதி பரவியது..!! வீட்டை நெருங்க சற்று தொலைவு இருக்கையிலேயே.. தோட்டத்தில் நின்றிருந்த சிபி இவர்களது பார்வையில் பட்டான்.. கூடவே.. அவனுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த திரவியமும்..!!

திரவியம் தணிகைநம்பியின் தொழில்முறை நண்பர்.. வயதில் அரைச்சதம் அடித்தவர்..!! தென்றல் இருவருக்கும் தேநீர் தயாரித்து கொடுத்திருக்கவேண்டும்.. இருவருடைய கையிலும் வெண்ணிற பீங்கான் கோப்பை..!!
அகழியில் தணிகைநம்பிக்கு சொந்தமாக ஒரு டீ எஸ்டேட் இருக்கிறது.. அதுவல்லாமல், திரவியத்தின் மேலாண்மையிலும் மேற்பார்வையிலும் இயங்குகிற டீ பேக்டரியிலும் கணிசமான ஒரு முதலீட்டுப்பங்கு அவருக்குண்டு..!!

ஆதிராவின் குடும்பம் மைசூருக்கு புலம்பெயர்ந்தபிறகு.. அவர்களுடைய மாளிகைவீட்டை பராமரிக்கிற பொறுப்பு வனக்கொடிக்கு வழங்கப்பட்டது போல.. தணிகைநம்பியின் பிற சொத்துக்களை நிர்வகிக்கிற பொறுப்பு திரவியத்திற்கு வந்துசேர்ந்திருந்தது..!! தணிகைநம்பி அவ்வப்போது அகழி வந்து, ஓரிரு நாட்கள் தங்கியிருந்து, கணக்குவழக்கு பகுப்பாய்வதோடு சரி..!! மற்றபடி.. தணிகைநம்பியின் சொத்துக்கள் அனைத்தையும் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பது..

 "என்னம்மா.. காலங்காத்தாலேயே காட்டுக்குள்ள போய் சுத்திட்டு வர்றீங்க..??" என ஆதிராவைப் பார்த்து இதமான புன்னகையுடன் கேட்ட இந்த திரவியம்தான்..!!. "ஒ..ஒன்னும் இல்ல அங்கிள்.. சும்மா.. சிங்கமலை வரை போயிருந்தோம்..!! நீங்க எப்ப வந்தீங்க..??" "வந்து அரைமணி நேரம் ஆச்சுமா.. காலைலயே உன்கையால சூடா ஒரு காபி குடிக்கலாம்னு நெனச்சு வந்தேன்.. கடைசில வழக்கம்போல தென்றல் போட்ட டீயையே குடிக்கவேண்டியதா போய்டுச்சு..!! டயர்டா தூங்கிட்டு இருந்த உன் புருஷனையும் தட்டியெழுப்புற மாதிரி ஆய்டுச்சு..!! காலங்காத்தாலேயே வந்து கடுப்பை கெளப்புற இந்த அடியேனை மன்னிச்சுக்கங்க ரெண்டுபேரும்....!!

ஹாஹா..!!" சொல்லிவிட்டு வசீகரமாக ஒரு சிரிப்பு சிரித்தார் திரவியம். "நாங்க அகழி வந்திருக்கிறது உங்களுக்கு எப்படி தெரியும் அங்கிள்..??" ஆதிரா திடீரென அவ்வாறு கேட்க, திரவியத்தின் சிரிப்பு பட்டென்று நின்று போனது.. அவருடைய நெற்றிப்பரப்பில் சுருக்கக் கோடுகள்..!! அவளிடம் இருந்து அந்த கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை என்பது.. திகைத்துப் போய் பார்த்த அவருடைய முகத்திலேயே தெளிவாக தெரிந்தது..!! "அ..அது.. நம்ம வனக்கொடிதான்.." என்று தடுமாற்றமாக அவர் இழுக்க, ஆதிரா உடனே திரும்பி வனக்கொடியை கேள்வியாக பார்த்தாள்..!!

திரவியத்திடம் காணப்பட்ட அதே திகைப்பு, இப்போது வனக்கொடியிடமும்..!! ஆதிராவுக்கு அவள் சொன்ன பதிலிலும் அவருடைய அதே தடுமாற்றம்..!! "அ..அது.. நேத்து மரகதம்மாவை மார்க்கெட்ல பார்த்தேன்மா.. அ..அப்படியே பேச்சுவாக்குல நீங்க ஊருக்கு வந்திருக்குறதையும் சொல்லிட்டேன்..!! சொல்லக்கூடாதுன்னு ஒன்னும் இல்லையே..??" மரகதம் என்பது திரவியத்தின் மனைவி..!! வனக்கொடியின் முகத்தில் காணப்பட்ட அந்த அவஸ்தையை.. ஆதிரா ஓரிரு வினாடிகள் சலனமில்லாமல் பார்த்தாள்..!! பிறகு.. "இ..இல்லம்மா.. அப்படிலாம் ஒன்னும் இல்ல..!! ஹ்ம்ம்ம்ம்.. சரி.. நீங்க போய் டிஃபன் ரெடி பண்ணுங்க.. போங்க..!!" என்று அவள் அமர்த்தலாக சொன்னதும், "சரிம்மா..!!" வனக்கொடி அங்கிருந்து நகர்ந்தாள்.

 "நீங்களும் இருந்து சாப்பிட்டு போங்க அங்கிள்..!!" ஆதிரா அவ்வாறு புன்னகையுடன் சொல்ல, திரவியம் இப்போது இயல்புக்கு வந்தார். "இல்லம்மா.. சாப்பிடுறதுக்குலாம் எனக்கு டைம் இல்ல.. ஃபேக்டரிக்கு கெளம்பனும்..!! திருவிழா வருது.. ஃபேக்டரியை வேற ரெண்டு நாள் க்ளோஸ் பண்றோம்.. சம்பளத்தை முன்னக்கூட்டியே குடுக்கனும்னு லேபர்ஸ்லாம் கேட்ருக்காங்க.. பணம் பட்டுவாடா பண்ணனும்.. நெறைய வேலை இருக்கு..!!

அடுத்தவாரத்துல ஒருநாள் வந்து பொறுமையா உன்கையால சாப்பிடுறேன்..!!" "அடுத்தவாரமா.. அடுத்தவாரம் நாங்க இருக்க மாட்டோமே அங்கிள்..?? அஞ்சுநாள்தான எனக்கு டைம் குடுத்திருக்காரு என் வீட்டுக்காரர்..!!" ஆதிரா சலிப்பாக சொல்ல, திரவியம் சிரித்தார். "ஹாஹா..!! ஏன்பா சிபி.. கூட நாலுநாள் இருந்துட்டு போகலாம்ல..??" என்று சிபியிடம் திரும்பி கேட்டார்.

 "என்ன ஸார் நீங்களும்..?? இந்த அஞ்சுநாள் இங்க வந்ததே மாமாக்கு தெரியாது.. தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவார்..!! இதுல இன்னும் நாலுநாளா..?? சான்ஸே இல்ல..!!" சிபி நிதானமாகவே பதில் சொன்னான். "ஹ்ம்ம்.. அகழி வந்தது அப்பாக்கு தெரியாதாம்மா..??" திரவியம் இப்போது ஆதிராவின் கண்களை கூர்மையாக பார்த்து கேட்டார். "தெ..தெரியாது அங்கிள்..!!" "ஓ.. அதுக்காகத்தான் வனக்கொடியை அப்படி மொறைச்சியா..??

நீங்க வந்திருக்குறதை எங்க நான் உன் அப்பாட்ட சொல்லிடுவேனோன்னு..??" "ஐயோ.. அப்படிலாம் இல்ல அங்கிள்..!!" ஆதிரா பதற்றமாக மறுத்தாள். "ஹாஹா.. பரவாலம்மா.. எனக்கு தெரியும்..!! ஹ்ம்ம்ம்ம்.. சரி.. நான் உன் அப்பாட்ட இதுபத்தி மூச்சு விடல.. போதுமா..??" "தேங்க்ஸ் அங்கிள்..!!" "பட்.. என்னை பொறுத்தவரை.. எதையும் மறைச்சு பண்றது அவ்வளவு நல்லதில்லைன்னு தோணுது.. நீங்களே அவர்ட்ட சொல்லிடுறது பெட்டர்..!!"

 "சொல்லலாம் அங்கிள்.. ஆனா அப்பா புரிஞ்சுக்கமாட்டாரு.. தேவையில்லாம பயப்படுவாரு.. உடனே மைசூர் கெளம்பி வான்னு சொல்லிடுவாரு..!! எனக்கு இங்க ஒரு அஞ்சாறு நாளாவது இருக்கணும்னு ஆசை அங்கிள்..!!" "எனக்கு புரியுதும்மா..!! ஆனா.. உன் அப்பாவைப் பத்திதான் உனக்கே நல்லா தெரியுமே.. அவருக்குத்தான் பொய் சொன்னாலே பிடிக்க மாட்டேன்னுதே..?? பொய் சொல்லிட்டோம்னு தெரிஞ்சா மனுஷனுக்கு அவ்வளவு கோவம் வருது..!!" "தெரியும் அங்கிள்..!!" "ரெண்டுமாசம் முன்னாடி பிசினஸ்ல ஒரு பெரிய சிக்கல்.. நாமளே சமாளிச்சிடுறது நல்லதுன்னு அவர்ட்ட ஒரு பொய் சொல்ற மாதிரி நெலமை.. வேறவழியில்லாம சொல்லிட்டேன்.. கடைசில என்னாச்சு தெரியுமா..??

போனதடவை அவர் அகழிக்கு வந்திருக்குறப்போ எனக்கும் அவருக்கும் பெரிய சண்டையே வந்துடுச்சு.. உனக்குத்தான் தெரியும்ல..??" திரவியம் இயல்பாக கேட்க, "ம்ம்..!!" அவர் எதைப் பற்றி கேட்கிறார் என்று தெரியாமலே தடுமாற்றமாக சொன்னாள் ஆதிரா. "ஹ்ம்ம்.. நான் ஏதோ அவரை ஏமாத்தி பணத்தை சுருட்டுற மாதிரி நெனச்சுட்டு இருக்காரு.. என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன்றாரு..!! எல்லாத்துக்கும் காரணம் என்னன்னா நான் சொன்ன அந்த பொய்தான்..!! அதுக்குத்தான் சொல்றேன்..!!" "புரியுது அங்கிள்.. பாத்துக்குறோம்..!!

இன்னும் நாலைஞ்சு நாள்தான..?? மைசூர் போனதும் மொதவேலையா எல்லாத்தையும் சொல்லிடுறேன்..!!" "ம்ம்.. சரிம்மா.. பாத்துக்கோ..!!" ஆதிரா இப்போது சிபியிடம் திரும்பி, "என்னங்க.. காலைல போலீஸ் ஸ்டேஷனுக்கு கால் பண்ணனும்னு சொன்னனே.. பண்ணுனிங்களா..??" என்று கேட்டாள். "இல்லடா.. இன்னும் பண்ணல..!! எழுந்ததே இப்போத்தானே..??" சிபி சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, "போ..போலீஸ் ஸ்டேஷனுக்கா..?? போலீஸ் ஸ்டேஷனுக்கு எதுக்குமா..??" என்று திரவியம் இடையில் புகுந்து கேட்டார்.

 "ஒன்னுல்ல அங்கிள்.. தாமிரா கேஸ்ல இம்ப்ரூவ்மன்ட் பத்தி தெரிஞ்சுக்கத்தான்..!!" "என்னம்மா நீ..?? இன்னுமா தாமிரா பத்திலாம் யோசிச்சுட்டு இருக்குற.. இன்னுமா அவ கெடைப்பான்ற நம்பிக்கை உனக்கு இருக்கு..?? வனக்கொடி உன்கிட்ட எதும் சொல்லலையா..??" "சொன்னாங்க அங்கிள்..!! ஆனா.. அவங்க சொன்னதை அப்படியே நம்பிட்டு சும்மா இருக்க என்னால முடியல..!!

தாமிரா கெடைப்பாளா மாட்டாளான்லாம் நான் யோசிக்கல.. ஆனா.. அவளுக்கு உண்மையில என்ன நடந்துச்சுன்னு உறுதிபண்ணிக்க ஆசைப்படுறேன்.. அவ்வளவுதான்..!!" ஆதிரா தீர்க்கமாக சொல்ல.. அவளுடைய கண்களையே சிறுது நேரம் கூர்மையாக பார்த்தார் திரவியம்..!! பிறகு நீளமாக ஒரு பெருமூச்சை உதிர்த்தவர்.. கவலை தொனிக்கிற குரலில் ஆரம்பித்தார்..!!

 "ஹ்ம்ம்ம்ம்..!! பார்த்துக்கோமா.. தாமிராவை நெனைச்சு ஏற்கனவே நீ ஒருவருஷம் ரொம்ப கஷ்டப்பட்டுட்ட..!! திரும்ப அதேநெலமைல உன்னை பாக்குறதுக்கு.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. அதான் சொன்னேன்..!! உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு.. சிபி மாதிரி ஒரு நல்லபையன் புருஷனா கெடைச்சிருக்கான்.. இந்த அகழி, குறிஞ்சி, தாமிரா.. இதெல்லாம் மறந்துட்டு நிம்மதியா.." "என்னால அப்படி இருக்க முடியல அங்கிள்..!!"

 "புரியுதுமா..!! தாமிரா போனது எங்களுக்குலாம் பழகிப்போச்சு.. பழசாய்டுச்சு..!! ஆனா.. உனக்கு அப்படி இல்ல.. உன்னை பொறுத்தவரை அது ரொம்ப புது விஷயமா இருக்கு..!! உன்னோட ஆதங்கத்துக்கும் வேகத்துக்கும் அதுதான் காரணம்..!! ஹ்ம்ம்ம்ம்.. நடந்ததை ஏத்துக்குற பக்குவம் கூடிய சீக்கிரமே உனக்கு வரணும்னு, அந்த ஆண்டவனை நான் வேண்டிக்கிறேன்..!!"

 "தேங்க்ஸ் அங்கிள்..!!" "ஹ்ம்ம்ம்ம்..!! எனிவே.. நீங்க இன்னைக்கு ஸ்டேஷன் போனாலும் இன்ஸ்பெக்டரை மீட் பண்ண முடியாது..!!" "ஏன்..??" "அவர் ஊர்ல இல்ல..!!" "உ..உங்களுக்கு எப்படி தெரியும்..??" "ஹாஹா.. எனக்கு எல்லாம் தெரியும்மா..!! நீ ஊருக்கு வந்திருக்கிறதை வனக்கொடி சொன்னமாதிரி.. அவர் ஊர்ல இல்லைன்றதையும் அவரேதான் சொன்னாரு..!! ஆக்சுவலா நானும் இன்னைக்கு வேற ஒருவிஷயமா ஸ்டேஷன் போறதா இருந்தேன்.. காலைலதான் அவரே ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னாரு..!!

நாளைக்கு இருப்பாரு.. நாளைக்கு போய் பாருங்க..!!" "ச..சரி அங்கிள்.. நாங்க அப்போ நாளைக்கே போறோம்..!!" "சரிம்மா.. எனக்கும் டைமாச்சு.. நான் அப்படியே கெளம்புறேன்..!!" "ஓ..!! ஓகே அங்கிள்..!!" "புதுசா கல்யாணமான புள்ளைகளுக்கு விருந்து வைக்கனும்னு மரகதம் ஆசைப்படுறாம்மா.. சொல்ல சொன்னா.. சொல்லிட்டேன்..!!

இருக்குற நாலஞ்சு நாள்ல ஒருநாள், எங்க வீட்டுப்பக்கமும் கொஞ்சம் எட்டிப்பாருங்க.. சரியா.. ஹாஹாஹாஹா..!!" "ஹஹா.. கண்டிப்பா அங்கிள்.. வர்றோம்..!!" திரவியத்தை வழியனுப்பி வைத்துவிட்டு ஆதிராவும் சிபியும் வீட்டுப்பக்கமாக திரும்பி நடந்தார்கள்..!! இருவரும் வீட்டுத் தாழ்வாரத்தை அடைந்து நடைபோடுகையில்.. ஆதிரா சிபியிடம் மெல்ல கேட்டாள்..!! "அப்பாவுக்கும் அங்கிளுக்கும் என்ன பிரச்சினை அத்தான்..?? எதுக்கு சண்டை போட்டாங்க..??"

 "எனக்கும் முழுசா எதும் தெரியாது ஆதிரா..!! மாமா போனதடவை அகழிலருந்து மைசூர் வந்ததும்.. இதைப்பத்தி சொல்லி பொலம்பிட்டு இருந்தாரு..!! நீயுந்தான் அப்போ கூட இருந்த.. இப்போ உனக்கு மறந்திருக்கும்னு நெனைக்கிறேன்..!!" "ஆ..ஆமா.. எனக்கு இப்போ ஞாபகம் இல்ல..!!" "ஹ்ம்ம்..!! கம்பனி அக்கவுண்ட்ஸ்ல ஏதோ மிஸ்மாட்ச் போல.. திரவியம் அங்கிள் ஏமாத்துறதா மாமாவுக்கு ஒரு டவுட்.. அவ்வளவுதான் எனக்கு தெரியும்..!!"

 "ம்ம்ம்ம்..!! ரெண்டு பேரும் எவ்வளவு க்ளோஸா இருப்பாங்க.. அவங்களுக்குள்ள சண்டைன்னா என்னால நம்பவே முடியல..!!" "என்னாலயுந்தான் ஆதிரா..!! ரெண்டு பேரும் சண்டை போட்டாங்கன்னு தெரிஞ்சு மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது..!! பட்.. என்ன பண்றது.. பிசினஸ்ல இந்த மாதிரி மிஸ்-அண்டர்ஸ்டாண்டிங் வர்றது சகஜம்தான்.. கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாயிடும்னு நம்புவோம்..!!"

 


ம்ம்..!!" பேசிக்கொண்டே இருவரும் ஹாலுக்குள் நுழைந்தார்கள்.. அவ்வாறு நுழைந்ததுமே ஆதிராவின் பார்வையை அந்தப்பொருள் வசீகரித்தது..!! ஹாலின் ஒருமூலையில் அந்த மூன்றடி உயர மரஅலமாரி.. அதன்மேலே அழகுற வீற்றிருந்த, முன்பு தாமிரா ஆசையாக பராமரிக்கிற, இப்போது வனக்கொடியின் கடமையாகிப் போய்விட்ட, வண்ணமீன்கள் நீந்துகிற அந்த கண்ணாடி மீன்தொட்டி.. அதனருகே தங்கநிற ஜிகினாத்தாளை சுற்றிக்கொண்டு காட்சியளித்த அந்த அன்பளிப்பு அட்டைப்பெட்டிதான் ஆதிராவின் கவனத்தை கவர்ந்த அந்தப்பொருள்..!!

 "எ..என்னத்தான் இது.. கிஃப்ட் பாக்ஸ்லாம்..??" "அதுவா.. அது திரவியம் அங்கிள் கொண்டுவந்தது.. நமக்கு ஏதோ ப்ரசன்ட்டாம்..!!" "ஓ.. என்ன இருக்கு அதுக்குள்ள..??" "ஹஹா.. எனக்கு தெரியலம்மா.. நீயே பிரிச்சுப்பாரு..!!" சிரிப்புடன் சொல்லிவிட்டு சிபி அங்கிருந்து நகர, ஆதிரா அந்த ஜிகினா பெட்டியை திரும்பி பார்த்தாள்..!!

அவ்வாறு பார்க்கும்பொழுதே.. ஆறேழு வருடங்களுக்கு முன்பாக.. அதே இடத்தில் காட்சியளித்த.. இதே திரவியம் வாங்கிவந்திருந்த அந்த அன்பளிப்புப்பெட்டி.. இப்போது ஆதிராவின் மனக்கண்ணில் தோன்றியது.. பழைய நினைவொன்றில் மூழ்க ஆரம்பித்தாள்..!! திரவியத்தின் ஒரே மகன் அப்போதே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டிருந்தான்..!! மனைவியுடன் அமெரிக்கா சென்று அவனை பார்த்து திரும்பிய திரவியம்.. இந்தியா வருகையில் அப்படியே தணிகை நம்பிக்கென அன்பளிப்பாக ஒரு பொருளை வாங்கி வந்திருந்தார்..!!

அந்தப்பொருளும் இந்தமாதிரிதான் மினுமினுப்புத்தாள் சுற்றப்பட்டு இதே இடத்தில் வைக்கப்பட்டிருந்தது..!! "என்ன வாங்கிட்டு வந்திருக்கான்னு தெரியல.. நீங்களே பிரிச்சு பாருங்க..!!" தணிகைநம்பியும் சிபி மாதிரியே சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்..!! பாவாடை சட்டையில் இருந்த தாமிராவும், ரெட்டை ஜடை போட்டிருந்த ஆதிராவும்.. ஆவலாக அந்தப்பெட்டியை நோக்கி ஓடினார்கள்..

ஆசையாக அதன் உறையை கிழித்து எறிந்தார்கள்.. ஆர்வமாக அதனுள்ளே பார்வையை வீசினார்கள்..!! உள்ளே அந்த புத்தம்புது நோக்கியா செல்ஃபோன்..!! ஆதிரா அப்போது கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று கொண்டிருந்தாள்.. தாமிரா உயர்நிலைப்பள்ளியில் இறுதியாண்டு..!! அப்போதெல்லாம் செல்ஃபோன் புரட்சி ஏற்பட்டிருக்காத சமயம்.. அகழியிலும் செல்ஃபோன் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.. அவையும் கருப்புவெள்ளை திரையும், கனமான எடையும் கொண்ட செங்கற்கட்டிகளாகவே இருக்கும்..!!

ஆதிராவும், தணிகைநம்பியும்கூட அப்போது அந்தமாதிரி ஆளுக்கொரு செல்ஃபோன்கள் வைத்திருந்தனர்.. தாமிராவிடம் அதுவும் கிடையாது..!! திரவியம் அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்திருந்த இந்த புது செல்ஃபோனோ.. கலர் டிஸ்ப்ளேயுடன் கவர்ச்சியாக காட்சியளித்தது.. ஸ்லைட் வடிவமைப்புடன் ஸ்டைலாக பளபளத்தது.. FM, MP3 சப்போர்ட் எல்லாம் உண்டு.. முன்னொன்றும் பின்னொன்றுமாக இரண்டு கேமராக்கள் உண்டு..!! ஆதிராவுக்கும் தாமிராவுக்கும் அந்த மாதிரியொரு சூழலிலும் பருவத்திலும்.. அந்த செல்ஃபோனைப் பார்த்து ஒரு ஈர்ப்பு வந்ததில் ஆச்சர்யம் எதுவுமில்லை..!!
"வாவ்..!! சூப்பரா இருக்குதுக்கா.. அப்பாட்ட சொல்லிட்டு இதை நானே வச்சுக்கப் போறேன்..!!" "ஹேய் ப்ளீஸ்டி.. நான் வச்சுக்குறேன்டி.. நீ என் செல்ஃபோனை எடுத்துக்கோ.. ஓகேவா..??" "ஐயே.. உன் ஓட்டை ஃபோன் யாருக்கு வேணும்..?? எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு.. என் ரேஞ்ச்க்குலாம் இதுதான் சூட் ஆகும்..!!" "ப்ச்.. நீ இதை வச்சு என்ன பண்ணப்போற..?? நானாவது சாங்க்ஸ்லாம் கேட்பேன்..!!"

 "ம்க்கும்.. காலேஜ்ல போய் நல்லா ஸீன் போடுவேன்னு சொல்லு..!! உனக்கு சாங்க்ஸ்னா எனக்கு கேமரா.. நம்ம ஊரோட அழகைலாம் அப்படியே சுட்டுத்தள்ளப்போறேன்..!!" "சொன்னா கேளுடி.. அக்காக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ப்ளீஸ்..!!" "தேவையில்லாம கெஞ்சிட்டு இருக்காத.. நான் முடிவு பண்ணிட்டேன்.. எனக்குத்தான் இது..!!" தாமிரா அலட்சியமாக சொல்ல, ஆதிரா அவளையே எரிச்சலாக முறைத்தாள். பிறகு, "போடி.. நான் அப்பாட்டயே கேட்டுக்குறேன்..!!" என்றுவிட்டு அவசரமாக அப்பாவின் அறைக்கு விரைந்தாள்..

ஓரிரு வினாடிகள் கழித்தே சுதாரித்துக்கொண்ட தாமிராவும் அவளுக்கு பின்னால் ஓடினாள்..!! முதலில் யார் சென்று அப்பாவிடம் முறையிடுவது என்று இருவருக்கும் போட்டி.. மாடிப்படிகளில் ஒரு ஓட்டப்பந்தயம்..!! மூச்சிரைக்க ஓடிச்சென்று தணிகைநம்பியிடம் இருவரும் முறையிட்டார்கள்.. அவரோ தாமிராவுக்குத்தான் சாதகமாக பேசினார்..!! "தாமிராவே வச்சுக்கட்டும்மா.. அவகிட்டத்தான ஃபோனே இல்ல..!!"

 "அதான் என் ஃபோனை அவளுக்கு தர்றேன்னு சொல்றேன்ல..??" "போடி.. எனக்கு இந்த ஃபோன்தான் வேணும்..!!" மல்லுக்கு நின்றனர் இருவரும்..!! மகள்களின் கூச்சலில் எரிச்சலான தணிகைநம்பி, "அடடடடா.. சின்னப்புள்ளைங்க மாதிரி சண்டை போடாதீங்க..!!" என்றவர் ஆதிராவிடம் திரும்பி, "இங்கபாரு ஆதிரா.. உன் தங்கச்சி சரின்னு சொன்னான்னா நீ வச்சுக்கோ.. இல்லன்னா அவகிட்டயே குடுத்திடு.. அவ்வளவுதான்.. போங்க ரெண்டு பேரும்.. வேலை இருக்கு எனக்கு..!!" என்று தனது இறுதிமுடிவை சொன்னார்.

ஆதிராவின் முகம் இப்போது பட்டென வாடிப்போனது. தாமிராவை பரிதாபமாக ஏறிட்டாள். "ப்ளீஸ்டி..!!" என்று கடைசியாக ஒருமுறை கெஞ்சிப்பார்த்தாள்..!! ஏக்கமும், ஏமாற்றமும் கொப்பளித்த அக்காவின் முகத்தைப் பார்க்க, தாமிராவுக்கு இப்போது பாவமாக இருந்தது..!! அப்படியே உருகிப்போனாள்..

அத்தனை நேரம் அந்த செல்ஃபோன் மீது அவள் வளர்த்திருந்த ஆசையும் அவளுடன் சேர்ந்து உருகிக் கரைந்தது..!! ஆதிராவையே ஓரிரு வினாடிகள் சலனமில்லாமல் பார்த்த தாமிரா.. பிறகு உதட்டில் ஒரு குறும்புப்புன்னகையை கசியவிட்டவாறு, கைகள் இரண்டையும் முகத்திற்கு முன்பாக உயர்த்தி, கைகளின் இடைவெளியில் கண்சிமிட்டியவாறு கேட்டாள்..!! "Game or Shame..??"


தாமிரா அவ்வாறு கேட்டதுமே ஆதிராவின் முகத்தில் சட்டென ஒரு மலர்ச்சி.. இதுவரை நடந்த அனைத்து போட்டிகளையும் அவள்தான் வென்றிருக்கிறாள் என்கிற தைரியத்தில் பிறந்த மலர்ச்சி அது..!!

 "Game..!!!!" என்று உற்சாகமாக கத்தினாள். பழைய நினைவுகளில் இருந்து மீண்ட ஆதிரா.. இப்போது கையிலிருந்த இந்த கிஃப்ட்பாக்ஸை திறந்து பார்த்தாள்..!!

உள்ளே ஒரு நகைப்பெட்டி இருந்தது.. இதயவடிவிலான இரட்டை பதக்கங்கள்.. தங்கத்தால் வார்க்கப்பட்ட தளப்பரப்பு.. அதன்மேல் பதிக்கப்பட்ட சிறுசிறு சிவப்பு கற்கள்.. அழகாக ஜொலித்தன இரண்டு பதக்கங்களும்..!! கணவன் மனைவி இருவரும் ஆளுக்கொன்றாய்.. அவர்களது கைச்சங்கிலியிலோ கழுத்து சங்கிலியிலோ.. இணைத்துக் கொள்கிற மாதிரியான இரட்டை பரிசுப்பொருட்கள்..!!

ஆதிராவுக்கு மிகவும் பிடித்திருந்தது.. கணவனிடம் அவற்றை காட்டுகின்ற ஆர்வத்துடன்.. "என்னங்க.." என்றழைத்தவாறே படிக்கட்டை நோக்கி நடந்தாள்.அன்று மதிய உணவு அருந்திய பிறகு.. 'ஒரு குட்டித்தூக்கம் போடப்போறேன்' என்றுவிட்டு படுக்கையில் விழுந்த சிபி.. மாலை நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை.. ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்து போயிருந்தான்..!! புத்தகம் புரட்டிக்கொண்டிருந்த ஆதிராவுக்கு போரடிக்கவே.. வெளியில் சற்று உலாவி வரலாம் என்ற எண்ணத்துடன்.. படியிறங்கி ஹாலுக்குள் பிரவேசித்தாள்.. வாசல் திறந்து வீட்டினின்று வெளிப்பட்டாள்..!!

 ஐந்துமணிதான் ஆகியிருக்கும்.. அதற்குள்ளாகவே வெளியே இருள்கவிழ்ந்து வெளிச்சம் குறைந்திருந்தது.. வளிமண்டலத்தில் பரவியிருந்த பனிப்படலம் தெளிவாகவே பார்வைக்கு புலப்பட்டது..!! சுற்றிலும் பச்சைப்பசேலென புல்வெளியும், குற்றுச்செடிகளும்.. சிலுசிலுவென வீசிய காற்றில் ஜில்லென்று ஒரு குளிர்ச்சி..!! சூழலில் ஒரு அடர் நிசப்தம்.. அந்த நிசப்தத்தை கிழிக்கிற மாதிரி.. அவ்வப்போது சீரான இடைவெளியில் ஒலித்த தூரத்து இரும்புப்பட்டறையின் சம்மட்டி சப்தம்..!!

 "டங்ங்ங்.. டங்ங்ங்.. டங்ங்ங்..!!" புல் வளர்ந்திருந்த மண்சரிவில் இறங்கி.. வீட்டுக்கு முன்பாக ஓடிய குழலாற்றை அடைந்தாள் ஆதிரா..!! உறுமீன் வருவதற்காய் காத்திருந்த இரண்டு கொக்குகள்.. ஆதிராவின் உருவம் கண்டதும் சிறகடித்து பறந்தோடின..!! ஆற்றங்கரையின் ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த.. மரத்தாலான சாய்விருக்கையில் வசதியாக அமர்ந்து கொண்டாள்..!! அமைதியாக ஓடிக்கொண்டிருந்த குழலாற்றை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்..!!

 "வா வா வா.. குறிஞ்சி ஆத்துக்குள்ளதான் படுத்திருக்கா.. கூப்பிடுறா உன்னை.. ஓடி வா..!! ஹாஹாஹா..!!" ஆதிராவின் காதுகளுக்குள் தாமிராவின் குரலும்,சிரிப்பும் க்றீச்சிட்டன.. நெற்றியில் ஒரு சுருக்கமெழ, இமைகளை இறுக்கி மூடிக்கொண்டாள்..!! ஒருசில வினாடிகளுக்கு பிறகு விழிகளை திறந்தவள்.. தூரமாக ஆற்றின் அடுத்தகரையில் தெரிந்த அந்த உயரமான மரத்தை பார்த்தாள்..!! மூளைக்குள் மீண்டும் தாமிராவின் நினைவுகள் முளைவிட்டன..!!

 ஆதிராவும் தாமிராவும் செல்ஃபோனுக்காக சண்டையிட்டுக்கொண்ட அன்று.. சிறிது நேரத்தில் இந்த ஆற்றங்கரையில்தான் இருவரும் வந்து நின்றிருந்தனர்..!!
"இங்க எதுக்குடி கூட்டிட்டு வந்திருக்குற..??" ஆதிரா தங்கையிடம் கேட்டாள். "கேம் ஆடுறதுக்குத்தான்..!!" தாமிரா கேஷுவலாக சொன்னாள். "இங்கயா.. இங்க என்ன கேம்..??" "ஹ்ம்ம்.. அதோ.. அந்த மரம் தெரியுதுல..??" "ஆமாம்..!!" "அதைப்போய் மொதல்ல யார் தொடுறாங்களோ.. அவங்களுக்குத்தான் அந்த செல்ஃபோன்..!!" "அ..அதையா.. அதை எப்படி..??" "ம்ம்ம்ம்..?? ஆத்துல நீந்தி அந்தக்கரைக்கு போய் தொடணும்..!!" தாமிரா கூலாக சொல்ல, ஆதிராவிடம் பட்டென ஒரு பதட்டம்..!!

குழலாற்றின் அடிப்பரப்பில்தான் குறிஞ்சி துயில் கொண்டிருக்கிறாள் என்பது அகழிமக்களின் அமானுஷ்ய நம்பிக்கை.. அதனால் ஏற்பட்டதுதான் ஆதிராவின் அந்த பதட்ட மும்..!! "ஐயையோ.. ஆத்துல எறங்கனுமா.. நா..நான் மாட்டேன்பா..!!" "ஏன்.. ஆத்துல எறங்கினா என்னவாம்..??" "எறங்க மாட்டேன்னா எறங்க மாட்டேன்.. அவ்வளவுதான்..!! நீ வே..வேற ஏதாவது கேம் இருந்தா சொல்லு..!!"

 "ஹாஹா.. பயந்தாங்கொள்ளி பயந்தாங்கொள்ளி.. தொடைநடுங்கி.. புள்ளப்பூச்சி..!!" "ப்ச்.. பயம்லாம் ஒன்னும் இல்லடி..!!" "அப்புறம் என்ன..?? வா..!! அந்த குறிஞ்சியா நாமளான்னு இன்னைக்கு ஒரு கை பாத்துடலாம்..!!" கண்சிமிட்டிய தாமிரா இப்போது ஸ்கர்ட்டை கழட்டி வீசி, ஷார்ட்சுடன் நின்றாள். "வேணான்டி..!!" ஆதிரா கெஞ்சினாள். "செல்ஃபோன் வேணும்னா வா.. ஷேம் ஷேம்னு நான் கேலி பண்ணனும்னா இங்கயே நில்லு..!!" சொன்ன தாமிரா, அக்காவின் பதிலுக்கு காத்திராமல் ஆற்றை நோக்கி ஓடினாள். "ஹேய்.. நில்லுடிஈஈ..!!" ஆதிரா கையுயர்த்தி கத்தினாள். "வா வா வா.. குறிஞ்சி ஆத்துக்குள்ளதான் படுத்திருக்கா.. கூப்பிடுறா உன்னை.. ஓடி வா..!! ஹாஹாஹா..!!"

 சிரித்துக்கொண்டே ஓடிப்போய் ஆற்றுக்குள் தொப்பென்று விழுந்தாள் தாமிரா..!! செல்ஃபோன் கவர்ச்சியால் துணிச்சல் பெற்ற ஆதிராவும்.. இப்போது செருப்பை உதறி வீசிவிட்டு ஓடினாள்.. அவசரமாய் ஓடி ஆற்றுநீரை கிழித்துக்கொண்டு விழுந்தாள்..!! அழகு உருக்கொண்ட ஆறறிவு மீன்களாக.. அக்காவும் தங்கையும் ஆற்றில் நீச்சலடித்தனர்..!! தூரத்தில் தெரிந்த மரத்தை கூர்மையாக பார்த்தவாறே தீவிரமாக கால்களை உதைத்தாள் ஆதிரா.. பக்கவாட்டில் தெரிந்த அக்காவை அன்பொழுக பார்த்தவாறே சோர்வாக கைகளை வீசினாள் தாமிரா..!!

ஆதிராவுக்கு சந்தேகம் வராதமாதிரி, தாமிரா மெல்ல மெல்ல தனது வேகத்தை குறைத்துக்கொள்ள.. ஆதிராவே முதலில் அடுத்தகரை ஏறினாள்.. ஏறியவேகத்தில் ஓடிச்சென்று அந்த மரத்தை தொட்டாள்..!! "ஹைய்ய்ய்..!! நான் ஜெயிச்சுட்டேன்ன்ன்.. எனக்குத்தான் அந்த செல்ஃபோன்ன்ன்..!!" குழந்தையாய் குதுகளித்தாள் அக்கா. "ச்ச.. இந்தவாட்டியும் நீயே ஜெயிச்சுட்ட.. போடீ..!!" போலியாக சலித்துக்கொண்டாள் தங்கை. வீட்டுக்கு திரும்பிய ஆதிரா.. மிக உரிமையாக சென்று அந்த செல்ஃபோனை கைப்பற்றிக்கொண்டாள்..!!

அன்றிரவு படுக்கையில் விழுந்து நெடுநேரமாகியும்.. அந்த செல்ஃபோன் பட்டன்களையே திரும்ப திரும்ப அழுத்திக் கொண்டிருந்தாள்..!! ஆதிராவின் முகத்தில் காணப்பட்ட அந்த சந்தோஷமும், பூரிப்பும்.. அதைவிட பலமடங்காக அவளுக்கு அருகே படுத்திருந்த தாமிராவின் மனதுக்குள்..!! ஆதிராவுக்கு அந்த செல்ஃபோனை மிகவும் பிடித்துப் போனது.. எந்த நேரமும் அதை கையில் தூக்கிக்கொண்டே அலைவாள்.. பத்திரமாக பார்த்துக்கொள்வாள்..!! ஆறு வருடங்களாகி அந்த செல்ஃபோன் அரதப்பழசாகிப் போனபிறகும்கூட.. அதையேதான் தொடர்ந்து உபயோகித்துக் கொண்டிருந்தாள்..!!

தாமிராவின் தந்திரத்தால் ஆதிராவிடம் அந்த செல்ஃபோன் மீது ஏற்பட்ட பற்றுதலும், உரிமையுணர்வும்தான் அதற்கு காரணம்..!! ஆற்றங்கரையில் அமர்ந்து தங்கையின் நினைவுகளில் ஆதிரா மூழ்கியிருந்த சமயத்தில்தான்.. எங்கிருந்து வந்ததென்றே தெரியாமல் திடீரென அவளுக்கெதிரே வந்துநின்றது அந்த முயல்..!! கையில் ஏதோ ஒரு சிவப்புநிற பழத்தை வைத்துக்கொண்டு.. எதிரேயிருந்த ஆதிராவையே குறுகுறுவென பார்த்தது..!! வெள்ளை வெளேரென்ற மேனி வண்ணத்துடன்.. புஸுபுஸுவென்று மிருதுவான தேக ரோமத்துடன்.. மிக அழகாக நின்றிருந்தது அந்த முயல்..!!

அதைப் பார்த்ததுமே ஆதிராவின் மனதுக்குள் ஒரு ஐந்துவயது குழந்தை பிறப்பெடுத்தாள்..!! "ஹாய்ய்ய்ய்..!!!" என்று மலர்ந்த முகத்துடன் அழைத்துக்கொண்டே, எட்டி அந்த முயலை பிடிக்க முயன்றாள்.. அவளுடைய பிடியில் சிக்காமல் அந்த முயல் வெடுக்கென்று ஓடியது.. சிறிது தூரம் ஓடிச்சென்று திரும்பி நின்று இவளை பார்த்தது.. கையில் இருந்த பழத்தை கொறித்தது..!!

இப்போது ஆதிராவுக்குள் ஒரு குழந்தைத்தனமான குறுகுறுப்பு.. அந்த முயலை பிடித்து கொஞ்சவேண்டும் என்று ஒருவித உந்துதல்..!! இருக்கையில் இருந்து எழுந்து அந்த முயலை நோக்கி சென்றாள்.. இவள் நெருங்கவும் அந்த முயல் ஓட்டமெடுக்க ஆரம்பித்தது.. புல்வெளி சரிவில் ஏறி தாவித்தாவி ஓடியது.. ஆதிராவும் அவசரமாக மேலேறினாள்..!! சமவெளியை அடைந்த முயல் வீட்டை நோக்கி குதித்தோடியது.. சற்றும் சளைக்காத ஆதிரா அதன்பின்னே தொடர்ந்து ஓடினாள்..!!

பச்சை பசலேன்ற புல்நிலம்.. அதில் தாவித்தாவி ஓடுகிற வெண்முயல்.. அம்முயலை விரட்டி பின்செல்கிற ஆதிரா..!! முயலின் ஓட்டத்துக்கு ஆதிராவால் ஈடுகொடுக்க முடியவில்லை.. முந்திச்சென்ற முயல் படியேறி வீட்டுக்குள் நுழைந்துவிட்டது..!! அதைப்பார்த்த ஆதிராவிடம் ஒரு சிறிய ஆச்சரியம்.. ஒருகணம் தயங்கிநின்றவள் பிறகு மீண்டும் ஓடினாள்.. படியில் ஏறி வாசற்கதவை அகலமாக திறந்தாள்.. உள்ளே பார்வையை வீசினாள்..!! அவ்வளவு பெரிய வீட்டில்.. ஆங்காங்கே மரத்தூண்கள் நிற்கிற விஸ்தாரமான அந்த ஹாலின் மையத்தில்.. தனியாக, தூரமாக காட்சியளித்தது அந்த முயல்..!!

இரண்டு கால்களை தரையில் ஊன்றி.. இரண்டு கால்களை மேலே தூக்கி வைத்துக்கொண்டு.. வீட்டு வாசலை உர்ரென பார்த்தவாறே நின்றிருந்தது..!! ஆதிரா வாசலில் வந்து நின்றதுமே.. என்னவோ இவளுடைய வருகைக்காகத்தான் காத்திருந்தமாதிரி.. மீண்டும் வீட்டுக்குள் விருட்டென ஓட ஆரம்பித்தது..!! ஆதிராவும் இப்போது மார்புகுலுங்க அதன் பின்னால் ஓடினாள்..!! "ஹேய்ய்ய்...!!! நில்லு..!!!!!" வாய்விட்டே கத்தினாள்..!! உள்ளே ஓடிய முயல்.. வீட்டின் இன்னொரு மூலையில் இருந்த அந்த அறையை அடைந்தது.. குறுகலாக தெரிந்த கதவிடுக்கின் வழியாக அறைக்குள் புகுந்துகொண்டது..!!

 ஆதிரா மூச்சிரைக்க அந்த அறைமுன் வந்து நின்றாள்.. இரண்டு கைகளாலும் கதவினை உட்புறமாக தள்ளினாள்..!! "க்க்கிர்ர்ர்ர்ர்ர்ர்..!!!" என்ற சப்தத்துடன் கதவு திறந்துகொண்டது. அது ஏதோ பழைய பொருட்களை அடைத்துவைக்கிற அறை.. உள்ளே ஒரே இருட்டாக இருந்தது.. காற்றில் ஒரு புழுங்கல் நெடி..!! 'இதுக்குள்ள ஓடிப்போயிடுச்சே இந்த முயலு.. ச்ச..' என்று சலிப்பை உதிர்த்தாள் ஆதிரா..!! அறைக்குள் நுழைந்தவள் சுவற்றில் கைவைத்து தேய்த்து மின் ஸ்விட்ச்சை அழுத்தினாள்.. இருட்டு அகலவில்லை.. விளக்கு எரியவில்லை.. ஃப்யூஸ் ஆகியிருக்கவேண்டும்..!!

'என்ன செய்வது' என்று அவள் ஒருகணம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே.. வாசலுக்கருகே நின்றிருந்த பெட்டகத்தின் மேலிருந்த அந்த தீப்பெட்டி அவளுடைய பார்வையில் பட்டது..!! "ச்சரக்க்க்...!!" தீப்பெட்டி திறந்து ஒரு தீக்குச்சி கிழித்து பற்றவைக்க.. அறைக்குள் இப்போது சிறிய அளவில் ஒரு வெளிச்சம்..!! அந்த வெளிச்சத்துடனே மெல்ல அறைக்குள் அடியெடுத்து வைத்தாள் ஆதிரா..!!

மசமசப்பான வெளிச்சத்திலேயே அந்த முயலை அப்படியும் இப்படியுமாய் தேடினாள்.. அது ஏதாவது இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொள்ளக்கூடாதே என்கிற கவலை வேறு..!! இருட்டுக்குள் தட்டுத்தடுமாறி அவள் நடந்துகொண்டிருக்க.. படக்கென அவளது முகத்துக்கு முன்னே அந்த மரச்சிலையை தோன்றவும்.. பக்கென ஒருகணம் அதிர்ந்துபோனாள்.. அதே நேரம் தீக்குச்சி வேறு தீர்ந்து அவளுடைய விரலைச்சுட.. "ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..!!" கையை வெடுக்கென உதறினாள்.. எரிகிற விரலை வாயில் வைத்து எச்சில் பூசிக்கொண்டாள்..!!
"ச்சரக்க்க்...!!" மீண்டும் ஒரு தீக்குச்சி பற்றவைத்துக்கொண்டு அறைக்குள் மேலும் முன்னேறினாள்.. உள்ளேயிருந்த பொருட்கள் எல்லாம் இப்போது மங்கலாக புலப்பட்டன.. உடைந்த கட்டில் நாற்காலிகள், துருப்பிடித்த இரும்பு உபகரணங்கள், சிதைந்துபோன ரப்பர் குழாய்கள், காலியான அட்டைப் பெட்டிகள்..!! கையில் தீக்குச்சி வெளிச்சத்துடன் அப்படியே உடம்பை மெல்ல சுழற்றினாள் ஆதிரா.. சுற்றிலும் அடர் இருட்டு.. அவள் நின்றிருந்த இடத்தில் மட்டும் சொற்ப வெளிச்சம்..!!

அந்த வெளிச்சம் மெல்ல மெல்ல அந்த அறைக்குள் நகர.. இருள் அப்பியிருந்த ஒரு மூலையில்.. இப்போது இரண்டு சிவப்பு விளக்குகள் பளிச்சென்று மின்னின..!! "ஆஆஆவ்வ்வ்..!!" முதுகுத்தண்டு சட்டென சில்லிட்டுப்போக.. ஆதிரா வாய்விட்டே கத்திவிட்டாள்..!! ஆதிரா அவ்வாறு கத்தியதும்.. அறைக்குள் இருந்த பொருட்களை எல்லாம் தடதடவென உருட்டிக்கொண்டு ஓடியது அந்த முயல்..!!

இருட்டுக்குள் செந்நிறத்தில் மின்னியது அந்த முயலின் கண்கள்தான் என்பதை.. ஓரிரு வினாடிகள் கழித்துதான் ஆதிரா உணர்ந்துகொண்டாள்..!! அதை உணர்ந்து அவள் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கையிலேயே.. அந்த முயல் சுவற்றோடு ஒட்டி நின்ற மரஅலமாரியின் இடுக்கில் சென்று மறைந்தது..!!

உள்ளே சென்ற வேகத்தில்.. "க்க்கீச்ச்..!!" என்று ஈனஸ்வரத்தில் சப்தம் எழுப்பியது. ஆதிராவிடம் இப்போது ஒரு பதைபதைப்பு.. அலமாரியின் நெருக்குதலில் இருந்து அந்தமுயலை விடுவிக்கவேண்டும் என்று அவளுக்குள் ஒரு உந்துதல்.. வெளிச்சம் தீர்ந்த தீக்குச்சியை வீசியெறிந்துவிட்டு ஓடினாள்..!! இருளுக்குள் தெரிந்த அலமாரியின் பிம்பத்தை நெருங்கினாள்.. அதை நகற்ற முயன்றாள்.. முடியவில்லை.. கடினமாக இருந்தது..!!

அப்படியே கால்களை மடக்கி தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள்.. ஒருகையை மட்டும் அலமாரியின் பக்கவாட்டில் நீட்டி.. அப்படியே இருட்டுக்குள் தடவி தடவி.. அலமாரிக்கும் சுவற்றுக்கும் இருந்த குறுகலான இடைவெளியில் கையை நுழைத்தாள்.. இப்படியும் அப்படியுமாய் மெல்ல துழாவினாள்.. அந்த முயல் அகப்படுகிறதா என்று பார்த்தாள்..!!

 அவளுடைய விரல்களில் ஏதோ வழுவழுப்பாய் தட்டுப்பட்டது.. கையை சுருக்கி அதை கப்பென பற்றிக்கொண்டாள்..!! 'இது முயல் இல்லையே' என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே.. 'க்க்கீச்ச்.. க்க்கீச்ச்..!!' என்று வாசலில் ஒரு சப்தம்..!! அத்தனை நேரம் அவளை அலையவிட்ட அந்த முயல்.. இப்போது அறையை விட்டு வெளியேறி, வராண்டாவில் துள்ளிக்குதித்து ஓடிக்கொண்டிருந்தது..!!

 அந்தமுயலுக்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிந்ததும் ஆதிராவிடம் ஒரு நிம்மதி.. கையை அலமாரிக்கு பின்புறமாக செருகியிருந்தவளிடம், மெலிதான ஒரு புன்னகை..!! ஓரிரு வினாடிகள் அப்படியே அமர்ந்திருந்தவள்.. அப்புறம் கையை மெல்ல வெளியே இழுத்தாள்.. அந்தக்கை பற்றியிருந்த பொருளும் அதனுடன் வெளியே வந்தது.. அது என்ன பொருள் என்பது இருட்டுக்குள் தெளிவாக புலப்படவில்லை..!!

 "ச்சரக்க்க்...!!" ஆதிரா மீண்டும் ஒரு தீக்குச்சி உரசினாள்.. அதன் வெளிச்சத்தில் கையோடு வந்த பொருள் மீது ஆர்வமாக பார்வையை வீசினாள்..!! அது.. ஒரு மர பொம்மை.. சிறுவயதில் ஆதிராவும் தாமிராவும் பந்தயப் பொருளாக வைத்து விளையாண்ட அதே மாத்ரியோஷ்கா மர பொம்மை..!!! கையில் அந்த பொம்மையுடனேதான் ஆதிரா அறையில் இருந்து வெளிப்பட்டாள்..!! அவளும் தாமிராவும் பெரியவர்களான பிறகும்கூட.. அந்த பொம்மையை அவர்கள் அறையிலேயே ஒரு அலங்காரப் பொருளைப்போல வைத்திருந்தது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது..!!

வேண்டாத பொருட்களை அடைத்து வைக்கிற அந்த அறைக்கு இந்த பொம்மை எப்படி சென்றிருக்கக்கூடும் என்ற யோசனையுடனேதான் மாடிப்படியேறினாள்..!! அவர்களுடைய குடும்பம் மைசூருக்கு சென்றபிறகு.. அவர்களுடைய அறையை சுத்தம் செய்த வனக்கொடி.. அந்த அறையில் இந்த பொம்மையை போட்டிருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்..!! மாடியில் இருக்கிற அவர்களது அறைக்கு ஆதிரா திரும்பியபோது.. சிபி அங்கே இல்லை.. உறங்கி எழுந்திருந்தவன் வேறெங்கோ சென்றிருந்தான்..!! ஆதிரா படுக்கையில் சென்று அமர்ந்தாள்..

சில வினாடிகள் அந்த பொம்மையையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.. சிறுவயது நினைவுகள் எல்லாம் அவளுடைய மனதில் எழுந்தன..!! பிறகு அவளுக்குள் ஏதோ ஒரு உந்துதல் ஏற்பட.. அந்த பொம்மையை திருகி திறந்தாள்.. உள்ளே இருந்த பொம்மைகளை ஒவ்வொன்றாக திறந்து அதற்குள்ளிருந்த பொம்மையை வெளியே எடுத்தாள்..!!

 ஏழாவது பொம்மையை திறந்தபோதுதான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள்.. அதற்குள்ளே இருக்கவேண்டிய, எல்லாவாற்றிலும் மிகச்சிறிய எட்டாவது பொம்மையை காணவில்லை.. அதற்கு பதிலாக உள்ளே வேறொன்று இருந்தது.. ஒரு கம்ப்யூட்டர் மெமரி சிப்..!!


ஆதிரா ஆச்சர்யப்பட்டுப் போனாள்.. சிறிது நேரம் அந்த சிப்பையே வித்தியாசமாக பார்த்தாள்..!! 'இதை யார் இதற்குள் வைத்திருப்பார்கள்..?' என்று யோசித்துப் பார்த்தால்.. தாமிராவை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று தோன்றியது..!!

அதே நேரம்.. அந்த சிப்புக்குள் என்ன ஒளிந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்கிற ஆர்வமும்.. அவளுக்குள் உடனே தோன்றியது..!! பட்டென படுக்கையில் இருந்து எழுந்தாள்.. டேபிளில் இருந்த சிபியின் லேப்டாப்பை கையில் எடுத்தாள்..!!

மீண்டும் மெத்தையில் வந்து அமர்ந்தவள், லேப்டாப்பை திறந்து ஆன் செய்தாள்.. அதன் பக்கவாட்டில் மெமரி சிப்பை செருகி, அதில் சேகரிக்கப்பட்டிருந்த டேட்டாவை லேப்டாப் திரையில் பார்த்தாள்..!! 'PRIVATE' என்கிற பெயருடன் ஒரே ஒரு zip file மட்டுமே அந்த மெமரி சிப்பில் இருந்தது..!! அதை திறந்து பார்க்க முயன்றபோது.. "Please enter the password" என்று கேட்டது. ஆதிராவின் முகத்தில் சட்டென்று ஒரு ஏமாற்றம்..!! '

என்ன பாஸ்வேர்ட் வைத்திருப்பாள்' என்று மோவாயைக் கீறி யோசித்தாள்.. 'அதுவாக இருக்கும், இதுவாக இருக்கும்' என்று அவளுக்கு தோன்றிய நான்கைந்து வார்த்தைகளை முயன்று பார்த்தாள்..!! அவளுடைய முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.. அந்த file-ஐ திறக்க முடியவில்லை..!!

 என்ன செய்யலாம் என்று சிறிது நேரம் யோசித்தாள்.. அப்புறம் யோசனை எதுவும் தோன்றாமல் போகவே, சலிப்புடன் லேப்டாப்பை மூடி வைத்தாள்..!! அந்த மெமரி சிப்பை மட்டும்.. டேபிள் ட்ராவில் பத்திரப்படுத்திக் கொண்டாள்..!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக