http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : அன்புள்ள ராட்சசி - பகுதி - 19

பக்கங்கள்

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

அன்புள்ள ராட்சசி - பகுதி - 19

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில்.. அதிக சலசலப்பு இல்லாமல் சாந்தமாகவே காட்சியளித்தது அந்த கட்டிடம்.. வடபழனி R-8 காவல் நிலையம்..!! கட்டிடத்துக்குள்ளே.. கைதிகளை அடைத்து வைக்கிற ஸெல்லுக்குள்.. செங்கலாலும், சிமெண்டாலும் ஆன அந்த மேடை மீது.. சற்றே வாயை பிளந்து வைத்தவாறு உறங்கிக்கொண்டிருந்தார் ஸ்ரீனிவாச பிரசாத்..!! எஸ்.ஐ ஆக இருக்கையிலேயே.. எல்லோரும் அவரை எஸ்.பி என்று அழைக்கிறார்கள் என்றால்.. தாய், தந்தை வைத்த தனது பெயருக்குத்தான் அவர் நன்றி கூற வேண்டும்..!! 'எஸ்.பி ஸார் வர்றார்.. எஸ்.பி ஸார் போறார்..' என்பது மாதிரி கான்ஸ்டபிள்கள் தங்களுக்குள் பேசி.. அந்த ஸ்டேஷனுக்கு புதிதாக வருகை தந்திருக்கிற நபர்களை.. புரியாமல் தலை சொறிய வைப்பார்கள்..!!

மஃப்டி உடையிலே உறங்கிக்கொண்டிருந்தார் ஸ்ரீனிவாச பிரசாத்.. மார்பு திறந்திருக்க, சட்டையின் மேலிரண்டு பட்டன்கள் கழன்டிருந்தன.. தடித்த தங்கச்சங்கிலி ஒன்று அவரது கழுத்தில் தகதகத்தது..!! அசதியால் ஏற்பட்டிருந்த அவருடைய ஆழ்ந்த உறக்கத்தை.. ஸ்டேஷனுக்கு முன்புறம் இருந்து, சலசலவென வந்த அந்த சப்தம்.. சற்றே அசைத்து கலைத்துப் பார்த்தது..!! கான்ஸ்டபிள் கனகராஜன்.. கம்ப்ளைன்ட் கொடுக்க வந்த யாரிடமோ.. அசுவாரசியமான குரலில் விசாரித்துக் கொண்டிருந்தார்..!!

"ஓடிப்போயிட்டாளா..??"

"கா..காணாமப் போயிட்டாங்க..!!"

"ரெண்டும் ஒன்னுதானய்யா..??"

"இ..இல்ல ஸார்.. ரெண்டும் வேற வேற..!!"

முன்பிருந்து வந்த சப்தம் மட்டும் இல்லாமல்.. அவருடைய முகத்துக்கு முன்பாக 'ஈஈய்ங்.. ஈஈய்ங்..' என்று இரைச்சலிட்டவாறே சுற்றி சுற்றி வந்த ஈ ஒன்று.. இப்போது அவரது மூக்கிலேயே சென்று அமர.. அவருடைய உறக்கம் முழுமையாக கலைந்து போனது..!! 'ப்ச்..' என்று சலிப்பான குரலுடன் முகத்துக்கு முன்பாக கையை வீசியவர்.. தலையை சிலுப்பியவாறே எழுந்து அமர்ந்தார்..!! கண்கள் தூக்கத்தால் இன்னும் சுருங்கிப்போயிருக்க.. முரட்டுத்தனமான அவருடைய முகவெட்டில் இப்போது ஒருவித கடுகடுப்பு..!! ஈ மீது எழுந்த கடும் எரிச்சலுடன்.. பக்கத்து அறையில் இருந்து வந்த கனகராஜனின் கட்டைக்குரல் வேறு அவருக்கு கடுப்பை கிளப்ப..

"ஏய்ய்ய்..!!!"

என்று இங்கிருந்தே அந்த அறையைப் பார்த்து கத்தினார்..!! இவருடைய குரல் கனகராஜனின் காதில் விழவில்லை போலிருக்கிறது.. எந்த தடையும் இல்லாமல் தனது எகத்தாளப் பேச்சை அவர் தொடர்ந்துகொண்டிருந்தார்..!!

"என்னய்யா.. வெளையாடுறீங்களா..?? எல்லாம் தண்ணி போட்டு வந்திருக்கீங்களா..??"

"ஐயோ.. இ..இல்ல ஸார்..!!"

"அப்புறம்..?? பேர் என்னன்னு கேட்டா இந்தாள் மீரான்றான்.. நீ என்னடான்னா மீரா இல்லைன்ற..??"


"மீ..மீராதான் ஸார்.. அவங்க அப்படித்தான் சொன்னாங்க.. ஆனா அது உண்மையான பேரா இருக்குறதுக்கு சான்ஸ் ரொம்ப ரொம்ப கம்மின்னு வச்சுக்கோங்க.. கண்டிப்பா வேற பேராத்தான் இருக்கணும்..!! வேணும்னா.. இ..இப்போதைக்கு.. மீரான்னே வச்சுக்குவோம் ஸார்..!!" சாலமனின் பேச்சு கனகராஜனுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கவேண்டும்.

"என்னய்யா பேசுறீங்க நீங்க.. நல்லா வெளக்கெண்ணெய்ல போட்ட வெண்டைக்காய் மாதிரி.. வழவழா கொழகொழான்னு..!!" என்றார் கேலியும் கோபமுமாய்.

(மேலே சாலமன் சொன்னதுதான் நமக்கும்.. அதாவது.. எழுதுகிற எனக்கும், படிக்கிற உங்களுக்கும்..!! அசோக் அவளுடைய உண்மையான பெயரை தெரிந்துகொள்ளும் வரை.. நமக்கு அவள் மீராதான்..!! சாலமன் சொன்னதை ஏற்றுக்கொள்வது நல்ல பிள்ளைக்கு அழகு.. அதை விட்டுவிட்டு.. மேலே கனகராஜன் சொன்னது போல.. என்னை கிண்டல் பண்ணுகிற வேலையெல்லாம் வைத்துக்கொள்ளக் கூடாது.. சரியா..??)தனது சத்தத்துக்கு பயனில்லை என்று தெரிந்ததும், இங்கே ஸ்ரீனிவாச பிரசாத் சலிப்பானார். இனி வாய்பிளந்து உறங்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து கொண்டவர், படுக்கையிலிருந்து மெல்ல எழுந்தார். தூக்க கலக்கத்துடனே நடந்து, அந்த அறையை ஒட்டியிருந்த கழிவறைக்குள் புகுந்தார். பைப் திறந்து முகத்தில் நீர் வாரி இறைத்துக் கொண்டார். ஹேங்கரில் தொங்கிய டர்க்கி டவலை எடுத்து.. முகத்தை அழுந்த துடைத்தவாறே.. மீண்டும் முன்னறையை நோக்கி நடந்தார்..!! அடுத்த அறையில் அவர்களுடைய பேச்சு சப்தம் இப்போது மீண்டும் கேட்டது..!!

"ஜஸ்ட்.. அந்த ஃபோன் நம்பர் வச்சு.. அவங்க அட்ரஸ் மட்டும் கண்டுபிடிச்சு தந்தா போதும் ஸார்..!!" - கிஷோர்

"புரியுதுயா.. மொதல்ல ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக் குடுங்க.. விசாரிப்போம்..!!" - கனகராஜன்
இரண்டு அறைகளையும் பிரித்த அந்த இரட்டை மரத்தடுப்பை.. இரண்டு கையாளும் விலக்கியவாறு வந்து நின்றார் ஸ்ரீனிவாச பிரசாத்.. பக்கத்து அறைக்குள் பார்வையை வீசினார்..!! கனகராஜனும் அவரை சுற்றி அமர்ந்திருந்த அசோக் அண்ட் கோ-வும் கண்ணுக்கு தெரிந்தனர்..!! இவர் வந்து நின்றதை அவர்கள் கவனிக்கவில்லை.. தங்களது பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தனர்..!! அசோக்தான் இப்போது சற்றே கவலையான குரலில் கனகராஜனிடம் கேட்டான்..!!

"க..கம்ப்ளைன்ட் ஃபைல் பண்ணாம.. க..கண்டுபுடிச்சு தர மாட்டீங்களா ஸார்..??"

"எதுக்கு கேக்குற..??"

"எ..எனக்கு.. எனக்கு அவ மேல கம்ப்ளைன்ட் ஃபைல் பண்ண இஷ்டம் இல்ல..!!" சொன்ன அசோக்கை, கனகராஜன் ஏளனமாக ஒரு பார்வை பார்த்தார்.

"ஏன்யா.. எங்களைலாம் பாத்தா எப்படி தெரியுது உனக்கு..?? வேலை வெட்டி இல்லாம உக்காந்திருக்கோம்னு நெனச்சியா..?? கம்ப்ளைன்ட் பண்ணாம ஆக்க்ஷன் எடுக்குறதுக்கு.. போலீஸ்காரங்க என்ன உங்கவீட்டு வேலைக்காரங்களா..?? எத்தனையோ கேஸ் எஃப்.ஐ.ஆர் போட்டும்.. ஆக்க்ஷன் எடுக்காம அப்டி அப்டியே கெடக்குது.. நீ என்னடான்னா.."

"அதுக்கு இல்ல ஸார்.. நான்.." அசோக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வேணு இடையில் புகுந்து

"ஏய்.. நீ சும்மா இர்டா.." என்று அவனை தடுத்தான். பிறகு கனகராஜனிடம் திரும்பி,

"ஸார்.. நாங்க கம்ப்ளைன்ட் கொடுக்குறோம்..!!" என்றான்.

"டேய்..!!" அசோக் இப்போது வேணுவிடம் எகிறினான்.

"என்னடா..??"

"அ..அவ மேல எதுக்குடா கம்ப்ளைன்ட்.. அவ என்ன தப்பு பண்ணினா..??"

"உன்னை நல்லா ஏமாத்திருக்காளே.. அது பத்தாது..?? இத்தனை நாளா உன்னை லவ் பண்ற மாதிரி நடிச்சு.. நம்ப வச்சு.. பொய் பொய்யா சொல்லி..!! ச்ச.. எப்படிலாம் முட்டாள் ஆக்கிருக்கா.." சொல்லிக்கொண்டிருந்த வேணுவை இடைமறித்து கனகராஜன் கேட்டார்.

"ஏம்பா.. கொஞ்சம் இருங்க..!! ஏமாத்திட்டா ஏமாத்திட்டான்னு அப்போ இருந்து சொல்லிட்டு இருக்கீங்களே.. அப்படி என்ன ஏமாத்திட்டா..?? பணம், நகைன்னு ஏதாவது ஆட்டைய போட்டுட்டு போயிட்டாளா..??"

"ஹையோ.. அதெல்லாம் ஒன்னுல்ல ஸார்.. ஏன் கேக்குறீங்க..??" - இது கிஷோர்.

"என்னது.. ஏன் கேக்குறீங்களா..?? கிழிஞ்சது போ..!! கம்ப்ளைன்ட்ல அப்புறம் என்னத்தய்யா எழுதுவீங்க..?? அவ ஏமாத்தினதால.. உங்களுக்கு என்ன பாதிப்புன்னு எழுதனுமே..??"

"ஓ..!! பா..பாதிப்புனா.. ம்ம்ம்.. அவ போயிட்டதால.. இ..இவன் அப்டியே மனசு உடைஞ்சு போயிட்டான் ஸார்..!! அதான்.." கிஷோர் தயங்கி தயங்கி சொல்ல, கனகராஜன் இப்போது கடுப்பானார்.

"யோவ்.. எந்திரிங்கயா..!!"

"எ..என்ன ஸார்..??"

"டயத்தை வேஸ்ட் பண்ணாம.. எடத்த காலி பண்ணுங்க..!!"

"ஏ..ஏன் ஸார்.. என்னாச்சு..??"

"பின்ன என்ன..?? அவன் அவன் லட்சக்கணக்குல தொலைச்சுட்டு.. ஏமாந்த பணம் எப்போ வரும்னு தெரியாம.. வீட்டுக்கும் ஸ்டேஷனுக்குமா அலைஞ்சுட்டு இருக்கானுக..!! நீங்க என்னடான்னா.. மனசு உடைஞ்சதுக்குலாம் கம்ப்ளைன்ட் கொடுக்க வந்துட்டீங்க..?? அங்க பாரு.. அவ்வளவும் பெண்டிங்ல இருக்குற கேஸ் ஃபைல்ஸ்..!! ஆயிரத்தெட்டு கம்ப்ளைன்ட் வந்து கெடக்கு.. அம்புட்டும் வழிப்பறி, ராபரி, கழுத்தறுப்பு, கற்பழிப்பு..!! அதைக்கவனிக்கவே இங்க ஆளும் இல்ல.. நேரமும் இல்ல..!! இந்த லட்சணத்துல.. இப்போ உங்க கம்ப்ளைன்ட் ரொம்ப முக்கியமா..?? வீட்டுக்கு போய் வேற ஏதாவது வேலை இருந்தா பாருங்கயா.. போங்க..!! சும்மா கெளம்பி வந்துட்டிங்க.. மனசு, மசுருன்னுட்டு..!!" கனகராஜன் அந்த மாதிரி எகத்தாளமாக சொல்ல, அசோக்குக்கு இப்போது சுருக்கென கோவம் வந்தது. அந்த கோவத்துடனே அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்து,

"என்ன ஸார் நீங்க.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பேசுறீங்க..?? லட்சக்கணக்குல தொலைச்சா மட்டுந்தான் அது பாதிப்பா..?? எத்தனை கோடி ரூபா கொடுத்தாலும்.. என் மனசுல உண்டான பாதிப்பு சரியாகாது ஸார்.. அது தெரியுமா உங்களுக்கு..?? அவ வந்தாத்தான் அது சரியாகும்..!! அ..அவ.. அவ என் உயிர் ஸார்.. என் வாழ்க்கை..!! அவ எனக்கு திரும்ப கெடைக்கலைன்னா.. என் லைஃபே போச்சு.. அவ்வளவுதான்.. Its gone..!!!! அப்புறம் நான் வாழ்றதுல அர்த்தமே இல்ல..!! கொஞ்சமாவது என் நெலமையை புரிஞ்சுக்கங்க ஸார்.. சும்மா வாயிக்கு வந்தபடி பேசாதிங்க..!!"

ஆதங்கத்துடன் அசோக் பேசியதை ஸ்ரீனிவாச பிரசாத் மிக உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவன் அவ்வாறு குரலை உயர்த்தி பேசியது, இப்போது கனகராஜனின் ஆத்திரத்தை கிளறிவிட்டது.

"டேய்.. என்ன.. திமிரா..?? ஸ்டேஷனுக்குள்ளயே வந்து ஓவரா சவுண்டு விடுற..?? உள்ள தூக்கிப்போட்டு பேத்தெடுத்துடுவேன் ராஸ்கல்..!!"

என்று அசோக்கை பார்த்து சீறியவாறு, சேரில் இருந்து எழுந்தார். அவருடைய வலது கையை நீட்டி, அசோக்கின் சட்டையை பற்ற எத்தனித்த அவரை,

"கனகு..!!!!!"

என்று அவருக்கு பின்னால் இருந்து வந்த ஸ்ரீனிவாச பிரசாத்தின் கடுமையான குரல் தடுத்து நிறுத்தியது. கனகராஜன் திரும்பினார். சப்-இன்ஸ்பெக்டரை கண்டதும் அவருடைய உடலில் உடனடியாய் ஒரு விறைப்பு. அவருடைய குரலிலும் அந்த விறைப்பு கூடியிருக்க,

"ஸார்..!! வ..வந்ததுல இருந்தே ராங்கா பேசிட்டு இருக்காய்ங்க ஸார்..!! ஏதோ ஒரு பொண்ணு லவ் பண்றேன்னு சொல்லிட்டு காணாம போயிட்டாளாம்.. உடனே இவரு மனசு உடைஞ்சு போயிட்டாராம்.. கம்ப்ளைன்ட் குடுக்க வந்துட்டாய்ங்க.. அந்தப்பொண்ணு பேர் கூட இவய்ங்களுக்கு சரியா தெரியல.."

"ப்ச்.. விடுயா..!!"

"நாம இவய்ங்களுக்கு அந்தப்பொண்ணு அட்ரஸ் கண்டுபிடிச்சு தரணுமாம் ஸார்..!! போலீஸ் ஸ்டேஷன்னு நெனச்சாய்ங்களா.. இல்ல போஸ்ட் ஆபீஸ்ன்னு நெனச்சாய்ங்களான்னு தெரியல..!!"

"யோவ்.. விடுன்றேன்ல.. எல்லாம் கேட்டுட்டுத்தான் இருந்தேன்..!!"

சற்றே எரிச்சலாக கனகராஜனிடம் சொன்னார் ஸ்ரீனிவாச பிரசாத். பிறகு மெல்ல நகர்ந்து அசோக்கை நோக்கி சென்றார். இப்போது அசோக்கின் நண்பர்களும், சேரை விட்டு எழுந்து நின்றனர். மற்றவர்களை விட்டுவிட்டு அசோக்கை நெருங்கிய ஸ்ரீனிவாச பிரசாத், அவனுடைய கண்களை கூர்மையாக பார்த்தவாறே கேட்டார்.

"ஏமாந்தவன் நீதானா..??"

"ஆ..ஆமாம்..!!"

"உன் பேர் என்ன..??"

"அ..அசோக்..!!"

"ம்ம்..!! சரி.. நீ மட்டும் என்கூட வா..!! மத்தவங்கல்லாம் வீட்டுக்கு போங்க..!!"

இயல்பாக சொல்லிவிட்டு அவர் முன்னால் நடக்க, அசோக்கும் அவன் நண்பர்களும் அவரை சற்றே குழப்பமாக பார்த்தனர். அசோக் நின்ற இடத்தை விட்டு இன்னும் அசையாமல் இருக்க, ஒரு நான்கைந்து எட்டுகள் எடுத்து வைத்திருந்த ஸ்ரீனிவாச பிரசாத், இப்போது திரும்பி பார்த்தார்.

"ப்ச்.. வான்றேன்ல.. வா..!!"

என்று கடுமையான குரலுடன் அசோக்கை கையசைத்து அழைத்தார். அசோக் இப்போது தயங்கி தயங்கி அவரை நோக்கி சென்றான். அவர் முன்னால் நடக்க, இவன் அவரை பின்தொடர்ந்தான். அசோக்கின் நண்பர்களும், கனகராஜனும் எதுவும் புரியாமல் திருதிருவென விழித்தபடி நின்றிருந்தனர்.

இருவரும் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தனர்..!! வெளியே இப்போது கதிரவன் காணாமல் போயிருக்க.. காரிருள் வந்து உலகத்தை கவ்வியிருந்தது.. ஆங்காங்கே ஒளிர்ந்த மின்விளக்குகள்.. அந்த இருளை நீக்க முடிந்த அளவுக்கு முயன்று கொண்டிருந்தன..!! ஸ்ரீனிவாச பிரசாத் ஜீப்பில் ஏறி அமர்ந்து.. கதவை அறைந்து சாத்தினார்.. அசோக்கும் வண்டியில் ஏறி, அவருக்கு அருகே அமர்ந்துகொள்ள.. ஆக்சிலரேட்டரை மிதித்து ஜீப்பை கிளப்பினார்..!! வண்டி ஆர்காட் ரோட்டில் விரைந்து கொண்டிருந்தது.. ஸ்ரீனிவாச பிரசாத் எதுவுமே பேசாமல், ஸ்டியரிங்கை இப்படியும் அப்படியுமாய் வளைத்துக் கொண்டிருந்தார்..!! அவருடைய இறுகிப்போன முகத்தை.. சற்று மிரட்சியுடன் பார்த்தவாறே அசோக் சென்று கொண்டிருந்தான்..!!

"எ..எங்க ஸார் போறோம்..??"

என்று அவன் தயங்கி தயங்கி கேட்டதற்கு.. ஸ்ரீனிவாச பிரசாத் அவன் பக்கமாய் திரும்பி, ஒரு முறைப்பையே பதிலாக தந்தார்..!! அசோக்கும் அதற்கு மேல் அவரை எதுவும் கேட்கவில்லை..!! சாலையில் ஏகத்துக்கும் வெளிச்சத்தை தெளித்தவாறு.. சர்ரென எதிர்த்திசையில் பறக்கிற வாகனங்களையே.. வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்..!!

அதன்பிறகு ஒரு மணி நேரம் கழித்து.. நெல்சன் மாணிக்கம் சாலையில்.. சற்று ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கிற ஒரு தனியார் பார்..!! அரசின் அனுமதியும் பெறாமல்.. அதிக பிரபலமும் ஆகாமல்.. அமைதியும், அலங்கோலமுமாய் காட்சியளித்தது அந்த பார்..!! சுற்றியிருந்த சுவர்களில்.. சட்டை கழற்றிய சல்மான்கான்கள்.. கையில் சோடாவை வைத்துக்கொண்டு.. மறைமுகமாக விஸ்கிக்கு விளம்பரம் செய்தனர்..!! மூலையில் கிடந்த ஒரு டேபிளில்.. ஸ்ரீனிவாச பிரசாத்தும் அசோக்கும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்..!! இருவருமே அல்ரெடி நிறைய ஆல்கஹாலை விழுங்கியிருந்தனர்..!!

"அ..அவ கண்ணு இருக்கே.. அ..அது.. அதை எப்படி சொல்றதுன்னு தெரியல.. அப்டியே பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கும்..!! எனக்கு கோவமானாலும் சரி.. சோகமானாலும் சரி.. அந்தக்கண்ணை பாத்துட்டா.. அவ்வளவுதான்.. அப்படியே எல்லாம் காணாம போயிரும்..!!"

".................................."

"ஹ்ம்ம்... அ..அவளை எவ்ளோ லவ் பண்ணினேன் தெரியுமா..?? அவ மேல உசுரையே வச்சிருந்தேன்.. அவதான் என் பொண்டாட்டின்னு மனசுக்குள்ள அவ்வளவு கற்பனை..!! எ..எல்லாத்தையும்.. தூக்கிப்போட்டு மிதிச்சுட்டு போயிட்டா..!! அ..அப்டியே.. அப்டியே தூசி மாதிரி தட்டிவிட்டுட்டு போயிட்டா..!!"

".................................."

"நல்லா தின்னுவா.. மெட்ராஸ்ல இருக்குற ஒரு ஹோட்டல் விடாம அவளுக்கு தீனி வாங்கிப் போட்டிருக்கேன்..!! பொடவை.. நகை.. லிப்ஸ்டிக்.. நெயில் பாலிஷ்.. லொட்டு.. லொசுக்கு.. மசுரு.. மட்டை..!!! ச்சை..!!!"

".................................."

"இவளுகளலாம்.. நடுரோட்டுல ஓடவிட்டு.. அ..அப்டியே என்கவுன்டர் பண்ணனும்..!!"

".................................."

"காதலிக்கிறப்போ தெரியலையா.. கட்டிப்புடிச்சு படுத்துக் கெடக்குறப்போ தெரியலையா..?? கல்யாணம்னு வந்தவுடனே மட்டும் கண்ணு தெரிஞ்சுடுச்சாக்கும்.. நான் போலீஸ்காரன்னு..!!"

".................................."

"அந்த பன்னாடை நாயை பாக்குறதுக்கு பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்தே.. போலீஸ் ஆகணும்னு ஆசை எனக்கு..!! திடீர்னு வந்து.. அப்பன் திட்றான்.. ஆத்தா வையிறான்னு மூக்கை சிந்தினா..??"

ஸ்ரீனிவாச பிரசாத் தொடர்ந்து ஆதங்கத்துடன் புலம்பிக்கொண்டே இருந்தார். அசோக் தனது கதையை ஏற்கனவே அவருக்கு சொல்லி முடித்திருந்தான். இப்போது ஸ்ரீனிவாச பிரசாத்தின் முறை. அமைதியாக அவருடைய புலம்பலை நெடுநேரம் கேட்டுக்கொண்டிருந்த அசோக், பிறகு ஆறுதலாக அவரிடம் சொன்னான்.


"வி..விடுங்க ஸார்.. அதையே நெனைச்சுட்டு இருக்காதீங்க..!!"

"எப்படிடா விடுறது..?? அவ விட்டுட்டு போய் எட்டு வருஷம் ஆகுது.. இன்னும் இங்க உக்காந்து அப்படியே கொடைஞ்சுட்டு இருக்காடா..!!" நெற்றியை தட்டிக்காட்டியவாறே சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத், பிறகு முகத்தை வெடுக்கென வேறுபக்கமாக திருப்பி கத்தினார்.

"டேய் அய்யனாரு.. இன்னொரு கட்டிங் கொண்டா..!!"

"போ..போதும் ஸார்.. ஏற்கனவே ரொம்ப குடிச்சுட்டீங்க..!!" அசோக்கின் கனிவு அவருக்கு ஏரிச்சலையே மூடியது.

"ஏய்.. என்ன.. அக்கறையா..?? அறைஞ்சு பல்லை உடைச்சுடுவேன்..!! அக்கறையா பேசுற யாரையும் நான் சுத்தமா நம்புறது இல்ல.. அதை மொதல்ல புரிஞ்சுக்கோ..!!"

ஸ்ரீனிவாச பிரசாத் கண்களை உருட்டி சூடாக சொன்னார். பிறகு ஏதோ ஞாபகத்துக்கு வந்தவராய், தலையை கவிழ்த்துக் கொண்டார். அசோக் எதுவும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருக்க, அவரும் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தார். அப்புறம் தலையை மெல்ல உயர்த்தி, சற்றே தளர்ந்து போன குரலில் சொன்னார்.

"நா..நான் குடிக்கிறது அவளுக்கு பிடிக்கலைன்னு சொன்னாடா.. ஒரு வருஷத்துக்கு மேல சுத்தமா இதை தொடாம இருந்தேன் தெரியுமா..!! இப்போ பாரு.. டெய்ய்ய்லி..!!"

அவருடைய குரலில் தொனித்த வேதனையை அசோக்கால் புரிந்து கொள்ள முடிந்தது.

'இவன் நிஜமாகவே அன்புக்காக ஏங்குகிறான்.. ஆனால் எவளோ ஒருத்தி அன்பு காட்டுவது போல நடித்து ஏமாற்றிய பாதிப்பினால்.. யாருடைய அன்பும் தனக்கு அவசியம் இல்லை என்று அடம் பிடிக்கிறான்.. பாவம்தான்..!!'

அசோக் இப்போது ஸ்ரீனிவாச பிரசாத்தை பார்த்த பார்வையில் ஒருவித பரிதாபம் கலந்திருந்தது.

அய்யனார் வந்து அரைகுவார்ட்டரை க்ளாஸில் கவிழ்த்து சென்றான். அதில் சோடா ஊற்றி கலக்கிய ஸ்ரீனிவாச பிரசாத், அப்படியே தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டார். 'க்க்க்ஹ்ஹாஹ்..!!' என்றொரு கனைப்புடன் முகத்தை சுருக்கிக் கொண்டார். சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்துக்கொண்டவர், அசோக்கின் பிரச்சினைக்கு வந்தார்.

"அவ பேர் என்ன..??"

"தெ..தெரியாது ஸார்..!!"

"ப்ச்.. அவ சொன்ன அந்த டுபாக்கூர் பேரைத்தான்டா கேக்குறேன்..!!"

"மீரான்னு சொன்னா..!!"

"ஹ்ம்ம்..!! ரொம்ப புடிக்குமா அவளை..??"

"ம்ம்..!!"

"ரொம்ப அழகா இருப்பாளோ..??"

"ஆ..ஆமாம்..!!"

"ம்ம்ம்ம்..!! அழகா பொறந்து தொலைச்சு.. நம்ம உசுரை எடுத்து தொலைக்குங்க.. சனியனுக..!!"

ஸ்ரீனிவாச பிரசாத் அந்த மாதிரி வெறுப்பாக சொன்னவிதம்.. அசோக்கின் உதட்டில் மெலிதான ஒரு புன்னகையை வரவழைத்தது..!! இரண்டு நாட்களுக்கு பிறகு.. அவனது இதழ்களில் பூத்த புன்னகை அது..!!

"நூறு நாள் அவகூட ஊர் சுத்திருக்கேன்னு சொல்ற.. ஒரு ஃபோட்டோ கூடவா எடுத்து வச்சுக்கல..??"

"மொபைல்ல வச்சிருந்தேன் ஸார்.. ஆ..ஆனா..!!"

"ஆனா..??"

"அவ போறப்போ.. அந்த மெமரிகார்டை உருவிட்டு போயிட்டா..!!"

அசோக் இயல்பாக சொல்ல, ஸ்ரீனிவாச பிரசாத் புகை வழிகிற வாயுடன் சற்றே அதிர்ந்து போய் அவனை பார்த்தார். 'என்ன மாதிரியான கேரக்டர் அது..??' என்று மனதுக்குள்ளேயே ஒரு சில வினாடிகள் யோசித்திருப்பார் போலிருக்கிறது. பிறகு ஒரு சலிப்பு பெருமூச்சை வெளிப்படுத்தியவர்,

"செம கேடியா இருப்பா போல..??"

"ம்ம்..!!"

"எ..எப்படிடா இப்படி ஒருத்திட்ட போய் மாட்டுன..?? செம கேனையனா இருப்ப போல..??" என்று கேட்டார்.

"............................."

அசோக் பதில் சொல்லவில்லை. விரக்தியாக புன்னகைத்தான். ஒரு சிலவினாடிகள் அமைதியாக இருந்த ஸ்ரீனிவாச பிரசாத், பிறகு பேச்சை வேறு பக்கம் திருப்பும் விதமாக கேட்டார்.

"ஹ்ம்ம்.. வீட்ல மேட்டரை சொல்லிட்டியா..??"

"இன்னும் இல்ல ஸார்..!!"

"ஏன்..??"

"வீட்ல எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.. பையனுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சுன்னு.. எல்லாருக்குமே ரொம்ப சந்தோஷம்..!! இப்போ.. இந்த மேட்டர் தெரிஞ்சா.. அந்த சந்தோஷம் சுத்தமா காணாமப் போயிடும் ஸார்.. அப்படியே மனசு உடைஞ்சு போயிடுவாங்க..!!"

"ம்ம்..!!"

"இந்தப் பிரச்சினைக்கு காரணமே நானும் என் ஃப்ரண்ட்சுந்தான்.. வீட்டுக்கு எதுவும் தெரியாம, நாங்களே இந்தப் பிரச்சினையை சால்வ் பண்ண நெனைச்சிருக்கோம்..!!"

"ம்ம்..!! அதுவும் சரிதான்..!! நீ சொன்னதை வச்சு பாத்தா.. உங்க வீட்டு ஆளுகலாம் ரொம்ப சாஃப்ட் டைப்பா தோணுது.. இந்த ஷாக்கை எப்படி தாங்குவாங்களோ..?? இப்போதைக்கு அவங்களுக்கு தெரியாம இருக்குறதே நல்லது..!!""............................."

"ஹ்ம்ம்... சரிடா.. எனக்கு ஒரு நாலஞ்சு நாள் டைம் குடு.. கம்ப்ளைன்ட்லாம் எதுவும் வேணாம்.. நான் பாத்துக்குறேன்.. என்ன..??"

"ம்ம்..!!"

"ப்ராப்பர் கம்ப்ளைன்ட் இல்லாம மூவ் பண்றதால.. கொஞ்சம் டிலே ஆகலாம்.. மத்தபடி எதும் பிரச்சினை இல்ல..!!"

"ம்ம்..!!"

"நீ சும்மா கவலைப்பட்டுட்டு இருக்காத.. கண்டுபுடிச்சிடலாம்.. புரியுதா..??"

"சரி ஸார்..!!"

"ம்ம்ம்..!!! சரி வா.. கெளம்பலாம்.. டைமாச்சு..!!"

சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத் சேரில் இருந்து மெல்ல எழுந்தார்.. அவருடைய உடம்பில் போதை மிதமிஞ்சி போயிருக்க.. எழுந்ததுமே கால்கள் தடுமாறினார்..!! கால்கள் தடுமாறி கீழே விழப் போன அவரை.. அசோக் அவசரமாக நகர்ந்து, தாங்கிப் பிடித்துக் கொண்டான்..!! உடனே அவருடைய முகம் படக்கென மூர்க்கமாகிப் போனது..!!

"ப்ச்.. விட்றா..!!" என்று சீற்றமாக சொன்னவர்.. அசோக்கின் கையை வெடுக்கென உதறினார்..!!

"எ..எனக்கு யார் தயவும் தேவை இல்ல..!!"

வாய் குழற சொன்னவர்.. கால்கள் இரண்டும் தள்ளாட.. உடல் சீரில்லாமல் அல்லாட.. தடுமாற்றத்துடனே முன்னால் நடந்தார்..!! அசோக் முகத்தில் ஒருவித அன்புப் புன்னகையுடன்.. ஓரிரு வினாடிகள் அவரையே பார்த்தான்.. பிறகு மெல்ல நடந்து அவரை பின்தொடர்ந்தான்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக