http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : அன்புள்ள ராட்சசி - பகுதி - 12

பக்கங்கள்

சனி, 22 ஆகஸ்ட், 2020

அன்புள்ள ராட்சசி - பகுதி - 12

வயலினும், புல்லாங்குழலும் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்து தேனிசையை கசிய.. கூடவே 'திம்.. திம்.. திம்..' என்று ட்ரம்ஸின் மெலிதான தாளமும் சேர்ந்து கொள்ள.. ஒரு ஆணுடைய மெலிதான, ஹஸ்கியான, ஏக்கமான குரலில் ஆரம்பமானது அந்தப் பாடல்..!!

'என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!'

வீட்டு சுவரேறி வெளியே குதித்த அவள்.. தடுமாறி கீழே விழுந்தாள்..!! உடனே எழுந்து.. முழங்கையில் ஏற்பட்ட சிராய்ப்பை தடவிக்கொண்டே.. உற்சாகமாக ஓடி வந்தாள்..!! அவன் கிக்கரை உதைத்தான்.. ஆக்சிலரேட்டரை முறுக்கினான்..!! அவள் ஓடி வந்து பின் சீட்டில் அமர்ந்து கொண்டு.. 'போ.. போ..' என்று அவனுடைய தோளை தட்டி அவசரப் படுத்தினாள்.. பைக் பறந்தது..!! மொட்டைமாடியில் நின்று.. யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்த அவளுடைய அரசியல்வாதி அப்பா.. எதேச்சையாக இந்த காட்சியை காண நேரந்ததும்.. உடனடியாய் அவரிடம் ஒரு பதற்றம்..!! ஆத்திரம் அப்பிய முகத்துடன் படிக்கட்டில் தடதடவென இறங்கினார்.. தன்னுடைய அடியாட்களை அழைத்து.. கையை அப்படியும் இப்படியுமாய் ஆட்டி ஆட்டி.. கோபம் கொப்பளிக்க சில உத்தரவுகள் பிறப்பித்தார்..!! பிறகு அவர்களுடன் அந்த டாடா சுமோவில் வேகமாய் கிளம்பினார்..!!

குறுக்கும் மறுக்குமாய் வாகனங்கள் வர.. அதற்குள் லாவகமாக புகுந்து ஓடியது பைக்.. அந்த பைக்கை விடாமல் துரத்தியது டாடா சுமோ..!! அவனுடைய இடுப்பை அவள் இறுக்கி பிடித்துக்கொள்ள.. சர்ரென சீறிப்பறந்த பைக் சென்றதுமே.. படக்கென விழுந்தது சிவப்பு சிக்னல்..!! 'ச்சே..' என்று வெறுப்பாக தொடையை தட்டிக் கொண்டார் அரசியல்வாதி அப்பா..!!

இருபுறமும் பச்சை பசேலென அடர்த்தியான மரங்களுடன்.. நேர்வகிட்டு கூந்தல் போல நீளமாய் கிடந்த.. அந்த அழகான ஆளரவமற்ற தார்ச்சாலையில்.. அவன் பைக்கை கவனமாக செலுத்திக் கொண்டிருக்க.. இவள் கைகள் இரண்டையும் அகலமாய் விரித்து.. அப்படியே ஆனந்தத்தில் திளைத்தாள்..!!

'என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!'குண்டும் குழியுமான கிராமத்து சாலையில் சென்றது பைக்..!! தலையில் தண்ணீர் குடம் சுமந்து.. சாலையோரமாக சென்று கொண்டிருந்தாள் கர்ப்பிணி பெண் ஒருத்தி.. அவளை கடக்கையில் பைக்கின் பின் சீட்டில் இருந்தவள் 'ஹேய்..' என்று கை நீட்டி கத்தினாள்..!!

அந்த கர்ப்பிணி பெண்.. குடத்தை சாய்த்து தண்ணீரை சரிக்க.. இவர்கள் இருவரும் கைகளை ஒன்று சேர்த்து.. தண்ணீரை தாங்கி சேகரித்து குடித்தனர்..!! கையில் ஒட்டியிருந்த நீர்த்திவலைகளை அவன் அவளுடைய முகத்தில் உதற.. அவள் போலிக் கோபத்துடன் அவனை அழகாக முறைத்தாள்.. முஷ்டியை மடக்கி அவனுடைய முகத்தில் குத்தினாள்..!! அவன் விலகிக்கொள்ள.. அவளுடைய கை பைக் கண்ணாடியை குத்தியது.. அவள் வலியில் முகத்தை சுருக்க.. இவன் பதறிப் போனான்..!! அவளுடைய கையை மென்மையாக பற்றி.. முகத்தை அவளுடைய கைக்கருகே எடுத்து சென்று.. உதடுகள் குவித்து இதமாக காற்று ஊதினான்.. மெலிதாக முத்தமிட்டான்.. அவனுடைய கனிவை கண்டு.. அவள் காதலும் பெருமிதமும் பொங்குகிற மாதிரி.. அவனே அறியாத வகையில்.. அவனை ஒரு பார்வை பார்த்தாள்..!! கர்ப்பிணி பெண் டாட்டா காட்ட.. மீண்டும் சர்ரென சீறியது பைக்..!!


மஞ்சள் நிற வானுடன் மாலை நேரம்..!! மிதமான வேகத்தில் பைக் சென்றுகொண்டிருக்க.. அவனுடைய ஹெல்மட்டை தனது தலையில் கவிழ்த்திருந்த அவள்.. இமைகளை மூடி.. அவனுடைய இடுப்பை இறுக்கமாக கட்டிக்கொண்டு.. அவனுடைய முதுகில் முகம் சாய்த்து.. குழந்தையொன்று நிம்மதியாக உறங்குவது போல படுத்திருந்தாள்..!! அவன் தலையை மெல்ல சாய்த்து.. தனது இடுப்பை வளைத்திருந்த அவளுடைய கைகளை.. பெருமை பொங்கிட பார்த்தான்.. புன்னகைத்தான்..!!

'என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!'

டாட்டா சுமோவின் கதவுகள் திறக்கப்பட்டு சாலையோரமாய் நின்றிருக்க.. தன் மகளுடைய புகைப்படத்தை காட்டி.. அந்த கர்ப்பிணி பெண்ணிடம் ஏதோ கேள்வி கேட்டார் அரசியல்வாதி அப்பா..!! அவள் 'எனக்கு தெரியாது.. நான் பாக்கலை..' என்பது போல தலையை அசைத்தாள்.. எரிச்சலான அப்பா கடுப்புடன் காரில் கிளம்ப.. கர்ப்பிணி பெண் இப்போது கண் சிமிட்டி குறும்பாக சிரித்தாள்..!!

'ச்ச்சோ'வென்று மழை கொட்டுகிற அந்தி சாயும் நேரம்..!! சாலையோர டீக்கடையின் தகரம் வேயப்பட்ட கூரைக்கு கீழே.. அவனுடைய ஜெர்கினுக்குள் அவளும் அவனும்.. நெருக்கமாக..!! ஆளுக்கொரு கையில் டீ க்ளாஸ் தாங்கி.. கூதலுக்கு நடுங்கியவாறே.. உதடுகள் படபடக்க தேனீர் உறிஞ்சினர்..!! பிறகு அவர்கள் இருவரும் அவுட் ஆஃப் போகஸில் தெரிய.. பளிச்சென்று பார்வைக்கு வந்தது.. மழையில் நனைந்து கொண்டிருந்த அந்த சிவப்பு நிற பைக்..!!

மழை நீர் நனைத்த மண் சேறாகி போயிருக்க.. அந்த சேறுக்குள் சிக்கி, மீள முடியாமல்.. சக்கரம் சுழற்ற திணறியது டாடா சுமோ..!! 'தள்ளுங்கடா.. தள்ளுங்கடா..' என்பது போல.. தனது அடியாட்களின் முதுகில்.. ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருந்தார் அந்த அரசியல்வாதி அப்பா..!!

'என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!'

சடசடவென மழை பெய்து கொண்டிருந்த அந்த சாலையில்.. விர்ரென பறந்தது அந்த சிவப்பு பைக்..!! பின் சீட்டில் அமர்ந்திருந்த அவள்.. தனது துப்பட்டாவை விரித்து பிடித்திருக்க.. அது காற்றில் தடதடத்தபடி.. பைக்குடன் சேர்ந்து பறந்தது..!! பைக் தூரமாய் செல்ல செல்ல.. மெல்ல மெல்ல பார்வைக்கு மங்கியது..!! திரையில் எழுத்துக்கள் பளிச்சிட்டன..!!

"காதலின் முடிவிலா பயணம்.. கவாஸாகியுடன்..!!!!"

பட்டென திரை இருண்டது. உடனே மோகன்ராஜ் தனது மணிக்கட்டை திருப்பி, நேரம் பார்த்தார். மெலிதாக புருவம் சுருக்கியவர், பிறகு தலையை நிமிர்த்தி சொன்னார்.

"Exactly thirty two seconds..!!"

கிஷோரும், வேணுவும், சாலமனும்.. ரிசல்ட் தெரிந்து கொள்வதற்காக.. மோகன் ராஜின் முகத்தையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர்..!! அசோக்கோ எதைப்பற்றியும் அக்கறை இல்லாதவனாய்.. எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தான்..!! சில வினாடிகள் எந்த உணர்ச்சியும் காட்டாமல்.. முகத்தை இறுக்கமாக வைத்திருந்த மோகன் ராஜ்.. பிறகு உதட்டில் ஒரு புன்னகை அரும்ப சொன்னார்..!!

"Great job guys.. Fantastic work.. I am thoroughly impressed..!!! Bravo.. Bravo..!!!!"

மனதார பாராட்டியவர், 'பட்.. பட்.. பட்..' என க்ளாப் செய்தார். அப்புறந்தான் கிஷோருக்கும், வேணுவுக்கும், சாலமனுக்கும் மூச்சே வந்தது. முகம் பட்டென மலர்ந்து போக, சந்தோஷமாக சிரித்தார்கள். மோகன் ராஜ் கட்டை விரலை உயர்த்திக்காட்ட, இவர்களும் அதையே ஒருவித பெருமிதத்துடன் செய்தார்கள். ஆனால்.. அசோக் மட்டும் அந்த சந்தோஷத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவனாய், உர்ரென்று அமர்ந்திருந்தான். அதை கவனித்துவிட்ட மோகன் ராஜ், இப்போது குழப்பத்தில் சுருங்கிப்போன முகத்துடன் கிஷோரை கேட்டார்.

"என்னடா ஆச்சு அவனுக்கு..??"

"ம்க்கும்.. அவனையே கேளுங்க..!!"


தன்னுடைய தாயின் சாகசம்.. அம்மாவின் அப்பாவையும், மீராவின் அப்பாவையும் ஒன்றிணைத்து ஒரு காதல் வில்லன்.. நிஜத்தில் தன்னை துரத்துகிற டாடா சுமோ.. அந்த சிக்னல்.. மீராவுடன் முதல் நாள் பைக்கில் சுற்றிய அனுபவம்.. அன்று சாலையோர கடையில் அருந்திய டீ.. மழைக்காக ஒதுங்கிய தகர கூரை.. கடலை கூடையை தலையில் சுமத்திய கர்ப்பிணி.. எல்லாவற்றிற்கும் மேலாக மீராவின் மீது அவனுக்கிருந்த ஆழமான காதல்.. என.. கடந்த சில நாட்களாக தனக்கு நேர்ந்த அனுபவங்களை கொண்டே.. அந்த விளம்பர படத்தை வடிவமைத்திருந்தான் அசோக்..!! அவனுக்கும் அந்த விளம்பர படத்தில் மிகுந்த திருப்திதான்.. ஆனால்.. நான்கு நாட்களாக மீராவை காணாத ஏக்கம் அவனிடம் மிகுந்து போயிருக்க.. எதையோ பறிகொடுத்தவன் போல சந்தோஷம் செத்துப்போய் அமர்ந்திருந்தான்..!!

மோகன் ராஜ் இப்போது சேரில் இருந்து எழுந்தார். நடந்து அசோக்கை நெருங்கினார். அவனுடைய தோளில் கைபோட்டவர், மென்மையான குரலில் கேட்டார்.

"என்னடா ஆச்சு..??"

"ஒ..ஒன்னுல்ல..!!"

"அப்புறம் ஏன் ஒருமாதிரி இருக்குற..?? இப்படி ஒரு பிரம்மாதமான ஃபில்ம் எடுத்துட்டு.. கம்முனு உக்காந்திருக்குற..?? கமான்.. சியர் அப் மேன்..!! இத்தனை நாளா.. இதுதாண்டா உன்கிட்ட மிஸ்ஸிங்.. உன் ஃபில்ம் என்னதான் க்ரியேட்டிவா இருந்தாலும்.. ஒரு டெப்த் ஃபீல் இல்லாம இருந்தது.. அந்த ஃபீல்க்காகத்தான இத்தனை நாளா உன்கூட சண்டை போட்டுட்டு இருந்தேன்..?? இப்போ பாரு.. எங்க இருந்து வந்தது.. இந்த மாதிரி நைஸ் ஃபீலோட ஒரு ஆட் ஃபில்ம்..?? இதைத்தான்டா இத்தனை நாளா உன்கிட்ட கேட்டுட்டு இருந்தேன்..!! கமான்.. சியர் அப்..!!"

"ம்ம்.." அசோக் இப்போது மெலிதாக புன்னகைக்க முயன்றான்.

"நீ ச்சூஸ் பண்ணின பேக்ரவுண்ட் ம்யூசிக்.. லோகேஷன்ஸ்.. ஆக்டர்ஸ்.. அவங்க பெர்ஃபாமன்ஸ்.. அந்த பையனுக்கும், பொண்ணுக்கும் நடுவுல அந்த லவ்வபிள் கெமிஸ்ட்ரி.. இட்ஸ் ஜஸ்ட் ப்ரில்லியன்ட்..!! இவ்வளவும் நான் அலாட் பண்ணின அந்த சின்ன பட்ஜட்குள்ளன்னு நெனைக்கிறப்போ.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. இட்ஸ் ஆவ்ஸம்..!! உனக்கு நல்ல ப்யூச்சர் இருக்குடா.. இப்போ எனக்கு அதுல எந்த டவுட்டும் இல்ல..!! ஹேய்.. மொத மொதல்ல வாய்விட்டு பாராட்டுறேன்.. கொஞ்சம் சிரியேன்டா.. கமான்.. சிரி..!!"

அசோக் போலியாக ஒரு புன்சிரிப்பை உதிர்க்க, மோகன் ராஜ் இப்போது திருப்தியானார். 'குட்' என்றார் புன்னகையுடன்.

அவர்களிடம் வெளிப்படுத்தியதை விட அதிகமான திருப்தியிலேயே மோகன்ராஜ் இருந்தார். அசோக்குடைய இந்த உழைப்பு, அவருக்கு வாங்கித் தரப்போகிற பாராட்டையும், பணத்தையும் எண்ணி, மனதுக்குள் ஆனந்தப்பட்டுக் கொண்டார். மனதுக்குள் இருந்த அவரது ஆனந்தம், வேறு வகையில் வெளியே வந்தது. மேலும் சில வேலைகளை அசோக்கின் கம்பனியிடம் ஒப்படைக்க சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களில், எந்த தயக்கமும் இல்லாமல் கையொப்பமிட்டார். அசோக்கின் நண்பர்கள் அனைவரும் ஆனந்தத்தில் பூரித்து போயினர். அதுவும் அவர்கள் கிளம்பும்போது..

"ஹேய்.. அப்புறம்.. நைட் ஒரு ஏழு மணி போல க்ரீன் பார்க் ஹோட்டல் வந்துடுங்க.. இன்னைக்கு என்னோட பார்ட்டி.. உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா..!! சரியா..??" என்று மோகன்ராஜ் சொன்னபோது அந்த ஆனந்தம் இரட்டிப்பானது.

அன்று ஆறரை மணிக்கெல்லாம் அசோக்கின் நண்பர்கள் ஆபீஸில் இருந்து ஷோக்காக கிளம்பினார்கள். குடித்து கும்மாளமிடப் போவதை எண்ணி, அனைவரும் குதூகலத்தில் இருந்தார்கள். அவரவர்கள் காதலியிடம் அல்ரெடி அனுமதி பெற்று இருந்தனர். அசோக்கால்தான் அவர்களுடைய ஆனந்தத்தில் பங்கு கொள்ள முடியவில்லை. அனுமதி கேட்பதற்கு அவனுடைய காதலி தற்சமயம் தொடர்பில் இல்லையே..!!

"டாஸ்மாக்ல போட்டீ வறுவலோட ட்ரீட்னு சொன்னாலே.. டாக் மாதிரி நாக்கு தொங்கப்போட்டு வருவியே மச்சி..?? ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ஃபாரீன் சரக்கோட பார்ட்டிடா.. அந்த மீரா நெனைப்பை கொஞ்ச நேரம் ஓரமா ஒதுக்கி வச்சுட்டு.. கெளம்பி வா..!! அப்புறம்.. மிஸ் பண்ணிட்டோமேனு நாளைப்பின்ன ரொம்ப ஃபீல் பண்ணுவ.. கமான்.. கெளம்பு..!!" சாலமன் வற்புறுத்த, அசோக்கிடம் எந்த அசைவும் இல்லை.

"இல்லடா.. எனக்கு மூட் இல்ல.. நீங்க போயிட்டு வாங்க..!!"

"ப்ச்.. அப்படிலாம் சொல்லப்படாது..!! சரி.. வேணும்னா இப்படி பண்ணுவோமா..??"

"எப்படி..??"

"நாங்கள்லாம் சந்தோஷத்தை கொண்டாட குடிக்கிறோம்.. நீ வேணா உன் சோகத்தை மறக்க குடி..!! எப்பூடி..???" சாலமன் கேட்டுவிட்டு இளிக்க, அசோக் அவனை ஏறிட்டு முறைத்தான்.

"நானே வெறுப்புல இருக்கேன்.. செருப்படி வாங்காத.. போயிடு..!!"

அப்புறம் யாரும் அசோக்கை வற்புறுத்தவில்லை. அவனுடைய மனநிலையை புரிந்து கொண்டவர்கள், அதற்கு மேலும் அவனை வற்புறுத்துவதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்தார்கள். அவனை மட்டும் தனியே ஆபீசில் விட்டுவிட்டு, வேணுவின் காரில் பார்ட்டிக்கு கிளம்பினர். அசோக்குக்கு அவர்களுடன் செல்ல ஆசைதான். ஆனால் ஏதோ ஒன்று அவனை தடுத்தது. தன்னுடைய மனதில் இருக்கிற சோகம், நண்பர்களின் மகிழ்ச்சியான மாலைப்பொழுதை பாதித்துவிட கூடாது என்கிற எண்ணமாக இருக்கலாம்.

அனைவரும் சென்றபிறகு.. ஆபீஸை உள்பக்கமாய் இழுத்து பூட்டிவிட்டு.. எடிட்டிங் ரூமில் இருக்கிற பெரிய திரையில்.. காதல் உல்லாசம் படத்தை ஓடவிட்டு.. அக்கடா என அமர்ந்துவிட்டான் அசோக்..!! கொஞ்ச நேரத்திலேயே உருகிப்போய்.. படத்துடன் அப்படியே ஒன்றிவிட்டான்..!!

அரை மணி நேரம் கூட ஆகியிருக்காது.. அவனுடைய செல்போன் திடீரென ஒலித்தது..!! ரிங்டோன் கேட்டதுமே.. அவனுடைய இதயம் குபுக்கென்று ஒரு உற்சாக ரத்தத்தை, உடலெங்கும் சரக்கென பம்ப் செய்தது.. தேகமெங்கும் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு அவனுக்கு..!!

மீரா..!!!!

பாய்ந்து சென்று செல்போனை கைப்பற்றினான். அவசரமாய் கால் பிக்கப் செய்து காதில் வைத்தவன், அடுத்த முனையில் இருந்து குரல் ஒலிப்பதற்கு கூட அவகாசம் தராமல்..

"ஹலோ.. மீரா... எ..எப்படிமா இருக்குற.. எங்க போயிட்ட நீ.. ஒரு ஃபோன் கூட இல்ல.. ஏன்மா இப்படி பண்ற..?? நா..நாலு நாளா நீ இல்லாம நான் எப்படி தவிச்சு போயிட்டேன் தெரியுமா..?? ப்ளீஸ் மீரா.. இனிமேலாம் இப்படி.." அசோக் அவ்வாறு தவிப்பாக சொல்லிக் கொண்டிருக்கையிலேயே..

"எங்க இருக்குற இப்போ..??" மீரா இறுக்கமான குரலில் கேட்டாள்.

"ஆ..ஆபீஸ்லதான்.. ஏன் கேக்குற..??"

"நான் இங்க ஆதித்யா ஹோட்டல் முன்னாடி நின்னுட்டு இருக்குறேன்.. பைக் எடுத்துட்டு கொஞ்சம் சீக்கிரம் வா..!!'

"அ..அது இருக்கட்டும்.. நாலு நாளா எங்க போயிட்ட நீ..??"

"ப்ச்.. அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல நேர்லயே பாக்க போறோம்ல..?? இங்க வந்து கேளு.. வா..!!"

சொல்லிவிட்டு மீரா படக்கென காலை கட் செய்தாள். அவளுக்கு மூட் சரியில்லை என்று அசோக் உடனடியாக புரிந்து கொண்டான். ஆனால் அதற்காகவெல்லாம் அவன் கவலைப்படவில்லை. மீரா திரும்ப வந்ததே அவனுக்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருந்தது. நான்கு நாட்களாக அவனிடம் காணாமல் போயிருந்த உற்சாகம், இப்போது உச்ச பட்சமாக அவனை தொற்றிக் கொண்டது. ஆபீஸை அடைத்துவிட்டு அவசரமாய் பைக்கில் கிளம்பினான். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் மீரா முன்பாக ப்ரேக் அடித்து நின்றான்.

"ஹ்ம்ம்.. இப்போவாவது சொல்லு.. எங்க போயிட்ட.. ஒரு ந்யூசும் சொல்லாம..??" அசோக் ஆர்வமாக கேட்க,

"சிக்னல் போடப் போறான்.. வண்டியை எடு..!!" மீரா அலட்சியமாக சொன்னாள்.

அசோக் சலிப்பாக தலையை அசைத்துக் கொண்டான். 'இவ ஏன் இப்படி இருக்குறா..??' என்று எப்போதும் அவன் மனதுக்குள் கேட்டுக்கொள்கிற கேள்வியை, இப்போதும் கேட்டுக் கொண்டான். மீரா பின் சீட்டில் அமர்ந்ததும், கியர் மாற்றி வண்டியை முடுக்கினான்.

"சிக்னல் தாண்டி.. ஸ்ட்ரெயிட்டா.. இல்ல லெஃப்.." அசோக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே,

"ரைட்ல போ..!!" மீராவிடம் இருந்து படக்கென பதில் வந்தது.

வடபழனி சிக்னலில் வலது புறமாக திரும்பினான் அசோக். மேலும் ஐந்து நிமிடங்கள்..!! மீராவின் மூட் அறிந்து.. எதுவும் பேசாமல் அமைதியாகவே வண்டியை செலுத்தியவன்.. அசோக் பில்லரை கடந்தபோது.. மனதை அரித்த அந்த கேள்வியை.. அதற்கு மேலும் அடக்க முடியாமல்.. அவளிடமே கேட்டுவிட்டான்..!!

"எங்க போறோம் இப்போ..??"

"ஏதாவது பாருக்கு போ..!!"

மீரா கூலாக சொல்ல, அசோக் குப்பென்று ஷாக் ஆனான். சர்ர்ரக்கென ப்ரேக் அடித்து பைக்கை நிறுத்தினான்.

"என்னது..????" என்று முகம் அஷ்டகோணலாகி போனவனாய் அவளிடம் திரும்பி கேட்டான்.

"ப்ச்.. காதும் போச்சா..?? ஏதாவது பாருக்கு போன்னு சொன்னேன்..!!"

"ஏ..ஏன்.. எ..எதுக்கு இப்போ.. திடீர்னு..??"

"எனக்கு மனசு சரியில்ல.. தண்ணியடிக்கனும் போல இருக்கு.. அதான்..!!"

"எ..என்ன மீரா நீ..?? ப..பசங்கதான் இப்படிலாம்.. மனசு சரியில்லன்னு.."

"ஏன்.. பசங்க மட்டுந்தான் குடிக்கனுமா..?? பொண்ணுக குடிக்க கூடாதா..?? போ..!!"

"அ..அதுக்காக இல்ல.. இப்படி.. எ..எங்கிட்ட வந்து.."

"உன்கிட்ட வந்து சொல்லாம வேற யார்ட்ட போய் சொல்றது..?? குடிகாரப்பயதான நீ..?? சென்னைல இருக்குற பார்லாம் ஒன்னுவிடாம போய் குடிச்சிருக்கேல..?? அதுல ஏதாவது ஒரு டீசண்ட் பாருக்கு என்னை கூட்டிட்டு போ..!!"

"இ..இல்ல மீரா.. நான் என்ன சொல்ல வர்றேன்னா.. எ..எனக்கென்னவோ இது.."

"ஷ்ஷ்ஷ்...!!!! இப்போ நீயா கூட்டிட்டு போறியா.. இல்லனா.. நானா எங்கயாவாது போய் குடிச்சுக்கட்டுமா..??"

மீரா சீற்றமாக சொல்ல, அசோக் மனதுக்குள் 'சர்தான்..!!' என்று நினைத்துக் கொண்டான். ஹெல்மட் கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டு, வண்டியை கிளப்பினான். அப்புறம் பார் சென்று சேரும் வரை இருவரும் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை.

"காசு வச்சிருக்கியா..??" கேட்டாள் மீரா.

"கார்ட் வச்சிருக்கேன்..!!" சொன்னான் அசோக்.

"ஏற்கனவே ட்ரிங்ஸ்லாம் சாப்ட்ருக்கியா..??" கேட்டான் அசோக்.

"ம்ம்.. சாப்ட்ருக்கேன்.. சாப்ட்ருக்கேன்..!!" சொன்னாள் மீரா.

அவ்வளவேதான்..!!

கத்திப்பாரா ஜங்கஷனில் இடதுபுறம் திரும்பி.. சற்றே வேகமெடுத்து சர்தார் படேல் சாலையில் திரும்பியதுமே.. வெள்ளை வெளேர் என்று.. உயரமாகவும், கம்பீரமாகவும் காட்சியளித்தது.. அந்த மூன்று நட்சத்திர ஹோட்டல்..!! அசோக் பைக்கை உள்ளே செலுத்தி பார்க் செய்தான்..!! இருவரும் இறங்கி.. பக்கவாட்டில் இருந்த பார் பகுதிக்கு சென்றனர்..!! நண்பர்களுடன் குடிக்கிற வாய்ப்பு மிஸ் ஆனதில்.. அசோக்கின் மனதோரமாக ஒரு ஏக்கம் இருந்தது.. பிறகு மீரா திரும்ப வந்ததில்.. அந்த ஏக்கம் எப்போதோ காணாமல் போயிருந்தது.. இப்போது அவளுடன் சேர்ந்து மது அருந்தப் போவது.. அவனுடைய மனதில் ஒரு புதுவித கிளர்ச்சியை உண்டு பண்ணியிருந்தது.. மிகவும் சந்தோஷமாகவே காணப்பட்டான்..!! ஆனால்.. மீராதான் முகத்தை ஏனோ உர்ரென்று வைத்துக்கொண்டு அவனுடன் நடந்தாள்..!!

மஞ்சள் நிற வெளிச்சத்தில் குளித்து.. பளிச்சென்று இருந்தது அந்த பார்..!! சிவப்பு நிற வெல்வெட் நாற்காலிகள்.. தேக்கு மர மேஜைகள்..!! அங்கொன்றும் இங்கொன்றுமாய்.. குடிக்க வந்திருந்த குரூப்கள்..!! இளையராஜாவின் இன்ஸ்ட்ருமென்டல் இசை.. இதமாய் கசிந்து.. காற்றை இனிமையாய் மாற்றிக் கொண்டிருந்தது..!!

"என்ன சாப்பிடுற..??"

"சம்திங் ஸ்ட்ராங்.. வெரி ஸ்ட்ராங்..!! எது பயங்கர ஸ்ட்ராங்கா இருக்குமோ அதை ஆர்டர் பண்ணு..!!"

"பயங்கர ஸ்ட்ராங்னா பட்டை சாராயம்தான்..!!"

"இங்க கெடைக்குமா..??" மீரா சளைக்காமல் கேட்க, அசோக் அரண்டு போனான்.

"ஆத்தாடீஈஈ..!! ஒரு முடிவுலதான் இருக்குற போல இருக்கு..?? அ..அதுலாம் இங்க கெடைக்காது.. நான் வேணா உனக்கு ஏதாவது ஃபாரீன் விஸ்கி ஆர்டர் பண்றேன்.. ஜஸ்ட்.. ஸ்லீக் அண்ட் ஸ்மூத்..!!"

"ஹ்ம்ம்.. ஓகே.. ஸ்வீட்..!!"

மீராவும் ஒப்புக்கொள்ள, அசோக் ஜானிவாக்கர் விஸ்கி இரண்டு லார்ஜ் ஆர்டர் செய்தான். தொட்டுக்கொள்ள வெஜ் ஷீக் கபாப்..!! பத்தே நிமிடத்தில் ஆர்டர் செய்த வகையாறாக்கள் வந்து சேர்ந்தன. அசோக்கே மீராவுக்கும் சேர்த்து மிக்ஸிங்செய்து.. கோப்பையை அவள் பக்கம் நகர்த்தினான்..!!

"சியர்ஸ்..!!"

சொல்லிவிட்டு.. மீராவுடன் ஜென்டிலாக கோப்பை இடித்துவிட்டு.. விஸ்கியை உதட்டுக்கு கொண்டு சென்றான்..!! கண்ணாடி விளிம்பில் உதடுகள் பதித்து.. கொஞ்சமாய் உறிஞ்சி.. நாக்கின் சுவையுணர்வு மொட்டுகளுக்கு விஸ்கியின் சுவையை காட்டி.. அப்படியே மிடறு விழுங்கி.. மெல்ல தொண்டைக்குள் அனுப்பி.. குரல்வளை வழியாக சுருசுருவென அனல் பரப்பிக்கொண்டு.. அந்த திரவம் அடி வயிறு நோக்கி இறங்குவதை.. இமைகள் செருக அசோக் அனுபவித்து ரசித்துக் கொண்டிருக்கும்போதே..

"டமார்..!!" என்று காதை அறைந்தது அந்த சப்தம்.

அசோக் பதறிப்போய் இமைகளை பிரித்தான். மீரா கண்ணாடி கோப்பையை டேபிளில் வைத்த சப்தம்தான் அது..!! கோப்பையில் தளும்ப தளும்ப இருந்த மொத்த விஸ்கியையும்.. ஒரே கல்ப்பில் கப்பென்று அடித்திருந்தாள்.. அடித்து முடித்து காலி கோப்பையைத்தான் அந்த மாதிரி "டமார்..!!" என்று டேபிளில் வைத்திருந்தாள்..!! இப்போது கண்களை இறுக்க மூடிக்கொண்டு.. முகத்தை ஒருமாதிரி சுளித்தவாறு..

"க்க்ஹ்ஹ்ஹாஹாஹ்..!!!!" என்று கனைத்தாள்.

கனைத்தவள், சிறிது நேரம் அப்படியே கண்களை மூடிக்கொண்டு, தலையை கவிழ்த்தவாறு அமர்ந்திருந்தாள். வாயை மட்டும் அவ்வப்போது திறந்து, 'ஹா.. ஷ்ஷ்ஷ்.. ஹா..' என்று காற்று வெளிப்படுத்தினாள். அசோக் அவளையே ஒருமாதிரி மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு சற்றே தயக்கத்துடன்..

"மீ..மீரா.. மீரா.. என்னம்மா ஆச்சு..??" என்றான்.

மீரா இப்போது தலையை சிலுப்பிக்கொண்டு எழுந்து அமர்ந்தாள். விழிகளை படக்கென திறந்தாள். அசோக்கை கண்டு கொள்ளாமல், பின்பக்கமாய் திரும்பி.. பேரரை பார்த்து..

"ரிப்பீட்..!!" என்றாள் காலி கோப்பையை ஒற்றை விரலால் தட்டிக் காட்டியவாறே.

"மீ..மீரா எதுக்கு இப்போ.." அவளை தடுக்க முயன்ற அசோக்கை,

"ஷ்ஷ்ஷ்ஷ்..!!" என்று உதட்டில் விரல் வைத்து அடக்கினாள்.

அசோக் 'சர்தான்..!!' என்றான் மனதுக்குள். பேரர் மீண்டும் ஒரு லார்ஜ் கொண்டு வந்து டேபிளில் வைத்தான். அசோக் தயங்கி தயங்கி மீண்டும் மிக்ஸிங் கலந்தான். மீரா கோப்பையை எடுத்து மீண்டும் ஒரே கல்ப்பில் அடித்தாள். மீண்டும் டேபிளோடு ஒரு 'டமார்'.. மீண்டும் கனைப்பாக ஒரு 'க்க்ஹ்ஹ்ஹாஹாஹ்'.. மீண்டும் கண்கள் மூடி சிறிது நேர நித்திரை..!!

அசோக்கிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.. தலை கவிழ்ந்து கிடந்தவளையே பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தான்..!!

"மீரா.. ரொம்ப தாகமா இருந்தா வாட்டர் வேணா வயிறு முட்ட குடிச்சுக்கோ.. இப்படி விஸ்கிலாம் தாகத்துக்கு குடிக்கிற மாதிரி குடிக்க கூடாது..!!"

"வேற எப்படி குடிக்கணும்..??" மீரா தலையை நிமிர்த்தி கேட்டாள்.

"இந்தா.. என்னை மாதிரி.. லைட்டா.. ஒவ்வொரு சிப்பா.."

"ப்ச்.. அதுலாம் உன்னை மாதிரி கொய்ந்தைங்க குடிக்கிறதுடா.. நமக்குலாம்.." சொன்னதை முடிக்காமல் அவள் இழுக்க,

"ம்ம்.. உனக்குலாம்..??" அசோக் கேள்வியாக அவளை பார்த்தான்.

மீரா அசோக்குக்கு பதில் சொல்லவில்லை. கண்களை இடுக்கி அசோக்கின் முகத்தையே கூர்மையாக பார்த்தாள். பிறகு தலையை திருப்பாமலே.. அவனது முகத்தை பார்த்த பார்வையை நகர்த்தாமலே..

"ரிப்பீட்..!!!!" என்று பெரிய குரலில் கத்தி, பேரருக்கு ஆர்டர் கொடுத்தாள்.

"ஹேய்.. என்ன நீ..?? பத்து ரூபாய்க்கு நாலுன்னு பானிபூரி மாதிரி.. வாங்கி கபால் கபால்னு உள்ள விட்டுட்டு இருக்குற.. ஃபாரீன் சரக்குமா இது.. என்ன ரேட் தெரியுமா.?? கொஞ்சமாவது அதுக்குண்டான மரியாதையை குடு..!!"

"ஏய்.. எல்லாம் எனக்கு தெரியும்.. மூட்றா..!!" மீரா அலட்சியமாக சொல்ல, அசோக் நெற்றியை பிசைந்து கொண்டான்.

"ஏன் மீரா.. நெ..நெஜமாவே.. நீ முன்னப்பின்ன குடிச்சிருக்கியா.. இல்ல.."

"ஏன் கேக்குற..??"

"எ..எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு..!!"

"சந்தேகந்தான..?? தீத்துட்டா போச்சு..!! டோன்ட் வொர்ரி.. ஐ வில் கிளியர் ஆ....ல் யுவர் டவுட்ஸ்..!! நவ்.. ரைட் நவ்..!!"

மீராவுக்கு நன்றாக போதை ஏறிவிட்டது என்பதை அசோக்கால் இப்போது புரிந்து கொள்ள முடிந்தது. குழறுகிற வாயுடன், அவள் ஆங்கிலத்துக்கு தாவியதிலேயே அதனை அறிந்து கொள்ள முடிந்தது. மீராவும் அதை உறுதி செய்தாள். மூன்றாவது லார்ஜை பேரர் கொண்டு வர.. 'உன் டவுட்டை இப்போ கிளியர் பண்றேன் பார்..' என்றவள், மிக்ஸிங் கலக்காத விஸ்கியை எடுத்து, அப்படியே ராவாக வாய்க்குள் ஊற்றினாள்..!! அசோக் 'ஆ'வென்று வாயை பிளந்து பதறிப் போனான்..!!

"ஐயோ.. என்ன பண்ற நீ..?? அப்படியே ராவா.."

"ஏ..ஏன்.. குடிச்சா என்ன..??" அடர்த்தியான ஆல்கஹாலுக்கு முகத்தை சுளித்தவாறே மீரா கேட்டாள்.

"ஹாட்டா இருக்கும்..!!"

"ஹாஹா.. இந்த மிர்ச்சிக்கே ஹாட்டா..???"

என்று கெத்தாக கேட்டவள்.. தட்டில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த.. அந்த தடித்த முழுநீள பச்சை மிளகாயை எடுத்து.. அப்படியே கடித்து நறநறவென மெள்ள ஆரம்பித்தாள்..!! அசோக் டென்ஷனாகிப் போனான்.. 'யோசனை இல்லாமல் இவளை இங்கே அழைத்து வந்துவிட்டோமோ' என்று முதன்முறையாக அவனுக்கு ஒரு கிலி கிளம்பியது..!!

"ஹேய்.. உனக்கு என்ன லூஸா..?? விஸ்கியை ராவா குடிச்ச.. இப்போ பச்சை மிளகாயை அப்படியே.."

"ஹ்ஹ.. இதுலாம் என்னை ஒன்னும் செய்யாது மச்சி.. ஐம் மிர்ச்சி மச்சி.. மிர்ச்சி..!!"

"அறிவில்லாம பேசாத..!! இந்தா.. இந்த தண்ணியை கொஞ்சம் குடி.. வயிறை ஏதாவது பண்ண போகுது..!!"

"ம்ஹூம்.. எனக்கு இந்த தண்ணி வேணாம்..!! பேரர்.."

"அப்படியே அறைஞ்சிடுவேன் மீரா..!!"

"ஹ்ஹ.. நீ என்னை அறைய போறியா..?? அவ்ளோ தைரியமா உனக்கு..??"

"ஆமாம்.. இப்போ இதை குடிக்கல.. அதான் நடக்கப் போகுது..!! குடி.. குடின்றேன்ல..??"

அசோக் மீராவின் வாயைப் பிடித்து வலுக்கட்டாயமாக அவளுக்கு குளிர்ந்த நீர் புகட்டினான்.

"கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு..?? இப்படிலாம் சாப்பிட்டா குடல் வெந்து போயிடும்..!!"

அவளை திட்டிக்கொண்டே நீர் புகட்டினான். மீராவும் ஒரு க்ளாஸ் நிறைய இருந்த தண்ணீர் மொத்தத்தையும் மடக் மடக்கென குடித்துவிட்டாள். குடித்து முடித்ததும், 'ஏவ்..' என்று எதுக்களிப்பை வெளிப்படுத்தியவள், பிறகு உதடுகளை சப்பிக்கொண்டே..

"ச்சோ.. ச்ச்வீட்..!!" என்றாள் திடீரென.

அவள் எதை சொல்கிறாள் என்று ஒருகணம் குழம்பிய அசோக், ஒருவேளை தண்ணீரில் சக்கரை விழுந்துவிட்டதோ என காலி க்ளாஸை பார்க்க, மீரா இப்போது ஒரு கெக்கலிப்புடன் சொன்னாள்."ஹ்ஹ.. தண்ணிய சொல்லலடா லூசுப்பயலே.. உன்னைய சொன்னேன்..!!"

சொல்லிவிட்டு அசோக்கை பார்த்து கண்ணடித்தாள். அவனுக்கோ இப்போது உடனடியாய் ஒரு வெட்கம். உதட்டில் அழகான புனனகையுடன்,

"ஆமாம்.. அடிக்கடி இது ஒன்னை சொல்லிடு.. 'ச்சோ ச்ச்வீட், ச்சோ ச்ச்வீட்'ன்னு..!!" என்றான்.

"ஹையோ.. வெக்கத்தை பாரு.. என் ஹனிபனிக்கு..!!"

இளிப்புடன் சொன்ன மீரா, படக்கென சேரில் இருந்து எழுந்தாள். ஹஸ்கியான செக்ஸியான குரலில் அவள் பாட்டுக்கு பாட ஆரம்பித்தாள்.

"யூ'ஆர் மை பம்கின்.. பம்கின்.. ஹெலோ ஹனிபனி..!! ஐ'ம் யுர் டம்ளிங்.. டம்ளிங்.. ஹெலோ ஹனிபனி..!! ஃபீலிங் சம்திங்.. சம்திங்.. ஹெலோ ஹனிபனி.. ஹனிபனி.. டோகோ டோகோ..!!"

இடுப்பில் ஒரு கையும், தலையில் ஒரு கையுமென.. மாறி மாறி வைத்துக்கொண்டு.. தனது பின்புறத்தை இப்படியும் அப்படியுமாய் அழகாக அசைத்து அசைத்து.. இமைகளை படக் படக்கென வெட்டியவாறே.. அசோக்கை பார்த்து பாடிக்கொண்டே அவள் ஆட.. இப்போது பாரில் இருந்த அனைவரும் திரும்பி அவளை பார்த்தனர்.. 'உய்ய்ய்..' என்று கத்தியவாறே உற்சாகமாக கைதட்டினார்கள்..!! அசோக்கிற்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது..!!

"ஹேய்.. என்ன பண்ற நீ..?? எல்லாரும் பாக்குறாங்க.. உக்காரு மீரா.. ப்ளீஸ்.. உக்காரு..!!"

அவளுடைய தோள்களை பற்றி அழுத்தி, அரும்பாடு பட்டு அவளை அமரவைக்க வேண்டியதிருந்தது அசோக்குக்கு..!!


அப்புறம் சிறிது நேரம் மீரா அடித்த கூத்துக்கும், செய்த ரகளைக்கும் அளவே இல்லை. அசோக்தான் நொந்து போனான். அவளை கண்ட்ரோல் செய்வதே கடினமான காரியமாக இருந்தது. ஏற்றிய கொஞ்ச நஞ்ச போதையும் இறங்கிப்போனது. நான்காவது லார்ஜ் கொண்டு வந்து ஊற்றிய பேரர்,

"என்ஜாய் யுவர் டிரிங் மேடம்..!!" என்ற மாமூலான டயலாக்கை உதிர்க்க, மீரா

"ரிப்பீட்..!!" என்றாள். இன்னொரு லார்ஜ் கேட்கிறாளோ என்று அந்த ஆள் குழம்ப,

"இல்ல.. இப்போ நீங்க 'என்ஜாய் யுவர் டிரிங்'னு ஸ்டைலா சிச்சுக்கிட்டே சொன்னீங்கள்ல.. அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இட்ஸ் ச்சோ.. ச்ச்வீட்..!! ரிப்பீட் ப்ளீஸ்..!! இன்னொரு மொறை சொல்லுங்க..!!" என்று மீரா இளித்தாள். அந்த பேரர் ஓரிரு வினாடிகள் திருதிருவென விழித்தான். அப்புறம்..

"எ..என்ஜாய் யுவர் டிரிங் மேடம்..!!" என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொன்னான்.

"வாவ்... ச்சோ.. ச்ச்வீட்..!! இன்னொரு மொறை இன்னொரு மொறை.. ப்ளீஸ் ப்ளீஸ்.. ரிப்பீட்..!!"

அந்த ஆள் இப்போது அசோக்கை பரிதாபமாக பார்த்தான். 'எப்படியாவது இந்த இம்சைட்ட இருந்து என்னை எஸ்கேப் பண்ணி வுடு ராசா..' என்பது போல இருந்தது அவன் பார்வை..!!

"ஹேய்.. விடு மீரா அவரை..!! ஸார்.. நீங்க போங்க ஸார்..!!" என்று அசோக்தான் அந்த பேரரை காப்பாற்றினான்.

ஐந்தாவது லார்ஜ் வந்தபோது..

"ஜானிப்பயல சும்மா சொல்லக்கூடாது.. ஜம்முனு இருக்குறான்..!!" என்று திடீரென சொல்லி, அசோக்கை குழம்ப வைத்தாள்.

"யாரு ஜானிப்பய..??"

"இதோ இவன்தான்..!!" விஸ்கியை தட்டிக்காட்டிய மீரா,

"வாக்கர்னு பேரை வச்சுக்கிட்டு.. உள்ளபோய் என்னமா தடதடன்னு ஓடுறான்..!!" கருவிழிகளை சுழற்றிக்கொண்டே சொல்ல,

"ஷ்ஷ்.. ப்பா.. இப்போவே கண்ணை கட்டுதே..!!" சலிப்பானான் அசோக்.

விஸ்கியை உள்ளே ஊற்றிவிட்டு.. கடித்துக்கொள்ள ஷீக் கபாபை கையில் எடுத்தவள்.. வாயென்று நினைத்து மூக்கில் திணித்துக் கொண்டாள்..!! அசோக் பதறிப் போனான்..!!

"ஹேய்.. மூக்கு அது..!!"

"ஓ.. மூக்கா இது..?? அப்போ வாய் எங்க..?? வேர் இஸ் மை வாய்.. வேர் இஸ் மை வாய்..??"

என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவள்.. இடது கையால் தன் முகத்தை தடவி.. வாயை கண்டுபிடித்து.. இரண்டு விரல்களால் வாயை திறந்து.. மூடி விடாமல் பிடித்துக்கொண்டு.. வலது கையிலிருந்த ஷீக் கபாபை வாய்க்குள் லபக்கென்று போட்டாள்..!! போட்டுவிட்டு..

"எப்பூடி..??" என்றாள் பெருமையாக.

"கிழிஞ்சது..!!" தலையில் அடித்துக்கொண்டான் அசோக்.

ஆறாவது லார்ஜ் குடிக்கும்போது வேறொரு பிரச்சினை..!! சற்று தூரத்தில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்த நான்கு கல்லூரி மாணவர்களில் ஒருவன்.. எதேச்சையாக இவளை திரும்பி பார்த்துவிட்டான் போலிருக்கிறது.. மீரா கொதித்து போய் விருட்டென எழுந்தாள்..!!

"ஒய்.. என்னடா இங்க லுக்கு..?? இங்க என்ன படமா காட்றாங்க..??" என்று காலி க்ளாஸை கையில் எடுத்தாள்.

அந்தப் பையன் மிரண்டு போய் அந்தப்பக்கம் திரும்பிக் கொண்டான். மீராவுடைய செய்கையில் அசோக்கும் அதிர்ந்து போயிருக்க, பேரர் அவசரமாக இவர்களை நோக்கி ஓடி வந்தான்.

"ஸார்.. கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணுங்க ஸார்.. இது டீசன்டான பார்.. ரொம்ப இன்டீசண்டா போறாங்க..!!"

"ஹேய்.. உக்காரு மீரா.. சொல்றேன்ல.. உக்காரு..!!" மீராவை அதட்டிய அசோக்,

"ஸாரி பாஸ்.. நான் பாத்துக்குறேன்.. நீங்க போங்க..!! நான் பாத்துக்குறேன் பாஸ்.. இனிமே இப்படி நடக்காது..!!"

பேரரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தான். அப்புறம் எழுந்து எதிரே இருந்த மீராவுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டான். அவளுடைய புஜத்தை இறுகப் பற்றியவன், சற்றே எரிச்சலான குரலில் கேட்டான்.

"எ..என்ன மீரா இது.. எல்லாரும் நம்மை பத்தி என்ன நெனைப்பாங்க..?? ச்ச..!!"

"என்ன வேணா நெனச்சுக்கட்டும்.. எனக்கு கவலை இல்ல..!!"

"ப்ச்.. என்னாச்சு உனக்கு.. ஏன் இப்படிலாம் பண்ற..??" அசோக் இப்போது சலிப்பாக கேட்க,

"எனக்கு மனசே சரி இல்ல அசோக்.. அதான்..!!" மீரா பாவமாக சொன்னாள்.

"அதுக்காக..??"

"யாரையாவது புடிச்சு சப்பு சப்புன்னு அறையணும் போல இருக்கு..!!"

"ஹ்ம்ம்.. அவ்வளவுதான..?? சரி.. என்னை அடி.. எவ்ளோ வேணா என்னை அடிச்சுக்கோ.. உன் கோவத்தை என் மேல காட்டு..!! ம்ம்.. கமான்..!!" அசோக் சீரியஸாக சொல்ல, மீரா இப்போது சிரித்தாள்.

"ஹ்ஹ.. உன்னை எதுக்கு அடிக்கணும்..?? நீ... என் செல்...ல ஹனிபனி..!!" என்று கண்சிமிட்டியவள், உடனே அந்த கல்லூரி பையனை நோக்கி கைநீட்டி..

"எனக்கு அவனைத்தான் அடிக்கனும்.. அவன் ஃபேஸ்-கட்டே எனக்கு சுத்தமா பிடிக்கல..!! ப்ளீஸ் அசோக்.. ரெண்டே ரெண்டு அறை.. அவனை போய் அறைஞ்சுட்டு வந்துர்றேன்.. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்..!!" என்று கெஞ்சலாக கேட்டவாறே எழ முயல, அசோக் அவளை பிடித்து அமுக்கினான்.

"என்ன வெளையாடுறியா.. உக்காரு மீரா..!!"

"ப்ளீஸ் அசோக்..!!"

"ப்ச்.. சொல்றேன்ல..?? வேணுன்னா என்னை அறைஞ்சுக்கோ..!!"

"உன்னை அறைய மாட்டேன் போ.. யு ஆர் எ குட்பாய்..!!"

"ஹாஹா.. யாரு.. நானா..??" அசோக் சிரிப்புடன் கேட்டான்.

"யெஸ்ஸ்ஸ்..!! அசோக் இஸ் எ குட்பாய்..!! மீரா இஸ் எ பேட் கேர்ள்.. வெரி வெரி பேட் கேர்ள்..!!!" மீரா திடீரென அவ்வாறு சீரியஸான குரலில் சொல்ல, அசோக் அப்படியே உருகிப் போனான்.

"ஹேய்.. ஏன் இப்படிலாம் சொல்ற..??"

"யெஸ்.. இட்ஸ் ட்ரூ..!!"

"ப்ச்.. அதுலாம் ஒன்னுல்ல.. மீரா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு.. எனக்கு நல்லா தெரியும்..!!"

மீராவின் கலைந்திருந்த கூந்தல் கற்றையை சரி செய்தவாறே, அசோக் காதலாக சொன்னான். மீரா இப்போது எதுவும் பேசாமல், அசோக்கையே அமைதியாக பார்த்தாள். இமைகளை அசைக்காமல்.. ஒருவித சலனமற்ற பார்வை..!! பிறகு..

"உனக்கு நான் ரொம்ப கஷ்டம் கொடுத்திட்டேன்ல..?? ஸாரி..!!" என்றாள் இரக்கமாக.

"ஹேய்.. மீரா.. எ..என்ன இது..??"

"தப்பான நம்பர் குடுத்து பிரச்னைல மாட்டிவிட்டு.. டிக்கெட் விக்க சொல்லி தெருதெருவா அலையவிட்டு.. கடலை கூடைலாம் உன் தலைல தூக்க வச்சு..!! எல்லாம் உனக்கு தேவை இல்லாத கஷ்டம்ல.. ஸாரிடா.. ஸாரி..!!"

"ப்ச்.. என்ன மீரா நீ..?? உன்னை நான் எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா..?? உனக்காக இது கூட பண்ண மாட்டேனா..?? அதில்லாம.. அர்பனேஜ்ல அந்த கொழந்தைங்க.. ட்ரெயின்ல அந்த தாத்தா.. அந்த ப்ரக்னன்ட் லேடி.. எல்லாரும் அவங்க மனசார எனக்கு தேங்க்ஸ் சொன்னப்போ.. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா..?? அந்த மாதிரி ஒரு சந்தோஷத்தை நான் அனுபவிச்சதே இல்ல.. அதெல்லாம் உன்னாலதான..?? இ..இன்னும் சொல்லப் போனா.. உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே.. நீ இந்த மாதிரி பண்ற இம்சைதான்.. தெரியுமா..?? உன்கிட்ட சொன்னதில்ல.. பட்.. ஐ ஜஸ்ட் லவ் தட்..!!" மீராவுக்கு இதமளிக்குமாறு அசோக் அவ்வாறு சொல்ல, அவள் இப்போது பட்டென முகம் மலர்ந்து போனாள்.

"ரியல்லி..????" என்றாள் கண்களில் ஒரு மின்னலுடன்.

"யெஸ்..!!!"

"வாவ்..!! ஐ'ம் ஸோ ஹேப்பி நவ்..!!!" மீராவின் குழந்தைத்தனமான குதுகலம் அசோக்கிற்கு சிரிப்பை வரவழைத்தது.

"ஹாஹா..!!"

"ஓகே.. இந்த சந்தோஷத்தை கொண்டாட.. எனக்கு ஒரு ஜானி ரிப்பீட் சொல்லேன்..!!"

"ப்ச்.. போதும்.. ஏற்கனவே உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு..!! சாப்பிட்டுட்டு கெளம்பலாம்.. நீ வேற வீட்டுக்கு போகணும்ல..??"

"ம்ஹூம்.. வீடு வேணாம்.. நோ வீடு.. வீடு எனக்கு புடிக்கல..!!"

"என்ன வெளையாடுறியா.. வீட்டுக்கு போகலனா உன்னை தேட மாட்டாங்க..??"

"தேட மாட்டாங்க.. வீட்ல யாரும் இல்ல.. நான் மட்டுந்தான்..!!"

"ஓ.. எங்க போயிருக்காங்க..??"

"ம்ம்ம்ம்.. ஊர்ல திருவிழா..!!"

"நீ போகலையா..??"

"போனேன்.. புடிக்கலன்னு நான் மட்டும் வந்துட்டேன்..!!"

"ஓஹோ.. திருவிழா போயிட்டுத்தான்.. மூணு நாளா மேடம் எனக்கு கால் பண்ணலையா..??"

"ம்ம்.. ஆமாம்..!!"

"ஹ்ம்ம்.. வீட்ல யாரும் இல்லன்னதும் தண்ணியடிக்க ஆசை வந்துடுச்சாக்கும்..??"

"ஹாஹா.. ஆமாம் ஆமாம்..!!" மீரா பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டினாள்.

"பரவால.. வீட்ல யாரும் இல்லனாலும் பரவால.. நான் கொண்டு போய் ட்ராப் பண்ணிர்றேன்..!! நீயாச்சு.. உன் வீடாச்சு..!!"

"ஏன்.. உன்கூட தங்க வச்சுக்க மாட்டியா..?? உன் ஆபீஸ்லதான் யாரும் இருக்க மாட்டாங்களே..??" மீரா ஒருவித குறும்பு சிரிப்புடன் கேட்டாள்.

"ஹ்ஹ.. நீ எதுக்கு இந்த கேள்வி கேக்குறேன்னு எனக்கு நல்லா தெரியும்..!! உனக்கு சந்தேகமே வேணாம்.. நான் ஒன்னும் அலைஞ்சான் இல்ல.. எனக்கு அப்படிலாம் எதும் ஆசை இல்ல.. எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் நடந்தா போதும்..!!"

"ச்சோ.. ச்ச்வீட்..!!"

"ஹாஹா.. போதும் போதும்.. இன்னைக்கு நெறைய 'ச்சோ ச்ச்வீட்' சொல்லிட்ட..!!"

சொல்லிவிட்டு அசோக் புன்னகைத்தான். மீராவும் போதை ஏறிய கண்களுடன், பற்கள் தெரிய பளீரென்று சிரித்தாள். அப்புறம் திடீரென முகத்தை சீரியசாக மாற்றிக்கொண்டு,

"அ..அசோக்.." என்றாள்.

"ம்ம்..!!"

"நா..நான்.. நான்.. உன்கிட்ட.."

"என்கிட்ட..??"

"ஒ..ஒரு உண்மையை மறைச்சுட்டேன்.. ஸாரி..!!" மீரா சொல்ல, அசோக் இப்போது குழப்பமாக அவளை ஏறிட்டான்.

"எ..என்ன.. எதை மறைச்சுட்ட..??"

"ஆக்சுவலா.. நான் மறைக்கனும்னு மறைக்கல..!!"

"எ..என்னன்னு சொல்லு..!!"

"சொ..சொன்னா உனக்கு ஷாக்கா இருக்கும்.. நம்பவே மாட்ட..!!"

"ப்ச்.. ப்ளீஸ் மீரா.. வெ..வெளையாடாத.. என்னன்னு சீக்கிரமா சொல்லு..!!"

"ம்ம்ம்ம்... நா..நான்.. அல்ரெடி ட்ரிங்க்ஸ்லாம் சாப்பிட்ருக்கேன்னு சொன்னேன்ல.. அது பொய்.. இதுதான் எனக்கு ஃபர்ஸ்ட் டைம்..!!" மீரா அவ்வாறு சொல்ல, அசோக்குக்கு பொசுக்கென்று போனது.

"ம்க்கும்.. இவ்வளவுதானா..?? இதுல ஷாக் ஆகுறதுக்கு என்ன இருக்கு.. 'இங்க பட்டை சாராயம் கெடைக்குமா'ன்னு நீ கேட்டப்போவே எனக்கு அது தெரிஞ்சு போச்சு..!!"

"ஓ..!!"

"ஃபர்ஸ்ட் டைம் அதுவுமா.. சொல்ல சொல்ல கேட்காம, கன்னாபின்னான்னு குடிச்சிருக்க.. ஹ்ம்ம்... என்ன ஆகப் போகுதோ..??"

அசோக் இருவருக்கும் ஃப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்தான். ஆர்டர் செய்தபோது 'அப்படி இருக்க வேண்டும்.. இப்படி இருக்க வேண்டும்..' என்று பேரருக்கு ஆயிரம் நிபந்தனைகளும், குறிப்புகளும் கொடுத்த மீரா, ஃப்ரைட் ரைஸ் வந்தபோது கூட ஆர்வமாகவே சாப்பிட ஆரம்பித்தாள். ஆனால்.. இரண்டு வாய் எடுத்து வைத்ததுமே..

"எனக்கு போதும்.. பசிக்கல..!!" என்று முகத்தை சுளித்தாள்.. முரண்டு பிடித்தாள்..!!

"ப்ச்.. ட்ரிங்ஸ் அடிச்சா நல்லா சாப்பிடனும்... இல்லனா வயிறு கெட்டு போயிடும்..!! இந்தா.. சாப்பிடு.. சாப்பிடுன்றேன்ல..??" அசோக்கே அவளுக்கு ஊட்டி விட வேண்டியது இருந்தது.

ஒருவழியாக சிணுங்கிக் கொண்டே மீரா சாப்பிட்டு முடித்தாள்.. அசோக்கும் சாப்பிட்டு முடித்து, பில் கொண்டு வர சொன்னான்..!! சாப்பாடு உள்ளே சென்றதில் இருந்தே.. மீராவிடம் சாமியாட்டமும் அதிகமாகவே இருந்தது..!! மொத்தமாய் உள்ளே தள்ளிய விஸ்கி எல்லாம்.. இப்போது ஒன்றுகூடி முழு வீரியத்தில் வேலையை காட்டின..!! அவளுடைய கூந்தல் எப்போதோ கலைந்து போயிருந்தது.. முடிக்கற்றைகள் எல்லாம் அதது இஷ்டத்திற்கு அலைபாய்ந்தன..!! கண்கள் முக்கால்வாசி செருகிப் போயிருக்க.. தலை ஒரு இடத்தில் நில்லாமல், அங்கும் இங்கும் அல்லாடியது..!! கீழுதட்டை வேறு அவ்வப்போது வாய்க்குள் மடித்து வைத்து.. 'பச்சக்.. பச்சக்..' என சுவைத்துக் கொண்டாள்..!!

பில் கொடுத்த பேரருக்கு, அசோக் கார்ட் கொடுத்தான். தேய்த்து முடித்த கார்டை மீண்டும் பில்புக்குக்குள் இட்டு, பேரர் டேபிளில் வைத்து சென்றான். கார்டை கலெக்ட் செய்து கொண்ட அசோக், டிப்ஸ் பணத்தை புக்குக்குள் செருகிக் கொண்டிருக்கும்போதுதான்..

"டமார்..!!" என்று டேபிள் சப்தம் எழுப்பியது.

இந்தமுறை காலிக்ளாஸ் வைக்கப்பட்டதால் வந்த சப்தம் அல்ல.. மீராவின் கபாலம் சென்று மோதியதால் எழுந்த சப்தம்..!! போதை மிகுந்து போய்.. டேபிளிலேயே தலைகுப்புற மட்டை ஆகியிருந்தாள் மீரா..!! அசோக் பதறிப் போனான்.. உடனடியாய் அவளை அள்ளி கையிலெடுத்தான்.. அவளுடைய கன்னத்தில் பட் பட்டென தட்டியவாறே கேட்டான்..!!

"மீரா..!! ஹேய் மீரா.. ஹேய்.. என்னாச்சுமா..??"

அவன் கேட்பதை புரிந்து கொண்டு பதில் சொல்கிற சுவாதீனம் எல்லாம் மீராவுக்கு இல்லை. விழிகளை திறந்து மலங்க மலங்க பார்த்தாள். உதட்டை உள்ளே மடித்து சப்பு கொட்டினாள். பிறகு மீண்டும் இமைகள் செருகிக் கொள்ள, மயக்கத்திலோ நித்திரையிலோ மூழ்க ஆரம்பித்தாள்.

"ஹேய் மீரா.. ஹேய்.. கண்ணை தொறந்து பாரு..!!"

அசோக் திரும்ப திரும்ப அவளுடைய கன்னத்தை தட்டி, அவளுக்கு விழிப்பு கொணர முயன்றான். ம்ஹூம்..!! ஒரு புண்ணியமும் இல்லை..!! அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. அவளுடைய நிலையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை..!! நடுவில் ஒருமுறை வாய்திறந்து 'ரிப்பீட்..!!' என்று உளறியதோடு மட்டும் சரி..!!

அசோக்குக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அவஸ்தையாய் நெற்றியை பற்றி பிசைந்தான். 'இப்படி ஃப்ளாட் ஆகி கிடக்கிறாளே.. இவளை எப்படி வீட்டுக்கு கொண்டு போய் சேர்க்கப் போகிறேன்..?? அட்லீஸ்ட் அட்ரஸ் தெரிந்தாலாவது.. ஆட்டோவில் அள்ளிக்கொண்டு போய் போடலாம்..?? அதுவும் தெரியாதே..?? என்ன செய்யலாம் இப்போது..??'

அப்போதுதான் திடீரென அசோக்குக்கு அந்த ஐடியா மூளையில் உதித்தது. உடனே மீராவுடைய பேகை எடுத்தான். உள்ளே இருந்த செல்போனை எடுத்தான். கான்டாக்ட் லிஸ்ட் திறந்தான். 'இவளுடைய ஃப்ரண்ட்ஸ் யாருக்காவது ஃபோன் செய்து உதவி கேட்கலாம்.. அட்ரஸ் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்..!!' என்பது மாதிரியான ஐடியா.கான்டாக்ட் லிஸ்ட் திறந்து பார்த்தவன்.. ஒருகணம் குழம்பிப் போனான்.. அப்படியே 'பே' என்று செல்ஃபோனையே பார்த்தான்..!! 'மட்டி, மடையன், முட்டாள், மூடன்' என.. பதிவு செய்யப்பட்டிருந்த கான்டாக்ட்கள் எல்லாமுமே.. பரமார்த்த குரு சீடர்களின் பெயர்கள் ரேஞ்சுக்கு இருந்தன..!! அசோக் இப்போது பக்கவாட்டில் திரும்பி, மீராவை பார்த்து முறைத்தான்..!!

"ஆனாலும் உனக்கு இவ்வளவு கொழுப்பு ஆகாதுடி..!!" என்று வாய்விட்டே சொன்னான்.

'சரி.. இத்தனை பேரில் இப்போது யாருக்கு கால் செய்வது..??' ஓரிரு வினாடிகள் யோசித்த அசோக், பிறகு 'ஓகே.. கேனைப்பயலிடம் ஹெல்ப் கேட்கலாம்..' என்று முடிவுக்கு வந்தான். கேனைப்பயல் என்ற பெயரில் இருந்த கான்டாக்டுக்கு கால் செய்தான்.. ரிங் சென்றது.. அதே நேரம்..

"Sexy lady on the floor.. Keep you coming back for more..!!" என அசோக்கின் செல்போனும் அலறியது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக