http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : அன்புள்ள ராட்சசி - பகுதி - 26

பக்கங்கள்

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

அன்புள்ள ராட்சசி - பகுதி - 26

நெடுநாட்களுக்கு அப்புறம் மும்தாஜ் மனம் விட்டு சிரித்ததற்கு மறுநாள்..!!

வடபழனி முனுசாமி சாலையில்.. வாகனத்தை மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தான் அசோக்.. பைக்கின் பின்சீட்டில் மும்தாஜ்..!! இரண்டு கால்களையும் ஒருபக்கமாக போட்டு அமர்ந்திருந்தாள்.. அசோக்குடைய முதுகை உரசிவிடக்கூடாது என.. மிகவும் பிரயத்தனப்பட்டு உடலை ஒடுக்கிக்கொண்டிருந்தாள்..!! அவளுடைய அவஸ்தையை புரிந்துகொண்ட அசோக்.. தன் மனதுக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்..!! இப்படி ஒரு பிரயாணத்துக்கு காரணமே மும்தாஜ்தான்..!!

"எ..என்னாச்சுன்னு தெரில அசோக்.. வ..வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேன்னுது..!! எ..என்னை கொஞ்சம் பஸ் ஸ்டாண்ட்ல ட்ராப் பண்ண முடியுமா..??"

சற்றுமுன் அசோக்கிடம் தயங்கி தயங்கி கேட்டதே அவள்தான்..!! அவன் மீதிருந்த நன்மதிப்பில் அவ்வாறு கேட்டுவிட்டாலும்.. இப்போது அருகில் அமர்ந்து பயணிக்கையில், அவளிடம் ஒரு கூச்சம்.. அந்த கூச்சம் தந்த ஒருவித அவஸ்தையுடனே பயணித்துக் கொண்டிருந்தாள்..!!

முனுசாமி சாலையில் இருந்து இடதுபுறம் திரும்புகிற மற்றொரு குறுகிய சாலையில்தான்.. அசோக்குடைய அலுவலகம் இருக்கிறது..!! பேருந்து நிலையத்துக்கும் அந்த குறுகிய சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும்..!! சீறிக்கொண்டிருந்த வண்டியின் வேகத்தை குறைத்து.. அலுவலகம் இருக்கிற கட்டிடத்தின் முன்பாக நிறுத்திய அசோக்.. பின்பக்கமாக திரும்பி..

"ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க மும்தாஜ்.. வந்துடுறேன்..!!" என்றான்.

மும்தாஜ் இறங்கிக்கொள்ள, வண்டியை சாய்த்து ஸ்டான்ட் இட்டுவிட்டு, அவனும் இறங்கிக்கொண்டான்.

"உங்க ஆபீஸ்க்கு எங்களைலாம் இன்வைட் பண்ண மாட்டிங்களா..??" மும்தாஜ் சற்றே குறும்பாக கேட்க,

"இ..இல்ல.. அ..அதுக்காக இல்ல..!!" அசோக்கிடம் ஒரு தயக்கம்.

"அப்புறம்..??"

"நீ..நீங்க நெனைக்கிற மாதிரிலாம் எங்க ஆபீஸ் இருக்காது..!! ஒரே குப்பையா.. ஒரு கேவலமான ஸ்மெல்லோட.. ரொம்ப கச்சடாவா இருக்கும்..!!"

"ஹாஹா.. அதனால என்ன.. எனக்கு ஓகே..!!" சொல்லிவிட்டு மும்தாஜ் புன்னகைக்க, அசோக் மேலும் ஓரிரு வினாடிகள் தயங்கினான். பிறகு,

"தென்.. இட்ஸ் ஃபைன்..!!"

என்று சொல்லிவிட்டு அவன் முன்னால் நடக்க.. மும்தாஜ் அவனை பின்தொடர்ந்தாள்..!! பக்கவாட்டில் இருந்த படிக்கட்டு ஏறி, இருவரும் மேலே சென்றார்கள்.. மூடியிருந்த கதவு திறந்து, அலுவலகத்துக்குள் நுழைந்தார்கள்..!!

இவர்கள் சென்ற நேரத்தில் அசோக்கின் நண்பர்கள் மூவருமே அலுவலகத்தில் இல்லை.. ஏதோ படப்பிடிப்பு சம்பந்தமாக வெளியே சென்றிருந்தனர்..!! அவர்களிடம் வேலை செய்கிற அசிஸ்டன்ட்கள்தான்.. சிஸ்டத்தில் ஏதோ கேம்ஸ் ஆடியபடி ஹாயாக அமர்ந்திருந்தனர்..!!

அசோக் அவர்களிடம் சென்று ஏதோ ஃபைல் பற்றி கேட்க.. அவர்களில் ஒருவன் மேஜை ட்ராவை கைகாட்டினான்..!! மேஜையை அணுகிய அசோக் ட்ராவை திறந்தான்.. உள்ளே கைவிட்டு, அந்த ஃபைல் அடங்கிய மெமரி ஸ்டிக்கை தேடினான்..!!

அதேநேரம்.. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியிருந்த மும்தாஜ்.. காத்திருக்கிற நேரத்தில் அந்த அறையை சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்..!! சுவற்றில் ஒட்டியிருந்த அந்த கவிதை காகிதம் அவளுடைய கண்ணில் பட்டது.. ஒரு ஆர்வத்துடன் அந்தக்கவிதையை வாசிக்க ஆரம்பித்தாள்..!!

அகப்பொருளுல் ஒன்றினை..
முதற்பொருள் செய்த மூடா..!!
உரிப்பொருளுல் ஒன்றானபின்..
இறுதிப்பொருள் செய்த இராட்சசா..!!

உந்துதல் தணிக்கவே..
முகர்ந்தாயோ என் புணர்புழை..??
வெந்து எரியுதடா..
வெட்டி எறிந்திடவோ..??

நரமாமிசத்துக்குட்புறம் நரம்புண்டு..
நரம்புக்குள்ளோடும் உதிரமுண்டு..
உதிரத்துக்குள்ளாடும் உணர்வுமுண்டு..
அறிவாயோ நீ அற்பப்பதரே..??

புறப்பொருள் போதுமோடா..
போகப்பொருள் கசந்தேனோடா..
கருப்பொருள் ஒன்றிருக்குதடா..
காவுக்காய் காத்திருக்குதடா..!!


"ம்ம்.. கவிதை நல்லாருக்கு..!!" மும்தாஜ் திடீரென சொல்ல, மேஜை ட்ராவுக்குள் கவனத்தை தொலைத்திருந்த அசோக், இப்போது தலையை நிமிர்ந்து பார்த்தான்.

"ஓ.. பிடிச்சிருக்கா..??" என்று கேட்டவாறே மெலிதாக புன்னகைத்தான்."எஸ்.. ரொம்ப ரொம்ப..!! எழுதினது யார்னு தெரிஞ்சுக்கலாமா..??"

"வேற யாரு.. நான்தான்..!!" அசோக்கின் குரலில் ஒருவித குறும்பு.

"ஹாஹா.. சான்ஸே இல்ல.. சத்தியமா இது நீங்க எழுதினது கெடையாது..!!" மும்தாஜ் உறுதியான குரலில் சொன்னாள்.

"எ..எப்படி சொல்றீங்க..??" அசோக் சற்றே புருவத்தை நெறித்தவாறு கேட்டான்.

"ஒரு பொண்ணோட வலி அப்படியே அப்பட்டமா தெரியுது.. ஒரு ஆம்பளையால இந்த அளவுக்கு அந்த வேதனையை உணர்ந்து எழுதிருக்க முடியாது..!! அந்த வார்த்தைகள்ல தெரியிற கோவமும்.. அந்த அர்த்தத்துல தெறிக்கிற வீரியமும்.. கண்டிப்பா இதை எழுதினது ஒரு பொண்ணாத்தான் இருக்கணும்னு தோணுது..!!"

மும்தாஜ் அந்த மாதிரி சொன்னதுமே.. அசோக்கின் மனதில் ஒரு அதிர்வலை.. அவனது மூளையில் ஒரு மின்னல் வெட்டு..!! ஃபைல் தேடிக்கொண்டிருந்த அவனது கவனம் சிதறி.. வேறொரு யோசனையில் சென்று குவிய ஆரம்பித்தது..!! மும்தாஜ் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்..!!

"கொஞ்ச நாள் முன்னாடி நான்கூட நெறைய கவிதைலாம் எழுதுவேன் அசோக்..!! என்னோட பாஸ்ட்லாம் உங்களுக்கு தெரியும்ல.. நான் அந்த மாதிரி ஒரு கொடுமையான பீரியட்ல இருந்தப்போ.. நெறைய எழுதுவேன்..!! எல்லாம் இந்த மாதிரி கவிதையாத்தான் இருக்கும்.. ஆம்பளைங்க மேல வெறுப்பு.. அப்படியே ஒரு ஆத்திரம்.. அடக்க முடியாம ஒரு பழியுணர்ச்சி..!! மனசுல இருக்குற கோவத்தை எல்லாம்.. இந்த மாதிரி கவிதையாத்தான் கொட்டுவேன்..!!"

மும்தாஜ் சொல்லிக்கொண்டே போக.. அசோக்கின் மூளை இப்போது சுறுசுறுப்பாகியிருந்தது.. மிக தீவிரமாக எதையோ யோசித்துக்கொண்டிருந்தது..!! அசோக்கிற்கு அந்த கவிதையின் அர்த்தம் ஓரளவுக்கு தெரியும்.. அகராதி புரட்டி அந்தக்கவிதையின் உள்ளர்த்தத்தை கொஞ்சம் உணர்ந்தே வைத்திருந்தான்..!! 'ஒரு ஆணிடம் ஏமாந்த பெண்ணின் வேதனையை சொல்கிற கவிதை இது' என்கிற அளவிலேதான் அவனது எண்ணம் இருந்ததே ஒழிய.. மீராவுக்கு நிஜத்திலே நடந்த கொடுமையின் பிரதிபலிப்பாக இருக்குமோ என்று.. அவனது மனம் எப்போதும் சந்தேகப்பட்டது இல்லை..!! இப்போது மும்தாஜ் சிந்திய வார்த்தைகளில்.. அவனுக்கு அந்த சந்தேகம் பிறந்திருந்தது..!!

"உன்னை பாக்குறதுக்கு முன்னாடி.. ஆம்பளைங்கன்னாலே ஒரு வெறுப்புல இருந்தேன் அசோக்.. எந்த ஆம்பளை மேலயுமே எனக்கு நல்ல அபிப்ராயம் இல்ல..!!"

"நான் பாவம் பண்ணிருக்கேன் அசோக்.. பெரிய பாவம் பண்ணிருக்கேன்..!!"


அவனை விட்டு பிரிந்து செல்கிற அன்று.. கண்களில் நீர் வழிய மீரா சொன்ன வார்த்தைகள்.. இப்போது அசோக்கின் நினைவுக்கு வர.. அவனது சந்தேகம் வலுப்பட ஆரம்பித்தது..!! அந்தப்பக்கம் மும்தாஜ் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.. இந்தப்பக்கம் அசோக், நடந்துமுடிந்த பலசம்பவங்களை பரபரவென நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..!! அவனுடைய உணர்வு நரம்புகளில் எல்லாம், சர்சர்ரென ஒரு அதிர்வு மின்சாரம் பாய.. அந்த சம்பவங்கள் அனைத்தும் அவன் மனதில் சரசரவென குழப்பப்படங்களாய் ஓடின..!!

"என் அக்கா சொன்னேன்ல............................. கொஞ்ச நாள் முன்னாடி அவ ஒரு பையனை லவ் பண்ணிட்டு இருந்தா................................. ஒருநாள் அந்தப்பையன் திடீர்னு காணாமப் போயிட்டான்................... நான் யூ.எஸ்ல இருக்கேன்.. இங்கயே செட்டில் ஆகப் போறேன்.. இத்தனை நாளா நான் உன்னை லவ் பண்றதா சொன்னதுலாம் பொய்.. சும்மா நடிச்சேன்.. சும்மா ஜாலிக்காத்தான் உன் கூட பழகினேன்.. நான் இங்க வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறேன்.. நீயும் நடந்ததை மறந்துட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ.. அப்டின்னு.............." - ஃபுட்கோர்ட்டில் அமர்ந்துகொண்டு, முகத்தை மிக இயல்பாக வைத்தவாறு, அக்காவின் காதல் என்கிற பெயரில் மீரா சொன்னவை.

"நீ உண்மைன்னு நெனச்சது எல்லாம் பொய்யா போச்சுன்னு சொன்னல..?? அப்படினா.. நீ பொய்னு நெனைக்கிற விஷயம் எதாவது ஏன் உண்மையா இருக்க கூடாது..??" - புன்னகையுடன் கேட்டாள் பவானி.

"மொளைக்கிறதுக்கு முன்னாடியே, ஆம்பளை புடிக்கிற வேலையை விட்டுட்டு.. ஒழுங்கா படிச்சு முன்னேர்ற வழியைப் பாரு.. போ..!!" - பூங்காவில் ஒரு பள்ளி மாணவியிடம் வெறுப்பை உமிழ்ந்தாள் மீரா.

"அந்தப்பையனோட ஃபாரீன் காண்டாக்ட் நம்பர் வாங்கி பேசினேன்.. ............... அவனுக்கு கொஞ்ச நேரம் ஒண்ணுமே புரியல..!! திடீர்னு.. சென்னைல இருந்து போலீஸ்ன்னதும்.. என்ன ஏதுன்னு தெரியாம.. பையன் கொஞ்சம் டென்ஷனாயிட்டான்..!!" - புகை வழிகிற வாயுடன் ஸ்ரீனிவாச பிரசாத்.

"எனக்கு விஜய்ன்ற பேரே பிடிக்காது..!!!!" - நடிகர் விஜய் நடித்த சினிமாவிற்கு செல்லலாம் என்று அழைத்தபோது, மீரா முகம் சிவக்க உக்கிரமாக கத்தியது.

"நீ சொன்ன அந்த நம்பர் விஜயசாரதின்ற பேர்ல ரெஜிஸ்டர் ஆகி இருக்கு..!!" - மீண்டும் புகைமண்டலத்துக்கு நடுவே ஸ்ரீனிவாச பிரசாத்.


அவ்வளவுதான்.. அசோக்கை உடனடியாய் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது.. அவன் முகத்தில் உச்சபட்சமாய் ஒரு தீவிரம் கொப்பளித்தது..!! உடலின் அத்தனை செல்களிலும் ஒரு பதற்றம் நிறைந்துபோயிருக்க.. நடுங்குகிற கையால் தனது செல்போனை எடுத்தான்.. வெடவெடத்த விரல்களால் ஏதோ ஒரு எண்ணுக்கு டயல் செய்தான்..!! அவனுடைய மாற்றத்தை கவனித்த மும்தாஜ்..

"என்னாச்சு அசோக்..??"

என்று குழப்பமாக கேட்க.. அசோக் அதை அலட்சியம் செய்தான்..!! அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்பட்டதும்..

"ஹலோ ஸார்.. நான் அசோக் பேசுறேன்..!!" என்றான்.

"ஆங்.. சொல்லு அசோக்..!!" என்றார் மறுமுனையில் ஸ்ரீனிவாச பிரசாத்.

"ஸார்.. நீங்க அந்த விஜயசாரதின்ற பையன் பத்தி சொன்னிங்கள்ல..??"

"ம்ம்..!!"

"அவன் வெளிநாட்டுல இருக்கான்னு சொன்னிங்க..!!"

"ஆமாம்..!!"

"அந்த வெளிநாடு.. யூ.எஸ்தான..??"

"ஆ..ஆமாம்..!! உனக்கு எப்படி தெரியும்..??"

ஸ்ரீனிவாச பிரசாத் குழப்பமாக கேட்க.. இந்தப்பக்கம் அசோக்கின் மனம் இன்னும் தெளிவு பெற ஆரம்பித்தது.. அவனது சந்தேகம் இப்போது மிகவும் உறுதிப்பட்டுப் போனது.. நெஞ்சில் எழுந்திருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்தது..!! அவசரமாக ஏதோ யோசித்தவன், உடனடியாய் ஒரு முடிவுக்கு வந்து.. ஸ்ரீனிவாச பிரசாத்திடம் கேட்டான்..!!

"ஸார்.. நீங்க இப்போ ஃப்ரீயா..?? எனக்காக கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ண முடியுமா..??"

ஸ்ரீனிவாச பிரசாத் அசோக்கின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள.. அவன் நன்றி சொல்லி காலை கட் செய்தான்..!! உடம்பில் ஒரு பதட்டத்துடன் அந்த அறைவாசலை நோக்கி நகர்ந்தான்..!!

"என்னாச்சு அசோக்..??" மீண்டும் கேட்ட மும்தாஜிடம் திரும்பி,

"ஸாரி மும்தாஜ்.. நீங்க ஏதாவது ஒரு ஆட்டோ பிடிச்சு போயிடுறீங்களா.. எனக்கு அர்ஜண்டா ஒரு வேலை இருக்கு..!!" என்றான்.

மும்தாஜின் பதிலுக்காக கூட காத்திராமல், அலுவலகத்தை விட்டு அவசரமாய் வெளியேறினான்.. தடதடவென படியிறங்கி கீழ் தளத்துக்கு வந்தான்.. பைக்கின் நெற்றியில் சாவி போட்டு திருகி, கிக்கரை படக்கென உதைத்தான்.. ஆக்சிலரேட்டரை முழுவதுமாக முறுக்கி, வண்டியை விர்ரென பறக்க விட்டான்..!!

அடுத்த ஐந்தாவது நிமிடம்.. அசோக் ஸ்ரீனிவாச பிரசாத்தின் முன்பாக அமர்ந்திருந்தான்..!! யாரிடமோ டெலிபோனில் பேசியவர்.. பேசிமுடித்ததும் ரிஸீவரை அதனிடத்தில் வைத்தார்..!! அசோக்கோ பொறுமையற்றவனாய் கேட்டான்..!!

"என்ன ஸார் சொல்றாங்க..??"

"அந்த விஜயசாரதி இந்தியாதான் வந்திருக்கானாம்.. ரெண்டு நாளாச்சு..!! அவனோட இண்டியன் காண்டாக்ட் நம்பர் தெரியலைன்னு சொல்றாங்க..!!"

"ஓ..!! இப்போ என்ன ஸார் பண்றது..??"

"ம்ம்ம்ம்.. அவங்களோட மாதவரம் பங்களா அட்ரஸ் எனக்கு தெரியும்.. அங்கதான் போய் விசாரிக்கணும்..!!"

"அ..அப்போ வாங்க ஸார் இப்போவே கெளம்பலாம்..!!" அசோக் அவசரப்பட்டான். ஸ்ரீனிவாச பிரசாத் நிதானமாகத்தான் இருந்தார்.

"டேய்.. கேக்குறேன்னு தப்பா நெனைக்காத..!! உன் சந்தேகம் சரிதான்னு உனக்கு தோணுதா..??"

"ஹையோ.. நான் ஸ்ட்ராங்கா நம்புறேன் ஸார்..!! இந்த விஜயசாரதிதான் மீராவுக்காக அந்த ஸிம் வாங்கி தந்திருக்கணும்.. அவளை லவ் பண்ற மாதிரி நடிச்சு ஏமாத்திருக்கணும்.. அதனாலதான்.. நீங்க மீராவோட அடையாளம்லாம் சொல்லி அவளை தெரியுமான்னு கேட்டப்போ.. அவன் தெரியாதுன்னு சொல்லி மழுப்பிருக்கனும்..!! அவன்தான் ஸார்.. அவனேதான்.. சந்தேகமே இல்ல..!! அவனை விசாரிச்சா என் மீரா எங்க இருக்கான்னு தெரிஞ்சிடும் ஸார்..!!"

"ஹ்ம்ம்..!! சரி நீ சொல்றது உண்மைனே வச்சுப்போம்..!! இப்போ மட்டும் அவன் வாயை திறப்பான்னு என்ன நிச்சயம்..?? இப்போவும்.. அவளை எனக்கு தெரியவே தெரியாதுன்னு அவன் அடம்பிடிச்சா..??"

"விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா உண்மையை சொல்லுவான் ஸார்..!!"

"டேய்.. அவங்கள்லாம் பெரிய ஆளுங்கடா.. அந்த மாதிரிலாம் அடிச்சு விசாரிக்க முடியாது..!!"

"ஹையோ நானும் அந்த அர்த்ததுல சொல்லல ஸார்..!! அவன்கிட்ட எப்படியாவது, கெஞ்சி கூத்தாடியாவது மீரா பத்தி தெரிஞ்சுக்கணும்.. ப்ளீஸ் ஸார்..!!"

அசோக் கெஞ்சலாக சொல்ல.. ஸ்ரீனிவாச பிரசாத் அவனுடைய முகத்தையே சில வினாடிகள் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார்..!! 'காதல் மனிதனை என்னன்ன பாடெல்லாம் படுத்துகிறது?' என்பது மாதிரி இருந்தது அவரது பார்வை..!! பிறகு ஒரு பெருமூச்சுடனே எழுந்து கொண்டவர்..

"சரி வா.. கெளம்பலாம்..!!" என்றார்.

வடபழனி காவல் நிலையத்தில் இருந்து.. அசோக்கும் ஸ்ரீனிவாச பிரசாத்தும் போலீஸ் ஜீப்பில் கிளம்பினார்கள்..!! நூறு அடி சாலையை அடைந்ததும்.. ஸ்ரீனிவாச பிரசாத் ஜீப்பின் வேகத்தை அதிகரித்தார்..!! அரை மணி நேரமும், ஐந்து நிமிடங்களும் கழிந்த போது.. அந்த மாதவரம் வீட்டை அவர்கள் அடைந்திருந்தனர்..!! ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு முன்பே அறிமுகமாகியிருந்த.. கே.கே.மூர்த்தியின் பி.ஏவை சந்தித்து பேசினர்..!!

"என்ன ஸார்.. தம்பியை தேடிக்கிட்டு அடிக்கடி வர்றீங்க.. எதுவும் பிரச்சினை இல்லையே..??"

"இல்ல ஸார்.. ஆக்சுவலா இது வேற பிரச்சினை.. மிஸ்டர் விஜயசாரதி மூலமா யூஸ்ஃபுல் இன்ஃபர்மேஷன் ஏதாவது கெடைக்குமான்னு பாக்குறோம்.. வேற ஒன்னுல்ல..!!"

"ஹ்ம்ம்.. தம்பி ரெண்டு நாளு முன்னாடிதான் இந்தியாவுக்கே வந்தாப்ல..!!"

"தெரியும் ஸார்.. நீங்க தந்த நம்பருக்கு ட்ரை பண்ணிட்டுத்தான் இங்க வர்றேன்..!!"

"ஓ.. அப்படியா.. சரி சரி..!! ம்ம்ம்.. அவர் இப்போ வீட்ல இல்லிங்களே.. வெளில போயிருக்காரு..!!"

"எங்க போயிருக்காருன்னு தெரிஞ்சுக்கலாமா..??"

"எங்க போயிருப்பாரு.. சனிக்கிழமை சாயந்திரம்.. ஃப்ரண்ட்ஸ் யாரையாவது கூட்டிக்கிட்டு ரெட்ஹில்ஸ்ல இருக்குற கெஸ்ட் ஹவுஸுக்கு போயிருப்பாரு..!!"

"ம்ம்.. அவரை காண்டாக்ட் பண்றதுக்கு எதுவும் நம்பர் இருக்கா..??"

"ஓ எஸ்.. இருக்கே..!!"

அவர் நம்பரை சொல்ல.. அசோக் தனது செல்போனில் சேகரித்துக் கொண்டான்..!! சேகரித்துக் கொண்ட வேகத்திலேயே அந்த எண்ணுக்கு கால் செய்தான்.. என்கேஜ்டாக இருந்தது..!! சிறிது நேரம் காத்திருந்துவிட்டு.. மீண்டும் கால் செய்து பார்க்க.. மீண்டும் என்கேஜ்ட்..!! திரும்பவும் அந்த எண்ணை முயற்சி செய்ய நினைத்த அசோக்கை.. இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் தடுத்தார்..!!

"வேணாம் அசோக்.. விடு..!!"

"ஏன் ஸார்..??"

"இந்த மேட்டரை ஃபோன்ல பேசுறது அவ்வளவு நல்லதில்லன்னு தோணுது.. நேர்லயே போய் பேசிடலாம்..!!" அமர்த்தலாக சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத், எதிரே இருந்த பி.ஏவிடம் திரும்பி,

"ஸார்.. அந்த ரெட்ஹில்ஸ் கெஸ்ட் ஹவுஸோட அட்ரஸ் கொஞ்சம் சொல்றீங்களா..??" என்று கேட்டார்.

அதே நேரம்..

"No 37, தேவன்பு ஸ்ட்ரீட், off G.N.T ரோட், ரெட்ஹில்ஸ்..!!"

கார் ஓட்டிக்கொண்டிருந்த விஜயசாரதி.. காதில் வைத்திருந்த செல்ஃபோனில் அந்த கெஸ்ட் ஹவுஸின் முகவரியை சொல்லிக்கொண்டிருந்தான்..!! அடுத்த முனையில் அதைக் கேட்டுக்கொண்டிருந்தது.. சாட்சாத் நமது மீராவேதான்..!!!!

"நீதான் ஏற்கனவே அந்த வீட்டுக்கு வந்திருக்கல..?? உடம்புல ஒட்டுத்துணி இல்லாம.. நாலு மணி நேரம் அந்த வீட்ல படுத்திருந்த.. ஞாபகம் இல்ல..??" விஜயசாரதியின் குரலில் எள்ளல் தொனித்தது.

"ஏன் இப்படிலாம் பண்ற..??" கேட்ட மீராவின் குரலில் ஒரு மிதமிஞ்சிய ஆத்திரமும், ஆதங்கமும் வெடித்து சிதறியது.
"ஹாஹா.. அப்படி என்ன பண்ணிட்டேன்..??"

"ஏற்கனவே என் வாழ்க்கையை கெடுத்து நாசமாக்கிட்ட.. இன்னும் உனக்கு வெறி அடங்கலையா..??"

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!" பெரிதாக ஒரு சிரிப்பை வெளிப்படுத்திய விஜயசாரதி தொடர்ந்து பேசினான்.

"என்ன பண்ண சொல்ற டார்லிங்..?? நான் பாட்டுக்கு கம்முனு இருந்தேன்.. உண்மையை சொல்லப்போனா.. என் செல்லத்தை நான் சுத்தமா மறந்தே போயிட்டேன் தெரியுமா..?? ப்ராமிஸ்டா செல்லம்.. என்னை நம்பு..!!"

"...................."

"ஹ்ம்ம்.. சும்மா இருந்தவன்கிட்ட வந்து.. 'நான் இருக்கேன், நான் இருக்கேன்'ன்னு உன்னை நீயே ஞாபகப்படுத்தி விட்டுட்டு.. இப்போ என்னை குத்தம் சொன்னா என்ன நியாயம் டார்லிங்..??"

"நான் என்ன பண்ணினேன்..??"

"என்ன பண்ணுனியா..?? உன்னை யார் போலீஸ்க்குலாம் போக சொன்னது..??"

"எத்தனை தடவை சொல்றது.. நான் போலீஸ்க்கு போகல, போலீஸ்க்கு போகலன்னு..!!"

"அப்புறம் எப்படி அவங்களுக்கு என் நம்பர் தெரிஞ்சது.. உன்னை பத்திலாம் தெரிஞ்சது..??"

"அது வேற பிரச்னை.. சொன்னா உனக்கு புரியாது..!!"

"ஹாஹா.. வாட்டெவர்.. ஐ டோன்ட் கேர்..!! சும்மா இருந்தவன் மனசுல.. அந்த ஆள் கால் பண்ணி உன்னை பத்தி விசாரிச்சதும் ஆசை வந்துடுச்சும்மா..!! உன் உடம்பு.. அந்த ஷேப்.. அந்த ஸ்மெல்.. நீ எனக்கு தந்த சுகம்.. வாவ்...!!! நெனச்சு பாத்ததுமே உடம்புல அப்படியே குப்புனு ஒரு சூடு ஏறிடுச்சு செல்லம்..!! அதான் இன்னும் ரெண்டு வாரத்துல இண்டியா போறோமே.. ரெண்டாவது இன்னிங்ஸ் ஆடிப்பாக்கலாமான்னு ஒரு ஆசை வந்துடுச்சு..!! அந்த ஆசையை அடக்க முடியாமத்தான் அன்னைக்கு உனக்கு கால் பண்ணினேன்..!!"

"ப்ளீஸ் விஜய்.. இது வேணாம்.. என்னை விட்ரு..!!" மீரா திடீரென கெஞ்சினாள்.

"அப்போ அந்த வீடியோ உனக்கு வேணாமா..?? நெட்ல போட்ரலாமா..??"

"நோ..!!!!"

"எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லப்பா.. என் மூஞ்சி அதுல சுத்தமா தெரியாது..!! உன்னோட லவ்லி ஃபேஸ்தான் அதுல ஹைலைட்டே..!!"

"ஏன் என்னை இப்படி சித்திரவதை பண்ற.?? ப்ளீஸ்.. அந்த வீடியோவை எங்கிட்ட குடுத்திடு..!!"

"அப்போ ரெட்ஹில்ஸ் வா.. ஜஸ்ட் இன்னைக்கு நைட் மட்டும்.. சித்திரவதை பண்ண கூப்பிடல.. சந்தோஷமா இருக்கலாம்னுதான் கூப்பிடுறேன்..!! இன்னும் என் செல்ஃபோன்லதான் அந்த வீடியோ இருக்குது.. காலைல நீ போறப்போ என் செல்ஃபோனோட சேர்த்து, அதை உனக்கு காதல்பரிசா குடுத்துடுறேன்.. ஓகே வா..??"

"...................."

"ஹ்ம்ம்.. அன்னைக்கு நீ மயக்கத்துல இருந்ததால.. நெறைய விஷயம் ட்ரை பண்ண முடியலடி செல்லம்.. எனக்கு ரொம்ப வருத்தம் தெரியுமா..?? அதெல்லாத்தையும் இன்னைக்கு பண்ணி பாக்குறோம்.. எல்லாம் உன்னோட சுயநினைவோட.. தெகட்ட தெகட்ட..!! You are going to enjoy this chellam.. I promise..!!"

விஜயசாரதி சொல்லிக்கொண்டிருக்கும்போதே.. அவனது நம்பருக்கு இன்னொரு கால் வருவதை.. 'கீங் கீங்' என்று ஒலியெழுப்பி அவனது செல்ஃபோன் அறிவித்தது..!! உடனே..

"ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுடா செல்லம்.. எனக்கு இன்னொரு கால் வருது.. நான் திரும்ப கூப்பிடுறேன்..!!"

என்றுவிட்டு மீராவுடனான தொடர்பை துண்டித்தான்..!! செல்ஃபோன் டிஸ்ப்ளே பார்த்தவன்.. அன்னோன் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்திருந்தப்பதை தெரிந்துகொண்டான்.. அசோக்கின் நம்பர் அது..!! அன்னோன் நம்பர் என்று தெரிந்ததும்.. திரும்ப கால் செய்யும் எண்ணத்தை கைவிட்டான்.. மீண்டும் மீராவின் எண்ணை அழைக்க நினைத்தான்..!! அதற்குள்ளாகவே அவனது செல்ஃபோனுக்கு வேறொரு நம்பரில் இருந்து கால் வந்தது..!!

"KASI CALLING..!!!"

என்று பளிச்சிட்டது செல்ஃபோன் டிஸ்ப்ளே..!! காசி.. போதைப்பொருள் விநியோகிப்பவன்.. போலீஸாரால் வலைவீசி தேடப்படுகிறவன்..!! விஜயசாரதி அந்த காலை அட்டண்ட் செய்தான்.. குரலில் ஒரு புது உற்சாகத்துடன் பேசினான்..!!

"சொல்லு மாமு.. எங்க இருக்குற..??"

"அங்கதாண்டா வந்துட்டு இருக்குறேன்.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன்..!!"

"ஓ.. நானும் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்..!! அதுசரி.. சரக்கு ரெடியா..?? அதை சொல்லு மொதல்ல..!!"

"ம்ம்.. ரெடி ரெடி..!! நீ சொன்னதை விட நெறயவே ரெடி..!!"

"வாவ்...!!!!! தேட்ஸ் க்ரேட்..!!!!!" விஜயசாரதி குதுகலிக்க, காசியின் குரலில் ஒரு சீரியஸ்னஸ்.

"மாமு இன்னொரு விஷயம்..!!"

"என்ன..??"

"சொல்றேன்னு தப்பா நினைக்காத.. அமவுன்ட்டு உடனே வேணுண்டா..!!"

"ஏய்.. என்னடா இது.. ஏதோ புது ஆள்ட்ட பேசுற மாதிரி பேசுற..?? நமக்குள்ள பணம்லாம் ஒரு பிரச்சினையா..??"

"அதுக்கு சொல்லல மாமு..!! முன்ன மாதிரி இல்ல.. இப்போலாம் கெடுபுடி ஜாஸ்திடா.. உனக்காக ரொம்ப கஷ்டப்பட்டு அரேஞ்ச் பண்ணிருக்கேன்..!! அதில்லாம.. நானே இப்போ பல பிரச்னைல இருக்கேன்..!! பணம் இல்லாம ஒன்னும் பண்ண முடியாது மாமு..!!"

"ப்ச்.. ஒன்னும் கவலைப்படாத.. உடனே வாங்கிக்கலாம்..!! ஆமாம்.. வேற எதோ பிரச்னைன்னு சொன்னியே.. என்னது..??"

"இப்போ வேணாம்.. எல்லாம் அங்க வந்து விவரமா சொல்றேன்..!!"

"வா வா..!! ரொம்ப நாள் அப்புறம் மீட் பண்றோம்ல.. உனக்கு பணம் மட்டும் இல்ல.. செம்மையா ஒரு விருந்தே ரெடி பண்ணி வச்சிருக்கேன் மாமு..!!"

"விருந்தா.. என்ன விருந்து..??"

"கோழி விருந்து மாமு..!! பொட்டைக் கோழி.. அதுலயும் சக்கையான வெடக்கோழி..!!"

"ஏய்.. என்னடா சொல்ற..??"

"அனுஷ்கா பிடிக்குமா உனக்கு ..??"

"யாரு.. நம்ம அருந்ததி அனுஷ்காவா..??"

"ம்ம்.. அவளேதான்..!!"

"பிடிக்குமே.. ஏன் கேக்குற..??"

"அவள்லாம் இவகிட்ட பிச்சை வாங்கணும்.. அந்த அளவுக்கு இருப்பான்னா பாத்துக்கோ..!!"

"யார்டா அது.. ஐட்டமா..??"

"ஐட்டமா..?? அடப்பாவி.. நானே தேத்துனதுடா..!!"

"நீயே தேத்துனதா.. அப்புறம் என்னையும் கூப்பிடுற.. அந்தபொண்னுக்கு ஓகேவா..??"

"அவகிட்ட பெர்மிஷன்லாம் வேற கேக்கணுமா..?? நாம நில்லுனா நிப்பா.. உக்காருனா உக்காருவா மாமு..!!"

"என்னடா சொல்ற.. எனக்கு ஒன்னும் புரியல..!!"

"அவ மேட்டர் ஒன்னு நம்மகிட்ட மாட்டிருக்குது மாமு.. நாம என்ன சொன்னாலும் அவ கேட்டுத்தான் ஆகணும்..!! என்ன்ன்ன சொன்னாலும்..!!! புரியுதா..??"

"ஓ..!! ஏதாவது பிரச்னையாகிட போகுதுடா..!!"

"ஒரு பிரச்னையும் இல்ல மாமு.. அவளை எனக்கு நல்லா தெரியும்.. சரியான தொடை நடுங்கி.. புள்ளப்பூச்சி மாமு அவ..!! அந்த புள்ளப்பூச்சியை இன்னைக்கு பறக்கவிட்டு பறக்கவிட்டு அடிச்சு நசுக்குறோம்.. புரியுதா..?? சீக்கிரம் வா.. ஒரு பொண்ணுகிட்ட இதெல்லாம் பண்ணிப் பாக்கனும்னு உனக்கு அசிங்கமான ஆசைலாம் இருக்கும்ல.. அதெல்லாம் அவகிட்ட இன்னைக்கு பண்ணிப் பாத்துடலாம்.. வா..!!" குரூரமாக சொல்லிவிட்டு காலை கட் செய்தான் விஜயசாரதி.அதேநேரம்..

ரெட்ஹில்ஸ் ரோட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த மீரா.. விஜயசாரதியிடம் பேசிமுடித்து கையிலேயே வைத்திருந்த செல்ஃபோனை.. (அசோக்குடன் பழகிய காலத்தில் அவன் அறியாமல் பதுக்கி வைத்திருந்த அந்த செல்ஃபோனை..) இப்போது ஹேண்ட் பேக் திறந்து உள்ளே வைத்தாள்..!! அந்த மாதிரி அவள் உள்ளே வைக்கையில்.. பேகுக்குள் இருந்த அந்த வஸ்து பளிச்சென்று வெளியே தெரிந்தது..!!

அரையடிக்கும் சற்று அதிகமான நீளத்தில்.. பளபளவென மினுமினுத்த ஒரு உலோக கத்தி..!!

"இந்த லெஃப்ட் எடுத்துக்கோங்கண்ணா..!!" ஆட்டோ ட்ரைவரிடம் மிக இயல்பான குரலில் சொன்னாள் மீரா.

அதேநேரம்..

அசோக்கும் ஸ்ரீனிவாச பிரசாத்தும் ஜீப்பில் ஏறியிருந்தார்கள்.. ரிஸ்வான் ரோட்டில் மிதமான வேகத்தில் ஜீப் சென்றுகொண்டிருந்தது..!! அசோக்கும் சரி.. ஸ்ரீனிவாச பிரசாத்தும் சரி.. எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.. முகத்தை மிக இறுக்கமாகவே வைத்திருந்தனர்.. அவரவர் மூளைகளில் விழைந்த சிந்தனைகளிலேயே மிக கவனமாக இருந்தனர்..!!

திருமுருகன் நகர் ஜங்கஷனில் எதிர்கொண்ட ட்ராஃபிக்கை சமாளித்து.. ரெட்ஹில்ஸ் வந்து சேர அவர்களுக்கு அரைமணிநேரம் ஆனது..!! பி.ஏவிடம் வாங்கிக்கொண்ட முகவரியை அடைய மேலும் ஐந்து நிமிடங்கள் ஆனது..!!

இளஞ்சிவப்பு நிறத்தில் மிக பளபளப்பாக நின்றிருந்தது அந்த விருந்தினர் மாளிகை.. அருகில் வேறேதும் வீடுகள் இன்றி தனித்திருந்தது..!! பத்தடி உயரத்திற்கு காம்பவுண்ட் சுவர்.. பச்சை மரங்கள் அந்த காம்பவுண்ட் சுவரை ஒட்டி வளர்ந்து, நீளநீளமாய் வெளியே தலைநீட்டின..!! இரும்பு பட்டைகளாலும் மரத்தகடுகளாலும் ஆன அகலமான வாயிற்கதவு..!! பறவைகளின் சப்தத்தை தவிர.. சுற்றிலும் நிசப்தம்..!!

வாசலில் வாட்ச்மேன் இல்லை.. கேட்டை திறந்த ஸ்ரீனிவாச பிரசாத் உள்ளே நுழைந்தார்.. அசோக் அவரை பின்தொடர்ந்தான்..!! கேட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் இருந்த வீட்டுக்கு.. இங்கிருந்தே சிமென்ட்டில் சாலை போடப்பட்டிருந்தது.. ஒரே ஒரு கார் மட்டுமே செல்லும் அகலத்திலான குறுகலான சாலைதான்..!! அந்த சிமெண்ட் சாலையின் இருபுறமும்.. பச்சை பச்சையாய் கொத்து கொத்தாய் வளர்ந்திருந்த செடிகள்.. அழகாகவும் கச்சிதமாகவும் முடிவெட்டிக் கொண்டிருந்தன அந்த செடிகள்..!! அசோக் அந்த செடிகளில் விரல்கள் நுழைத்து தடவியவாறே.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் பின்னால் சென்றான்..!!

வீட்டை அடைந்ததும்.. ஸ்ரீனிவாச பிரசாத் காலிங் பெல் அழுத்தினார்..!! உள்ளே குருவி கத்துகிற எஃபக்டில் காலிங் பெல் கதறுவது வெளியிலேயே கேட்டது..!! இருந்தாலும் சிறிது நேரத்திற்கு உள்ளிருந்து எந்த எதிர்ச்செயலும் இல்லை..!! மேலும் இரண்டு மூன்று முறை காலிங் பெல் அழுத்தி ஸ்ரீனிவாச பிரசாத் சோர்ந்து போன சமயத்தில்தான்.. அசோக் எதேச்சையாக கதவின் மீது கை வைக்க.. அது கொஞ்சமாய் திறந்து கொண்டது..!! உடனே இருவரது முகத்திலும் ஒரு ஆச்சரியம்.. கொஞ்சம் குழப்பம்..!!

"தெறந்தேதான் இருக்கு ஸார்..!!"

சொல்லிக்கொண்டே அசோக் கதவின் மீது கைவைத்து நன்றாக உள்ளே தள்ள.. அது முழுவதுமாய் திறந்து கொண்டது..!! இயல்பாக உள்ளே நுழைந்து வீட்டுக்குள் பார்வையை வீசிய இருவரையும்.. ஒரு உச்சபட்ச அதிர்ச்சி வந்து தாக்கியது.. இருவரது இருதயங்களும் படக்கென சொடுக்கிவிடப்பட்டு, தறிகெட்டு துடித்தன..!!

உள்ளே.. கருஞ்சிவப்பான ரத்தவெள்ளத்தில்.. இரண்டு மனித உடல்கள் மிதந்து கொண்டு கிடந்தன.. இரண்டுமே ஆணின் உடல்கள்..!! ஒருவன் சோபாவில் சரிந்திருந்தான்.. ஒருவன் தரையில் வீழ்ந்திருந்தான்..!! தலை, மூக்கு, மார்பு, தொடை என.. உடலின் எல்லா பாகங்களில் இருந்தும் சராமாரியாக குருதி வெளிப்பட்டு வெளியே வடிந்திருந்தது..!! ரத்தத்தில் நனைந்த கண்ணபிரானின் உலோக சிலை வேறு.. அவர்களுடன் சேர்ந்து தரைவிரிப்பில் வீழ்ந்து கிடந்தது..!! இருவரும் நூறு சதவீதம் இறந்துவிட்டார்கள் என்பது.. பார்க்கையிலேயே தெரிந்தது..!!

ஸ்ரீனிவாச பிரசாத்தாவது பரவாயில்லை.. அசோக் அந்த மாதிரி ஒரு அதிர்ச்சியை தன் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை.. கண்களில் கண்ட காட்சியில் அப்படியே வெலவெலத்துப்போய் நின்றிருந்தான்..!! ஸ்ரீனிவாச பிரசாத்-தான் முதலில் சுதாரித்துக் கொண்டார்.. எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல், படக்கென அவருடைய வலதுகையில் அந்த பிஸ்டல் முளைத்தது.. அதன் மேற்புறத்தை பிடித்து இழுத்து, சேஃப்டி கேட்சை விடுவித்துக் கொண்டவர்.. தடதடவென வீட்டுக்குள் ஓடினார்..!! அசோக் என்ன செய்வதென்றே தெரியாமல்.. இறந்து கிடந்த பிணங்களை பார்த்தவாறு அசையாமல் நின்றிருந்தான்..!!

உள்ளே ஓடிய ஸ்ரீனிவாச பிரசாத்.. கையில் விறைப்பாக பிடிக்கப்பட்ட துப்பாக்கியுடன்.. ஒவ்வொரு அறையாக சென்று அலசினார்.. ஒருவரும் அகப்படவில்லை..!! பின்பு வீட்டுக்கு பின்புறமாக ஓடினார்.. பின்புற வாசல் திறந்தே கிடந்தது..!! வீட்டுக்கு பின்புறம் காம்பவுண்ட் சுவர் இல்லை.. பெரிய பரப்பிலான காலியிடம்.. குட்டையும், நெட்டையுமாய் ஆங்காங்கே செடிகள்..!! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை.. ஆள்நடமாட்டம் ஏதும் இல்லை..!!

ஸ்ரீனிவாச பிரசாத் சிறிது நேரம் அங்கேயே நின்று சுற்று முற்றும் பார்த்தார்.. உபயோகமாக எதுவுமில்லை என்று அறிந்தபிறகு, 'ச்சே' என்ற சலிப்புடன் மீண்டும் வீட்டுக்குள் புகுந்தார்..!! அவர் வீட்டுக்குள் புகுந்த சில வினாடிகளில்.. வீட்டு சுவற்றை ஒட்டியிருந்த புதருக்குள் இருந்து.. மீரா வெளிப்பட்டாள்..!!!! அவளுடைய முகம் வியர்த்து வடிந்தது.. செடிகளுக்கு மத்தியில் நீளமாக சென்ற அந்த ஒத்தையடிப்பாதையில் நுழைந்து.. புயல்வேகத்துடன் ஓடினாள்..!!

ஹாலுக்குள் நுழைந்த ஸ்ரீனிவாச பிரசாத்.. பிஸ்டலின் சேஃப்டி கேட்சை போட்டு.. இடுப்பில் செருகிக்கொண்டார்..!! பிரம்மை பிடித்தவன் மாதிரி நின்றிருந்த அசோக்கிடம்..

"உள்ள யாரும் இல்ல அசோக்..!! உசுரு இருக்குதான்னு பாத்தியா..??" என்று கேட்டார்.

அவனிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே.. அவரே ரத்தவெள்ளத்தில் மிதந்தவர்களிடம் பார்வையை திருப்பினார்.. அதில்.. சோபாவில் சரிந்திருந்தவனின் முகத்தை சற்றே உன்னிப்பாக கவனித்ததும்.. நெற்றியை சுருக்கினார்..!!

"இவன் நெற்குன்றம் காசில..?? இவன் எப்படி இங்க..??" என்று குழப்பமாக முணுமுணுத்தார்.

விழுந்து கிடந்தவர்களிடம் குனிந்து.. அவர்களது மூச்சையும், நாடித்துடிப்பையும் சோதனை செய்து பார்த்தார்..!! ஒருசிலவினாடிகள்.. பிறகு எழுந்துகொண்டவாறே.. அசோக்கிடம் சொன்னார்.!!

"உசுரு இருக்குற மாதிரி தெரியல அசோக்.. எதுக்கும் நான் ஆம்புலன்ஸ்க்கு கால் பண்றேன்..!! நீ அப்படியே அசையாம நில்லு.. இங்க இருக்குற எதையும் தொட்டுறாத.. சரியா..??"

பதட்டமான குரலிலேயே சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத்.. பாக்கெட்டில் இருந்து செல்ஃபோன் எடுத்தார்.. 'பட் பட்'டென அந்த செல்ஃபோனை அழுத்தியவர்.. பிறகு..

"ஆங்.. கனகு.." என்றவாறே வாசலை நோக்கி நடந்து வெளியே சென்றார்.

அசோக் வீட்டுக்குள்ளேயே அசையாமல் நின்றிருந்தான்.. இதயத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னுமே அவனால் மீளமுடியவில்லை.. உண்டான படபடப்பு அடங்க சிறிது நேரம் பிடித்தது அவனுக்கு..!! கொஞ்சம் கொஞ்சமாய் அவன் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போதுதான்.. அவனுடைய கவனத்தை அந்தப்பொருள் ஈர்த்தது..!! உடனே அவனுடைய முகத்தில் ஒரு சீரியஸ்னஸ்.. கண்களில் ஒரு கூர்மை..!! நின்ற இடத்தில் இருந்து மெல்ல அடியெடுத்து வைத்தான்.. தரையில் விழுந்து கிடந்தவனை அடைந்ததும்.. சற்றே குனிந்து.. கீழே கிடந்தவனின் காலுக்கடியில் கிடந்த அதை கையில் எடுத்தான்..!!

கோல்ட் கலரினால் ஆன.. ஹார்ட் ஷேப்பினால் ஆன.. பளபளப்பான அந்த குட்டி பென்டன்ட்..!! மீராவின் ப்ரேஸ்லட்டில் மினுமினுப்புடன் தொங்குமே.. அதே பென்டன்ட்..!!
அதைப் பார்த்ததுமே அசோக்கிற்கு சுரீர் என்றது.. அவனுடைய புத்தி சரமாரியாய் எதை எதையோ யோசிக்க ஆரம்பித்தது..!! 'அப்படியானால்.. அப்படியானால்.. மீராதான் இதையெல்லாம் செய்ததா..?? காதலித்து ஏமாற்றியவனை கத்தியெடுத்து பழி தீர்த்துக் கொண்டாளா..??' ஆமாம் என்றது அவனது மூளை.. நம்ப மறுத்தது அவனது மனம்..!!

கருப்பொருள் ஒன்றிருக்குதடா..
காவுக்காய் காத்திருக்குதடா..!!

மீரா எழுதிய கவிதையின் கடைசி வரிகள் அவனது காதுக்குள் க்றீச்சிட்டன..!! வியர்த்துப் போனது அவனுக்கு இப்போது.. உடம்பெல்லாம் வெடவெடக்க ஆரம்பித்தது.. இருதயம் இன்னும் வேகமாய் படபடக்க ஆரம்பித்தது..!!

அப்போதுதான் அவனது மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல் கீற்று..!! 'மீரா இங்கே வந்து சென்றிருக்கிறாள் என்றால்.. ஒருவேளை.. நான் இந்த விஜயசாரதிக்கு கால் செய்தபோது என்கேஜ்டாக இருந்ததே.. அந்த நேரத்தில் இவன் மீராவுடன் பேசிக்கொண்டிருந்திருப்பானோ..?? அப்படியானால்.. இவனது செல்ஃபோனில் மீராவின் தொடர்பு எண் பதிவாகியிருக்க வேண்டும் அல்லவா..??'

அந்த எண்ணம் மனதில் உதயமானதும் அசோக் மீண்டும் பரபரப்பானான்..!! 'எதையும் தொட்டுறாத' என்று எச்சரித்து விட்டு சென்றிருந்த ஸ்ரீனிவாச பிரசாத்தின் வார்த்தைகளை அலட்சியம் செய்தான்..!! செங்குருதியில் நனைந்துபோய் கிடந்த விஜயசாரதியிடம் குனிந்தான்.. அவனுடைய சட்டை, பேன்ட் பாக்கெட் எல்லாம் தடவி.. அவனது செல்ஃபோனுக்காக துழாவினான்.. கிடைக்கவில்லை..!! அருகில் இருந்த மேஜை, டீப்பாய், அலமாரி எல்லாம் அவசரமாக தேடினான்.. எங்கேயும் செல்ஃபோனை காணவில்லை..!!

உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தவன்.. தனது செல்ஃபோன் எடுத்து.. சேகரித்து வைத்திருந்த விஜயசாரதியின் எண்ணுக்கு கால் செய்தான்.. கால் செய்ததுமே.. ரிங்டோன் சத்தம் எங்கிருந்தாவது வருகிறதா என்று.. காதுகளை கூர்மையாக்கி கொண்டான்..!!

ரிங்டோன் சத்தம் வரவில்லை.. மறுமுனையில் இருந்து டயல்டோன் சத்தம்தான் காதில் ஒலித்தது..!! 'கால் செல்கிறது.. ரிங்டோன்சப்தம் வரவில்லையே..' என்று அசோக் குழப்பமாக விழித்துக் கொண்டிருக்கையிலேயே.. அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்பட்டது..!! அடுத்த நொடியே.. ஆதங்கமும், கோவமும் நிறைந்த மாதிரியாக மீராவின் குரலும்..!!

"பைத்தியக்காரன் மாதிரி பண்ணிட்டு இருக்காத அசோக்.. நீ நெனைக்கிறதுலாம் எப்போவும் நடக்காது.. புரிஞ்சுக்க..!!" சூடாக சொன்னாள் மீரா.

அசோக்கால் நம்பவே முடியவில்லை..!! 'நிஜம்தானா..?? மீராதானா இது..?? என் மீராதான் இப்போது என்னுடன் பேசுவதா..?? நிஜமாகவே அவளுடைய குரல்தான் இப்போது என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறதா..??' உள்ளத்தில் ஆச்சரியம் பீறிட.. உடனே ஒரு பதற்றமும் அவனை வந்து தொற்றிக்கொள்ள..

"மீ..மீரா.. மீரா.." என்றான் தவிப்பாக.

"ஏண்டா இப்படி பண்ற..?? போய்த் தொலையுறா சனியன்னு விட்டு தொலைக்க வேண்டியதுதான..?? எதுக்கு இன்னமும் என்னை தேடிட்டு இருக்குற..??" மீரா சீற, அசோக்கின் கண்களில் முணுக்கென்று கண்ணீர்.

"எ..என்ன மீரா பேசுற.. நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்.. நீ எனக்கு வேணும் மீரா..!! ப்ளீஸ் மீரா.. எங்கிட்ட வந்துடு...!!"

"இல்ல அசோக்.. என்னால அது முடியாது.. சொன்னா புரிஞ்சுக்கோ..!!"

"இன்னும் என்ன புரிஞ்சுக்கணும்.. எனக்கு உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சு போச்சு மீரா..!! இதுக்காகத்தான நீ ஓடி ஒளிஞ்ச.. இப்போ எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு..!! உன்னோட பழைய வாழ்க்கை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல மீரா.. நீ எனக்கு வேணும்.. அவ்வளவுதான்..!! நீ இப்போ எங்க இருக்குறன்னு சொல்லு.. நான் மட்டும் தனியா வர்றேன்.. நாம பேசி ஒரு முடிவுக்கு வரலாம்..!! நான் உன்மேல எந்த அளவுக்கு லவ் வச்சிருக்கேன்னு கொஞ்சமாவது புரிஞ்சுக்கோ மீரா.. ப்ளீஸ்..!!"

"ஐயோ.. உன் லவ்வை பத்தி நான் நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன்டா.. நீதான் என் மனசை புரிஞ்சுக்க மாட்டேன்ற..!! இந்த விஷயம் தெரிஞ்சா நீ என்னை ஏத்துக்க மாட்டேன்னு நெனச்சா.. நான் உன்னை விட்டு விலகுனேன்னு நெனைக்கிற..?? சொன்னா கேளுடா.. நான் உனக்கு வேணாம்.. இந்தப்பாவி உனக்கு வேணவே வேணாம்..!!" மீராவின் குரல் இப்போது அழுகையாக ஒலித்தது."இல்ல.. நீதான் எனக்கு வேணும்..!! நீ எனக்கு சொந்தமானவ மீரா.. நீ என் லைஃப்ல வந்ததுக்கு காரணம் இருக்கு.. என்கூட பழகுனதுக்கு காரணம் இருக்கு.. என்னை விட்டு பிரிஞ்சதுக்கு காரணம் இருக்கு..!! இப்போ என்கூட ஃபோன்ல பேசிட்டு இருக்குறதுக்கு கூட காரணம் இருக்கு மீரா..!!"

"எ..என்ன சொல்ற நீ..??"

"நம்ம காதல் உண்மையானது மீரா.. அது நம்மளை சேர்த்து வைக்க எடுத்துக்கிட்ட முயற்சிதான் இதெல்லாம்..!! அந்த காதல்தான் இப்போ உன்னையும் என்னையும் பேச வச்சிருக்கு..!! புரிஞ்சுக்கோ மீரா.. நீயும் நானும் சேரணும்.. அதுதான் விதி..!!"

அசோக் சொல்ல.. அடுத்த முனையில் மீரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்..!! அவளுடைய அமைதி அசோக்கை பதற்றம் கொள்ள செய்தது..!!

"மீ..மீரா.. என்னாச்சு மீரா.. ஏதாவது பேசு மீரா..!!"

"ஓ.. நம்ம காதல் நம்மள சேர்த்து வைக்குமா..??" மீராவின் குரலில் ஒருவித இறுக்கம்.

"ஆ..ஆமாம்..!!" அசோக்கின் குரலில் ஒருவித தடுமாற்றம்.

"சரி.. அதையும் பாக்கலாம்.. அது எப்படி நம்மள சேர்த்து வைக்குதுன்னு பார்க்கலாம்..!! நீ சொல்ற அந்தக்காதல்.. உன்னையும் என்னையும் இன்னொரு முறை நேருக்கு நேர் சந்திக்க வைக்கட்டும்.. அப்போ நான் அக்ஸப்ட் பண்ணிக்கிறேன்.. நீயும் நானும் ஒண்ணா சேர்றதுதான் விதின்னு..!! இப்போ கட் பண்றேன்.." படபடவென பேசிய மீரா ஒருகணம் நிறுத்தி..

"ஐ லவ் யூ..!!" என்று தழதழக்கிற குரலில் சொல்லிவிட்டு, பட்டென்று இணைப்பை துண்டித்தாள்.

"மீ..மீரா.. ப்ளீஸ் மீரா.. கட் பண்ணிடாத மீரா..!!"

என்று பதட்டத்துடன் கதறிக்கொண்டிருந்த அசோக்கிற்கு.. இணைப்பு துண்டிக்கப்பட்ட ஓசையே கேட்க கிடைத்தது..!! மீண்டும் அந்த எண்ணுக்கு அவன் கால் செய்ய.. ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது..!!

என்ன செய்வதென்று புரியாத அசோக்.. அப்படியே தலையை பிடித்துக்கொண்டான்.. தலை எல்லாம் வின்வின்னென்று வலிப்பது போல ஒரு உணர்வு..!! சோர்ந்து போய் தரையில் மண்டியிட்டு அமர்ந்தான்..!! அவனுடைய இதயமெல்லாம் தாங்க முடியாத மாதிரி ஒரு வலி..!! கண்களில் கண்ணீர் பூத்து..கன்னம் நனைந்து ஓட ஆரம்பித்தது..!!

"பேசிட்டேன் அசோக்.. வந்துட்டு இருக்காங்க..!!"

சொல்லிக்கொண்டே ஸ்ரீனிவாச பிரசாத் வீட்டுக்குள் நுழைய.. அசோக் அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தான்..!! கையிலிருந்த பென்டன்ட்டை.. அவர் அறியாமல் தனது பாக்கெட்டுக்குள் திணித்து மறைத்தான்..!! அவர் பக்கமாய் திரும்பி.. மிக இயல்பாக ஒரு பார்வை பார்த்தான்..!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக