http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : அன்புள்ள ராட்சசி - பகுதி - 20

பக்கங்கள்

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

அன்புள்ள ராட்சசி - பகுதி - 20

'ஸ்ரீனிவாச பிரசாத்திடம் வேலையை ஒப்படைத்தாயிற்று' என்று.. அசோக்கால் அமைதியாக இருக்க முடியவில்லை.. மீராவை தேடிக்கண்டுபிடிக்க.. தன்னால் இயன்ற அளவு முயன்றான்..!! அவர் அவகாசம் கேட்டிருந்த அந்த ஐந்து நாட்களுக்குள்ளேயே.. அவளை கண்டுபிடித்துவிடவேண்டுமென.. முனைப்புடன் செயலாற்றினான்..!! இன்னும் சொல்லப்போனால்.. 'அவள் இல்லாமல் ஐந்து நாட்கள் கழிக்கவேண்டுமா' என்ற அவனுடைய மனதின் மலைப்புத்தான்.. அவனது செயலின் முனைப்புக்கு காரணம்..!!

அவனுடைய செயல்பாடு பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக.. அவனது மனநிலையை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்..!!
முதலில்.. 'இத்தனை நாளாய் தன்னை ஏமாற்றியிருக்கிறாள்' என்றெல்லாம்.. இப்போது அசோக்கிற்கு மீரா மீது வருத்தம் இல்லை..!! ஆரம்பத்தில் அவள் மீது எழுந்த திடீர் கோபமும்.. அப்புறம் நிதானமாக யோசிக்கையில் காணாமல் போனது..!! அவளுடைய நிலையை இவன் தெளிவாக புரிந்துகொண்டான் என்றுதான் சொல்லவேண்டும்..!! பேச ஆரம்பிக்கையிலே அவளுக்கு தன் மீது நல்ல அபிப்ராயம் இல்லை எனும்போது.. அவளுடைய பெயரைக்கூட பொய்யாக உரைத்தது பெரிய பிழையாக அவனுக்கு தோன்றவில்லை..!! ஆனால் பின்னாளில்.. அந்த மாதிரி பொய் உரைத்து தன்னுடன் பழகியதற்காக.. நிச்சயம் அவள் வருந்தியிருப்பாள் என்று அசோக் நம்பினான்..!!

"இவனை நம்ப வச்சு கழுத்தறுத்துட்டு இருக்குறன்னு எந்த நேரமும் என் மனசுல ஒரு உறுத்தல்.. ராத்திரில நிம்மதியா தூங்க கூட விடாது அந்த உறுத்தல்..!!"

அன்று பார்க்கில்.. மீரா சிந்திய கண்ணீர் வார்த்தைகளின் முழு வீச்சு.. அசோக்கிற்கு இப்போது தெளிவாக புரிந்தது..!! 'பொய் சொல்லிவிட்டாளே' என்று இவன் இப்போது துடிப்பதை விட.. 'பொய் சொல்லிவிட்டோமே' என்று அவள் பல நாட்களாய் பலமடங்கு துடித்திருக்கிறாள்..!! அவளுடைய வேதனையையும், வலியினையும்.. அந்த வார்த்தைகளிலும், கண்ணீரிலும்.. மிக ஆழமாகவும், தெளிவாகவும் உணர முடிகிறதே..??

அதே மாதிரி.. 'தனது காதலை புரிந்துகொள்ளாமல் மீரா பிரிந்து சென்றுவிட்டாள்' என்றும் அசோக் நினைக்கவில்லை..!! அவனது காதலை நன்றாக புரிந்து கொண்டதாலேயே.. பதிலுக்கு அவள் மனதில் பொங்குகிற காதலை அடக்க முடியாததாலேயே.. அவள் இந்த முடிவெடுத்திருக்கிறாள் என்று நம்பினான்..!!

"நான் பாவம் பண்ணிருக்கேன் அசோக்.. பெரிய பாவம் பண்ணிருக்கேன்..!!"

"இ..இல்லடா.. இல்ல..!! நான் உனக்கு வேணாம்.. இந்த அதிர்ஷ்டங்கெட்டவ உனக்கு வேணவே வேணாம் அசோக்..!!!"

'அவளுக்கு ஏதோ பிரச்சினை என்று புரிகிறது.. உடலளவிலா, மனதளவிலா அல்லது இரண்டளவிலுமா என்பது தெளிவாக புரியவில்லை..!! என்ன பிரச்சினையாக இருந்தாலும்.. என்னிடம் அவளது நிலையை விளக்கி சொல்லியிருந்தால்.. எந்த தயக்கமும் இல்லாமல்.. ஏற்றுக்கொண்டிருப்பேன் நான் அவளை..!! அதை அவளுமே அறிவாள்.. என்னுடைய காதலின் ஆழத்தை அவள் கட்டாயம் அறிந்தே வைத்திருப்பாள்..!! அவ்வாறு அறிந்து வைத்திருந்ததால்தான்.. அவளது பிரச்சினையை சொல்லி.. 'என்னை ஏற்றுக்கொள்கிறாயா அசோக்..?' என்ற அபத்தமான கேள்வியை அவள் கேட்கவில்லை..!! நான் அவளை ஏற்றுக்கொள்வேன் என்பதை முன்கூட்டியே அறிந்துதான்.. அந்த வாய்ப்பை அவள் எனக்கு வழங்கவே இல்லை..!! 'நான் பாவம் செய்தவள்.. நான் உனக்கு பொருத்தம் இல்லை.. எனவே நான் பிரிந்து செல்கிறேன்.. இதுதான் என் முடிவு.. இதை நீ ஏற்றுக்கொண்டாக வேண்டும்..' என்பது மாதிரி.. ஒரு நிர்ப்பந்தத்தில் என்னை தவிக்கவிட்டு விலகியிருக்கிறாள் என்றால்.. எனது காதலையும் அவள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறாள்.. அவளுடைய காதலையும் நன்றாகவே எனக்கு உணர்த்தி சென்றிருக்கிறாள்..!!'

'ஆனால்.. ஒரே ஒரு விஷயத்தைத்தான் அவள் தவறாக எடை போட்டுவிட்டாள்..!! அந்த விஷயத்தில்தான் எனக்கு அவள்மீதும், என்மீதும் ஒருசேர பரிதாபம் பிறக்கிறது..!! அவளை மறந்து.. வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள சொன்னாளே.. அங்குதான் அவள் என் மனநிலையை குறைத்து மதிப்பிட்டுவிட்டாள்..!!'"என்னை தேடிக்கண்டுபிடிக்க ட்ரை பண்ணக்கூடாது.. சரியா..??"

'எப்படி மீரா என்னால் முடியும்..?? நீதான் என் வாழ்க்கை என்று ஆனபின்.. எப்படி என்னால் அப்படி இருக்க முடியும்..?? நீ விலகிவிட்டால்.. நான் விட்டுவிடுவேனா..?? எளிதில் உனை கண்டறிய.. எந்த தகவலையும் விட்டு செல்லவில்லை என்கிற தைரியமோ உனக்கு..?? என்ன செய்வதென்றறியாது சோர்ந்துபோய்.. என் மனதை மாற்றிக்கொள்வேன் என்று நினைத்தாயோ..?? நான் தேடப்போகிறேன் மீரா.. தேடி உனை கண்டுகொள்ள போகிறேன்.. ஓடி வந்து கையில் அள்ள போகிறேன்..!! என் காதலை உனக்கு புரிய வைத்தேன் அல்லவா.. விரைவில்.. நீயன்றி என் வாழ்க்கைக்கு அர்த்தமேதும் இல்லை என்கிற உண்மையையும்.. உன்னை அறிந்துகொள்ள வைக்கிறேன்..!!'

மீராவை தேடிக்கண்டுபிடித்து.. அவளுக்கு தனது மனஉறுதியை உணர்த்தி.. அவளை சொந்தம் கொள்ளவேண்டும் என்ற முடிவில்.. அசோக் மிக தெளிவாக இருந்தான்..!!

மீராவை நெருங்கும் மார்க்கம் என.. அசோக்கின் மனதில் முதலாவதாக தோன்றிய விஷயம்.. வினோபா அநாதை விடுதிதான்..!! நிச்சயம் அவளுக்கு அந்த விடுதியுடன் நீண்ட கால தொடர்பு இருக்க வேண்டும்.. கட்டாயம் அவளுடைய தொடர்பு விவரங்கள்.. அந்த விடுதியின் பதிவேட்டில் இடம்பெற்றிருக்க வேண்டும்..!!

அசோக்கும் சாலமனும் அந்த விடுதிக்கு.. பைக்கில் வந்து இறங்கினார்கள்..!! கொஞ்சம் பழமையான ஆசிரமம்தான்.. ஆனால் நிறைய குழந்தைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய.. நீண்ட வரலாறுடைய ஆசிரமம்..!! பெரிதாக அகலமாக மையக்கட்டிடம் நின்றிருந்தது.. ஆனால் பெயிண்ட் பூச்சு உதிர்ந்துபோய் சற்று பரிதாபமாக காட்சியளித்தது..!! கட்டிடத்தை சுற்றி.. உயர உயரமாய்.. பச்சை பச்சையாய்.. நெட்டிலிங்க மரங்கள் வளர்ந்திருந்தன..!! காய்ந்த சருகுகள் தரையெங்கும் இறைந்து கிடந்தன..!! சீருடை அணிந்த பிள்ளைகள்.. ஆங்காங்கே ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்..!! அந்தப்பிள்ளைகளை பார்த்தவாறே.. அசோக்கும் சாலமனும் நடந்து சென்று.. ஆசிரமத்தின் அலுவலக அறைக்குள் நுழைந்தனர்..!!

"எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி தம்பி.. தப்பா எடுத்துக்காதீங்க..!!"

நாற்பதை தாண்டியிருந்த அந்த விடுதி மேலாளர் பெண்மணியின் ஆரம்பமே, அபசகுனமாக இருந்தது. சலிப்பான சாலமன், 'இது வேலைக்காவாது' என்று அவநம்பிக்கையாய் தலையசைத்தான். ஆனால் அசோக் மிக நம்பிக்கையாகத்தான் பேசினான்.

"பரவாலைங்க.. என்னை ஒரே ஒருதடவைதான் பாத்திருக்கீங்க.. அதுவும் இப்போ நூறு நாள் ஆகிப்போச்சு.. அதான் உங்களுக்கு என்னை மறந்திருக்கும்.. It's obvious..!!"

"ஆமாம் தம்பி.. அதுவும் சரிதான்..!!"

"ஆனா.. அன்னைக்கு என் கூட வந்த அந்த பொண்ணு இருக்காளே.. அ..அவ இங்க அடிக்கடி வர்றவதான்..!! கண்டிப்பா அவளோட காண்டாக்ட் டீடெயில்ஸ் உங்கட்ட இருக்கும்..!!"

"ம்ம்..!!"

"எங்களுக்கு அவளோட அட்ரஸ் வேணும் மேடம்.. It's very urgent..!!"

"ஓ..!! அவ்ளோதான் விஷயமா..??"

"ஆமாம்..!!"

"அதுக்கென்ன தம்பி.. தந்துட்டா போச்சு.. நோ ப்ராப்ளம்..!!"

"தேங்க்ஸ் மேடம்..!!" அசோக் உள்ளமெல்லாம் பூரிப்பாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"ஆங்.. அந்தப் பொண்ணு பேர் என்ன சொன்னீங்க..??" என்று அந்த பெண்மணி கேஷுவலாக கேட்டாள். அருகில் இருந்த சாலமன் உடனே,

"கிழிஞ்சது..!! எங்க போனாலும் இது ஒன்னை கேட்டுர்றாய்ங்க.. ச்சை..!!" என்று முணுமுணுத்தான்.

அப்புறம் மீராவின் பெயர்க்குழப்பத்தை வேறு.. அசோக் அவளுக்கு விளக்கிச் சொல்ல வேண்டி இருந்தது..!! அதுமட்டுமில்லாமல்.. மீராவுடைய அங்க அடையாளங்கள் எல்லாம் சொல்லி.. அவளுடைய ஞாபக சக்தியை தூண்டிப் பார்த்தான்..!!

"நல்லா அழகா இருப்பா..!! ஸ்லிம்மா.. ஹைட்டா..!! ஆங்.. சிரிச்சா கன்னத்துல அழகா குழி விழும்..!! கூந்தல் பின்ன மாட்டா.. லூஸ் ஹேரா விட்ருப்பா..!! ப்ளாக் கலர்ல ஷோல்டர் பேக்.. ரெண்டு காதுலயும் பெருசா ரெண்டு சில்வர் ரிங் போட்ருப்பா.. ம்ம்ம்... அப்புறம்.. லெஃப்ட் ஹேண்ட்ல கோல்ட் ப்ரேஸ்லட் போட்ருப்பா.. அதுல கூட ஹார்ட் ஷேப்ல ஒரு பென்டன்ட் தொங்கும்..!!"

"ஸாரி தம்பி.. யா..யாரை சொல்றீங்கன்னு என்னால ஐடென்டிஃபை பண்ண முடியல.. இங்க நெறைய பேரு வர்றாங்க.. போறாங்க..!!"

அவஸ்தையாக சிரித்த அந்த பெண்மணியை.. அதற்கு மேலும் அசோக் தொல்லை செய்யவில்லை..!! அவளுடைய பிரச்சினை அசோக்கிற்கு புரிந்தது.. அதே மாதிரி அசோக்கின் பிரச்சினையையும் அவள் ஓரளவு யூகித்துக் கொண்டாள்..!! அப்புறம் அந்த தடியான பதிவேட்டை எடுத்துவந்து.. அவர்களுக்கு முன்பாக போட்டாள்..!!

"இங்க நூத்துக்கணக்கான வாலன்டியர்ஸ் இருக்காங்க தம்பி.. தெனமும் புதுசு புதுசா நெறைய வாலண்டியர்ஸ் வர்றாங்க.. எல்லாரையும் என்னால ஞாபகம் வச்சுக்க முடியிறது இல்ல..!! லாஸ்ட் பத்து வருஷம் ஜாயின் பண்ணினவங்க லிஸ்ட் அண்ட் அட்ரஸ் இதுல இருக்கு..!! நீங்க தேடிட்டு இருக்குற பொண்ணோட அட்ரஸ் எங்கட்ட இருந்தா.. அது இந்த ரெஜிஸ்டர்லதான் இருக்கணும்..!!"

"அவ ரீசண்டாதான் இங்க ஜாயின் பண்ணிருக்கணும் மேடம்.. மிஞ்சி மிஞ்சி போனா.. ஒரு மூணு வருஷத்துக்குள்ளதான் இருக்கும்..!!"

நம்பிக்கையாக சொன்ன அசோக் அந்த பதிவேட்டை கையிலெடுத்து புரட்டினான்.. 2010-இல் இருந்து ஆரம்பித்தான்.. பெண் பெயரில் கொடுக்கப்பட்டிருந்த முகவரிகளில் கவனத்தை குவித்தான்.. அவர்களுடைய வயதையும் கணக்கில் எடுத்துக் கொண்டான்..!!

"ரம்யா.. மேஹா.. மேகலா.. எமி.. மீனலோசனி.. வசுமதி.. வைஷூ.."

ஒவ்வொரு பெண்ணின் பெயராக சொல்லி சொல்லி.. அவர்களது முகவரியையும் அசோக் சொல்ல.. அவற்றை எல்லாம் சாலமன் தனது மொபைலில் சேகரித்துக் கொண்டான்..!! அப்படியே ஏழெட்டு முகவரிகள் எடுத்தாயிற்று..!!

ஒவ்வொரு பக்கமாக பொறுமையாக புரட்டிக்கொண்டு வந்த அசோக்.. ஒரு பக்கத்தை புரட்டியதும் அதிர்ந்துபோய் அப்படியே உறைந்தான்..!! நடுவுல ஒரு பக்கத்தை காணோம்..!! கிழிக்கப்பட்டிருந்தது..!! கிழிக்கப்பட்ட பக்கத்தின் பிசிறு.. பதிவேட்டின் இடுக்கில் தெளிவாக தெரிந்தது..!! 'ஒருவேளை.. ஒருவேளை..??' அவனுடைய புத்தி எதையோ கூர்மையாக யோசிக்க.. அவனுடய உள்ளத்தில் அவ்வளவு நேரம் பொங்கிகொண்டிருந்த ஒரு உற்சாகம்.. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அடங்க ஆரம்பித்தது.. ஒரு சில வினாடிகளில் அது சுத்தமாக வடிந்து போனது..!! அசோக் தளர்ந்து சோர்ந்து போனான்.. தலையை பிடித்துக்கொண்டான்..!!

"ம்ம்.. சொல்லு மச்சி.. நெக்ஸ்ட்..??" ஆர்வமாக கேட்ட சாலமனிடம்,

"போதுன்டா.. விடு..!!" என்றான் சுரத்தற்ற குரலில்.

"என்னடா.. என்னாச்சு..??"

"Its' waste..!!"

சொல்லிக்கொண்டே அசோக் அந்த பதிவேட்டை தூக்கி டேபிளில் போட்டான். என்ன நடந்திருக்கிறது என்பதை ஓரளவு புரிந்துகொண்ட விடுதி மேலாளரும், சாலமனும் சற்றே அதிர்ந்து போனவர்களாய் அசோக்கை பார்த்தனர். அசோக் இப்போது அந்த பெண்மணியை ஏறிட்டு சொன்னான்.

"மேடம்.. எனக்காக இன்னொரு சின்ன விஷயம் நீங்க யோசிச்சு சொல்லணும்..!!"

"என்ன தம்பி.. சொல்லுங்க..!!"

"நான் இப்போ சொன்ன அடையாளத்தோட.. லாஸ்ட் ரெண்டு மூணு நாள்ல.. யாராவது உங்களை பார்க்க இங்க வந்தாங்களா..??" அசோக் அவ்வாறு கேட்கவும்,

"ம்ம்ம்ம்ம்.." அந்தப் பெண்மணி இப்போது நெற்றியை பிசைந்தவாறு யோசிக்க ஆரம்பித்தாள்.

"நல்லா யோசிச்சு பாருங்க மேடம்.. ஜஸ்ட்.. ரெண்டு மூணு நாள்தான் ஆகி இருக்கு.. கண்டிப்பா உங்களுக்கு ஞாபகம் இருக்கும்..!!"

அசோக் தவிப்புடன் சொன்னான். அவள் மேலும் சிறிது நேரம் யோசித்துவிட்டு..

"ம்ம்ம்... ரெண்டு மூணு நாள்னா.. ம்ம்ம்ம்ம்ம்... ஒருவேளை.. அ..அந்தப்பொண்ணா இருக்குமோ..??" என்றாள்.

"யாரு..??"

"மு..முந்தாநாள் யாரோ ஒரு பொண்ணு.. என்னை பாக்குறதுக்காக வந்து.. ஆபீஸ் ரூம்ல வெயிட் பண்றதா.. மார்ட்டின் வந்து சொன்னான்..!!"

"மா..மார்ட்டின் யாரு..??"

"எங்க ஆபீஸ் அசிஸ்டன்ட்..!!"

"ஓ..!! அப்புறம்..??"

"ஆனா நான் வந்து பாக்குறப்போ இங்க யாரையும் காணோம்.. அந்தப்பொண்ணு அல்ரெடி கெளம்பி போயிருந்தா..!! ஒ..ஒருவேளை அவளா இருக்குமோ..??"

அவளுடைய பதிலைக் கேட்ட அசோக் அப்படியே நொந்து போனான்.. பாறையில் போய் முட்டிக்கொண்ட மாதிரி ஒரு உணர்வு அவனுக்கு..!!

பிறகு மார்ட்டினை அழைத்து விசாரித்தார்கள்.. இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த அந்தப்பெண்ணை அவன் வர்ணிக்க.. அது மீராதான் என்று அசோக்கால் உறுதி செய்துகொள்ள முடிந்தது..!!

மீராவின் தந்திரத்தில் சிக்கிய மார்ட்டினுக்கு.. அவளுடைய பெயர் கூட என்னவென்று தெரியாத நிலை..!! நினைவடுக்கில் பிரச்சினையுள்ள மேலாளருக்கு.. பெயரில்லாமல் துரும்பளவு தகவல் கூட தர முடியாத நிலை..!! பெருத்த எதிர்பார்ப்புடன் வந்திருந்த அசோக்குக்கு.. பெயரை கூட தெரிந்து கொள்ள முடியாமல்.. வெறுப்புடனும், வெறுங்கையுடனும் வெளியேறுகிற நிலை..!!

ஆபீஸுக்கு திரும்பிய அசோக்.. அன்று முழுக்க தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.. ஏதோ யோசனையிலேயே ஆழ்ந்திருந்தான்..!! எளிய வழி என்று எண்ணியிருந்தது பொய்த்துப் போனது.. ஏமாற்றமாய் இருந்தது அவனுக்கு..!! அந்த மொபைல் நம்பர்தான் இப்போது இருக்கிற ஒரே பிடிமானம் என்று தோன்றியது..!! இல்லை.. வேறேதாவது வழி இருக்கிறதா..??

அவனுடைய நண்பர்கள் அவனைச் சுற்றி கவலையாக அமர்ந்திருந்தனர்.. அவர்களுடைய கவலைக்கு காரணம், ஆசிரமத்தில் கிடைத்த ஏமாற்றம் அல்ல.. ஸ்ரீனிவாச பிரசாத் உதவி செய்வதாக உறுதி அளித்தபிறகும்.. அசோக் தேவையில்லாமல் அலட்டிக் கொள்கிறானே என்பதுதான்..!!

"டேய்.. விட்றா.. ரொம்ப யோசிக்காத.. அந்த எஸ்.பி எஸ்.ஐ-தான் இன்னும் நாலு நாள்ல அட்ரஸ் ட்ரேஸ் பண்ணித்தர்றேன்னு சொல்லிருக்காருல..?? நீ எதுக்கு இப்போ தேவை இல்லாம.. மண்டையை போட்டு உடைச்சுட்டு இருக்குற..?? கொஞ்சம் ரிலாக்ஸ்டா இரு..!!"

கிஷோரின் வார்த்தைகள் அசோக்குக்கு எரிச்சலையே உண்டு பண்ணின..!! 'என்னுடைய தவிப்பு இவர்களுக்கு எங்கே புரியப் போகிறது..??' என்று நினைத்துக் கொண்டான்..!! தனிமை வேண்டும் போலிருந்தது அவனுக்கு..!! எழுந்து.. நண்பர்களை விட்டு அகன்று போய்.. படிக்கட்டு ஏறி.. அந்த கட்டிடத்தின் மொட்டைமாடியில்.. அகலமான அந்த கைப்பிடி சுவற்றில்.. தனியாக வந்து அமர்ந்து கொண்டான்..!!

உதட்டுக்கு சிகரெட் கொடுத்தான்..!! நெஞ்சில் நெருப்பு.. மூளையில் அனல்.. வாயில் புகை..!! காதல் தவிப்பில் அலைபாய்ந்த மனதை.. சற்றே கட்டுப்படுத்தி.. நிதானமாக யோசித்துப் பார்த்தான்..!! பரபரப்பான சென்னையின் மீது.. உயரத்தில் இருந்து பார்வையை வீசினான்..!! 'இந்த பரந்து விரிந்த மாநகரில்.. பாவி நீ எங்கடி பதுங்கியிருக்கிறாய்..??'
"உன் வீடு எங்க இருக்கு..??" ஒருமுறை பேச்சினூடே அசோக் கேட்டதற்கு,

"ட்ரஸ்ட்புரம்..!!" என்று மீராவும் மிக இயல்பாகவே சொல்லியிருந்தாள்.

ஆனால்.. அதை இப்போது ட்ரஸ்ட்டுவதில்தான் அசோக்கிற்கு சிக்கல்..!! எந்த நேரத்தில்.. எந்த மனநிலையுடன்.. எந்த விளம்பர போஸ்டர் பார்த்து அந்த மாதிரி சொன்னாளோ..?? அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..!!

அசோக் மீராவை பிக்கப் செய்வதோ, ட்ராப் செய்வதோ.. வடபழனி பேருந்து நிலையம்தான்..!! அதைத்தாண்டி அவள் எங்கே செல்கிறாள்.. அவள் வீடு எங்கே அமைந்திருக்கிறது.. என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிற மாதிரி.. எந்த தகவலையும் அவனால் யோசிக்க முடியவில்லை..!!

ஆப்டெக் சென்டரில் விசாரித்தாயிற்று.. மீரா அங்கு பயிலவில்லை என்பதை அவர்கள் உறுதிபடுத்தி விட்டனர்..!! வெறும் பெயரை மட்டும் வைத்தல்ல.. உருவ அமைப்பு, அங்க அடையாளங்கள் எல்லாம் சொல்லியும் விசாரணை நடத்தியாயிற்று.. அந்த சென்டரில் மாயா கோர்ஸ் படித்த மாணவர்களிடமும் பேசிப் பார்த்தாயிற்று..!! அவள் நிச்சயமாய் கோர்ஸ் படிப்பதற்காக இங்கு வந்து செல்லவில்லை.. வேறு ஏதோ வேலை விஷயமாக தினசரி வடபழனி வந்து சென்றிருக்கிறாள்..!!

வடபழனியை பற்றி.. அதை சுற்றியிருக்கிற பகுதிகளை பற்றி.. அவள் நிறைய தெரிந்து வைத்திருந்ததை அசோக்கால் நினைவுகூர முடிந்தது..!! வடபழனியை சுற்றிய ஏதோ ஒரு ஏரியாவில்தான்.. அவளுடைய வசிப்பிடம் அமைந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது..!! இல்லை.. ஒருவேளை அப்படி இல்லாமல் கூட இருக்கலாம்..!!

வடபழனி பேருந்து நிலையத்தையும்.. அதனுடனான மீராவின் நினைவுகளையும்.. யோசித்துக் கொண்டிருந்த அசோக்குக்கு.. திடீரென ஒரு விஷயம் மூளையில் பளிச்சிட்டது..!! அசோக்தான் அந்த பேருந்து நிலையத்துக்கு உள்ளே சென்றது இல்லை.. ஆனால்.. மீராவை பிக்கப் செய்யும்போது, அவள் அந்த நிலையத்துக்கு உள்ளே இருந்துதான் வெளிப்படுவாள்.. அதேபோல அவளை ட்ராப் செய்யும்போதும், உள்ளே சென்றுதான் ஏதோ ஒரு பேருந்தில் ஏறி மறைந்து போவாள்..!! அதை வைத்துப் பார்க்கையில்.. வடபழனி பேருந்து நிலையத்தை ஒரு முடிவிடமாக கொண்ட.. ஏதாவது ஒரு வழித்தடத்தில் செல்கிற.. ஏதோ ஒரு பேருந்தில்தான் அவள் தினசரி வந்து சென்றிருக்க வேண்டும்..!!

அசோக்கின் மூளை இப்போது சற்றே கிளர்ந்து எழுந்தது.. மேலும் தீவிரமாக யோசித்தான்..!! மீரா செல்கிற பஸ் ரூட் எதுவாக இருக்கும் என்று திரும்ப திரும்ப யோசித்துக் கொண்டே இருந்தான்..!! அப்போதுதான் அவனுடைய புத்தியில் ஒரு பொறி தட்டியது..!! ஒரு வாரத்திற்கு முன்பாக.. மீரா அவனுடன் ஃபோனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நிகழ்வு.. இப்போது அவனுடய நினைவுக்கு வந்தது..!!

"ஹலோ அசோக்..!!"

"ஹேய் மீரா.. என்னாச்சு.. பத்து மணிக்கு வருவேன்னு சொன்ன.. நான் இங்க உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..!! நீ வருவேன்னு பார்த்தா.. கால் வருது..??"

"வீட்ல இருந்து அப்போவே கெளம்பிட்டேன்டா.. ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டேன்..!!"

"ப்ச்.. போச்சா..?? வர்றதுக்கு அப்போ லேட் ஆகுமா..??"

"இல்ல இல்ல.. இப்போ கிளியர் ஆயிடுச்சு.. இன்னும் 15, 20 மினிட்ஸ்ல வந்துடுவேன்..!!"

"அப்போ சரி..!!"

"நீ வெயிட் பண்ணிட்டு இருப்பேல.. அதான் கால் பண்ணேன்..!!"

"என்னது..?? சரியா கேக்கல மீரா.. ஒரே எரைச்சலா இருக்கு.. கொஞ்சம் சத்தமா பேசு..!!" அசோக் சொல்ல, மீரா இப்போது கத்தி பேசினாள்.

"இல்லடா.. 'நீ வெயிட் பண்ணிட்டு இருப்பேல.. அதான் கால் பண்ணேன்..'ன்னு சொன்னேன்..!!"

"ஓ..!! ஓகே ஓகே..!! பரவால வா.. நான் வெயிட் பண்றேன்..!! ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆ.. பயங்கர எரைச்சல்.. காது வலிக்குது..!!"

"இங்க ஏதோ ஊர்வலம் நடக்குதுடா.. அதான் எரைச்சல்.. ட்ராஃபிக்கும் அதனாலதான்..!!"

"என்ன ஊர்வலம்..??"

"ஈழப் படுகொலையை கண்டிச்சு.. ஸ்டூடண்ட்ஸ்லாம் ஊர்வலம் போறாங்க..!!"

"ஓ..!! சரி சரி.. நீ வா.. நேர்ல பேசிக்கலாம்..!! இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பேசிட்டு இருந்தேன்.. என் காது டமாரம் ஆயிடும் போல இருக்கு..!!"

"ஹாஹா..!! ஓகேடா.. வெயிட் பண்ணு.. வந்துடறேன்..!!"

அவ்வளவுதான்..!! அந்த உரையாடல் நினைவுக்கு வந்ததுமே.. அசோக்கின் மூளை சுறுசுறுப்பானது.. அவன் மிகவும் பரபரப்பானான்..!! தடதடவென படியிறங்கி கீழே வந்தான்..!! அவசரமாக ஆபீசுக்குள் நுழைந்தவனை பார்த்து..

"டேய்.. என்னடா.. என்னாச்சு..??"

என்று நண்பர்கள் குழப்பமாய் கேட்டதை கண்டுகொள்ளாமல், பைக் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அடுத்த அரை மணி நேரத்தில்.. மீண்டும் ஆபீசுக்குள் பிரவேசித்தான்..!! கையிலிருந்த நான்கைந்து பழைய செய்தித்தாள்களை டேபிளில் போட்டான்.. சுவற்றில் ஒட்டியிருந்த சென்னை ஸிட்டி மேப்பை கிழித்தெடுத்தான்.. தனது லேப்டாப்பையும் திறந்து அருகில் வைத்துக் கொண்டான்.. மார்க்கர் பேனா திறந்தவன், மூடியை வாயில் கவ்விக்கொண்டான்..!!

"ஏய்.. என்னடா பண்ற..?? கொஞ்சம் சொல்லிட்டு பண்ணுடா..!!" நண்பர்களுக்கு இன்னுமே குழப்பம்.

"ப்ச்.. இருங்கடா..!!" அவர்களுக்கு பதில் சொல்வதை பற்றி எல்லாம் அசோக் யோசிக்கவில்லை.

முதலில் செய்தித்தாள்களை ஒவ்வொன்றாய் புரட்டி.. மாணவர்களின் அந்த ஊர்வலத்தை பற்றிய செய்தியை கண்டு பிடித்தான்..!! சரியாக பத்து நாட்களுக்கு முன்பாக.. சட்டக்கல்லூரி மாணவர்கள்.. இலங்கை அரசை கண்டித்து அந்த ஊர்வலத்தை நடத்தியிருந்தார்கள்..!! லைட் ஹவுஸில் ஊர்வலத்தை தொடங்கி.. நுங்கம்பாக்கம் வரை சென்று.. அங்குள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகை இட்டிருந்தனர்..!! அசோக் கையிலிருந்த பேனாவால், கிழித்தெடுத்த சென்னை மேப்பில்.. ஊர்வலம் சென்ற பாதையினை, வளைவு நெளிவுடன் சிவப்பு மையிட்டான்..!! பிறகு.. வடபழனி பஸ் நிலையத்தையும் மார்க் செய்து.. வட்டமிட்டுக் கொண்டான்..!!

"டேய்.. என்னடா ஆச்சு உனக்கு..??"

"கொஞ்ச நேரம் கம்முனு இருங்கடா..!!"

எரிச்சலாக சொன்ன அசோக்.. இப்போது தனது லேப்டாப்பை திறந்தான்..!! இணையத்தை தொடர்பு கொண்டு.. சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள் பற்றிய தகவல்களை அடங்கிய ஒரு இணையதளத்தை அணுகினான்..!! அதில்.. வடபழனி பேருந்து நிலையத்தை ஒரு முடிவிடமாக கொண்ட வழித்தடங்கள் எத்தனை என்று கணக்கிட்டான்..!! மொத்தம் இருபத்தியாறு வழித்தடங்கள்..!!

அந்த இருபத்தியாறு வழித்தடங்களில்.. எத்தனை வழித்தடங்கள்.. தான் வரைபடத்தில் குறிப்பிட்டிருந்த அந்த சிவப்பு பாதையை குறுக்கிடுகின்றன என்று ஆய்வு செய்தான்..!! மொத்தம் நான்கே நான்குதான்..!!

1. 37C - வடபழனி முதல் வில்லிவாக்கம் வரை
2. 12B - வடபழனி முதல் ஃபோர்ஷோர் எஸ்டேட் வரை
3. 17 - வடபழனி முதல் ப்ராட்வே வரை
4. M37B - வடபழனி முதல் திரு.வி.க.நகர் வரை

அந்த நான்கு வழித்தடங்களின் பாதையினையும்.. மேப்பில் நீல நிற மையினால் வரைந்தான்..!! மேலும் சில வினாடிகள் மோவாயை சொறிந்தவாறு யோசித்தான்..!!

"இல்ல இல்ல.. இப்போ கிளியர் ஆயிடுச்சு.. இன்னும் 15, 20 மினிட்ஸ்ல வந்துடுவேன்..!!"

மீரா சொன்னது மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது..!! 'யெஸ்..' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான்..!! அன்று அவள் சொன்ன மாதிரியே மேலும் 15, 20 நிமிடங்களில் வந்து சேர்ந்து விட்டாள்..!! பயண நேரத்தை கணக்கிடையில்.. 12B யை லிஸ்டில் இருந்து எடுத்து விடலாம் என்பது தெளிவாக தெரிந்தது..!! 12B ரூட் சிவப்பு லைனை க்ராஸ் செய்கிற இடத்தில் இருந்து.. வடபழனிக்கு பஸ்ஸில் வந்து சேர.. குறைந்தது நாற்பது நிமிடங்களாவது ஆகும்..!! 12B பாதையை பெருக்கல் குறியிட்டவன்.. சற்றே திருப்தியான முகத்துடன் நண்பர்களை ஏறிட்டான்..!!
"மச்சி.. 37C, 17, M37B.. இந்த மூணு ரூட்டுல ஏதோ ஒண்ணுலதான்.. மீரா டெயிலி வடபழனி வந்துட்டு போயிட்டு இருக்காடா..!!"

"எப்படிடா சொல்ற..??"

இப்போது அசோக் தான் கண்டறிந்ததை நண்பர்களுக்கு தெளிவாக விளக்கி சொன்னான்.. மூவரும் அமைதியாக, கவனமாக கேட்டு.. அசோக்கின் லாஜிக்கை புரிந்துகொண்டனர்..!! ஆனால்.. கேட்டு முடித்தபிறகும்.. அசோக்கிடம் இருந்த ஒரு எக்சைட்மன்ட் அவர்களிடம் காணக்கிடைக்கவில்லை..!!

"அதெல்லாம் சரி.. இப்போ இந்த இன்ஃபர்மேஷனை வச்சுக்கிட்டு என்ன பண்ணப் போற..??" என்று சற்று ஏளனமாகவே கேட்டான் வேணு.

அவன் அவ்வாறு கேட்டதும், அசோக்கே சற்று குழம்பிப் போனான். 'ஆமால்ல.. இதை வச்சுக்கிட்டு என்ன பண்றது..??' என்று தனக்குத்தானே மனதுக்குள் கேட்டுக்கொண்டான். அவனுடைய மூளை அந்தக் கேள்விக்கு சரியான பதிலை தரவில்லை. ஆனாலும் தனது தடுமாற்றத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல்..

"ஏ..ஏதாவது பண்ண வேண்டியதுதான்..!! இது ஜஸ்ட் ஒரு லீட்.. அவ்ளோதான்..!!" என்றான் மழுப்பலாக.

"ஏண்டா.. இன்னும் ஒரு நாலு நாள்.. அதுவரை கொஞ்சம் மூடிட்டு இருக்க மாட்டியா..??" - இது வேணு.

"விட்றா.. ஏதாவது பண்ணிட்டுப் போறான்..!!"

சலிப்பாக சொல்லிவிட்டு கிஷோர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.. வேணு அவனை பின்தொடர்ந்தான்..!! சாலமன் மட்டும் அசோக்கை நெருங்கி.. சற்றே நக்கலாக சொன்னான்..!!

"மச்சி.. துப்பறியும் ஷ்ஷாம்பூ ஆயிட்ட போல இருக்கு..?? துப்பாக்கி படம் பாத்த எஃபக்ட் தெரியுதே..?? மேப்புலாம் சூப்பரா போடுற..??" என்று இளித்தான்.

ஆனால்.. அசோக் போட்ட மேப்பு.. தனக்கு வைத்திட்ட ஆப்பு என்பதை.. அடுத்த நாள்தான் சாலமன் தெளிவாக புரிந்துகொண்டான்..!!

அடுத்த நாள் காலை.. வடபழனி பேருந்து நிலையம்.. அப்போதுதான் ட்ரிப் முடித்துவிட்டு கீழே இறங்கியிருந்த ஒரு கண்டக்டரிடம்.. பாடத்தை மக்கப் செய்த மக்கு மாணவன் மாதிரி.. கமா, ஃபுல்ஸ்டாப் இல்லாத வாக்கியங்களை.. கடகடவென கக்கிக்கொண்டிருந்தான்.. சாலமன்..!!

"நல்லா அழகா இருப்பா ஸ்லிம்மா ஹைட்டா இருப்பா சிரிச்சா கன்னத்துல அழகா குழி விழும் கூந்தல் பின்ன மாட்டா லூஸ் ஹேரா விட்ருப்பா ப்ளாக் கலர்ல ஷோல்டர் பேக் ரெண்டு காதுலயும் பெருசா ரெண்டு சில்வர் ரிங் லெஃப்ட் ஹேண்ட்ல கோல்ட் ப்ரேஸ்லட் அதுல ஹார்ட் ஷேப் பென்டன்ட்..!!"

அவனிடமிருந்து தள்ளி சற்று தூரத்தில்.. அசோக்கும் அதே வாக்கியங்களை இன்னொரு கண்டக்டரிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தான்..!!

அசோக்குக்கே இது கொஞ்சம் ஸில்லித்தனமாகத்தான் தோன்றியது.. இந்த முயற்சியில் அதிக வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என்பதை அவனது மூளை அறிந்தே வைத்திருந்தது..!! பஸ்ஸில் பயணிக்கிறவர்களைப் பற்றி எத்தனை நடத்துனர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள்..?? எந்த மாதிரியான உபயோகமான தகவலை அவர்களால் தந்துவிட முடியும்..?? அசோக்கிற்கு புரியாமல் இல்லை.. ஆனாலும்.. மிக மெலிதான அந்த சாத்தியக்கூறை கூட அவனால் சாதாரணமாக ஒதுக்க முடியவில்லை..!! பாவம்.. சாலமன்தான் அவனுடன் அலைந்து திரிந்து அல்லல் பட்டான்..!!

அந்த பேருந்து நிலையத்தில் பணிபுரிகிற, அரசு போக்குவரத்து கண்காணிப்பாளர் ஒருவரை.. பஜ்ஜி, சமோசா, பாதாம்பால் எல்லாம் வாங்கித்தந்து கைக்குள் போட்டுக் கொண்டார்கள்.. அவர் மூலமாக அந்த மூன்று வழித்தடங்களில் வேலையமர்த்தப்பட்ட, அத்தனை நடத்துனர்களின் விவரங்களையும் வாங்கிக் கொண்டனர்.. ஒவ்வொரு நடத்துனரையும் சந்தித்து, மேலே சொன்ன வாக்கியங்களை கூறி விசாரித்தனர்.. 'அடடே.. அந்தப்பொண்ணா.. எனக்கு ரொம்ப நல்லா தெரியுமே..?' என்று யாராவது சொல்லிவிட மாட்டார்களா என்று எதிர்பார்த்தனர்.. ஏங்கினர்..!!

ஆனால்.. அவர்களுடைய எதிர்பார்ப்பும், ஏக்கமும் ஏமாற்றமாகத்தான் உருமாறிக் கொண்டிருந்தன..!!"எனக்கு கண்ணாலம் ஆயிடுச்சுப்பா.. பஸ்ல வர்ற புள்ளைகளை சைட் அடிக்கிறத விட்டு, பல வருஷம் ஆயிப் போச்சு.. ஹ்ம்ம்.. அதுலாம் ஒரு காலம்..!!" என்றான் நடுத்தர வயது நடத்துனர் ஒருவன்.

"அதெல்லாம் வுடு.. அவளுக்கும் உனக்கும் எப்டி கனக்சனு..?? ரெண்டு பேரும் இன்னாலாம் பண்ணீங்கோ.. ஒரே குஜால்தானா..?? பார்ட்டி எப்டி..??" - இது ஒரு இளவயது ஜொள்ளு.

"ஏய்.. போங்கடா அந்தாண்ட.. உங்களுக்குலாம் வேற வேலையே இல்லையாடா.. அப்டியே அலையுறானுவ !!" - புரிந்து கொள்ளாமல் சீறியது ஒரு பெருசு.

அசோக்கும் சாலமனும், இரண்டு நாட்களின் பெரும்பான்மையான நேரத்தை வடபழனி பேருந்து நிலையத்தில்தான் கழித்தனர்..!! அந்த இரண்டு நாட்களிலும்.. அட்ரஸ் கண்டுபிடிக்கிற முயற்சியில் முன்னேற்றம் உண்டா என கேட்பதற்காக.. நான்கு முறை ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு அசோக் கால் செய்தான்..!! அவரும் 'சொல்லுடா அசோக்..' என்பார்.. 'ஸாரிடா.. இன்னைக்கு ரொம்ப வேலையா போச்சு.. ஒன்னும் பண்ணமுடியல..' என்று வருந்துவார்.. 'இந்த மட .... இருக்கானே...' என்று யாராவது மக்கள் பிரதிநிதியை, கெட்ட வார்த்தையில் திட்டுவார்.. 'இன்னும் ரெண்டு நாள் டைம் குடுடா.. கண்டிப்பா முடிச்சுடுறேன்..' என்று நம்பிக்கை தெரிவிப்பார்.. 'ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத.. கூலா இரு..' என்று ஆறுதலாக சொல்லிவிட்டு, காலை கட் செய்வார்..!!

இரண்டு நாட்கள் முடிந்தபோது.. அசோக்கும், சாலமனும் அவர்கள் லிஸ்டில் இருந்த அனைத்து நடத்துனர்களையும் விசாரித்து முடித்திருந்தனர்.. ஒரே ஒருவரை தவிர..!! உடல்நலம் சரியில்லாமல், விடுப்பில் இருந்த அவரையும்.. மூன்றாவது நாள் காலை பத்து மணியளவில், மிகச்சரியாக வளைத்து பிடித்தனர்..!! அவரிடமும் அவர்களுக்கு எந்த தகவலும் பெயரவில்லை..!! இவர்கள் ஒவ்வொரு கேள்வியாக கேட்க.. அவர் கையை விரித்தார்.. உதட்டை பிதுக்கினார்.. 'ம்ஹூம்.. ம்ஹூம்..' என்று இப்படியும் அப்படியும் தலையை ஆட்டினார்..!! இறுதியில்..

"ஐயயயயயே.. நவுருங்கப்பா.. நானே நாஷ்டா துன்னாம, நாக்கு வறண்டு போய் கெடக்கேன்.. நீங்க வேற..?? ஷ்ஷ்ஷ்ஷ்.. அப்டியே க்கேரா இருக்கு..!!" என்று சலிப்பாக சொன்னவர், நாஷ்டா கடையை நோக்கி நடையை கட்டினார்.

அவர்களுடைய முயற்சி அப்படி அட்டர் ஃப்ளாப் ஆனதில்.. அசோக்கும், சாலமனும் ரொம்பவே நொந்து போயினர்..!! 'ச்ச.. எல்லாம் வேஸ்டா போச்சே..' என்று எரிச்சலாக முனுமுனுத்தவர்கள்.. பிறகு பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தனர்..!! தளர்ந்துபோன நடையுடன் அவர்கள் வெளியே வர.. அவர்களுக்கு மிக நெருக்கமாக ஒரு பைக் 'விர்ர்ர்ர்' என்று சீறிப் பறந்தது..!! ஆரம்பத்தில் அந்த பைக்கை கவனியாத சாலமன்.. கடைசி நேரத்தில் சுதாரித்து விலகிக்கொள்ள முயன்றும்.. அவனுடைய கைவிரல்களை 'பட்' என்று தட்டிவிட்டு விரைந்தது அந்த பைக்..!! ஏற்கனவே கடுப்பில் இருந்த சாலமனுக்கு.. சுர்ரென்று ஏறியது டென்ஷன்.. அந்த பைக்கை பார்த்து கத்தினான்..!!

"டேய்.. பாடு..!!! பொண்ணு பின்னால இருந்தா.. த்தா.. கண்ணு தெரியாதாடா உங்களுக்கு..??"

அவன் கத்தியது பைக் ஓட்டியவன் காதில் விழுவதற்குள்ளேயே.. தொலைதூரம் சென்றிருந்தது அந்த வண்டி..!! பின் ஸீட்டில் உட்காந்திருந்த இளம்பெண்.. கைகள் ரெண்டையும் விரித்து.. காதலனின் வேகத்தை ரசித்தாள்..!! முகத்தை குரங்கு மாதிரி வைத்துக்கொண்டு.. சாலமன் அசோக்கை திரும்பி பார்க்க.. அவனோ பிரம்மை பிடித்தவன் மாதிரி.. அந்த பைக் பறந்த திசையையே வெறித்துக் கொண்டிருந்தான்..!! எதுவும் புரியாமல் குழம்பிய சாலமன்..

"என்னாச்சுடா..??" என கேட்டான்.

"மச்சி.. அந்த பைக்கை பாத்தியா..??"

"பாக்கலைடா.. பாத்திருந்தாத்தான் வெலகிருப்பனே..??"

"ப்ச்.. அதை சொல்லலைடா..!!"

"அப்புறம்..??"

"என்ன ப்ராண்ட்ன்னு பாத்தியா..??"

"ம்க்கும்.. பின்னாடிருந்த அந்தப்புள்ள மூஞ்சை கூட சரியா பாக்க முடியலன்னு, நானே வெறுப்புல இருக்கேன்..??"

"அ..அது.. அது கவாஸாக்கி பைக்குடா..!!"

"ஸோ..??" சாலமன் கேள்வியாக அசோக்கை பார்க்க, அவனோ முகத்தில் ஒரு புதுவித பிரகாசத்துடன்

"கண்டுபுடிச்சிடலாம் மச்சி அவளை..!!" என்றவாறு, சாலமனின் புஜத்தை இறுகப் பற்றினான்.

"ஆஆஆஆ..!! கண்டுபுடிச்சிடலாம்ன்னு சொல்லிட்டு.. என் கையை உடைச்சு எடுத்துடாதடா.. வுடு..!!" வலியால் சுருங்கிப்போன முகத்துடன், சாலமன் அசோக்கின் கையை தட்டிவிட்டான்.

"ஹேய்.. வாடா..!!"

சொன்ன அசோக் சாலமனின் பதிலுக்கு கூட காத்திராமல்.. பார்க் செய்யப்பட்டிருந்த அவனுடைய பைக்கை நோக்கி ஸ்பீடாக நடந்தான்.. இல்லையென்றால், ஸ்லோவாக ஓடினான் என்றும் வைத்துக் கொள்ளலாம்..!! என்னவென்று புரியாமலே.. சாலமனும் அவசரமாக அவன் பின்னால் ஓடினான்..!!

அடுத்த இரண்டு நிமிடங்களில்.. அசோக்கின் பைக் ஆர்காட் ரோட்டில் விரைந்துகொண்டிருந்தது..!! குழப்பத்தை அடக்க முடியாமல் சாலமன் கேட்டான்..!!

"எங்கடா போறோம்..??"

"பாலாஜி அட்வர்டைஸிங்..!!"

"அங்க எதுக்கு..??"

அசோக் வண்டியை ஓட்டிக்கொண்டே.. தன் மனதில் இருக்கிற விஷயத்தை சாலமனுக்கு விளக்கி சொன்னான்..!! சில நாட்களுக்கு முன்பு, மீரா அசோக்கிடம் சொன்ன அந்த விஷயம்.. அவளையும் அறியாமலே அவளைப்பற்றி உளறியிருந்த அந்த விஷயம்.. அவளுடைய வீட்டுக்கு எதிரே கவாஸாக்கி அட்வர்டைஸ்மன்ட் போர்ட் வைக்கப்பட்டிருக்கிற விஷயம்..!! அசோக்தான் அந்த விஷயத்தை ஆர்வமாகவும், ஆனந்தமாகவும் சொன்னானே தவிர.. சாலமன் எல்லாவற்றையும் அசுவாரசியமாகவும், அவநம்பிக்கையாகவுமே கேட்டுக் கொண்டான்..!!

மேலும் ஒரு அரை மணி நேரம் கழித்து..!! அசோக்கும் சாலமனும், பாலாஜி அட்வர்டைஸிங் அலுவலகத்துக்குள்.. மோகன்ராஜின் பிரத்தியேக அறைக்குள் அமர்ந்திருந்தனர்..!! அவர் தனது லேப்டாப் திரையையே வெறித்துக் கொண்டிருக்க.. இவர்கள் அவருடைய முகத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தனர்..!! அசோக்தான் இப்போது சற்று பொறுமையில்லாதவனாய் சொன்னான்..!!

"கொஞ்சம் சீக்கிரம் ஸார்..!!"

"இருடா.. மெயில் பாக்ஸ்ல வச்சிருக்கேன்.. ஓப்பன் ஆயிட்டு இருக்கு..!!"

அமர்த்தலாக சொன்ன மோகன்ராஜ், மேலும் ஒரு அரைநிமிடம் எடுத்துக் கொண்டார். அப்புறம்,

"ம்ம்.. இந்தா..!!"

என்றவாறே லேப்டாப்பை அசோக்கின் பக்கமாக திருப்பி வைத்தார். அசோக் அந்த லேப்டாப்பை ஒருவித அவசரத்துடன் தனக்கு நெருக்கமாக இழுத்தான். திரையில் விரிந்திருந்த அந்த டேடா ஃபைலை கவனமாக பார்வையிட்டான். மோகன்ராஜ் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டார். புகை வழிகிற வாயுடனே சொன்னார்.

"சென்னை ஸிட்டி ஃபுல்லா.. மொத்தம் இருபத்தஞ்சு எடத்துல.. அந்த மாதிரி ஃப்ளக்ஸ் போர்ட் வச்சிருக்கோம்..!!"

அவர் கேஷுவலாக சொல்ல.. அதைக்கேட்ட சாலமனுக்கோ அடிவயிற்றில் புளி கரைத்தது..!! உடைந்துபோன குரலில்.. மிக பரிதாபமாக சொன்னான்..!!

"இருபத்த்...தஞ்சு எடமா..?? அடங்கொன்னியா..!!! ஒரு போர்டை சுத்தி.. கொறைஞ்சது ஒரு ஆயிரம் ஜன்னலாவது இருக்குமே..?? ஒரு நாளைக்கு இருநூறு ஜன்னல்னு வச்சுக்கிட்டா கூட.. ஒரு போர்டுக்கு அஞ்சு நாளு.. இருபத்தஞ்சு போர்டுக்கு எழுபத்தஞ்சு நாளு..!! ஷ்ஷ்ஷ்ஷப்பா.. இப்போவே எனக்கு கண்ணைக்கட்டுதே..!!" புலம்பிய சாலமனை கண்டுகொள்ளாமல், அசோக் மோகன்ராஜிடம் கேட்டான்.

"இது மொத்த லிஸ்ட்தான ஸார்..??"

"ஆமாம்..!!"

"நான் உங்கட்ட சொன்னன்ல.. அந்த ரெயின் பேக்ரவுண்ட் ஸ்டில்..!! அந்த ஸ்டில் இருக்குற லிஸ்ட் மட்டும் எனக்கு போதும்..!!"

"ஓ..!! இரு வர்றேன்..!!"

சொன்ன மோகன்ராஜ் தனது இருக்கையை விட்டு எழுந்து வந்தார். அமர்ந்திருந்த அசோக்கிற்கு பின்புறமாக வந்து நின்றவர்,

"மொத்தம் நாலு விதமான ஸ்டில்ஸ் யூஸ் பண்ணினோம்.. அதுல நீ சொன்ன ஸ்டில் இருக்குற போர்ட்னா.."

என்று முனுமுனுத்தவாறே, லேப்டாப்பின் கீபோர்டை இரண்டு தட்டு தட்டினார். திரையில் தெரிந்த லிஸ்ட் இப்போது ஃபில்டர் செய்யப்பட்டு எண்ணிக்கை குறைந்தது..!!

"பதினொன்னு வருது..!!"

"ஹ்ம்ம்..!! லாஸ்ட் டூ வீக்ஸ்ல எரக்ட் பண்ணின போர்ட்லாம் லிஸ்ட்ல இருந்து எடுத்துடுங்க ஸார்..!! அதுலாம் வேணாம்..!!"

"எரக்ட்ஷன் கம்ப்ளீட்டட் டேட் இங்க இருக்கு பாரு..!!"

சொன்ன மோகன்ராஜ் லேப்டாப்பை மேலும் இரண்டு தட்டு தட்ட, எண்ணிக்கை இப்போது இன்னும் குறைந்தது.

"எயிட்..!!" என்றார்.

"Eight is also huge number மாப்ள..!!" சாலமன் இன்னுமே திருப்தியடையாமல் புலம்பலாக சொல்ல, அசோக் இப்போது அவனை ஏறிட்டு முறைத்தான்.

"ஏய்.. வாயை வச்சுட்டு கொஞ்ச நேரம் கம்முனு இருக்க மாட்ட..??"

எரிச்சலாக சொன்னவன், இப்போது தனது சட்டைப்பைக்குள் கைவிட்டு அந்த மேப்பை எடுத்தான். டேபிளில் விரித்து வைத்தான். ஸ்டாண்டில் இருந்து பேனா ஒன்றை உருவிக் கொண்டான். லேப்டாப் திரையையும், தான் வரைந்து வைத்திருந்த அந்த மேப்பையுமே மாற்றி மாற்றி பார்த்தான். அந்த மூன்று வழித்தடங்களில் அமைந்த ஏரியாக்களை உன்னிப்பாக பார்வையிட்டான். அந்த சிவப்பு எல்லையை தாண்டிய பகுதிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டான். மோகன்ராஜும், சாலமனும் ஒருவித குழப்பத்துடன் அசோக்கையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒரு அரை நிமிடம் கூட ஆகி இருக்காது.. அசோக்கின் முகத்தில் திடீரென அப்படி ஒரு பிரகாசம்.. அவனுடைய உதடுகளில் ஒரு பெருமிதம் கலந்த வெற்றிப்புன்னகை..!! அந்த எட்டு இடங்களில் ஒன்று மட்டுமே.. அந்த மூன்று வழித்தடங்களில் சிவப்பு கோட்டுக்கு மேலாக அமைந்த ஒரு இடத்துடன் மேட்ச் ஆனது..!! 'மாட்னடி மவளே..!!' என்று முனுமுனுத்தவாறே, அசோக் மேப்பில் அந்த இடத்தை மார்க் செய்து வட்டமிட்டான்..!! 'அட்வர்டைஸ்மன்ட் போர்டை பார்த்தே எனக்கு நீ அல்வா குடுத்தல.. இப்போ அதே அட்வர்டைஸ்மன்ட் போர்டை வச்சு நான் உன்னை அமுக்கி புடிச்சுட்டேன் பாரு..' என்று மனதுக்குள் கர்வமாக சொல்லிக்கொண்டான்..!!
"மீராவோட பஸ் ரூட் செவன்டீன் மச்சி.. அவ வீடு சிந்தாதிரிப்பேட்டைல இருக்குது.. அதுவும்.. Just opposite to our advertisement board.. !!"


குரலிலும் முகத்திலும் ஒருவித பெருமிதத்துடன் அசோக் சொல்ல, மோகன்ராஜூம் சாலமனும் இப்போது அவனை பிரமிப்பாக பார்த்தார்கள்..!!

அசோக்கும் சாலமனும்.. வடபழனியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை செல்வதற்கு.. மேலும் ஒரு மணி நேரம் ஆனது..!! அந்த ஃப்ளக்ஸ் போர்ட் வைக்கப்பட்டிருந்த.. நான்கு அடுக்குகள் கொண்ட.. அந்த தனியார் கட்டிடத்தின் மொட்டைமாடியை அடைய.. மேலும் ஐந்து நிமிடங்கள் ஆயின..!! இருவரும் போர்டை ஒருமுறை சுற்றி வந்து.. சுற்றுப்புறத்தை கவனமாக நோட்டமிட்டனர்..!!


ஒரு பக்கம் குடிசையும் கூவமுமாய் வறுமையான பகுதி.. இன்னொரு பக்கம் மாளிகை வீடுகளும் மரநிழலுமாய் வசதியான ஏரியா..!! தூரத்தில் தெரிந்த ரயில்வே ட்ராக்கில்.. மெட்ரோ ரயில் ஒன்று.. 'ஊஊஊஊ' என்று ஊளையிட்டவாறே.. உற்சாகமாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது..!! அந்த ரயிலின் உற்சாகம் அசோக்கிடமும் எக்கச்சக்கமாய் பொங்கி வழிந்தது..!!

"அந்த குடிசை ஏரியாலாம் லாஸ்டா பாத்துக்கலாம் மச்சி.. மொதல்ல இந்தப்பக்கம் கவர் பண்ணிடுவோம்..!!" என்றான் சாலமனிடம்.

"ஹ்ம்ம்.. இது என்னவோ எனக்கு வேலைக்காவுற மாதிரி தெரியல..!!" சாலமன் இன்னுமே சலிப்புடன் சொன்னான்.

"டேய்.. முட்டாக்...!! சும்மா சும்மா நெகட்டிவா பேசாதடா.. வெண்ணை..!!"

"ம்க்கும்.. போடா வெளக்கெண்ணை..!! அங்க பாரு.. அந்த அப்பார்ட்மன்ட்சை பாரு..!! அதுல மட்டுமே கொறைஞ்சது நூறு வீடு இருக்கும்.. எல்லா ஜன்னலும் இங்கதான் பாக்குது..!! அது மாதிரி இன்னும் எத்தனை அப்பார்ட்மன்ட்ஸ் இருக்குது பாரு..!! ஒன்னு.. ரெண்டு.. மூணு.."

"ஏய் ஏய்.. நிறுத்துடா..!! மொத்தமா பார்த்தா எல்லாம் கஷ்டமாத்தான் இருக்கும்.. ஒன்னு ஒன்னா பாரு.. ரொம்ப ஈஸியா இருக்கும்..!! இருபத்தஞ்சு போர்டை இப்போ ஒத்தை போர்டா மாத்தலையா..?? அந்த மாதிரிதான்..!! இங்க இருக்குற ஒவ்வொரு வீடா போறோம்.. ஒன்னு ஒன்னா ஃபில்ட்டர் பண்றோம்.. கோழியை அமுக்குற மாதிரி அவளை அமுக்குறோம்..!!"

"ஹ்ம்ம்.. இவ்வளவு கொள்ளைல அந்த கோழியை எங்க இருந்து தேட ஆரம்பிக்கிறது..??"

"எங்கயாவது இருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான்..!! இங்க இருந்து எந்த வீடு.. க்ளியர் வ்யூல இருக்கு.. ம்ம்ம்ம்.. ஆங்.. அதோ.. அந்த வீட்டுல இருந்து ஆரம்பிக்கலாம்..!!"

கேஷுவலாக சொன்னவாறே.. அசோக் தூரத்தில் தெரிந்த ஒரு வீட்டை நோக்கி கை நீட்டினான்..!!

அதே நேரம்.. அவனுடைய கை நீண்டிருந்த அதே திசையில்.. அவனது விரல்கள் சுட்டிக்காட்டிய அதே வீட்டுக்குள்.. சிறிதாக தெரிந்த அந்த ஜன்னலின் வழியாக.. ஒரு ஜோடிக் கண்கள்.. இவர்கள் இருவரையுமே சற்று மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தன..!! அவை.. சாட்சாத்.. நமது கதாநாயகியின் கவின்மிகு கண்கள்தான்..!!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக