நெஞ்சோடு கலந்திடு - பகுதி - 7

திவ்யாவுக்கு அங்கே நிற்பது பிடிக்கவில்லை. அந்த சூழ்நிலையை தவிர்த்துவிட வேண்டும் என்று எண்ணினாள். அவசரமாக அறை வாசலை நோக்கி ஓடினாள். திவ்யாவின் எண்ணம் சித்ராவுக்கு உடனே புரிந்து போனது. அவளும் வேகமாக குறுக்கே நகர்ந்து, 'நில்லுடி...!!' என்று கோபமாக கத்தியவாறு, திவ்யாவின் இடது கையை எட்டிப் பிடித்தாள். இழுத்து அவளை மீண்டும் அறைக்குள்ளேயே தள்ளினாள். உள்ளே தள்ளப்பட்ட திவ்யா தடுமாறிப் போனாள். கால்கள் இடற, மெத்தையிலே சென்று பொத்தென்று அமர்ந்தாள். அமர்ந்தவள், சித்ராவின் முகத்தை ஏறிட்டு பார்க்க விரும்பாமல், அப்படியே தலையை குனிந்து கொண்டாள். அவளுடைய நுரையீரல் இப்போது அதிவேகமாய் மூச்சுக்காற்றை உள்ளிழுத்து வெளிவிட, திவ்யாவுக்கு 'புஸ்.. புஸ்..' என்று மூச்சிரைத்தது. அவளுடைய மார்புப்பந்துகள் ரெண்டும் 'குபுக்.. குபுக்..' என விரிந்து விரிந்து சுருங்கி கொண்டிருந்தன. சித்ரா இப்போது சற்றே ஆவேசமாக பேச ஆரம்பித்தாள். "போதும் திவ்யா.. என்னை பாத்து.. நீ மெரண்டு மெரண்டு ஓடுனது போதும்..!! நான் எதிரே வந்தா மூஞ்சியை அந்தப்பக்கம் திருப்பிக்கிறதும்.. க்ராஸ் பண்றப்போ தலையை குனிஞ்சிக்கிறதும்.. ரூம் விட்டு வெளில வர்றப்போ நான் வெளில நிக்கிறனான்னு எட்டிப் பாத்துட்டு வர்றதும்.. போதும்.. எல்லாம் போதும்..!! என்னை பாத்தா ராட்சசி மாதிரி தெரியுதா உனக்கு..? பேசுனா கடிச்சா வச்சிடுவேன்..? உன் அண்ணிதான..? அண்ணன் பொண்டாட்டிதான..? பேசு என்கூட..!!" திவ்யா எதுவும் பேசவில்லை. 'புஸ்.. புஸ்..' என்று மூச்சிரைத்தவாறு, தனது பெரிய விழிகளை அகலமாய் திறந்து, தரையையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

சில வினாடிகள் காத்திருந்துவிட்டு, பின் சித்ராவே தொடர்ந்தாள்."பேசு திவ்யா.. இன்னைக்கு நீ பேசித்தான் ஆகணும்.. இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்..!! என் தம்பியை நெனச்சா எனக்கு பயமா இருக்கு..!! உன் மேல இருக்குற பிரியத்துல.. உன்கூட பேசாம இருக்குற ஏக்கத்துல.. அவன் ஏடாகூடமா ஏதாவது செஞ்சுக்குவானோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு..!! நேத்து அவன் இருந்த நிலைமையை நீ பாத்திருந்தா.. உனக்கு புரிஞ்சிருக்கும்.. அவனை அந்த கோலத்துல பாத்த எனக்கு நெஞ்சே வெடிச்சு போச்சு திவ்யா..!! ஏன் இப்படி செஞ்ச.. ஏன் அவனை இந்த நெலமைக்கு ஆளாக்கி வச்சிருக்குற..??" சித்ரா கத்த, இப்போது திவ்யா தனது தலையை சரக்கென திருப்பி, தன் அண்ணியை கூர்மையாக ஒரு உக்கிரப்பார்வை பார்த்தாள். 'நான் என்ன பண்ணுனேன் உன் தம்பியை..?' என்பது மாதிரி இருந்தது அந்தப்பார்வை..!! ஓரிரு வினாடிகள்தான் அப்படி பார்த்திருப்பாள். உடனே மீண்டும் தலையை கவிழ்த்துக் கொண்டாள். ஆனால் அதற்கே சித்ரா சற்று மிரண்டு போனாள். பட்டென தன் குரலில் ஒரு மென்மையை குழைத்துக்கொண்டு பேசினாள். "இங்க பாரு திவ்யா.. நான் உன்னை குறை சொல்றேன்னு நெனைக்காத..!! நீ அவசரப்பட்டு நெறைய முடிவு எடுக்குற.. அது உனக்கு நல்லது இல்லம்மா..!! அசோக்கை பத்தி நான் சொல்லி.. நீ தெரிஞ்சுக்க வேண்டியது இல்ல.. உனக்கே அவனைப் பத்தி நல்லா தெரியும்..!! உன்மேல அவனுக்கு எவ்வளவு பாசம் தெரியுமா.. உன்னை திட்டுறேன்னு எத்தனை தடவை என்கிட்டே சண்டைக்கு வந்திருக்கான் தெரியுமா..? அவன் எவ்வளவு நல்லவன்.. எப்படி கள்ளம் கபடம் இல்லாம சிரிச்சுட்டு திரிவான்.. அவனுக்கு புடிக்காத ஆளுங்ககிட்ட கூட.. அவங்க மனசு நோகாம நடந்துக்குவான்தான..?? எதிரிக்கு கூட கெடுதல் நெனைக்க மாட்டான் என் தம்பி.. அவன் உயிருக்கு உயிரா காதலிக்கிற உனக்கா கெடுதல் நெனைப்பான்..?? கொஞ்சம் யோசிச்சு பாரும்மா..!!" திவ்யா அமைதியாக தரையை பார்த்து அமர்ந்திருந்தாலும், அவளது மூளை அவளையுமறியாமல் சித்ரா சொன்ன விஷயங்களை அசை போட்டு பார்த்தது. 'சித்ரா சொல்வதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.. அசோக் நல்லவன்தான்.. யாரையும் நோகடிக்காத நல்ல மனசுக்காரன்தான்.. ஆனால்.. ஆனால்.. அதற்காக அவன் என் காதலை அழிக்க நினைத்தது எந்த விதத்தில் சரியாகும்..??' திவ்யா யோசிக்க, அதற்குள் அவளது மனதை படித்தவளாய் சித்ரா சொன்னாள். "தயவு செஞ்சு.. அசோக் உன் காதலை கெடுக்க நெனச்சவன்னு மட்டும் சொல்லிடாத..!! ஆரம்பத்துல.. உன் மேல இருந்த காதலால.. மனசு தடுமாறி அவன் ஒருதடவை அந்த மாதிரி செஞ்சது என்னவோ உண்மைதான்..!! ஆனா.. அப்புறம்.. திவாகர் திரும்ப வந்தப்புறம்.. அவனோட காதலை எல்லாம் மனசுக்குள்ள போட்டு பூட்டிக்கிட்டு.. உன் காதலுக்கு எவ்வளவு உதவி செஞ்சான்னு நெனைச்சு பாரு.. உனக்கு எவ்வளவு யோசனை சொன்னான்னு கொஞ்சம் யோசிச்சு பாரு.. அந்த திவாகருக்கு புடிக்கிற மாதிரி உன்னை மாத்தினது.. அவன்கிட்ட எப்படி பேசணும்.. எப்படி பழகனும்னு உனக்கு டிப்ஸ் கொடுத்தது.. எல்லாம் யோசிச்சு பாரு..!! திவாகரோட குடிப்பழக்கம் உனக்கு தெரிஞ்சப்போ.. அவரோட காதலை முறிச்சுக்க நீ ரெடியானப்போ.. அவசரப்படாத திவ்யான்னு உன்னை தடுத்தது யாரு..? உன் காதலை கெடுக்கனும்னா.. அசோக் ஏன் இதெல்லாம் செய்யணும்..? அவனுக்கு உன் வாழ்க்கை நல்லா இருக்கனும்ன்றதை தவிர வேற எந்த நோக்கமும் இல்ல திவ்யா.. தயவு செஞ்சு இதை மொதல்ல புரிஞ்சுக்கோ..!!" திவ்யாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளுடைய மூளை இப்போது சற்றே குழம்பியது. 'ஆமாம்.. எல்லாம் சரியாகத்தான் செய்தான்.. நானும் அப்படித்தான் நம்பினேன்.. அப்புறம் ஏன் அன்று வந்து திடீரென அப்படி சொன்னானாம்..? திவாகரை மறந்துவிடு என்று..!! ஏதோ நண்பர் மூலம் விசாரித்தேன் என்று கதையெல்லாம் அளந்தானே..? ஏன் அப்படி பொய் சொல்லி என் காதலை பிரிக்க நினைக்கவேண்டும்..?' திவ்யாவின் மூளை குழம்பிக்கொண்டிருக்க, சித்ரா தொடர்ந்தாள். "உனக்கு அந்த திவாகரைப் பத்தி சரியா தெரியலை திவ்யா.. அந்த ஆள் சரி கிடையாது.. ரொம்ப மோசமான கேரக்டர்..!! 'திவ்யாவை உன்கிட்ட இருந்து பிரிச்சு காட்டுறேன்'னு அசோக்கிட்டயே வந்து சவால் விட்டு பேசிருக்கான்.. தன்னோட மோசமான குணங்களை பத்தி சொல்லி.. 'முடிஞ்சா திவ்யாகிட்ட இதெல்லாம் சொல்லிப்பாரு.. அவளை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்'னு திமிரா பேசிருக்கான்..!! திவாகர் மேல இருந்த கோவத்துலதான்.. அசோக் அன்னைக்கு 'திவாகரை மறந்துடு'ன்னு உன்கிட்ட சொன்னது..!! அசோக் சொன்னவிதம் வேணா.. அவசரப்பட்டு, அறிவில்லாம சொன்னதா இருக்கலாம்..!! ஆனா.. அதுக்கும் அவன் உன் மேல வச்சிருந்த அக்கறைதான் காரணம் திவ்யா..!! இந்த மாதிரி ஒரு ஆள்கிட்ட நீ சிக்கிட கூடாதுன்ற அக்கறைதான்..!!" திவ்யா இப்போது சற்றே ஏளனமாக சித்ராவை ஒரு பார்த்தாள். 'இது என்ன புதுக்கதையாக இருக்கிறது..? ஒருமனிதன் எதற்காக தன்னைப் பற்றியே கேவலமாக சொல்லிக் கொள்ள வேண்டும்..? திவாகர் அப்படிப்பட்டவர் கிடையாது.. அக்காவும், தம்பியும் சேர்ந்துகொண்டு என்னை குழப்ப நினைக்கிறார்கள்..!!' மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்ட திவ்யா, மீண்டும் தன் பார்வையை சித்ராவின் முகத்திலிருந்து வேறுபக்கமாக திருப்பிக் கொண்டாள். திவ்யாவுடைய நெஞ்சு இன்னும் மேலும் கீழுமாய் வேகமாக ஏறி இறங்கி, அவசர மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. சித்ராதான் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் திவ்யாவிற்கு தாகமெடுத்தது. டேபிள் மீது இருந்த தண்ணீர் ஜக்கை எட்டி எடுத்தாள். 'கடகட'வென நீரை தொண்டைக்குள் நிறைய சரித்துக் கொண்டாள். திவ்யா நீர் அருந்தி முடிக்கும் வரை, அவளுடைய முகத்தையே சித்ரா பொறுமையில்லாமல் முறைத்துக் கொண்டிருந்தாள்.நீரருந்தி முடித்த திவ்யா, இப்போது செல்போனை கையிலெடுத்து நோண்ட ஆரம்பிக்க, சித்ரா நிஜமாகவே படு எரிச்சலானாள். அவளுடைய கையிலிருந்த செல்போனை வெடுக்கென பிடுங்கி மெத்தை மீது எறிந்தாள். திவ்யா எதுவும் சொல்லவில்லை. சித்ராவை ஏறிட்டும் பார்க்கவில்லை. கண்களை மூடிக்கொண்டு தன் சுவாசத்தை சீராக்கும் முயற்சியில் ஈடுபட்டாள். எச்சில் கூட்டி விழுங்கினாள். சித்ரா இப்போது எரிச்சலான குரலில் திவ்யாவிடம் கேட்டாள். "நான் இவ்வளவு சீரியஸா இங்க பேசிட்டு இருக்கேன்.. நீ செல்லை நோண்டிட்டு இருந்தா என்ன அர்த்தம்..?? நான் உன் வாழ்க்கையைப் பத்தித்தாண்டி பேசிட்டு இருக்கேன்.. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு..?? நீ எவ்வளவு பெரிய ஆபத்துல சிக்கிருக்கேன்னு உனக்கு புரியுதா..?? அந்த திவாகர் ரொம்ப ஆபத்தானவன் திவ்யா.. அவன்கூட இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு ஆபத்து..!! அவனை பத்தி இன்னும் சொல்றேன்.. அவன் எந்த மாதிரி ஆளுன்னு நீயே ஒரு முடிவுக்கு வா..!!" கண்கள் மூடி அமைதியாக இருந்த திவ்யா, இப்போது தன்னையும் அறியாமல் தன் காதுகளை கூர்மையாக்கி, சித்ரா என்ன சொல்லப் போகிறாள் என்று கவனிக்க ஆரம்பித்தாள். சித்ரா அவள் பேசிய வேகத்திலேயே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். "நேத்து அந்த திவாகர் என்ன பண்ணிருக்கான் தெரியுமா..?? நீயும் அவனும் ஏதோ ரெஸ்டாரன்ட்டுக்கு சாப்பிட போயிருந்தீங்களாமே..? அசோக்கும் அப்போ அங்கதான் இருந்திருக்கான்.. நீ ஹேன்ட் வாஷ் பண்ண போயிருந்தப்போ.. அசோக்குக்கு ஃபோன் பண்ணி.. 'இப்போ உன் ஆளு வருவா.. அவ மேல கை போடுறேன்.. பாத்துட்டுப்போ..'ன்னு எகத்தாளமா சொல்லிருக்கான்..!! எவ்வளவு ஒரு கேவலமான, வக்கிரமான புத்தி இருந்தா.. ஒரு ஆளு இப்படி சொல்லிருப்பான்..? அவன் கைல உன் வாழ்க்கையை ஒப்படைச்சா.. என்னாகும்னு கொஞ்சம் யோசிச்சு பாரு..!!" சித்ரா சொல்ல சொல்லவே, திவ்யாவின் மூளைக்குள் சுருக்கென்று ஏதோ தைத்தது..!! அவ்வளவு நேரம் வேண்டா வெறுப்பாக அண்ணியின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவளுடைய முகத்தில், பட்டென ஒரு சீரியஸ்னஸ் வந்து உட்கார்ந்து கொண்டது. நிமிர்ந்து அமர்ந்தாள். அவளுடைய மனம் பரபரப்பாய் பலவிஷயங்களை யோசிக்க ஆரம்பித்தது. 'என்ன சொல்லுகிறாள் இவள்..? இவள் சொல்வது உண்மையா..? ஆமாம்.. நான் துப்பட்டாவை வாஷ் செய்துகொண்டிருந்தபோது, திவாகர் தன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தாரே..? அது வேறு யாரிடமோவா.. இல்லை இவள் சொல்வது மாதிரி அசோக்கிடமா..? ஒருவேளை அசோக்கிடம்தானோ..? அவனிடம்தான் இவள் சொல்வது மாதிரி பேசினாரோ..? அதனால்தான் என்றும் இல்லாத வழக்கமாய் என் தோள் மீது கை போட்டு அணைத்தாரா..? அதைப் பார்த்த ஆத்திரத்தில்தான் அசோக் அப்படி அசுர வேகத்தில் பைக்கில் பறந்தானோ..? இந்தமாதிரி எல்லாம் கீழ்த்தரமாய் நடந்துகொள்ளக் கூடிய ஆளா திவாகர்..? இல்லை.. இல்லை.. அவருக்குத்தான் அசோக்குடைய செல்நம்பரே தெரியாதே..? அப்புறம் எப்படி பேசியிருப்பார்..?? இரு இரு.. ஏன் முடியாது..?? என்னுடைய செல்போனில் அசோக்குடைய நம்பர் இருக்கிறதே.. ஹேன்ட் பேக்கின் சைட் ஜிப் வேறு திறந்திருந்ததே..?? ஒருவேளை...??? ஐயோ...!!! இப்போது ஏன் இவர்கள் பேச்சைக் கேட்டு திவாகரை தவறாக எண்ணுகிறாய்..?? இயல்பாக நடந்த விஷயங்களை இவர்கள் ஏதோ திரித்து சொல்கிறார்கள்..!! ஒருவேளை அவை இயல்பாக நடந்தவை இல்லையோ.. இவர்கள் சொல்வதுதான் உண்மையோ..?? ஆஆஆ...!!' திவ்யா இப்போது உச்சபட்ச குழப்பத்துக்கு உள்ளானாள். அவளுடைய மனக்குளத்தில் ஒரே நேரத்தில் ஓராயிரம் கற்கள் விழுந்த மாதிரியாக, அலைஅலையாய் குழப்ப அதிர்வுகள்..!! சிந்திக்க சிந்திக்க.. மூளை கொதிப்பது போல வலியெடுத்தது திவ்யாவுக்கு..!! திவ்யாவுடைய மாற்றத்தை கவனியாது சித்ரா தொடர்ந்து வேகமாக பேசிக் கொண்டிருந்தாள். "நல்ல யோசி திவ்யா.. இந்த மாதிரி ஒரு ஆளை நீ காதலிக்கனுமா..? ஹ்ஹ.. சொல்லப்போனா.. அந்த ஆள் மேல உனக்கு இருக்குறது காதலான்னு கூட எனக்கு சந்தேகமா இருக்குது..!! 'அவனை காதலிக்கட்டுமா..?'ன்னு அசோக்கிட்ட அபிப்ராயம் கேட்டியாமே..?? காதல்ன்றது ஒரு பொண்ணுக்கு இப்படியாடி வரும்..?? இங்க இருந்து வரணும்டி.. நெஞ்சுல இருந்து வரணும்..!! மனசு சொல்லணும்.. 'இவன் நமக்கு சொந்தமானவன்.. கடைசிவரை இவன்கூடத்தான் இருக்கப் போறோம்'னு.. மனசு அப்படி சொன்னப்புறம் யார் பேச்சை கேட்டும் அதை மாத்தக்கூடாது..!! உன் மனசு அப்படி சொல்லிருந்ததுன்னா.. அசோக்கிட்ட அந்தமாதிரிலாம் நீ அபிப்ராயம் கேட்டிருக்கமாட்ட.. 'இவனைத்தான் நான் காதலிக்கிறேன்'னு.. பொட்டுல அறைஞ்ச மாதிரி சொல்லிருப்ப..!!"


நிஜமாகவே திவ்யாவிற்கு இப்போது பொட்டில் அறைந்த மாதிரி இருந்தது..!! அவளுடைய புத்தியில் சம்மட்டியால் அடித்தது போல பலமாக ஒரு அடி விழுந்தது..!! 'என்ன சொல்கிறாள் இவள்..? அங்கே சுற்றி.. இங்கே சுற்றி.. கடைசியில் என்னுடைய காதலையே சந்தேகிக்கிறாளே..? திவாகர் மீது எனக்கிருப்பது காதல் இல்லையா..?? காதல் இல்லாமல் வேறென்ன..??'"அந்த ஆள் ஏதோ விஷம் குடிக்கப் போறேன்னு சொன்னானாம்.. உடனே நீ அழுதுக்கிட்டே 'ஐ லவ் யூ..' சொன்னியாம்..?? என்னடி இதுலாம்..?? இதுக்கு பேரா லவ்வு..???" சித்ரா சீற்றமாய் கேட்க, திவ்யா மூச்சு விடாமல் அமர்ந்திருந்தாள். "சரி.. இப்போ நான் ஒன்னு சொல்றேன்.. செய்றியா..? நான் சொல்றதெல்லாம் கொஞ்சம் கண் மூடி நிதானமா யோசிச்சு பாரு.. உன் மனசு என்ன சொல்லுதுன்னு பாரு..!!" சித்ரா சொல்ல, திவ்யா தலையை குனிந்தவாறே.. அவளுடைய கட்டுப்பாடின்றியே.. அதற்கு தயாரானாள். "அசோக்கை நெனைச்சு பாரு.. அசோக்.. உன் அசோக்.. உனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச உன் அசோக்..!! சின்ன வயசுல இருந்தே அவன் உன் மேல எவ்வளவு பிரியம் வச்சிருந்தான்னு கொஞ்சம் நெனச்சு பாரு.. உனக்கு எது புடிக்கும், எது புடிக்காதுன்னு பாத்து பாத்து செய்வானே..? உன் சந்தோஷத்துக்காக அவன் என்னெல்லாம் பண்ணிருக்கான்னு நெனச்சு பாரு.. அவனை விட உன்னை நல்லா புரிஞ்சுக்கிட்டவங்க யாராவது உண்டான்னு யோசி..!! அவனை கட்டிக்கிட்டா நீ எவ்வளவு சந்தோஷமா இருப்பேன்னு நெனச்சு பாரு.." சித்ரா சொல்ல சொல்ல.. திவ்யாவின் மனதுக்குள் ஒரு படம் ஓட ஆரம்பித்தது..!! அசோக்கை தன் காதலனாக.. கணவனாக.. கழுத்தில் மாங்கல்யம் சூட்டுபவனாக.. காதலோடு மார்பில் சாய்த்துக் கொள்பவனாக..!! நினைக்க நினைக்க.. ஒரு இனம்புரியாத உணர்ச்சி அலை திவ்யாவின் உடலெங்கும் ஓடியது..!! படக்கென தன் தலையை பலமாக உதறி, அந்த உணர்வை வெட்டி எறிந்தாள்..!! 'என்ன இது.. என் மனம் ஏன் இப்படி எல்லாம் வெட்கமில்லாமல் சிந்திக்கிறது..?' திவ்யா உச்சபட்ச குழப்பத்தில் சிக்கி திளைத்துக் கொண்டிருக்க, சித்ராவின் கண்களில் இப்போது திடீரென கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது. விழிகளில் தேங்கிய நீருடன் தழதழத்துப் போன குரலில் சொன்னாள். "என் மனசாட்சியை தொட்டு சொல்றேண்டி.. அசோக் மாதிரி ஒரு நல்ல புருஷன் சத்தியமா உனக்கு கெடைக்க மாட்டான்..!! அவனை வெறுத்து ஒதுக்கி.. அவன் வாழ்க்கையையும் பாழாக்கி, உன் வாழ்க்கையையும் பாழாக்கிக்காத..!!" சொல்லி முடிக்கும் முன்பே, கண்களில் தேங்கியிருந்த நீர் இப்போது சித்ராவின் கன்னங்களை நனைத்து ஓட ஆரம்பித்தது. அழுகிற விழிகளுடனே.. அவளது கைகள் இரண்டையும் கூப்பி.. தொழுது.. திவ்யாவிடம் பரிதாபமாக கெஞ்சினாள்..!! "ப்ளீஸ் திவ்யா.. அண்ணி உன்னை கெஞ்சிக் கேட்டுக்குறேன்..!! என் தம்பியை ஏத்துக்கோ.. அவன் வாழ்க்கையை காப்பாத்து..!! ப்ளீஸ்..!!" திவ்யா இப்போது தனது விழிகளை உயர்த்தி, தன் எதிரே நிற்கும் சித்ராவை ஏறிட்டாள். ஏறிட்டவள் அவள் நின்றிருந்த கோலத்தை கண்டதும், ஒருகணம் அப்படியே திகைத்துப் போனாள். இவள் ஒருநாள் இப்படி ஒரு கோலத்தில் தன் எதிரே நிற்கப் போகிறாள் என்று திவ்யா கனவிலும் எண்ணியது இல்லை. கைகூப்பி தன் முன் நிற்கும் அண்ணியைப் பார்த்து திவ்யா கலங்கிப் போனாள். ஆனால் அந்த கலக்கத்தை வெளியில் காட்ட விருப்பம் இல்லாதவளாய், மீண்டும் தன் தலையை கவிழ்த்துக் கொண்டாள். இப்போது சித்ரா அழுகையை நிறுத்தினாள். இரண்டு கையாளும் தன் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள். மூக்கை லேசாக விசும்பிக் கொண்டாள். புதிதாய் ஏதோ நினைவுக்கு வந்தவளாய் சொன்னாள். "இரு.. ஒரு நிமிஷம் இங்கயே இரு..!! உனக்கு நான் ஒன்னு காட்டனும்.. அசோக் உன்னை எந்த அளவு நேசிக்கிறான்னு உனக்கு காட்டனும்..!! ஓடிடாத.. அண்ணி இதோ வந்துடுறேன்..!!" சொன்ன சித்ரா அவசரமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள். திவ்யாவுக்கு ஏனோ இப்போது எழுந்து ஓடவேண்டும் என்று தோன்றவில்லை. சித்ரா இன்னும் என்ன சொல்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. 'அசோக் எந்த அளவுக்கு என்னை நேசிக்கிறான்..?' தெரிந்து கொள்ள அவளுடைய உள்மனம் ஆர்வமாக இருந்தது. அரை நிமிடம் கூட ஆகியிருக்காது. சித்ரா மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்தாள். அவளுடைய கையில் இப்போது புதிதாக ஒரு பை முளைத்திருந்தது. அந்தப் பையை திவ்யா அமர்ந்திருந்த கட்டிலுக்கு மேலாக உயர்த்தி பிடித்து, தலை குப்புற கவிழ்த்தாள். பொலபொலவென ஏதேதோ பொருட்கள், அந்தப் பைக்குள் இருந்து விழுந்து, மெத்தையில் விழுந்து ஓடின..!! 'என்ன இதெல்லாம்..?' என்பது போல திவ்யா அவற்றை பார்த்தாள். பார்க்க பார்க்க.. அவளுடைய உடம்பின் அனைத்து செல்களிலும் ஒரு பரவசமான உணர்ச்சி உடைப்பெடுத்து ஓட ஆரம்பித்தது..!! வார்த்தைகளில் சொல்ல முடியாத மாதிரியான.. ஒரு புதுவிதமான.. அதுவரை அவள் அனுபவித்திராத அற்புதமான உணர்ச்சி..!! வீணையின் தந்திகளை விரல்களால் மீட்டுவது போல.. அவள் உடலின் நாடி நரம்புகள் அத்தனையையும் மீட்டிப் பார்த்தது அந்த வினோதமான உணர்ச்சி..!! மெத்தையில் சிந்திக் கிடந்தது எல்லாம், சிறுவயதிலிருந்தே திவ்யாவின் ஞாபகார்த்தமாக அசோக் சேர்த்து வைத்திருந்த பொருட்கள்..!! சில உடைந்த வளையல் துண்டுகள்.. ஒரு நெளிந்து போன நட்ராஜ் ஜியாமட்ரி பாக்ஸ்.. குப்பையில் வீசிஎறிந்த இயர்ஃபோன்.. குற்றாலத்தில் தவறவிட்ட காதணி.. மறந்து போயிருந்த இதயவடிவ கீ செயின்.. தொலைந்துபோனது என எண்ணியிருந்த பூனை படம் போட்ட கர்ச்சீஃப்.. எப்போதோ அசோக்கிற்கு பரிசளித்த பேனா.. எதற்காக எடுத்து வைத்திருக்கிறான் என்றே தெரியாத கடல் கிளிஞ்சல்கள்..!! இன்னும் ஏதேதோ பொருட்கள்.. கலர் கலராய்.. சிறிதும் பெரிதுமாய்.. புதிதும், பழையதுமாய்..!! எல்லாப் பொருட்களுக்கும் மையமாய் அந்த டைரி திறந்த வாக்கில் விழுந்திருந்தது..!! ஃபேன் காற்றில் டைரியின் காகிதங்கள் படபடத்தன..!! அதனுள்ளே செருகி வைத்திருந்த காதல் சொல்லும் கார்டுகள், இப்போது வெளிய வந்து கட்டில் முழுதும் சிதறி கிடந்தன..!! டைரியின் சில பக்கங்களில் தென்பட்ட திவ்யாவின் கோட்டு சித்திரங்கள்..!! ஒரு சித்திரத்தின் நெற்றியில் அவளுடைய ஸ்டிக்கர் போட்டு..!! எல்லா பக்கங்களிலும் கிறுக்கி வைக்கப்பட்டிருந்த எக்கச்சக்கமான 'I LOVE YOU DIVYA ..!!'க்கள்..!! "பாரு திவ்யா.. அவன் உன் மேல வச்சிருக்குற காதலை பாரு..!! என் தம்பி எந்த அளவுக்கு உன் மேல பைத்தியமா இருந்திருந்தா.. இதெல்லாம் சேர்த்து வச்சிருப்பான்..? நல்லா பாரு..!! இவன் உனக்கு வேணாமா திவ்யா.. உன் மேல உயிரையே வச்சிருக்குற இவன் உனக்கு வேணாமா..?" தழதழத்த குரலில் சொன்ன சித்ரா அப்படியே மடங்கிப்போய் தரையில் அமர்ந்தாள். கட்டிலில் சாய்ந்து கொண்டாள். உடைந்து போய் அழ ஆரம்பித்தாள். திவ்யா உண்மையிலேயே திகைத்துப் போனாள். அசோக் அவளை காதலிக்கிறான் என்று அவளுக்கு தெரியும். ஆனால்.. 'எப்போதிருந்து..?' என்ற உண்மை இப்போதுதான் அவளுடைய புத்தியில் வலுவாக அறைந்தது. விவரம் தெரியாத சின்ன வயதில் இருந்தே இதையெல்லாம் பொறுக்கி எடுத்து பொக்கிஷமாக சேகரித்து வைத்திருக்கிறான் என்றால்..?? திவ்யாவின் மனக்கண்ணில் இப்போது அசோக்கின் காதல் திடீரென அசுர வேகத்தில் வளர ஆரம்பித்தது. மளமளவென மலை அளவு வளர்ந்து அவள் முன்பு பிரம்மாண்டமாக நிற்க, அதை அவள் அண்ணாந்து பார்த்தாள். திவ்யாவுடைய கண்கள் இரண்டும் இப்போது கண்ணீரை கசிய ஆரம்பித்தன. சொட்டு சொட்டாய் கண்ணீர் வெளிப்பட்டு அவளுடைய கன்னங்களை நனைத்து ஓட, அவளது உதடுகள் படபடத்தன. பற்களால் அழுத்தி தன் உதடுகளை கடித்து உணர்ச்சியை கட்டுப்படுத்த முயன்றாள். கொட்டிக்கிடந்த பொருட்களை தனது வலது கையால் அப்படியே தடவிப் பார்த்தாள். அவளுடைய விரல்கள் ஐந்தும் அந்தப் பொருட்கள் மீது அலைஅலையாய் ஊர்ந்து சென்றன. ஒவ்வொரு பொருளாக கடந்து சென்ற அவளுடைய கை.. ஒரு பொருளை மட்டும் பற்றி மேலெழும்பியது..!! அது.. திவ்யாவின் ஒற்றைக் கால் கொலுசு..!! மரம் வளருமென முட்டைகளை புதைத்த அன்று காணாமல் போன கொலுசு..!! 'அழகா இருக்கு திவ்யா..!!' என்று அசோக் ஆசையாக சொன்னவாறு, அன்று தடவிப் பார்த்த கொலுசு..!! இதோ அருகில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாளே.. அவளுடன் திவ்யா பேசாமலிருக்க காரணமான சம்பவம் நடந்த அன்றுதான் இந்தக் கொலுசும் காணாமல் போனது..!! திவ்யாவுடைய வலது கையில் நிரந்தரமாகிப் போன ஒரு நெருப்பு சுட்ட தழும்பும், அன்றுதான் முதன்முறையாக கையில் ஏறியது..!! இப்போது திவ்யா கொலுசை இறுகப் பற்றியிருந்த கையை மெல்ல திருப்பி, அந்த தழும்பை பார்த்தாள். அதை பார்க்க பார்க்க.. அவளுடைய கண்கள் இன்னும் அதிகப்படியான நீரை சிந்தின. சித்ரா இப்போது தலையை நிமிர்த்தி திவ்யாவை பார்த்தாள். அப்புறம் அவள் பார்வை சென்ற இடத்தை கவனித்தவளுக்கு, திவ்யாவுடைய தழும்பு கண்ணில் பட்டது. சில வினாடிகள் அந்த தழும்பையே பாவமாக பார்த்த சித்ரா, அப்புறம் தன் வலது கையை மெல்ல நீட்டினாள். திவ்யாவுடைய முழங்கைக்கு அருகே தென்பட்ட அந்த தழும்பை தன் கைவிரல்களால் மெல்ல வருடினாள். திவ்யா தன் கையை சித்ராவிடமிருந்து இப்போது விலக்கிக் கொள்ளவில்லை. அண்ணியின் முகத்தை ஏறிட்டாள். அவளோ இப்போது பரிதாபமான குரலில் சொன்னாள். "சின்ன வயசுல.. நான் தெரியாம செஞ்ச தப்பால.. உன் கைல சூடு விழுந்துடுச்சு..!! அன்னைக்கு நான் ரொம்ப சின்னப்பொண்ணு.. ஏதோ கேக்கனுமேன்னு பேருக்கு கேட்டேன்.. இப்போ வளர்ந்து பெரியவளாயிட்டேன்.. என் மனசார கேக்குறேன்.. என்னை மன்னிச்சுடு திவ்யா..!! உன் கைல சூடு விழ வச்சதுக்கு என்னை மன்னிச்சுடு..!!" சித்ரா சொல்லிவிட்டு அழ, திவ்யாவாலும் அவளுடைய உள்ளத்தில் பொங்கிய உணர்ச்சி அலைகளை கட்டுப் படுத்த முடியவில்லை. அவளுடைய உதடுகள் துடிக்க, கண்களில் இருந்து கண்ணீர் அருவி மாதிரி கொட்ட ஆரம்பித்தது. கண்களில் வழியும் நீருடனே அண்ணியின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். சித்ராவும் திவ்யாவும் அவ்வாறு அருகருகே அமர்ந்து கொண்டு, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், மெத்தையில் கிடந்த திவ்யாவின் செல்போன் அலறியது..!!ஒரே நேரத்தில் திவ்யாவும், சித்ராவும் செல்போனை திரும்பி பார்த்தார்கள். 'DIVAKAR CALLING.. DIVAKAR CALLING..' என்று டிஸ்ப்ளே பளிச்சிட்டது..!! இருவரும் ஒரே நேரத்தில் செல்போனை நோக்கி கைநீட்ட, அது திவ்யாவின் கையில் சிக்கியது. இப்போது சித்ரா லேசான பதட்டத்துடன் சொன்னாள். "ப்ளீஸ் திவ்யா.. அ..அந்த காலை கட் பண்ணு.. அண்ணி சொல்றதை கேளு.. அந்த ஆள் சகவாசமே நமக்கு வேணாம்..!! நீ, அசோக், நான், உன் அண்ணன்.. நம்ம நாலு பேரும் நிம்மதியா சந்தோஷமா இருக்கலாம்..!! ப்ளீஸ் திவ்யா.." திவ்யா ஒரு சில வினாடிகள் அண்ணியின் முகத்தையும், கையிலிருந்த செல்போனையும் மாறி மாறி பார்த்தாள். கொஞ்ச நேரத்திற்கு அவளுடைய மனதில் ஒரு குழப்பமான போராட்டம். அப்புறம் ஏதோ முடிவுக்கு வந்தவளாய், பட்டென காலை பிக்கப் செய்தாள். கண்களில் வழிந்த நீரை ஒரு கையால் துடைத்துக்கொண்டே, "ஹலோ.." என்றாள். "........................." அடுத்த முனையில் திவாகர் ஏதோ கேட்க, "ம்ம்.. கெளம்பிட்டேன்.. இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க வந்துடுவேன்..!!" திவ்யா சொல்லிவிட்டு காலை கட் செய்ய, சித்ரா இப்போது சுத்தமாய் பேச்சிழந்து போயிருந்தாள். திவ்யாவையே ஒருமாதிரி ஸ்தம்பித்துப்போய் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். திவ்யா எழுந்தாள். ஈர டவலால் முகத்தை துடைத்துக் கொண்டு, லேசாக பவுடர் பூசிக் கொண்டாள். பேக் எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள். தரையில் அமர்ந்து கண்ணீர் விட்டுகொண்டிருக்கும் சித்ராவை ஓரிரு வினாடிகள் கூர்மையாக ஒரு பார்வை பார்த்தாள். அப்புறம் அவசரமாய் நடந்து அந்த அறையை விட்டு வெளியேறினாள். சித்ரா நீர்த்திரையிட்ட விழிகளுடன், இறுதி வரை எதுவுமே பேசாமல் செல்லும் திவ்யாவின் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.குண்டும் குழியுமாக இருந்தது அந்த சாலை. மிதமான வேகத்தில் செல்லும்போதே ஆட்டோ அப்படியும் இப்படியுமாய் குலுங்கியது. திவ்யாவோ ஆட்டோவுக்குள்ளே மனம் கலங்கிப்போனவளாய் அமர்ந்திருந்தாள். அவளுடைய பார்வை ஏதோ ஒரு சூனியத்தை வெறித்திருந்தது. அவளுடைய மூளையின் ஒவ்வொரு அணுவிலும், குறுக்கும் நெடுக்குமாய் பலவித குழப்ப எண்ணங்கள். அவள் எவ்வளவோ முயன்று மனதை தெளிவாக வைத்துக் கொள்ள நினைத்தும், அது மேலும் மேலும் குழம்பிய குட்டையாகவே மாறிக்கொண்டிருந்தது. அசோக்கும், திவாகரும் அவளுடைய மனக்கண்ணில் மாறி மாறி தோன்றிக் கொண்டிருந்தார்கள். வசீகரமாக சிரித்தார்கள். ஆளுக்கொரு புறம் நின்று கையசைத்து அழைத்தார்கள். அவள் குழம்பிப்போய் பரிதாபமாக பார்க்க, இருவரும் கைகொட்டி சிரித்தார்கள். சிந்தித்து சிந்தித்து.. அந்த குழப்ப எண்ணங்களில் உழன்று உழன்று.. திவ்யாவுக்கு மூளை தீப்பிடித்துக் கொண்டது மாதிரி இருந்தது. கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். தலையை இரண்டு புறமும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அமைதியாக ஆட்டோ சீட்டில் தலையை சாய்ந்துகொண்டாள். "நீ சொன்ன எடம் வந்துருச்சும்மா.. இங்கயா.. இன்னும் போகனுமா..?" ஆட்டோக்காரரின் குரல் திவ்யாவை நனவுலகுக்கு இழுத்து வந்தது. ஒருகணம் அவள் எங்கே இருக்கிறோம் என்றே குழம்பிப் போனாள். தலையை அப்படியும் இப்படியுமாய் திருப்பி திருப்பி பார்த்தாள். வெளியே இப்போது நன்றாக இருட்டியிருந்தது. ஆட்டோ நின்ற இடம் ஓரளவுக்கு பிடிபட்டதும், ஆட்டோவுக்கு பின்புறமாக இருந்த கண்ணாடி வழியே வெளியே பார்த்தாள். கொஞ்ச தூரத்திலேயே ஒரு மரத்தின் அடியில் திவாகரின் கார் நிற்பது தெரிந்தது. உடனே அவசரமாய் ஆட்டோக்காரரிடம் சொன்னாள். "இங்கதாங்க.. நிறுத்துங்க.." ஏறும்போதே பேசியபடி மீட்டருக்கு மேலே இருபது ரூபாய் எடுத்துக் கொடுத்துவிட்டு ஆட்டோவில் இருந்து இறங்கினாள். திரும்பி திவாகரின் காரை நோக்கி நடந்தாள். அவள் காரை நெருங்கியதுமே, காரின் ஒருபக்க கதவு திறந்து கொண்டது. உள்ளே ஏறி அமர்ந்தாள். அமர்ந்ததுமே ஏதோ ஒரு விரும்பத்தகாத நெடி அவளுடைய நாசியை குப்பென தாக்கியது. 'என்ன ஸ்மெல் இது..? இது.. இது.. சில சமயங்கள் அசோக்கிடம் இருந்து இந்த ஸ்மெல் வருமே..? தி..திவாகர் குடித்திருக்கிறாரா என்ன..?' அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, "எவ்வளவு நேரம் வெயிட் பண்றது..?" திவாகர் ஒருவித எரிச்சலான குரலில் கேட்டான். "ஸா..ஸாரி.." என்றாள் திவ்யா மென்மையாக. "காலேஜ்ல இருந்து அப்போவே கெளம்பிட்டல..? அப்புறமும் ஏன் லேட்டு..?" "வீ..வீட்டுக்கு கெஸ்ட் வந்துட்டாங்க.." "ம்ம்.. எல்லாம் நம்மள மண்டை காய விடுறதுக்குனே எங்க இருந்தாவது வந்துருவானுக..!! சரி போலாமா..?" "ம்ம்.. போலாம்..!!" கார் கிளம்பியது. திவாகருக்கு இன்னும் கோபம் போகவில்லையோ என்று திவ்யாவுக்கு பட்டது. நேற்று நள்ளிரவு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாமல் விட்டதற்கு காலையில் அவனிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டாள். 'உடம்பு சரியில்லை.. நல்ல தலைவலி..' என்று சமாளித்துப் பார்த்தும் அவன் சமாதானம் ஆகவில்லை. நன்றாக இவளை திட்டிவிட்டு காலை கட் செய்துவிட்டான். அப்புறம் திவ்யா திரும்ப கால் செய்தபோது, திவாகர் எடுக்கவில்லை. திவ்யாவுக்கு ஏனோ மறுபடியும் கால் செய்து அவனிடம் கெஞ்ச தோன்றவில்லை.

அவளுடைய மனதில் வேறு சில குழப்பங்கள். அப்படியே விட்டுவிட்டாள். மதியத்துக்கு மேல் அவனே திரும்ப கால் செய்தான். 'ஈவினிங்காவது சீக்கிரம் வா..!!' என்றான் கோபம் குறைந்தவன் போல. இப்போது பார்த்தால் மீண்டும் கோபமாக இருக்கிறானோ என்பது மாதிரி இருந்தது அவனது முகம். ஆனால் அவள் அவ்வாறு நினைத்து கொண்டிருக்கும்போதே, "ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்குற திவ்யா..?" திவாகர் மிகவும் கவலையாக கேட்டான். "அ..அப்டிலாம் ஒன்னும் இல்லையே..?" "இல்ல.. உன் முகம் ஏதோ வாடிப் போன மாதிரி இருக்குது..!!" "சேச்சே.. அப்டிலாம் எதுவும் இல்ல திவாகர்.. நான் நார்மலாத்தான் இருக்குறேன்..!!" "ம்ம்ம்... இந்த ட்ரெஸ் உனக்கு நல்லா இருக்கு திவ்யா..!!" "தே..தேங்க்ஸ்.." சொல்லிவிட்டு திவ்யா மெலிதாக புன்னகைக்க, அவனும் இப்போது இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தான். 'இவன் எந்த நேரத்தில் எந்த மாதிரி பிஹேவ் செய்வான் என்றே புரிந்து கொள்ளவே முடியவில்லையே.. ஏன்..?' என திவ்யா இப்போது மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். தான் அணிந்திருந்த உடையை ஒருமுறை குனிந்து பார்த்துக் கொண்டாள். பார்த்ததுமே அசோக்கின் நினைவு அவளுடைய மனதுக்குள் பரபரவென பரவ ஆரம்பித்தது.ஐயே.. இது எனக்கு பிடிக்கவே இல்ல.." "ப்ச்.. உன் ஆளுக்கு புடிக்கனுமா வேணாமா..?" "பு..புடிக்கணும்.." "அப்போ இதை எடுத்துக்கோ..!!" அசோக்கின் நினைவு வந்ததும், சற்றுமுன் ஆட்டோவுக்குள் இருந்த அதே மனநிலைக்கே திவ்யா இப்போது மீண்டும் ஆட்பட்டாள். மீண்டும் குறுக்கும் நெடுக்குமாய் அதே குழப்ப எண்ணங்கள். மீண்டும் அதே தலைவலி..!! திவாகர் அமைதியாக காரை செலுத்திக் கொண்டிருக்க, திவ்யா கண்களை மூடி மனதை ஆசுவாசப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தாள். ஒரு பத்து நிமிடங்கள் இருக்கும். ஏதோ ஒரு குழப்பமான கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த திவ்யா திடீரென விழிப்பு வந்தவளாய் தலையை உதறிக் கொண்டாள்.கார் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். சுற்றிலும் கும்மென்று இருள் மண்டிக்கிடந்தது. தெருவிளக்குகள் கூட இல்லாத சாலையில் கார் சீறிக் கொண்டிருந்தது. "எங்க போயிட்டு இருக்கோம்..?" திவ்யா குழப்பமாக கேட்டாள். "என் வீட்டுக்கு..!!" "வீட்டுக்கா..? வீட்லையா பார்ட்டி..??" "எஸ்..!!" "நே..நேத்து ஏதோ ரெஸ்டாரன்ட்ன்னு சொன்னீங்க..?" "அது என் பிசினஸ் பிரண்ட்சுக்காக.. அது ஈவினிங்கே முடிஞ்சது..!! இது உனக்கு மட்டும்.. ஸ்பெஷலா..!!" திவாகர் சொல்லிவிட்டு இளித்தான். "ஓ..!! நான் ரெஸ்டாரன்ட்ன்னு நெனச்சேன்.." "எங்க இருந்தா என்ன..? அதில்லாம.. நீ இதுவரை என் வீட்டுக்கு வந்ததே இல்லைல..?" "ம்ஹூம்.." "இன்னைக்கு வா.. வந்து பாரு.. நீ வாழப்போற வீட்டை..!! நேரா வீட்டுக்கு போறோம்.. ஃபோன் பண்ணி சாப்பாடு ஆர்டர் பண்றோம்.. மொட்டை மாடில கேண்டில் லைட் வெளிச்சத்துல உக்காந்து சாப்பிடுறோம்..!! வாவ்... நெனச்சுப் பாக்கவே ரொம்ப ரொமாண்டிக்கா இருக்குல..?" திவாகர் உற்சாகமாக கேட்க, "ம்ம்ம்.." திவ்யா சுரத்தே இல்லாத குரலில் சொன்னாள். அதன்பிறகு ஒரு ஐந்து நிமிடங்களில் கார் அந்த வீட்டை அடைந்தது. சுற்றிலும் எந்த வீடும் இன்றி இருளுக்குள் தனியாக நின்றிருந்தது திவாகரின் வீடு. திவ்யா நினைத்ததை விட வீடு பெரிதாக பிரமாண்டமாகவே இருந்தது. திவாகர் காரை வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்தி பார்க் செய்தான். இறங்கிக் கொண்டார்கள். அந்த ஆறடி உயர க்ரில் கேட்டை திவாகர் திறந்து உள்ளே தள்ளிவிட்டான். இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். "வீட்ல யாரும் இல்லையா..?" ஹாலுக்குள் நுழைந்ததும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே திவ்யா கேட்டாள். "நீ வர்றேன்னு வேலைக்காரங்களுக்குலாம் லீவ் கொடுத்து அனுப்பிச்சுட்டேன்..!!" திவாகர் சொல்ல, திவ்யாவுக்கு ஏதோ மனதுக்குள் உறுத்தியது. 'ஏன்.. அவர்கள் இருந்தால் என்ன..?' என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, திவாகர் கேஷுவலான குரலில் கேட்டான். "சரி என்ன சாப்பிடுற..? காபி, டீ ஆர் ஜூஸ்..?" என்று கேட்டவன், திவ்யா பதில் சொல்வதற்கு முன்பே, "ஜூஸ் சாப்பிடலாம்.. சரியா..?" என்று அவனே பதிலும் சொல்லிக்கொண்டான். மேலும், "நானே இன்னைக்கு என் கையால.. என் செல்ல திவ்யாக்குட்டிக்கு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரேன்.. ஜஸ்ட் டூ மினிட்ஸ்.. இங்கயே வெயிட் பண்ணு..!!" என்று கொஞ்சலாக சொல்லிவிட்டு உள்ளறைக்குள் சென்று மறைந்தான். திவ்யாவுக்கு எதுவுமே சொல்ல தோன்றவில்லை. திவாகரை எதிர்த்து எதுவும் பேச தோன்றவில்லை. அமைதியாக சென்று ஜன்னலுக்கு அருகே நின்று கொண்டவள், கர்ட்டைனை விலக்கி வெளியில் தெரிந்த இருளை வெறித்தாள். ஒரு ஐந்து நிமிடத்தில் திவாகர் மீண்டும் ஹாலுக்குள் பிரவேசித்தான். இப்போது அவனுடைய இரண்டு கைகளிலும் இரண்டு க்ளாஸ்கள் உதித்திருந்தன. சிரித்தவாறே நடந்து வந்து திவ்யாவின் தோளை தொட்டான். அவள் திரும்பி பார்த்ததும் ஒரு க்ளாஸை அவளிடம் நீட்டினான். திவ்யா குழப்பமான குரலில் கேட்டாள். "என்னது இது..?" "ஸ்வீட் லைம்..!!" "ஐயோ.. லைம் எனக்கு பிடிக்காதே.." திவ்யா முகத்தை சுளித்தவாறே சொல்ல, "ஆனா.. எனக்கு பிடிக்குமே..?" திவாகர் பல்லை காட்டினான். "கமான் திவ்யா.. சாப்பிடு.. நல்லாருக்கும்.." என்று அவளை கட்டாயப்படுத்தினான். திவ்யாவும் சற்று தயங்கிவிட்டு, அப்புறம் மெல்ல அந்த ஜூஸை பருக ஆரம்பித்தாள். ஜூஸ் குடித்து முடித்ததும், "சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டேன் திவ்யா.. இன்னும் டென், ஃபிப்டீன் மினிட்ஸ்ல வந்துடும்..!! வா.. அதுவரை நான் உனக்கு வீட்டை சுத்தி காட்டுறேன்..!!" காலி க்ளாசை டீப்பாயில் வைத்துவிட்டு, இருவரும் ஹாலில் இருந்து உள்ளறைக்குள் நுழைந்தார்கள். திவாகர் ஒவ்வொரு அறையாக திறந்து அவளுக்கு காட்டிக் கொண்டு வந்தான். ஒரு அறைக்குள் நுழைந்ததும் உள்ளே விளக்குகளை போட்டுவிட்டு, சற்றே குறும்பான குரலில் சொன்னான். "இந்த வீட்லயே இதுதான் ரொம்ப ஸ்பெஷலான ரூம் திவ்யா.. ஹாஹா.. நம்ம பெட்ரூம்..!!" வாயெல்லாம் பல்லாக சொல்லிவிட்டு கண்ணடித்தான். திவ்யா முகத்தை இறுக்கமாகவே வைத்திருக்க, திவாகர் தொடர்ந்தான். "நம்ம லைஃப்ல இந்த ரூம்லதான்.. நாம ரொம்ப நேரம் ஸ்பென்ட் பண்ண போறோம் ..!! ஹஹாஹஹாஹஹா..!!" திவாகர் ஏதோ பெரிய ஜோக் அடித்தவன் போல சிரிக்க, திவ்யாவால் ஏனோ அந்த ஜோக்கை ரசிக்க முடியவில்லை. அவஸ்தையாக நெளிந்தாள். இப்போது திவாகர், அவளை நெருங்கி, "உள்ள வா திவ்யா.. உனக்கு ஒன்னு காட்டுறேன்..!!" என்றவாறு திவ்யாவின் தோளில் கைபோட்டு அவளை அணைத்துக் கொண்டான். உடனே, "ஐயோ.. எ..என்ன திவாகர் இது..?" திவ்யா பதறிப்போய் விலகிக்கொண்டாள். "ஏன்.. என்னாச்சு..?" "இ..இல்ல.. ஒண்ணுல்ல.." "அப்புறம் என்ன..? வா..!!" என்றவாறே அவன் மீண்டும் அணைத்துக் கொள்ள முயல, திவ்யா மீண்டும் விலகினாள். "நோ திவாகர்.. வேணாம்.." "ஏன்..?" திவாகர் இப்போது முகம் சுருங்கிப் போனவனாய் கேட்டான். "எ..எனக்கு பிடிக்கலை.." "அதான் ஏன்னு கேக்குறேன்.." "எ..எனக்கு சொல்ல தெரியலை.. ஆனா வேணாம்..!!" "கமான் திவ்யா.. என்ன நீ இப்படி வெட்கப்படுற..? வீ ஆர் லவ்வர்ஸ்..!! லவ் பண்றவங்க இந்த மாதிரி ஹக் பண்ணிக்கிறது.. கிஸ் பண்ணிக்கிறது.. எல்லாம் சகஜம்..!! கமான்..!!" சொன்ன திவாகர் இப்போது மீண்டும் திவ்யாவை அணைத்துக்கொண்டான். ஆனால் இந்தமுறை அவள் விலகிவிட முடியாதபடி மிக இறுக்கமாக அவளை பிடித்திருந்தான். திவ்யா பதறினாள். 'ப்ளீஸ் திவாகர்..' என்றவாறு விலகிக்கொள்ள முயன்றாள். அவளால் முடியவில்லை. திமிறினாள். முடியவில்லை. வேறு வழியில்லாமல் கெஞ்சலாக சொன்னாள். "ப்ளீஸ் திவாகர்.. விட்ருங்க.. எ..எனக்கு பிடிக்கலை..!!" "ஹாஹா.. எனக்கு பிடிச்சிருக்கே..? நான் விட மாட்டேன்.." திவாகர் பிடியை இன்னும் இறுக்கமாக்கினான். "ப்ளீஸ் திவாகர்.." திவ்யாவின் கண்களில் இப்போது நீர் துளிர்க்க ஆரம்பித்தது. "நோ..!!" "ப்ளீஸ்.." "ஹாஹா.. என்ன நீ..? நான் தொடாம வேற யாரு உன்னை தொடப்போறாங்க..? எனக்கு இல்லாத உரிமையா..?" என்று கேட்டவாறே திவாகர், தன் பிடிக்குள் சிக்கியிருந்த திவ்யாவின் முகத்தை நோக்கி குனிந்து முத்தமிட முயன்றான். அவ்வளவுதான்..!!! திவ்யாவுக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு ஆவேசம் வந்ததோ. 'நோ..!!!!' என்று அலறியவாறே, திவாகரின் மார்பில் இரண்டு கைகளையும் ஊன்றி, அவனை பலமாக பின்னால் தள்ளிவிட்டாள். திவாகர் நிஜமாக அந்தமாதிரி ஒரு ஆவேசத்தை திவ்யாவிடம் இருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. நான்கு எட்டு பின்புறமாக தள்ளப்பட்டு, பின்பு தடுமாறி நின்றான். திவ்யா அப்புறமும் ஆவேசம் அடங்காதவளாய் கத்தினாள். "இல்லை.. உங்களுக்கு அந்த உரிமை இல்லை..!!!" திவாகர் திகைத்துப் போனான். தன் காதில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாதவனாய் திவ்யாவையே பார்த்தான். பிறகு திணறலான குரலில் கேட்டான். "தி..திவ்யா.. எ..என்ன சொல்ற நீ..? நான் திவாகர்.. உ..உன்.. உன் காதலன்..!! எனக்கு உன்னை தொட உரிமை இல்லையா..??"திவ்யா இப்போது எதுவும் சொல்லவில்லை. சில வினாடிகள் திவாகரின் முகத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்களில் இருந்து இப்போது கண்ணீர் பெருமளவு கொட்டிக்கொண்டிருந்தது. படபடத்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்து கொண்டாள். பதற்றத்தில் அவளுடைய மார்புகள் படுவேகமாய் மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன. திவ்யா இப்போது தலையை குனிந்து கொண்டாள். கண்களை மூடிக்கொண்டாள். கொஞ்ச நேரம் அந்த மாதிரி அமைதியாக நின்றவாறே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். அப்புறம் தன் தலையை நிமிர்த்தி திவாகரை ஏறிட்டாள். அவளுடைய முகத்தில் இப்போது புதிதாக ஒரு தெளிவு பிறந்திருந்தது. தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள். மிகவும் தைரியமான, அதே நேரம் நிதானமான குரலில் திவாகரை கேட்டாள். "நீங்க ஏன் என்னை லவ் பண்றீங்க திவாகர்..?" திவ்யாவின் அந்த கேள்வியை திவாகர் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. திணறினான். "எ..என்ன கேள்வி இது..?" "கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..!! என்னை ஏன் லவ் பண்றீங்க..?" "எ..எனக்கு உன்னை பிடிக்கும்.." "அதான்.. ஏன் என்னை பிடிக்கும்..?" திவ்யா கேள்விகளால் கிடுக்கிப்பிடி போட, திவாகர் உளற ஆரம்பித்தான். "நீ.. நீ அ..அழகா இருக்குற.." "அப்புறம்..?" "எனக்கு புடிச்ச மாதிரிலாம் நடந்துக்குற.." "ம்ம்ம்.. அப்புறம்..??" "அ..அப்புறம்.. நான் சொல்றதெல்லாம் செய்ற.." "ம்ம்.. வேற..?" "அ..அவ்ளோதான்..!! ஆமாம்.. இப்போ எதுக்கு இதெல்லாம் கேக்குற..?" "ம்ம்ம்.. மொத்தத்துல.. நான் அழகா இருக்கேன்.. உங்களுக்கு பிடிச்ச மாதிரிலாம் நடந்துக்குறேன்.. நீங்க சொல்றதெல்லாம் செய்றேன்.. சரியா..??" "நீ.. நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு புரியலை திவ்யா.." திவ்யா எங்கே வருகிறாள் என்றே திவாகருக்கு புரியவில்லை. குழப்பமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். திவ்யாவோ அமைதியாக வேறெங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள். இப்போது அவளுடைய கண்களில் கண்ணீர் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. சில வினாடிகள்..!! அப்புறம் கண்ணீர் வழியும் கண்களுடனே திவாகரின் பக்கம் திரும்பி பார்த்து சொன்னாள். "நான் அழகா இல்லாட்டி கூட.. ஒருத்தன் என்னை லவ் பண்ணுவான்.. தெரியுமா திவாகர்..? நீங்க சொன்னதெல்லாம் நான் செய்றேன்னு சொன்னீங்களே.. நான் சொன்னதெல்லாம் செய்றதுக்கு ஒருத்தன் இருக்கான்.. அது உங்களுக்கு தெரியுமா திவாகர்..?" "தி..திவ்யா.." திவாகரிடம் இப்போது மெலிதாக ஒரு அதிர்ச்சி. "சி..சின்ன வயசுல இருந்தே என்னை லவ் பண்றான்.. என் மேல உயிரையே வச்சிருக்கான்.. என் சந்தோஷத்துக்காக என்னவேணாலும் பண்ணுவான்..!! நான் அவனை அவ்வளவு ஹர்ட் பண்ணினப்புறமும்.. இன்னும் என்னையே நெனச்சுட்டு இருக்குற ஒரு பைத்தியக்காரன் இருக்கான் திவாகர்.. உங்களுக்கு தெரியுமா..?" சொல்லி முடிக்கும் முன்பே திவ்யா உடைந்து போய் 'ஓ..!!' வென அழ ஆரம்பித்தாள். "ஹேய்.. திவ்யா.. நீ ஏதோ தேவையில்லாம குழப்பிக்கிற.." "இல்லை திவாகர்.. இப்போத்தான் நான் தெளிவா இருக்கேன்..!!" "இங்க பாரு திவ்யா.. நான் உன்னை லவ் பண்றேன்.. எனக்கு.." திவாகர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, திவ்யா குறுக்கிட்டாள். "நோ திவாகர்.. நீங்க என்னை லவ் பண்ணலை..!! நான் நானாவே உங்ககிட்ட நடந்துக்கலையே..?? அப்புறம் எப்படி நீங்க என்னை லவ் பண்ணிருக்க முடியும்..?? உ..உங்களுக்கு என்னோட இந்த அழகு புடிக்குமா திவாகர்.. அது இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் எங்கிட்ட இருக்கும்..!! இந்த ட்ரெஸ்.. இந்த மேக்கப்.. என் பேச்சு.. நான் உங்ககிட்ட நடந்துக்கிற விதம்.. இதெல்லாம் பிடிச்சிருக்கா..?? இது எல்லாமே அசோக் எனக்கு சொல்லிக் கொடுத்தது திவாகர்..!! இப்படி நடந்துக்கிட்டாத்தான் உங்களுக்கு பிடிக்கும்னு நான் போட்ட வேஷம்..!! நீங்க நெனைக்கிற திவ்யாவுக்கும், நிஜமான திவ்யாவுக்கும் நெறைய வித்தியாசம்.. நீங்க என்னை லவ் பண்ணலை..!!" "தி..திவ்யா.. அப்படி சொல்லாத.. நீ.. நீ எப்படி இருந்தாலும் எனக்கு உன்னை பிடிச்சிருக்கும்..!!" திவாகர் சமாளிக்க முயன்றான். "இல்லை திவாகர்.. உங்களுக்கு பிடிக்காது..!! உங்களுக்கு பிடிச்ச மாதிரி நான் நடந்துக்கிட்டாத்தான் உங்களுக்கு பிடிக்கும்.. நீங்க சொல்றதெல்லாம் நான் செஞ்சாத்தான் என்னை உங்களுக்கு பிடிக்கும்..!! கொஞ்ச நேரம் முன்னாடி அந்த ஜூஸ் சாப்பிட்டோமே.. அப்போ..!! அது ஒரு சின்ன சாம்பிள்..!! ஆனா.. அசோக்கோட லவ் அப்படி இல்லை..!!" இப்போது திவாகர் சற்றே எரிச்சலானான்."இங்க பாரு.. அவன் லவ் எப்படி வேணா இருந்துட்டு போட்டும்.. ஆனா நீ என்னைத்தான் லவ் பண்ற.. அதை ஞாபகம் வச்சுக்கோ..!!" "இல்லை திவாகர்.. நான் உங்களை லவ் பண்ணலை..!!" திவ்யா பட்டென சொல்ல, திவாகர் அதிர்ந்து போனான். "தி..திவ்யா.. என்ன சொல்ற நீ..?" "ஆமாம் திவாகர்..!! காக்கா குருவின்னா இப்படித்தான் இருக்கும்ன்ற மாதிரி.. காதலும் இப்படித்தான்னு நானா அதுக்கு ஒரு வடிவம் கொடுத்துட்டேன்..!! இந்த மாதிரி ஒரு ஆளோடதான் எனக்கு காதல் வரப் போகுதுன்னு.. முன்னாடியே நானா ஒரு லிஸ்ட் போட்டுக்கிட்டேன்.. அந்த லிஸ்ட்ல இருக்குற குவாலிட்டியோட உங்களை பார்த்ததும் எனக்கு உங்க மேல ஒரு அட்ராக்ஷன்..!! அதை லவ்வுன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டேன்..!! ஆனா.. நாலும் நாலும் சேர்ந்தா எட்டுன்னு கணக்கு போடுற மாதிரி.. காதல் இல்லைன்னு இப்போ எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு..!!" "திவ்யா.. நீ அவசரப் படுற.." "ம்ஹூம்.. நான் ரொம்ப நிதானமா இருக்கேன் திவாகர்..!! உங்களை பிரிஞ்சு இருக்கணும்னு ரெண்டு தடவை அசோக் எங்கிட்ட சொல்லிருக்கான்.. மொத தடவை நான் ஒண்ணுமே சொல்லலை..

ரெண்டாவது தடவை கொஞ்சம் அடம் புடிச்சேன்.. ஆனா ஒத்துக்கிட்டேன்..!! ரெண்டு தடவையும் எதையோ இழந்துட்ட மாதிரி ஒரு ஃபீல் எனக்கு இருந்தது என்னவோ உண்மைதான்.. ஆனா.. என்னால உங்களை பிரிஞ்சு இருக்க முடிஞ்சது.. வேற எந்த குழப்பமும் இல்லாம இருக்க முடிஞ்சது.. ஏன்னா.. அப்போலாம் என்கூட அசோக் இருந்தான்..!! ஆனா இப்போ.. அவனைப் பிரிஞ்சு இந்த பத்து நாள்.. என்னால முடியலை திவாகர்.. சத்தியமா என்னால முடியலை..!!" திவ்யா அழ ஆரம்பித்தாள். "திவ்யா.." "இவ்வளவுக்கும் அவன் தப்பு பண்ணிருக்கான்.. நம்மை பிரிக்க ஏதோ சதி பண்ணிருக்கான்னு நம்புனேன்.. அப்படி இருந்தும் என் மனசு அவன் பின்னாடியே ஓடுதே..? அது ஏன் திவாகர்..??" "ப்ளீஸ் திவ்யா.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு.." "அவன் என்னை தொடுறப்போ.. அவனோட ஸ்பரிசத்துல கெடைக்கிற அந்த ஸ்நேஹ உணர்வு.. உங்க ஸ்பரிசத்துல எனக்கு கிடைக்கலையே.. அது ஏன்..?? அவன் நெஞ்சுல சாஞ்சுக்குறப்போ கெடைக்கிற அந்த அமைதி, அந்த நிம்மதி, அந்த பாதுகாப்பு உணர்வு.. அது வேற யார்கிட்டயும் கெடைக்காதுன்னு எனக்கு இப்போ நல்லா தெரிஞ்சு போச்சு திவாகர்..!!" "ஓஹோ..?? இப்போ முடிவா என்னதான் சொல்ல வர்ற நீ..?" திவாகர் இப்போது பொறுமை இழந்தவனாய் கேட்டான். "இன்னுமா உங்களுக்கு புரியலை..?? நான் அசோக்கை லவ் பண்றேன் திவாகர்..!!! எஸ்..!!! ஐ லவ் அசோக்.. ஐ லவ் ஹிம்..!!!" திவ்யா சற்றுமுன் சித்ரா தன்னிடம் சொன்ன மாதிரி.. திவாகரின் பொட்டில் அறைந்த மாதிரி.. சொன்னாள்.. இல்லை.. கத்தினாள்..!! திவ்யா அந்த மாதிரி உறுதியாகவும் ஆவேசமாகவும் கத்த, திவாகர் ஸ்தம்பித்துப் போனான். அதிர்ந்து போனவனாய் திவ்யாவின் முகத்தையே சில வினாடிகள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். பார்க்க பார்க்க அவனுடைய முகம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறியது. ஒரு மாதிரி வெறுப்பை திவ்யாவின் மீது உமிழ்ந்தது. தன் கால்களை மெல்ல பின்னால் அடியெடுத்து வைத்து, பின்பக்கமாக நகர்ந்தான். கையால் தடவி, அந்த அறையின் சுவற்றோடு பொருத்தப்பட்டிருந்த கப்போர்டை திறந்தான். உள்ளே இருந்த அந்த விஸ்கி பாட்டிலையும், க்ளாசையும் எடுத்தான். அவனுடய செய்கையை பார்த்து திவ்யா திகைத்துக் கொண்டிருக்கும்போதே, கிளாசில் கொஞ்சம் விஸ்கியை ஊற்றி அப்படியே உள்ளுக்குள் சரித்துக் கொண்டான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக