http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : கண்ணாமூச்சி ரே ரே - திரில் தொடர் - பகுதி - 8

பக்கங்கள்

வெள்ளி, 3 ஜூலை, 2020

கண்ணாமூச்சி ரே ரே - திரில் தொடர் - பகுதி - 8

அகழி செல்லும் மலைப்பாதையில் கார் மிதமான வேகத்தில் ஊர்ந்துகொண்டிருந்தது.. நீர் சொட்டுகிற தலைமயிருடன் சிபி காரை செலுத்திக் கொண்டிருந்தான்.. அவனுக்கருகே தெப்பலாக நனைந்த தேகத்துடன் ஆதிரா அமர்ந்திருந்தாள்..!! திறந்திருந்த ஜன்னலின் வழியே காருக்குள் வீசிய குளிர்காற்று ஆதிராவின் மேனியை வருட.. அவளுக்குள் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு.. மார்புப்பந்துகளுக்கு இடையே ஆழமாய் ஒரு இறுக்கத்தை அவளால் உணர முடிந்தது..!!

 "விண்டோ வேணா க்ளோஸ் பண்ணிக்க ஆதிரா..!!" எதேச்சையாக மனைவியை ஏறிட்ட சிபி கனிவுடன் சொல்ல.. ஆதிரா கார்க் கண்ணாடியை ஏற்றி விட்டுக் கொண்டாள்.. அந்தக் கண்ணாடியிலேயே தலையையும் சாய்த்துக் கொண்டாள்.. சாலைக்கு பக்கவாட்டில் சலசலப்புடன் ஓடிய குழலாற்றையே வெறித்து பார்த்தாள்..!! காருக்குள் இப்போது ஒரு கதகதப்பு பரவினாலும்.. அதையும் மீறி ஆதிராவுக்கு குளிரெடுத்தது..!! உடல் வெடவெடக்க, உதடுகள் படபடத்து துடித்தன.. கீழ்வரிசைப் பற்கள் கிடுகிடுத்து மேல்வரிசைப் பற்களுடன் அடித்துக் கொண்டன..!!உதட்டோடும் உடலோடும் சேர்ந்து அவளது உள்ளமும் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது..!!
ஆதிரா மனதளவில் சற்றே தடுமாறிப் போயிருந்தாள்.. அவளுடைய புத்தியில் ஒரு குழப்ப விரிசல் விழுந்திருந்தது..!! தன்னைச் சுற்றி ஏதோ அசாதாரண சம்பவங்கள் நடப்பதுபோல் அவளுக்குள் ஒரு உணர்வு.. அவளது மனத் தடுமாற்றத்திற்கு அந்த உணர்வே காரணம்..!!

அப்படி உணர்வதெல்லாம் உண்மைதானா அல்லது அத்தனையும் மனம் உருவாக்கிக்கொண்ட மாய பிம்பங்களா என்றொரு கேள்வியும் அவளுக்குள் அழுத்தமாக எழுந்தது.. அந்தக் கேள்விக்கு சரியான பதில் சொல்லமுடியாமல்தான் அவளது புத்தியில் ஏற்பட்ட அந்த குழப்ப விரிசல்..!! தனது உணர்வையும் அறிவையும் தானே நம்பமுடியாத நிலையில்தான் ஆதிரா இருந்தாள்..!!

 'ஒரு மோசமான விபத்தால் ஒருவருட நினைவுகளை தொலைத்த மூளைதானே..?? திருட்டுப்போன ஞாபகங்களை திரும்ப கொணர்வதற்கும் திராணியற்ற மூளைதானே..?? தளர்ந்து போயிருக்கிற நிலையில் தவறாக என்னை வழி நடத்துகிறதோ..?? இயல்பை துறந்துவிட்டு இல்லாததை எல்லாம் கற்பனை செய்கிறதோ..?? அருவத்திற்கு உருவம் கொடுக்கிறதோ..?? நீருக்கடியில் பார்த்த உருவம் நிஜமா போலியா..?? நள்ளிரவில் கண்ட காட்சி நனவா கற்பனையா..??' ஆதிரா மிகவும் குழம்பித்தான் போயிருந்தாள்..!!

அவளது குழப்பத்தை கணவனிடம் சொல்லவும் அவளுக்கு விருப்பம் இல்லை.. அவளே தெளிவற்றுப் போயிருக்கையில் அவனிடம் என்னவென்று சொல்வாள்..?? அதுவுமில்லாமல்.. அப்படி சொல்வதனால் அகழியில் ஐந்தாறு நாட்கள் கழிக்கிற அவளது ஆசைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அவஸ்தையான எண்ணம் வேறு ஒருபக்கம்..!!

அதனால்தான்.. "என்னாச்சு ஆதிரா.. ஏதோ சீரியஸா யோசிச்சுட்டு வர்ற..??" என்று சிபி கேட்டபோது, "ஒ..ஒன்னுல்லத்தான்.. இன்ஸ்பெக்டர் சொன்னதைத்தான் யோசிச்சுட்டு இருந்தேன்..!!" என குழப்பத்தை புதைத்து இயல்புக்கு திரும்ப முயன்றாள். மேலும் சிறிது நேரத்தில் இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்..!! காருக்குள் இருந்து ஆதிரா இறங்கிய கோலத்தை கண்டதுமே.. "என்னக்கா.. என்னாச்சு..??" என்று பதற்றமாக கேட்டாள்

எதிரே வந்த தென்றல். "ஒ..ஒன்னுல்ல தென்றல்.. தண்ணிக்குள்ள தவறி விழுந்துட்டேன்..!!" "அச்சச்சோ.. எப்படிக்கா..??" "ப்ச்.. அதை விடு.. அம்மா எங்க..??" "அம்மா எங்க வீட்ல இருக்காங்கக்கா.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க..!! அண்ணன் ஊர்லருந்து வந்திருக்கான்.. அதான்.. என்னை மொதல்ல அனுப்பி வச்சாங்க..!!" "ஓ..!!" "சமையல் வேலைலாம் முடிச்சுட்டேன்க்கா.. சாப்பிடுறீங்களா..??"

 "இல்ல தென்றல்.. பசிக்கல.. கொஞ்ச நேரம் ஆகட்டும்.. அம்மா வந்துரட்டும்..!!" "ம்ம்.. சரிக்கா..!!" தென்றலின் பதிலைக் கூட எதிர்பாராமல் ஆதிரா வீட்டுக்குள் நுழைந்து விடுவிடுவென நடந்தாள்.. காரை நிறுத்திவிட்டு சற்று தாமதமாக வந்த சிபியும் மனைவியை பின்தொடர்ந்தான்..!! அவர்களது அறைக்கு சென்று மாற்று உடை அள்ளிக்கொண்டாள் ஆதிரா.. திரும்ப தரைத்தளத்துக்கு வந்து குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்..!!

சுவற்றோடு பொருந்தியிருந்த குமிழைப் பற்றி திருக.. மேலிருந்து ஜிவ்வென நீர்த்திவலைகள் கொட்டின..!! சரி செய்யப்பட்டிருந்த கீஸரின் உட்சென்று வெப்பமேற்றிக்கொண்ட நீர்க்கற்றைகள்.. எஃகு வட்டின் சிறுசிறு துவாரங்களின் வழியே வெதுவெதுப்பாக வெளிக்கொட்டின..!! ஏதோ ஒரு சிந்தனையில் எங்கேயோ வெறித்த பார்வையுடனே ஷவரில் நனைந்துகொண்டிருந்தாள் ஆதிரா..!! குளித்து முடித்து வேறு உடை அணிந்துகொண்டாள்.. குளியலறையில் இருந்து வெளிப்பட்டபோது வனக்கொடி எதிர்ப்பட்டாள்..!!

ஆற்றுக்குள் விழுந்த சம்பவத்தை பற்றி வனக்கொடி பதைபதைப்புடன் கேட்க.. ஆதிராவோ அதுபற்றிய ஆர்வமில்லாமல் அசுவாரசியமாகவே பதில் அளித்தாள்..!! பிறகு.. பேச்சை மாற்றும் விதமாக.. வனக்கொடி மகனின் வருகை பற்றி விசாரித்தாள்..!! "கதிர் வந்துட்டார் போல..??" "ஆ..ஆமாம்மா..!! காலைலயே வந்துட்டான்.. கார்ல நீங்க அந்தப்பக்கம் போறீங்க.. இவன் இந்தப்பக்கம் வந்துட்டான்..!!" 

"ம்ம்.. எப்படி இருக்காரு..??" "அவனுக்கென்னம்மா.. நல்லாருக்கான்..!! வஞ்சிரமீனு கொழம்பு வச்சா வக்கனையா திம்பான்.. சாப்புட வச்சுட்டு வர செத்த நேரமாயிருச்சு..!! களமேழி போனீகளே வந்துட்டிகளா.. பசியா இருப்பிகளே சாப்புட்டிகளான்னு.. எனக்கு நெனைப்பு பூரா இங்கயேதான் இருந்துச்சு..!! அதான்.. ஆக்கிப்போட்டுட்டு அவசர அவசரமா ஓடியாறேன்..!!" "அதனால என்னம்மா.. பரவால..!! அதான் தென்றல் இங்க இருக்காளே..?? அதுமில்லாம எனக்கு பசியே இல்லம்மா.. வர்ற வழிலதான் நல்லா சாப்பிட்டு வந்தேன்..!!

அவர்தான் ஒன்னும் சாப்பிடல.. பசியா இருப்பார்னு நெனைக்கிறேன்.. அவரை வர சொல்றேன்.. அவருக்கு மட்டும் கொஞ்சம் சாப்பாடு எடுத்து வைங்க..!!" வனக்கொடியிடம் சொல்லிவிட்டு மாடிக்கு படியேறினாள் ஆதிரா.. அறையை அடைந்தவள் சிபியை கீழே அனுப்பினாள்..!! ஈரக்கூந்தலை உலர்த்தலாம் என்று பால்கனிக்கு வந்தவள்.. வீட்டுக்கு முன்புறம் ஓடிய குழலாற்றை காண நேரிட்டதுமே.. வந்தவேலையை மறந்துவிட்டு வேறு சிந்தனைகளில் மூழ்கிவிட்டாள்..!!

அதே குழப்ப சிந்தனைகள்தான்.. குழலாற்றுக்குள் சற்றுமுன்பு வீழ்ந்தெழுந்த வினாடிகள்.. குறிஞ்சியைப்பற்றி சிறுவயதுமுதல் கேள்விப்பட்ட புனைவுகள்.. அகழி வந்ததுமுதல் அடுக்கடுக்காக நடந்த சம்பவங்கள்.. 'அக்காஆஆ' என்று காதுக்குள் ஒலிக்கிற தாமிராவின் ஏக்கக்குரல்..!!
ஆதிரா உணர்ச்சிக் கொந்தளிப்புடன் உடல் சிலிர்க்க நின்றிருந்தாள்..!! அவளும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. ஆற்றங்கரை புல்வெளியில் இருவரும் ஆடிய கண்கட்டி விளையாட்டு.. இப்போது அவளுடைய ஞாபகத்துக்கு வந்தது..!! அதோ.. ஆற்றோரத்தில் கிளைகள் விரித்து அகலமாக நின்றிருக்கும் அந்த மரத்தின் அடிவாரத்தில்தான்..!!

கண்களில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு.. காற்றில் கைகள் அசைத்து தங்கையை தேடியவாறே.. குயிலின் குரலில் பாடினாள் சிறுமி ஆதிரா..!! "கட்டிலும் கட்டிலும் சேர்ந்துச்சா..??" "சேர்ந்துச்சு.. சேர்ந்துச்சு..!!" - அக்காவின் பிடியில் சிக்கிக்கொள்ளாமல்.. அவர்களை சுற்றி வரையப்பட்டிருந்த சிறுவட்டத்துக்குள் அங்குமிங்கும் ஓடியவாறே.. வாய்கொள்ளா சிரிப்புடன் பதில்ப்பாட்டு பாடினாள் குட்டி தாமிரா..!!

 "காராமணி பூத்துச்சா..??" "பூத்துச்சு.. பூத்துச்சு..!!" "வெட்டின கட்டை தழைச்சுச்சா..??" "தழைச்சுச்சு.. தழைச்சுச்சு..!!" "வேரில்லா கத்திரி காய்ச்சுச்சா..??" "காய்ச்சுச்சு.. காய்ச்சுச்சு..!!" தங்கை பற்றிய சிந்தனையில் மூழ்கி சிலை போலவே உறைந்திருந்தாள் ஆதிரா.. எவ்வளவு நேரம் அவ்வாறு நின்றிருந்தாள் என்பது அவளுக்கே நினைவில்லாத மாதிரி..!! திடீரென இரண்டு வலுவான கரங்கள் அவளை பின்பக்கமாக இருந்து அணைத்துக் கொள்ள.. ஆரம்பத்தில் சற்று பதறிப்போய்தான் சுயநினைவுக்கு வந்தாள்.. உடலை ஒருமாதிரி முறுக்கி விழுக்கென்று துள்ளினாள்..!!

அப்புறம்.. அணைத்துக் கொண்டவன் தனது கணவன்தான் என்பது புரிந்ததும்.. அப்படியே அடங்கிப் போனாள்..!! உதட்டில் ஒரு மெலிதான முறுவலுடன்.. அவனுடைய அணைப்புக்குள் சுகமாய் புதைந்து போனாள்..!! சாப்பிடுவதற்கு முன்பு சிபியும் சிறு குளியல் போட்டிருந்தான்.. அவன் மேனியில் இருந்து கிளம்பிய சோப்பு வாசனை ஆதிராவின் நாசிக்குள் புகுந்தது..!! மனைவியின் காதுமடலை மூக்கால் உரசிய சிபி.. பிறகு அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து முகர்ந்து முத்தமிட்டவாறே.. இதமான குரலில் கேட்டான்..!!

 "என்னடா ஆச்சு..?? தண்ணிக்குள்ள விழுந்த ஷாக் இன்னும் போகலையா..??" "அ..அதுலாம் ஒன்னுல்லத்தான்..!!" "அப்புறம் ஏன் ஆத்தையே வெறிச்சு பாத்துட்டு இருக்க..??"
"இ..இல்ல.. சு..சும்மாதான்..!!" "ஹ்ம்ம்ம்ம்.. நடந்ததையே நெனச்சுட்டு இருக்காத ஆதிரா.. Try to be relaxed..!! கொஞ்சம் ரெஸ்ட் எடு.. எல்லாம் சரியா போகும்..!!" "ரெஸ்டா..??" "ம்ம்.. ரெண்டு நாளா நைட்டு சரியாவே தூங்கலை நீ.. காலைல வேற சீக்கிரமே எழுந்துடுற.. கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கி எந்திரி..!!

மைண்ட்க்கு ஃப்ரெஷா இருக்கும்..!!" "நல்ல ஐடியாதான்.. ஆனா எனக்கு தூக்கம் வரலையே..??" "தூக்கம் வரலையா..?? என்ன பண்ணலாம்..?? ம்ம்ம்ம்..." சிலவினாடிகள் யோசனையாக தாடையை சொறிந்த சிபி, பிறகு உதட்டில் ஒரு புன்னகையுடன் சொன்னான். "ஓகே.. நான் உன்னை தூங்க வைக்கட்டுமா..??" "நீங்களா..?? எப்படி..??" ஆதிராவின் கண்களில் ஒரு ஆர்வ மின்னல். "வா.. சொல்றேன்..!!" ஆதிராவின் கரங்களைப் பற்றி கட்டிலுக்கு அழைத்து சென்றான் சிபி.. அவளை அமரவைத்து தானும் அமர்ந்துகொண்டான்..!!

மெத்தையில் சாய்வாக படுத்துக் கொண்டவன்.. மனைவியை இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டான்..!! வெட்கமும் புன்முறுவலுமாய் அவள் இவனை ஏறிட.. "குட்டிப்பொண்ணுக்கு நான் தலைகோதிவிட்டு தட்டிக் குடுப்பேனாம்.. எந்தக்கவலையும் இல்லாம செல்லக்குட்டி என் நெஞ்சுல படுத்து தூங்குவாளாம்..!!" காதலுடன் குறும்பை கலந்து சொன்னான்..!! ஆதிரா சிபியின் மார்பில் தலைசாய்த்து படுத்துக் கொண்டாள்.. இமைகளை மெலிதாக மூடிக்கொண்டாள்..!! சிபி அவளது கூந்தலுக்குள் கைவிரல்களை கோர்த்து.. அங்குமிங்கும் அலைபாயவிட்டு.. இதமாக வருடிக் கொடுத்தான்..!!

இன்னொரு கையால் அவளுடைய முதுகு சதைகளை மிருதுவாக மசாஜ் செய்து தட்டிக்கொடுத்தான்..!! அவ்வப்போது அவளது நெற்றியில் 'இச்.. இச்.. இச்..' என்று இதமான முத்தம் வேறு..!! சிபியின் செய்கைகள் நிஜமாகவே ஆதிராவுக்கு மிகவும் சுகமாக இருந்தது.. அவனுடைய கைவிரல்களின் தடவல், அவளது மனதுக்குள் ஒரு அமைதி பரப்புவதை உணர்ந்தாள்.. அவனுடைய இதயத்துடிப்பின் ஓசை இவளது காதுக்குள் விழ, இவளது இதயத்துடிப்பு படபடப்பு நீங்கி சீரானது.. அவனுடைய மூச்சுக்காற்றின் வெப்பத்தில், அவளுக்கு அவசியமாயிருந்த ஒருவித பாதுகாப்பு கதகதப்பு கிடைத்தது..!!

 சிறிது நேரம்..!! தூக்கம் வராவிட்டாலும், கணவனின் அணைப்பில் கட்டுண்டு சொக்கிக்கிடந்த ஆதிரா.. சற்று தாமதமாகத்தான் சிபியிடம் அந்த மாற்றத்தை உணர்ந்தாள்.. உடனே முகத்தை சற்று நிமிர்த்தி பார்த்தவளுக்கு, 'களுக்' என்று சிரிப்பு வந்துவிட்டது.. அந்த சிரிப்பின் சப்தம் வெளியே வராமல் இருக்க, அவசரமாய் தன் வாயை பொத்திக் கொண்டாள்..!! ஆதிராவுக்கு சிரிப்பு எழுந்ததன் காரணம்.. சிபி இப்போது அசந்து தூங்கிப் போயிருந்தான்..!! கண்கள் செருகிப்போய்.. வாயை 'ஓ'வென்று திறந்து வைத்தவாறு.. மெலிதான குறட்டை ஒலியுடன்..!!

ஆதிராவை தூங்க வைக்கிற முயற்சியில் அவனே அவ்வாறு அசந்து தூங்கிப் போயிருக்க.. அவளோ முகத்தில் ஒரு புன்னகையுடன்.. 'ஹையோ, ஹையோ' என தலையில் தட்டிக் கொண்டாள்..!! அவனுடைய உறக்கத்தை கலைக்காமல் அவனது மார்பில் இருந்து விலகினாள்.. முன்வந்து புரண்டிருந்த கேசத்தை விலக்கி அவனது நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள்..!! என்ன செய்யலாம் என்று ஒருகணம் யோசித்தவள்.. பிறகு, கீழே செல்லலாம் என்ற முடிவுடன் கட்டிலில் இருந்து எழுந்தாள்..!!

 படியிறங்கி ஹாலுக்கு வர.. சமையலறைக்குள் வனக்கொடி பாத்திரத்தை உருட்டுகிற சப்தம் கேட்டது.. !! நடந்து வந்து சோபாவில் அமர்ந்தாள்.. ஏதோ ஒரு சிந்தனையுடனே ரிமோட் எடுத்து டிவியை ஆன் செய்தாள்.. டிவி ஓட ஆரம்பித்த பிறகும் அந்த சிந்தனையிலே மூழ்கியிருந்தவள், சிறிது நேரம் கழித்துத்தான் டிவி திரையை பார்த்தாள்..!! விலங்குகளின் வாழ்க்கைமுறை பற்றிய ஆவணப்படங்களை ஒளிபரப்பு செய்கிற அலைவரிசை அது.. முதுகில் மூன்று கோடுகளோடு ஒரு அணில், மரக்கிளைகளில் அங்குமிங்கும் துள்ளியோடிக்கொண்டிருக்க, பின்னணியில் ஒரு ஆணின் குரல் ஆங்கிலத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது..!!

 "ப்ச்..!!" சலிப்பை உதிர்த்த ஆதிரா, கையிலிருந்த ரிமோட்டில் வேறு சேனல் மாற்றுகிற பட்டனை அழுத்தினாள்.. அகழி வந்த முதல்நாள் நடந்தது போலத்தான்.. சேனல் மாறவில்லை.. அதே சேனலே தடையில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது..!! ஆதிரா நான்கைந்துமுறை கட்டைவிரல் நோக அந்த பட்டனை அழுத்தமாக அமுக்கிப் பார்த்தாள்.. சேனல் மாறவில்லை..!!

ரிமோட்டை பிடித்து உள்ளங்கையில் 'பட்.. பட்.. பட்..' என்று தட்டினாள்.. மீண்டும் டிவி முன்பு ரிமோட்டை நீட்டி முயன்று பார்த்தாள்.. அலைவரிசையில் எந்த மாற்றமும் இல்லை.. அணில் இப்போது கொட்டை கொறித்துக் கொண்டிருந்தது..!! எரிச்சலான ஆதிரா சோபாவில் இருந்து விருட்டென எழுந்தாள்.. டிவியை நெருங்கி அதன் அடிபாகத்தில் இருந்த பட்டனை அழுத்தி வேறு சேனல் மாற்ற முயன்றாள்.. ம்ஹூம்.. பலன் இல்லை.. அதே சேனல்..!! 

"ப்ச்.. என்னாச்சு இந்த டிவி சனியனுக்கு..??" வாய்விட்டே எரிச்சலை வெளிப்படுத்திய ஆதிரா.. சில வினாடிகள் டிவி திரையையே வெறுப்பாக பார்த்தாள்..!! பிறகு, அந்த வெறுப்பு சற்றும் குறையாமல்.. 'ஆணியே புடுங்க வேணாம்' என்று முனுமுனுத்தவாறே.. டிவியின் கேபிள் கனெக்ட் ஆகியிருக்கிற மெயின் ஸ்விட்சை பட்டென ஆஃப் செய்தாள்.. அடுத்த நொடியே அவளுடைய மனதுக்குள் மெலிதான ஒரு திகில் உணர்வு.. ஸ்விட்ச் ஆஃப் செய்தபிறகும், அணைந்துபோகாமல் டிவி ஓடிக்கொண்டிருந்தது.. தெளிவில்லாமல்.. அலை அலையாக.. ஒருமாதிரி வெடுக் வெடுக்கென வெட்டிக்கொண்டு..!!

 "ஸ்ஸர்ர்ர்ரக்.. ஸ்ஸர்ர்ர்ரக்.. ஸ்ஸர்ர்ர்ரக்..!!" என்று வினோத சப்தம் வேறு. அணைந்துபோகாத டிவியையே ஆதிரா விரிந்த விழிகளுடன் மிரட்சியாக பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான்.. படக்கென திரையில் அந்த பிம்பம் தோன்றியது.. சிவப்பு அங்கி போர்த்திய உருவம்.. முகத்தில் வழிகிற கூந்தல் கற்றைகள்.. அந்த கூந்தலின் வழியாக இவளையே உற்றுப்பார்க்கிற ஒற்றை விழி..!!
மிரண்டு போனாள் ஆதிரா.. பயத்தில் பதறித்துடித்த இருதயத்துடன்.. 'ஆ'வென்று கத்துவதற்கு அவள் வாயெடுக்கும்போதே.. டிவி திரை படாரென அணைந்துபோய் ஒற்றைப் புள்ளியாக மறைந்தது..!! அதே நொடி.. "தட்ட்.. ட்ட்டடட்ட்டட்ட்ட... டமார்.. தட்ட்.. தட்.. தட்..!!!!!" என்று பக்கத்து அறைக்குள் இருந்து பலத்த சப்தம். மிரட்சி அப்பிய விழிகளுடனே ஆதிரா பக்கத்து அறையை திரும்பி பார்த்தாள்..

பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த வனக்கொடியும் பதறிப்போய் வெளியே ஓடிவந்தாள்..!! "எ..என்னம்மா சத்தம்..??" "எ..என்னன்னு தெரியலையே..!!" ஆதிராவும் வனக்கொடியும் குழப்பமும் திகைப்புமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.. பிறகு, சப்தம் வந்த அறையை நோக்கி மெல்ல நகர்ந்தார்கள்.. முன்பு ஆதிராவும் தாமிராவும் தங்கிக்கொள்கிற அறைதான் அது..!! அறைக்கதவை தள்ளி இருவரும் உள்ளே நுழைந்தார்கள்..

அறைக்குள் சில பொருட்கள் ஆங்காங்கே கலைந்து கிடந்தன.. பீங்கான் கோப்பை தரையில் உருண்டிருந்தது.. மேஜை விளக்கு தலைகுப்புற கிடந்தது.. கம்ப்யூட்டர் மவுஸ் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருந்தது..!! இவர்கள் உள்ளே நுழைந்ததுமே.. திறந்திருந்த ஜன்னல் கம்பிகளின் வழியாக அணில் ஒன்று வெளியே ஓடுவது தெரிந்தது..!!

 "ச்சே.. இந்த அணிலு பண்ற அட்டகாசம் தாங்க முடியல.. எப்பப்பாரு.. வீட்டுக்குள்ள பூந்து எதையாவது உருட்ட வேண்டியது.. எல்லாத்தையும் வெஷத்தை வச்சு கொல்லப்போறேன் ஒருநாளு..!! ஹ்ம்ம்.. இந்த ஜன்னலை யாரு இப்படி தெறந்து வச்சான்னு தெரியலையே.. மூடித்தான கெடந்துச்சு..??" சலிப்பாக சொல்லிக்கொண்டே வனக்கொடி ஜன்னலை நோக்கி நகர்ந்தாள்.. ஜன்னல் கதவுகளை இழுத்து தாழ் போட்டாள்..!! அதேநேரம் ஆதிராவின் பார்வை எதேச்சையாக வேறெங்கோ சென்றது.. தரையில் விரிந்து கிடந்த ஒரு புத்தகத்தின் மேல் சென்று படிந்தது..!!

அறையை ஒட்டி நின்றிருக்கும் மரஅலமாரியில் அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களில் இருந்து.. ஒன்று மட்டும் கீழே நழுவி விழுந்திருந்தது..!! அந்த புத்தகத்தின்மீது 'சத்.. சத்.. சத்..' என சப்தம் எழுகிற மாதிரி.. சிவப்பு நிறத்தில் ஏதோ திரவம் மேலிருந்து துளித்துளியாய் சொட்டிக்கொண்டிருந்தது..!! தாமிராவுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு..!!

அதற்கென அவள் உபயோகிக்கிற பலவகை வண்ண மைகள்.. கண்ணாடி சீசாக்களில் அடைக்கப்பட்டு.. அலமாரியின் மேலே வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும்..!! அந்த சீசாக்களில் ஒன்றுதான் இப்போது மேலேயே கவிழ்ந்து.. சிவப்பு மையை மட்டும் சொட்டு சொட்டாய் கீழே சிந்திக் கொண்டிருந்தது..!! ஆதிரா பார்வையை கூர்மையாக்கி அந்த புத்தகத்தின் மீது வீசினாள்..!! பிரபல எழுத்தாளர் ஒருவரால் எழுதப்பட்ட நாவல் அது.. அதன் அட்டையில்.. கருப்புநிற பின்னணியில் சிவப்புநிற எழுத்துக்களாக கதையின் தலைப்பு மின்னியது..!!

 "கண்ணாமூச்சி ரே ரே..!!"


ஆதிரா குனிந்து அந்த புத்தகத்தை கையில் எடுத்தாள்.. அந்த புத்தகத்துக்குள் இருந்த இன்னொரு சிறிய புத்தகம் இப்போது வெளியே நழுவி விழுந்தது..!! அது.. அவளுடைய தங்கை தாமிராவின் கல்லூரி ஆட்டோக்ராஃப் புத்தகம்..!!

 அந்த ஆட்டோக்ராஃப் புத்தகத்தை பார்த்ததுமே ஆதிராவுடைய மூளையில் பளீரென்று ஒரு மின்னல்.. தொலைந்துபோன ஒரு சம்பவத்தின் நினைவுகளை அவளது மூளை இப்போது சட்டென மீட்டெடுத்தது.. ஒரு வருடத்திற்கு முன்பாக நடந்த அந்த சம்பவம்..!! இதோ.. இதே அறையில்தான்.. அதோ.. அந்த கம்ப்யூட்டர் மேஜை முன்பாகத்தான்.. தாமிரா அமர்ந்து அவளது கம்ப்யூட்டரில் ஏதோ கட்டுரை டைப் செய்து கொண்டிருந்தாள்..!!

இதே ஆட்டோக்ராஃப் புத்தகத்தைத்தான் ஆதிரா அந்த மேஜை மீது விசிறியடித்தாள்.. திகைத்துப்போய் நிமிர்ந்து பார்த்த தங்கையிடம், ஆதங்கம் நிறைந்த குரலில் கேட்டாள்..!! "என்னடி இது..??"
"எ..எது..??" - தாமிராவிடம் ஒருவித குழப்பம். "ம்ம்ம்ம்..??? இது..!!!" கடுப்பாக சொன்ன ஆதிரா.. அந்த ஆட்டோக்ராஃப் புத்தகத்தை திறந்து.. ஒரு குறிப்பிட்ட பக்கத்தை தங்கையிடம் விரித்து காட்டினாள்..!! அவ்வாறு விரித்து காட்டப்பட்ட பக்கத்தில்.. தாமிராவின் கல்லூரி தோழியால் கிறுக்கப்பட்ட அந்த வழியனுப்பு வாழ்த்து செய்தி..!!

 "தெளிவாக யோசி பெண்ணே.. துணிச்சலாக ஒரு முடிவெடு.. உனது காதல் கைகூட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!! - அன்புத்தோழி அகல்விழி" ஆதிரா அந்தப்பக்கத்தை திறந்து காட்டியதுமே.. தாமிராவின் முகத்தில் பட்டென ஒரு சோர்வு.. 'பாத்துட்டாளா' என்பது போல ஒரு சலிப்பு..!!

அவஸ்தையாக இமைகளை மூடிக்கொண்டவள், எதுவும் பேசாமல் தலையை குனிந்துகொண்டாள்.. ஆதிரா அவளை விடவில்லை..!! "கேக்குறேன்ல..?? சொல்லுடி..!!" - ஆதிராவின் குரலில் ஒரு எரிச்சல். "என்ன சொல்ல சொல்ற..??" - அதே எரிச்சல் தாமிராவின் குரலிலும். "அப்டியே அறையப் போறேன் பாரு உன்ன..!! இத்தனை நாளா யாரையோ லவ் பண்ணிக்கிட்டு.. எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னு கூட உனக்கு தோணலைல..?? எல்லாம் நானே தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு..!!"

 "ப்ச்.. புரியாம பேசாதக்கா..!!"

 "யார்டி புரியாமப் பேசுறா..?? அமுக்குணி கழுதை..!!" 

".............................."

 "அத்தானை நான் லவ் பண்ற விஷயத்தை உன்கிட்ட சொன்னப்போ எனக்கு எத்தனை வயசுடி இருக்கும்..??"

 ".............................."

 "சொல்லுடி..!!"

 "என்ன.. ப..பன்னெண்டு பதினாலு வயசு இருக்கும்..!!"

 "ஹ்ம்ம்.. அப்போ நான் ஏஜ் அட்டண்ட் பண்ணக்கூட இல்ல.... என் மனசுல அந்த மாதிரி ஒரு நெனைப்பு வந்ததுமே, உடனே உன்கிட்ட வந்து சொன்னேன்..!! அப்போவே என் மனசுல இருக்குறதெல்லாம் எவ்வளவு ஃப்ராங்க்கா உன்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன்..?? பண்ணிக்கிட்டேனா இல்லையா..??"

 "ம்ம்.. பண்ணிக்கிட்ட..!!" 

"அப்புறம்.. நீ மட்டும் ஏண்டி இப்படி இருக்குற..??"

 "எப்படி..??"

 "ம்ம்..?? சரியான அழுத்தக்காரியா..!!"
"ஹையோ.. உனக்கு புரியலக்கா..!!" "என்ன புரியல..?? நீ சொல்லு.. நான் புரிஞ்சுக்குறேன்..!!" "என்ன சொல்றது.. உன் லவ் மாதிரி என் லவ் அவ்வளவு ஈஸி கெடையாது.. நீ அத்தானை லவ் பண்ணின.. அத்தானுக்குத்தான் உன்னை முடிக்கணும்னு அப்பாவுக்கும் அப்போ இருந்தே அபிப்ராயம்.. It's all so easy for you..!!

என் லவ் அந்த மாதிரி இல்லக்கா.. It's really complicated.. நெறைய பிரச்சினை இருக்கு இதுல.. இந்த லவ் சக்சஸ் ஆகும்னே எனக்கு நம்பிக்கை இல்ல..!! அப்படி இருக்கும்போது அதை எப்படி உன்கிட்ட வந்து பட்டுன்னு சொல்ல சொல்ற..??" தாமிரா அந்தமாதிரி வருத்தம் தோய்ந்த குரலில் பரிதாபமாக சொல்லவும்.. அத்தனை நேரம் அவள்மீது ஆதிராவுக்கு இருந்த கோவம், இப்போது சட்டென காணாமல் போனது.. உள்ளத்துக்குள் உடனடியாய் தங்கைமீது ஒரு அன்பு ஊற்று பீறிட்டு கிளம்பியது..!!

தாமிராவின் கையை தனது கையால் ஆதரவாக பற்றிய ஆதிரா.. இப்போது கனிவான குரலில் கேட்டாள்..!! "ப்ச்.. ஏண்டி இப்படிலாம் பேசுற..?? அப்படி என்ன உன் லவ்ல பிரச்சினை..?? சரி அதை விடு.. அந்தப் பையன் யார்னு சொல்லு மொதல்ல..!!" ஆதிரா கேட்க, "........................." தாமிரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்.

 "சொல்லுடி.. ப்ளீஸ்..!!" ஆதிரா திரும்ப கெஞ்சலாக கேட்கவும், தாமிரா இப்போது வாய் திறந்தாள். "க..கதிர்..!!" தாமிரா சொன்னதும் ஆதிராவின் முகத்தில் ஒரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். "யா..யாரு..?? நம்ம கதிரா..?? ந..நம்ம வனக்கொடிம்மா பையனா..??" "ம்ம்..!!" "எ..எப்படிடி ..??" "எ..எப்படின்லாம் எனக்கு சொல்லத் தெரியலைக்கா.. அப்படித்தான்..!!" "எத்தனை நாளா..??" "இ..இப்போத்தான்.. கொஞ்ச நாளா..!! ஃபர்ஸ்ட் அவன் ப்ரொபோஸ் பண்ணினான்.. எனக்கு பிடிக்கல வேணான்னு சொல்லிட்டேன்.. அவனை அவாய்ட் பண்ணேன்.. அப்புறமும் அவன் ஸ்ட்ராங்கா இருந்தான்.. கொஞ்சம் கொஞ்சமா என்னையும் கரைச்சுட்டான்..!!"

 "ஹ்ம்ம்..!!" ஆதிரா இப்போது பட்டென ஒரு யோசனையில் ஆழ்ந்தாள்..!! கதிர் நல்ல பையன்தான்.. கெட்ட பழக்கம் என்றெல்லாம் எதுவும் கிடையாது.. ஆதிரா, தாமிரா, சிபி என மூவரோடும் நான்காவது ஆளாக சிறுவயது முதலே நட்புடன் சுற்றி திரிபவன்தான்..!!

பட்டப்படிப்பு முடித்திருக்கிறான்.. இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் தகுந்த வேலை கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறான்..!! அவனுக்கு தாமிரா மீது எப்போதும் ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு என்பதை ஆதிரா முன்பே அறிவாள்.. ஆனால்.. இருவரும் இப்படி காதலில் சிக்கிக் கொள்வார்கள் என்பதைத்தான் அவள் எதிர்பார்த்திரவில்லை..!!

 இளையவர்களுக்கு கதிர் மீது எந்த பாரபட்சமும் இல்லை.. தங்களில் ஒருவனாகத்தான் அவனை பார்த்தார்கள்..!! ஆனால் பெரியவர்களுக்கும் அப்படி என்று சொல்லமுடியாது.. முக்கியமாக தணிகைநம்பிக்கு..!! ஒரு சிறு விஷயத்திற்காக கௌரவம் பார்த்துக்கொண்டு.. பூவள்ளியின் சொந்தங்களை இன்று வரை தள்ளி வைத்திருப்பவர்..

தனது வீட்டில் வேலைபார்க்கும் பெண்ணின் மகனுக்கு, தன் மகளை மணமுடித்துக் கொடுக்க சம்மதிப்பார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்..?? தாமிராவின் பயமும் கவலையும் ஆதிராவுக்கு இப்போது தெளிவாக புரிந்தது..!! "அப்பா சம்மதிக்க மாட்டார்னு நெனைக்கிறியா..??" "ஏன்.. நீ சம்மதிப்பார்னு நெனைக்கிறியா..??" "இல்ல.. சம்மதிக்க மாட்டார்னுதான் தோணுது..!!" "எனக்கும் அப்படித்தான்..!!"

 "ஹ்ம்ம்.. இதைத்தான் காம்ப்ளிகேட்டட்னு சொன்னியா..??" "ஆமாம்..!! அதுமில்லாம அவன் இப்போ ஜாப்ல வேற இல்ல.. அவன் மொதல்ல நல்ல வேலைல செட்டில் ஆகணும்..!!" "ஏதோ இண்டர்வியூன்னு சொல்லிட்டு இருந்தாரு..??" "ம்ம்.. கோயம்புத்தூர்ல.. ஒரு காட்டன் மில்லுல சூப்பர்வைசர் வேலையாம்.. இன்னைக்கு ஈவினிங் கெளம்புறான்..!! அப்படியே சென்னை வேற போறதா சொன்னான்.. ஒருவாரம் கழிச்சுதான் வருவான்னு நெனைக்கிறேன்..!!"

 "ஹ்ம்ம்ம்.. கவலைப்படாத தாமிரா.. அவருக்கு கண்டிப்பா இந்த வேலை கெடைச்சிடும்.. பாதி ப்ராப்ளம் சால்வ் ஆய்டும்..!! அப்பாவை சம்மதிக்க வச்சுட்டா மீதி ப்ராப்ளமும் சால்வ்ட்..!!" "ம்ம்..!!" "நான் வேணா அப்பாட்ட பேசிப் பாக்கட்டுமாடி..??" "எதைப்பத்தி..??" "உன் லவ் மேட்டர் பத்தித்தான்..!!" "எப்போ..??" "ஏன்.. இப்போவேதான்..!!"

 "ஹையோ.. சும்மா இருக்கா நீ வேற.. காரியத்தையே கெடுத்துடாத..!!" "என்னடி சொல்ற..??" "பின்ன என்ன.. இப்போத்தான் உனக்கும் அத்தானுக்கும் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சிருக்காங்க.. இந்த நேரத்துல இதைப்போய் சொல்லி அவங்களை டென்ஷனாக்க வேணாம்..!! நீ மொதல்ல கல்யாணம் ஆகி இந்த வீட்டை விட்டு கெளம்பு.. என் பிரச்சினையை நான் பாத்துக்குறேன்..!!"

 "ஏண்டி இப்படி பேசுற.. உனக்கு ஒரு கஷ்டம்னா அது எனக்கும் இல்லையா..??" "ஹையோ.. நான் அப்படி சொல்லலக்கா.. வீடே சந்தோஷமா இருக்குறப்போ.. இந்த விஷயத்தை சொல்லி அந்த சந்தோஷத்தை கெடுக்க வேணாம்..!! மொதல்ல உன் கல்யாணம் நல்லபடியா நடந்து முடியட்டும்.. இதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்..!! புரியுதா..??"

 "ம்ம்..!!" "கொஞ்ச நாளைக்கு இந்த விஷயத்தை உனக்குள்ளேயே வச்சுக்கோக்கா.. யார்ட்டயும் சொல்லாத.. ப்ளீஸ்..!!" குறிப்பிட்ட தேதியில் அந்த கல்யாணம் நடப்பதற்குள்ளாகத்தான் தாமிரா மறைந்து போன சம்பவம்.. அந்த அதிர்ச்சியில் இருந்து அந்த குடும்பம் மீண்டு, சிபிக்கும் ஆதிராவுக்கும் கல்யாணம் நடக்க மேலும் ஒருவருடம் ஆகிப்போனது..!! "ஆதிராம்மா.. என்னாச்சுமா..??" வனக்கொடி வந்து தோளைப் பற்றவும்தான் ஆதிரா பழைய நினைவுகளில் இருந்து மீண்டாள். "ஒ..ஒன்னுல்லம்மா..!!" என்றாள்

தடுமாற்றமாக. "ஐயையே.. மைப்பாட்டிலை வேற தட்டி விட்டுடுச்சா..??" வெறுப்புடன் முனுமுனுத்தவாறே, அருகில் கிடந்த ஸ்டூலை இழுத்துப்போட்டு ஏறி.. சாய்ந்திருந்த கண்ணாடி சீஸாவை சரியாக நிமிர்த்தி வைத்தாள் வனக்கொடி..!! மனதில் ஒருவித குழப்ப சிந்தனையுடன் எங்கேயோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஆதிரா.. வனக்கொடியின் பக்கமாக திரும்பாமலே அவளிடம் கேட்டாள்..!!
"இன்னைக்கு சாயந்திரம் கதிர் எங்கயும் வெளில போவாராம்மா..??"

 "இல்லம்மா.. வீட்லதான் இருப்பான்.. ஏன் கேக்குற..??" "எனக்கு அவர் கூட கொஞ்சம் பேசணும்மா..!!" இறுக்கமான குரலில் சொல்லிவிட்டு.. சிவப்புமை படர்ந்த புத்தகத்தையும், தங்கையின் ஆட்டோக்ராஃப் புத்தகத்தையும் ஒரு கையில் பிடித்தவாறே.. அந்த அறையின் வாசலை நோக்கி நடந்தாள் ஆதிரா..!! ஆதிராவுக்கு வியப்பாக இருந்தது.. தொலைந்துபோன ஒருவருட நினைவுகளில், தங்கையின் காதல் பற்றிய நினைவும் அடங்கியிருந்ததை எண்ணி ஒருவித அலுப்பு.. 'அதையும் கூடவா மறந்து தொலைப்பாய் அறிவுகெட்ட மூளையே..?' என்று தனது நிலையை தானே கடிந்துகொண்டாள்..!! அன்று மாலை சிபி கண் விழித்ததுமே, ஆதிரா அவனிடம் அந்த விஷயம் பற்றி பேசினாள்..

தனக்கு ஞாபகம் வந்த தாமிராவின் காதல் பற்றிய நினைவை தெளிவாக விளக்கி கூறினாள்..!! தாமிரா கதிரை காதலித்த செய்தி சிபிக்கு புதிதாக இருந்தது.. 'என்ன சொல்ற ஆதிரா..?? அப்படியா..?? கதிரையா..??' என்று திரும்ப திரும்ப கேட்டான்..!! 'ஆமாம் அத்தான், எனக்கு இப்போத்தான் ஞாபகம் வந்தது' என்று அவனை நம்ப வைக்க முயன்றாள்.. அந்த ஆட்டோக்ராஃப் புத்தகத்தையும் ஆதாரமாக திறந்து காட்டினாள்..!!

அவனும் சிறிதுநேர சிந்தனைக்கு பிறகு.. 'சரிதான்' என்று சமாதானம் ஆனதும்.. ஆதிரா அவனிடம் கேட்டாள்..!! "அவ லவ் பண்ற விஷயத்தை அப்போதைக்கு யார்ட்டயும் சொல்லவேணாம்னு தாமிரா சொல்லிருந்தா.. அவ போனப்புறமும்கூட அதைப்பத்தி நான் உங்கட்ட சொல்லலையா அத்தான்..??" ஆதிரா அவ்வாறு கேட்டதும் சிபி அவளுடைய கையை பற்றிக்கொண்டான். அவளது விரல்களை வாஞ்சையாக வருடிக் கொடுத்தவாறே சொன்னான். "இல்ல ஆதிரா.. சொல்லல..!!

தாமிரா போனதுக்கப்புறம் நீ ரொம்பவே உடைஞ்சு போய்ட்ட.. யார்ட்டயும் சரியா பேசுறது கூட கெடையாது.. எந்த நேரமும் எங்கயாவது வெறிச்சு பாத்துட்டுதான் உக்காந்திருப்ப.. நீ கொஞ்சம் நார்மலுக்கு வர்றதுக்கே ஆறு ஏழு மாசம் ஆய்டுச்சுடா..!! அவளே நம்மள விட்டு போனப்புறம் அவ லவ் மேட்டரை வெளில சொல்லி என்ன ஆகப்போகுது.. ம்ம்..?? அது உனக்கு அவ்வளவு முக்கியமா பட்டிருக்காது..!!"

 "ம்ம்.. ஆமாம்.. அப்படித்தான் இருக்கணும்..!! ஹ்ம்ம்.. அப்புறம்.. இன்னொரு விஷயம்..!!" "என்ன..??" "இன்னைக்கு அவரை நேர்ல போய் பார்த்து பேசலாம்னு இருக்கேன் அத்தான்..!!" "யாரை.. கதிரையா..??" "ம்ம்..!!" "இந்த விஷயத்தை பத்தி பேசப் போறியா..??" "ஆமாம்..!!" "எதுக்கு ஆதிரா..?? அதெல்லாம் தேவையில்லாததுன்னு தோணுது..!!" "இல்லத்தான்.. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிருக்காங்க.. தாமிராவை பத்தி நமக்கு தெரியாத ஏதாவது விஷயம் அவருக்கு தெரிஞ்சிருக்க சான்ஸ் இருக்கு..!! அவர்ட்ட பேசினா ஏதாவது மேட்டர் கெடைக்கும்னு நெனைக்கிறேன்..!!" ஆதிரா அவ்வாறு சொல்ல, சிபி அவளையே முறைப்பாக பார்த்தான்.. அவனது பார்வையின் அர்த்தம் புரியாதவளாய் ஆதிரா குழப்பமாக கேட்டாள்..!!

 "என்னத்தான்.. அப்படி பாக்குறீங்க..??" "ம்ம்..?? அகழி வந்து அஞ்சுநாள் இருந்தா போதும், மறந்து போனதுலாம் தானா ஞாபகம் வரும்னு சொல்லி, என்னை இங்க கூட்டி வந்த.. இப்போ என்னடான்னா.. நீயாவே அதெல்லாம் வம்படியா வரவச்சுக்குறியோன்னு தோணுது..!!" "ச்சேச்சே.. அப்படிலாம் இல்லத்தான்..!!" "இந்த மாதிரிலாம் ஸ்ட்ரெயின் பண்ணிக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்கடா..!!" "ப்ளீஸ்த்தான்.. இது மட்டும்..!! ப்ளீஸ்..!!"

ஆதிராவின் கெஞ்சலுக்கு இறங்கிய சிபி, "ஹ்ம்ம்.. என்னவோ பண்ணிட்டு போ.. ஆனா.. இந்த இன்வெஸ்டிகேஷன்லாம் இன்னும் ரெண்டு நாளைக்குத்தான்.. நல்லா ஞாபகம் வச்சுக்கோ..!! மூணாவது நாள் பொட்டியை கட்டிக்கிட்டு ஊட்டிக்கு என்கூட ஹனிமூன் கொண்டாட வர்ற.. சரியா..??" என்று குறும்பான குரலில் சொல்ல, "ம்க்கும்.. அதான் ஹனிமூன் அல்ரெடி அகழிலயே ஸ்டார்ட் ஆய்டுச்சே..??" என ஆதிரா நாணத்துடன் தலைகுனிந்தவாறே சொன்னாள். "ஓ.. இதுக்குப் பேரு ஹனிமூனா..?? மண்டு..!! ஹனிமூன்னா செக்ஸ் மட்டும் இல்ல.. அதில்லாம நெறைய இருக்கு.. முக்கியமா.. நம்ம ரெண்டு பேர் மனசுலயும் எந்த தேவையில்லாத நெனைப்புமே இருக்கக்கூடாது.. புரியுதா..??"

 "ம்ம்.. புரியுது..!!" ஆதிரா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, "ஹேய்.. எங்க.. உன் கைல போட்ருந்த ரிங்க காணோம்..??" என்று சிபி குழப்பமாக கேட்டான்.. உடனே ஆதிராவும் பட்டென தனது விரல்களை உயர்த்தி பார்த்தாள்..!! அவர்கள் கார் விபத்தில் சிக்கிக்கொண்ட காதலர் தினத்தன்று.. சிபி அவளுக்கு அன்புடன் அணிவித்த அந்த மோதிரம் இப்போது அவளது விரல்களில் இல்லை..!!

அதை அறிந்ததுமே ஆதிராவிடம் உடனடியாய் ஒரு பதற்றம்..!! "ஐயையோ.. எங்க போச்சு.. கைலதான போட்ருந்தேன்.. காலைல கூட பாத்தனே..??" "குளிக்கிறப்போ பாத்ரூம்ல ஏதும் கழட்டி வச்சியா..??" "இ..இல்லத்தான்.. கழட்டல.. கழட்டுன மாதிரி ஞாபகமே இல்ல..!! எங்க விழுந்துச்சுனு தெரியலையே..?? ஐயோ.. கடவுளே..!!" புலம்பலாக சொன்ன ஆதிரா நெற்றியை பிசைந்துகொண்டாள்.. மோதிரம் எங்கே சென்றிருக்கும் என்று தீவிரமாக யோசித்தாள்..!!

ஆதிராவின் கவனக்குறைவு சிபிக்கு ஒருவித எரிச்சலையே தந்தது.. அவன் ஆசையாக அவளுக்கு அணிவித்த மோதிரம் அல்லவா..?? ஆனால்.. ஆதிராவிடம் காணப்பட்ட ஒரு அதீத பதற்றம் சிபியின் எரிச்சலுணர்வை கட்டுக்குள் கொண்டுவந்தது.. மனைவியின் மீது அன்பு பெருக்கெடுத்தவனாய் இதமாக சொன்னான்..!!

 "சரி விடு.. டென்ஷன் ஆகாத.. இங்கதான் எங்கயாவது இருக்கும்.. அப்புறம் பொறுமையா தேடிப்பாரு..!!" "ம்ம்.. பாக்குறேன்..!! ஸாரித்தான்.. கொஞ்சம் கேர்லஸா இருந்துட்டேன்.. காலைல இருந்து என் மைண்டும் ரிலாக்ஸ்டா இல்ல..!! ஸாரி..!!" "ப்ச்.. இதுக்குலாமா ஸாரி கேட்ப..?? விடு ஆதிரா..!! வா.. சாஞ்சுக்கோ வா..!!" கைகள் இரண்டையும் விரித்து சிபி காதலுடன் அழைக்க, "ம்ம்ம்.. சாஞ்சுக்கிட்டேன்..!!" என்று சிணுங்கலாக சொன்னவாறே அவனுடைய நெஞ்சில் சாய்ந்துகொண்டாள் ஆதிரா.

 ஆதிராவின் வீட்டில் இருந்து ஐந்து நிமிட நடையில் வனக்கொடியின் வீட்டை அடைந்துவிடலாம்.. பால்கனியில் இருந்து பார்த்தால் தனியாக நின்றிருக்கும் வனக்கொடியின் வீடு தெளிவாகவே தெரியும்..!! சிபியிடம் பேசிமுடித்த சிறிது நேரத்துக்கெல்லாம் ஆதிரா வீட்டிலிருந்து கிளம்பிவிட்டாள்..!! கதிரை சென்று பார்த்து.. ஆரம்ப நல விசாரிப்புகள் முடிந்த பிறகு.. அவனிடம் தனியாக பேசவேண்டும் என்று கூறி.. அருகில் இருந்த கல்மண்டபத்துக்கு அழைத்து சென்றாள்..!!


கல் மண்டபத்தை அடைந்து சிறிது நேரம் ஆகியும்.. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.. ஆளுக்கொரு திசையை வெறித்து பார்த்தவாறு நின்றிருந்தனர்..!! எப்படி ஆரம்பிப்பது என்று ஆதிராவுக்குள் ஒரு தயக்கம்.. எதற்காக அழைத்திருப்பாள் என்று கதிருக்குள் ஒரு குழப்பம்..!! கொஞ்ச நேரத்தில் பொறுமை இல்லாமல் கதிரே கேட்டுவிட்டான்..!!

 "ஏதோ தனியா பேசணும்னு சொல்லி கூட்டி வந்துட்டு.. ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க..??" "ஹஹா.. அப்டிலாம் ஒன்னுல்ல.. ம்ம்ம்ம்.. உங்க வேலைலாம் எப்படி போய்ட்ருக்கு கதிர்..??" "ம்ம்.. பரவால.. நல்லா போய்ட்ருக்கு..!! போன மாசம் ப்ரமோஷன் தந்தாங்க.. சேலரி கொஞ்சம் இன்க்ரீஸ் பண்ணிருக்காங்க.. தங்கிக்க குவாட்டர்ஸ் குடுத்திருக்காங்க..!!" "ஓ.. வெரி குட்..!! அப்போ.. ஜாப்ல நல்லா செட்டில் ஆகிட்டிங்க.. அப்டித்தான..??" "ம்ம்.. ஆமாம்..!!"

 "அப்படியே காலாகாலத்துல ஒரு கல்யாணமும் பண்ணிக்கலாம்ல..??" "ஹ்ஹ.. கல்யாணமா.. அதுக்கென்ன இப்போ அவசரம்..??" "என்ன இப்படி சொல்றீங்க..?? உங்களுக்கும் வயசாகிட்டே போகுதுல..?? வனக்கொடி அம்மாக்கும் ஆசை இருக்கும்ல..??" "ம்ம்.. பாக்கலாங்க ஆதிரா..!!" "பண்ணிக்கிற மாதிரி ஐடியா இருக்குதான..??" ஆதிரா திடீரென அவ்வாறு கேட்கவும், கதிர் சற்றே நெற்றியை சுருக்கினான்.

 "பு..புரியல.. ஏன் கேக்குறீங்க..??" "இ..இல்ல.. இன்னும் நீங்க தாமிராவ நெனச்சுட்டு இருக்கலைல..??" கேட்டுவிட்டு ஆதிரா கதிரின் கண்களை கூர்மையாக பார்த்தாள்.. அவனோ இவளையே அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவனுடைய முகத்தில் குழப்பமும், திகைப்பும் கலந்துகட்டி வழிந்தது..!! "ஆ..ஆதிரா.. உங்களுக்கு..??" என்று தடுமாற்றமாக கேட்டான். "ம்ம்.. தெரியும்..!!"

 "எப்படி..??" "தாமிரா முன்னாடி சொல்லிருக்கா..!!" "ஓ..!!! நா..நான்.. நான் எக்ஸ்பெக்ட் பண்ணலைங்க.. அந்த விஷயம் யாருக்கும் தெரியாதுன்னு நெனச்சுட்டு இருக்கேன்..!!" "பரவால கதிர்.. இப்போ தெரிஞ்சதுனால என்ன..??" "ம்ம்.. ஒன்னுல்லதான்..!!" "சரி.. இப்போ சொல்லுங்க..!! இன்னும் நீங்க தாமிராவையே நெனச்சுட்டு இருக்கிங்களா..??" "ஹ்ஹ.. என்ன சொல்றது.. ஒரு வருஷத்துல எல்லாத்தையும் மறக்குற அளவுக்கு என் லவ் அவ்ளோ வீக் இல்லைங்க ஆதிரா..!!

அவளை ரொம்ப ரொம்ப லவ் பண்ணினேன்.. அவ்வளவு சீக்கிரமாலாம் என்னால அவளை மறக்க முடியாது..!! பட்.. நார்மலுக்கு வர ட்ரை பண்ணிட்டுத்தான் இருக்கேன்..!!" கதிரின் குரலில் ஒருவித விரக்தி கலந்திருந்தது. "ஹ்ம்ம்.. தாமிரா போனது உங்களுக்குமே ரொம்ப கஷ்டந்தான்.. இல்ல..??" "ரொம்ப கொடுமைங்க..!! என் கஷ்டத்தை யார்கிட்டயும் சொல்லக்கூட என்னால முடியல.. வாய்விட்டு அழணும்னா கூட தனியா உக்காந்துதான் அழனும்.. மனசுக்குள்ள இன்னும் அந்த வலி இருக்குது..!!" "ஹ்ம்ம்.. புரியுது..!!

எல்லாத்தையும் மறந்துட்டு.. உங்க லைஃப் பத்தியும் கொஞ்சம் யோசிங்க கதிர்..!!" "ம்ம்.. ட்ரை பண்றேன்..!!" "அப்புறம்.. உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்.. கேக்கட்டுமா..??" "கேளுங்க..!!" "தாமிரா காணாம போனதை நீங்க எப்படி எடுத்துக்குறீங்க..??" "எப்படினா..?? எனக்கு புரியல..!!" "எப்படி சொல்றதுனா.. அவ காணாம போனதுல எனக்கு நெறைய கொழப்பம் இருக்கு.. நெஜமாவே குறிஞ்சிதான்.." ஆதிரா சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, "இல்லைங்க.. குறிஞ்சிதான் காரணம்னு எனக்கு தோணல..!!" என கதிர் இடையில் புகுந்து பட்டென்று சொன்னான்..!!

அதைக் கேட்டதும் ஆதிராவிடம் மெலிதாக ஒரு ஆச்சர்யம்.. முகத்திலும் குரலிலும் அந்த ஆச்சரியத்தின் பிரதிபலிப்போடு திரும்ப கேட்டாள்..!! "ஏ..ஏன் அப்படி சொல்றீங்க..?? அ..அதான்.. உங்க அம்மாவே.. அதை கண்ணால.." "இல்லைங்க ஆதிரா.. அம்மா ரொம்ப பயந்தவங்க.. சும்மாவே எதை பாத்தாலும் குறிஞ்சி குறிஞ்சின்னு சொல்லிட்டு இருப்பாங்க.. எந்த மாதிரி சூழ்நிலைல எதை பாத்து அவங்க அந்த மாதிரி சொல்றாங்கன்னு எனக்கு தெரியல..!!

அவங்க சொல்றதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு நாம நம்ப வேணாம்..!!" "ஓ..!! அப்படினா.. குறிஞ்சின்ற விஷயம் மேலயே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..??" "அப்படி இல்ல.. குறிஞ்சின்ற விஷயம் மேல எனக்கு எந்த அபிப்ராயமும் இல்ல.. உங்களை மாதிரிதான்.. நம்பலாமா வேணாமான்னு கன்ஃப்யூஷன்ல இருக்குற சராசரி ஆள்தான் நான்..!! ஆனா குறிஞ்சியோட ஆவி தாமிராவை தூக்கிட்டு போய்டுச்சுன்னு சொல்றதைத்தான் என்னால நம்ப முடியல..!!" "அதான் ஏன்னு கேக்குறேன்..??" "எப்படி சொல்றது.. இந்த ஊரே குறிஞ்சியை பத்தி தப்பா பேசுறப்போ.. ராட்சசி, சூனியக்காரின்னுலாம் கேவலமா திட்டுறப்போ.. குறிஞ்சியை நல்லவன்னு சொன்ன ஒரே ஆள் தாமிராதான்..!!

அப்படிப்பட்ட தாமிரா மேல குறிஞ்சிக்கு என்ன கோவம்..?? குறிஞ்சி பத்தி தாமிரா சொன்னதெல்லாம் இன்னும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. அதெல்லாம் கேட்டப்புறம் அந்த குறிஞ்சியோட ஆவிதான் தாமிராவை தூக்கிட்டு போயிருக்கும்னு.. என்னால நம்ப முடியலங்க ஆதிரா..!!" கதிர் மிக இயல்பாகத்தான் பேசினான்.. ஆனால் அவன் பேச பேச ஆதிராவிடம் ஒரு மாற்றம்.. அவளுடைய மூளையில் பளீர் பளீரென ஒரு மின்னல் தாக்குதல்.. முகத்தில் ஒருவித திகைப்பு கலந்த இறுக்கம்..!!

தொலைந்து போன சில நினைவுகள் அவளது மனதுக்குள் இப்போது ஊற்றெடுக்க.. அவளிடம் மெலிதாக ஒரு தடுமாற்றம்..!! "எ..என்ன சொல்றீங்க கதிர்..??" "குறிஞ்சியை பத்தி இந்த ஊர்க்காரங்க சொல்றதெல்லாம் தப்புன்னு நிரூபிக்க.. தனியா நின்னு போராடுனவ தாமிரா..!! அவளுக்கு அந்த குறிஞ்சியாலேயே ஆபத்துனா.. நம்புறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!" "எ..எனக்கு புரியல.. அவ என்ன போராடுனா..??" "ஓ..!! உ..உங்களுக்கு அதுலாம் ஞாபகம் இல்லையா..?? குறிஞ்சியோட உண்மைக்கதை என்னன்னு தாமிரா ஒரு ஆராய்ச்சி செஞ்சாளே.. ஞாபகம் இல்ல..??" இப்போது கதிர் குழப்பமாக கேட்க, ஆதிராவுக்கு தலை வலிப்பது மாதிரி இருந்தது.. முகத்தை அவஸ்தையாக சுருக்கியவள், நெற்றியை பற்றி பிசைந்து கொண்டாள்..

காலில் ஏற்பட்டிருந்த வெட்டுக்காயத்தின் வலி இப்போது இன்னும் அதிகரிப்பது போல ஒரு உணர்வு.. கால்கள் மெலிதாக தடுமாற, அருகிலிருந்த கல்த்தூணை ஆதரவாக பற்றிக் கொண்டாள்..!!

தாமிராவின் ஆராய்ச்சி பற்றிய நினைவுகள் ஒவ்வொன்றாக அவளுக்கு ஞாபகம் வர.. சற்று மூச்சிரைத்தவாறே அமைதியாக அந்த ஞாபகங்களை சேகரித்துக் கொண்டாள்..!! "ம்ம்.. ஞாபகம் இருக்கு..!!" என்றாள் சில வினாடிகளுக்கு பிறகு. "அதான் சொல்றேன்.. குறிஞ்சிதான் காரணம்னு என்னால நம்ப முடியல..!!" "கு..குறிஞ்சி இல்லன்னா.. அப்புறம்..??" கேட்க வந்தததை முழுதாக முடிக்காமலே நிறுத்தினாள் ஆதிரா..!! அவளுடைய முகத்தையே கதிர் ஓரிரு வினாடிகள் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.. பிறகு தயங்கி தயங்கி தடுமாற்றமாக அவளிடம் கேட்டான்..!!

 "எ..எனக்கு.. எனக்கு ஒரு சந்தேகம் இருக்குங்க ஆதிரா.. சொ..சொல்லட்டுமா..??" ஆதிரா வேறெங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.. கதிரின் முகத்தை ஏறிடாமலே 'வேண்டாம்' என்பது போல தலையசைத்தாள்.. மெலிதான, வறண்டுபோன குரலில் சொன்னாள்..!! "வே..வேணாம் கதிர்.. நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்கு தெரியும்..!!" அவ்வளவுதான்.. அதன்பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக்கொள்ளவில்லை.. ஆளுக்கொரு சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர்.. அசைவேதுமின்றி உறைந்து போயிருந்தனர்..!!

சூரியனின் வெளிச்சம் இப்போது சுத்தமாக வற்றியிருக்க.. சூழ்நிலையில் இருளின் அடர்த்தி அகிகமாகிக்கொண்டே சென்றது..!! "நேரமாயிடுச்சுங்க ஆதிரா.. கெளம்பலாமா..??"
"ம்ம்.. கெ..கெளம்பலாம்..!!" மண்டபத்தின் வாயிலை நோக்கி இருவரும் மெல்ல நடந்தனர்.. நடக்கும்போதே ஆதிரா கதிரிடம் கேட்டாள்..!!

 "எ..எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா..??"

 "சொல்லுங்க..!!" 

"நாளைக்கு ஒருநாள் எனக்கு கார் ட்ரைவ் பண்ணனும்..!!"

 "கண்டிப்பா..!!"

 "தேங்க்ஸ்..!!"

 "எ..எங்க போகணும்..??"

 "வேக்ஸின் ஃபேக்டரி..!!"
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக