http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : அன்புள்ள ராட்சசி - பகுதி - 4

பக்கங்கள்

சனி, 22 ஆகஸ்ட், 2020

அன்புள்ள ராட்சசி - பகுதி - 4

"கேளுங்க டாடி.. அந்த ப்ரொட்யூசர்க்கு இவன் சொன்ன கதை புடிக்கலையாம்.. அவரும் டைரெக்டா எனக்கு புடிக்கலைப்பான்னு சொல்லிருக்காரு.. இவனுக்கு செம கடுப்பு..!! அந்த கடுப்புல என்ன பண்ணிருக்கான் தெரியுமா.. அந்த ப்ரொட்யூசரோட பொண்ணை.." சங்கீதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அசோக் இடையில் புகுந்து,

"இங்க பாரு சங்கு.. மொதல்ல நான் சொல்றதை கொஞ்சம் கேளு..!!" என்றான்.

"என்ன..??"

"நீ கிஷோர் கட்டிக்கப் போற பொண்ணு.. அவன் சொல்றதைலாம் நீ மத்தவங்கட்ட சொல்ல மாட்டேன்ற ஒரு நம்பிக்கைல.. அவன் என்னைப் பத்தின சில விஷயங்களை உன்கிட்ட சொல்லிருக்கலாம்..!! அதெல்லாம் நீ இப்படி வெளில சொல்றது ரொம்ப தப்பு..!!"

"ஏன்.. இதுல என்ன தப்பு இருக்கு..??"

"புரியலையா உனக்கு..?? சரி.. புரியிற மாதிரியே சொல்றேன்..!! இப்போ.. கிஷோர் எனக்கும் ஃப்ரண்டுதான்.. அவன் சொல்றதைலாம் நான் மத்தவங்கட்ட சொல்ல மாட்டேன்ற ஒரு நம்பிக்கைல.. அவன் உன்னைப் பத்தின சில விஷயங்களை என்கிட்ட சொல்லிருக்கான்..!! அதெல்லாம் என்னைக்காவது நான் உன்கிட்ட வந்து சொல்லிருக்கனா.. ம்ம்..?? வாயை மூடிட்டு கம்முனு இருக்குறேன்ல..??" என்று அசோக் அழகாக சங்கீதாவின் மூளைக்குள் ஆணி செருகினான்.

"எ..என்னைப் பத்தியா..?? என்னைப் பத்தி என்ன சொன்னான்..?? - ஆணி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

"அதெல்லாம் எதுக்கு சங்கு..?? சொன்னா உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்..!!"

"ப..பரவால.. சொல்லு..!!"

"கண்டிப்பா தெரிஞ்சுக்கிட்டே ஆகணுமா..??"

"ஆமாம்..!! சொல்லு..!!"

"ப்ச்.. என்னத்த சொல்றது சங்கு..!! உன்னைப் பத்தி பேச ஆரம்பிச்சாலே.. அப்படியே பொலம்புறான்..!! 'உன் தங்கச்சிக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையாடா'ன்னு.. அப்படியே ரத்தக் கண்ணீர் வடிக்கிறான்..!!"

"ஏ..ஏன்..??" கேட்ட சங்கீதாவுக்கு அல்ரெடி முகம் சுருங்கிப் போயிருந்தது.

"பாடுறேன்ற பேர்ல.. தெனம்தெனம் அவனை நீ அணுஅணுவா சித்திரவதை பண்றியாம்.. 'தாங்க முடியலைடா சாமி'ன்றான்..!! நரி மாதிரி ஊளையிடுறியாம்.. அதை லவ்லி வாய்ஸ்னு வேற சொல்ல சொல்லி.. அவனை கம்பெல் பண்றியாம்..!! இதுல இப்போ புதுசா.. சினிமால ப்ளேபேக் பாடுறதுக்கு வேற அவனை சான்ஸ் தேட சொல்லி இம்சை பண்றியாம்..!! 'இவ வாய்ஸை கேட்டா.. அந்த ம்யூசிக் டைரெக்டர் என் மூஞ்சில காறித் துப்பமாட்டானா'ன்னு கதர்றான்..!!"

"இ..இல்ல.. நீ பொய் சொல்ற.. கிஷோர் அப்படிலாம் சொல்லிருக்க மாட்டான்..!!" சங்கீதா சொன்னவிதத்திலேயே கிஷோர் மீது அவளுக்கிருந்த நம்பிக்கையில்லாத்தன்மை தெரிந்தது.

"நான் ஏன் பொய் சொல்லப் போறேன் சங்கு..?? இந்த 'லவ்லி வாய்ஸ்.. சினிமா சான்ஸ்..' இதுலாம்.. அவன் சொல்லாம எனக்கு எப்படி தெரியும்.. நீயே சொல்லு..!! எனக்கு கிஷோரை பாத்தா ரொம்ப பாவமா இருக்கு சங்கு.. அதான் உன்கிட்ட இவ்வளவு தூரம் பேசிட்டு இருக்கேன்..!! எனக்கு ஏதாவது பிரச்னைன்னா.. கிஷோர்தான் என் கஷ்டத்தை காது குடுத்து கேட்பான்..!! நீ இப்படி பாடி பாடி.. அந்த காது ஜவ்வை கிழிச்சு வச்சுடாத சங்கு.. ப்ளீஸ்.. உன்னை கெஞ்சிக் கேட்டுக்குறேன்..!!"அசோக் கெஞ்சலான குரலில் சொல்லி முடித்தான். சங்கீதாவோ பேயிடம் அறை வாங்கியவள் மாதிரி, விழிகளை விரித்து வைத்தபடி அமர்ந்திருந்தாள். உள்ளுக்குள் எழுந்த துக்கத்தை அடக்க முனைபவள் பாதிரி, உதடுகளை அழுந்த கடித்துக் கொண்டாள். ஆனால் ஒருசில வினாடிகள் கூட அவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவளுடைய கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. 'டாடீஈஈ..!!' என்று குழந்தை மாதிரி கத்திக்கொண்டே, மணிபாரதியை கட்டிக்கொண்டாள். அவருடைய மார்பில் முகம் புதைத்து, அவளது முதுகு குலுங்க குலுங்க அழ ஆரம்பித்தாள். அவர் பதறிப்போனார்.

"ஐயையோ.. என்னம்மா நீ..?? இந்தப்பய சும்மா சொல்றான்மா.. மாப்ள அப்டிலாம் சொல்லிருக்க மாட்டாரு..!!" என்று மகளை சமாதானம் செய்ய முயன்றார்.

"ஏய்.. ஏண்டா அவளை அழ வைக்கிற..??" பாரதி இப்போது மகனை செல்லமாக கடிந்து கொள்ள,

"இல்ல மம்மி.. அவன் சொன்னதைத்தான் நான் சொன்னேன்..!!"

அசோக் நல்லபிள்ளை மாதிரி சொல்லிவிட்டு, தனது திட்டம் பலித்துவிட்ட திருப்தியில் அல்வாவை விண்டு வாயில் போட்டுக்கொள்ள ஆரம்பித்தான். அழுகிற மகளை தேற்ற மணிபாரதி படாத பாடு பட்டுக் கொண்டிருந்தார். பாரதி அவர்கள் இருவரையும் அமைதியும், அவஸ்தையுமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அழுது கொண்டிருந்த சங்கீதா திடீரென எழுந்தாள்.

"இருங்க டாடி.. நான் இப்போவே அவனுக்கு ஃபோன் பண்ணி கேக்குறேன்..!!"

"ஐயோ.. சொல்றதை கேளும்மா..!! இவன் சொன்னதை நம்பி.. இந்த நேரத்துல மாப்ள கூட சண்டை போடப் போறியா..??"

"சண்டை போடல டாடி.. அப்டி சொன்னியா இல்லையான்னு மட்டும் கேக்குறேன்..!!"

"அதெல்லாம் வேணாம்மா.. எதா இருந்தாலும் நிதானமா காலைல பேசிக்கோ..!!"

"ப்ளீஸ் டாடி.. எனக்கு இப்போவே தெரிஞ்சாகனும்..!!" சங்கீதாவின் பிடிவாதத்தில், இப்போது மணிபாரதி டென்ஷன் ஆகிப் போனார்.

"அப்பப்பப்பா...!! சொன்னா கேட்க மாட்டியா நீ..?? அதான் காலைல பேசிக்கலாம்னு சொல்றேன்ல..??"

அப்பா அந்த மாதிரி குரலை உயர்த்தி கத்தவும், சங்கீதா இப்போது பட்டென அமைதியாகிப் போனாள். ஆனால் மணிபாரதிக்குத்தான் ஏறிய டென்ஷன் இறங்க சிறிது நேரம் பிடித்தது. அந்த டென்ஷனுடனே மனைவியிடம் திரும்பி சொன்னார்.

"இதுக ரெண்டையும் ஒண்ணா வீட்டுக்குள்ள வச்சுக்கிட்டு எந்த நேரமும் ஒரே டென்ஷனா இருக்குடி..!! எப்ப பாரு.. ஏதாவது சண்டை.. பிரச்சனை..!! யாராவது ஒருத்தருக்கு மொதல்ல கல்யாணத்தை முடிச்சாத்தான்.. நாம நிம்மதியா இருக்க முடியும் போல இருக்கு..!! பேசாம.. சங்கீதா கல்யாணத்தை உடனே முடிச்சுட்டா என்ன..??"

"என்னங்க.. வெளையாடுறீங்களா..?? எத்தனை தடவை சொல்றது.. அசோக்குக்கு முடிச்சுட்டுத்தான் அவளுக்கு முடிக்கணும்னு..!!" பாரதியின் குரலிலும் ஒருவித தீவிரம் தெரிந்தது.

"ப்ச்..!! அப்புறம் அவனுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிக்கலாமான்னா.. அதுக்கும் வேணான்னு சொல்ற..??"

"இங்க பாருங்க..!! நம்ம வீட்டுல எல்லாருக்கும் லவ் மேரேஜ்தான்.. அதேமாதிரி அசோக்குக்கும் லவ் மேரேஜ்தான்னு நான் எப்போவோ முடிவு பண்ணிட்டேன்.. நாம ஒன்னும் அவனுக்கு பொண்ணு பாக்க தேவை இல்ல.. எல்லாம் அவனே பாத்துப்பான்..!!"

"ம்க்கும்.. எனக்கு என்னவோ நம்பிக்கை இல்ல..!!"

"ஏன் அப்படி சொல்றீங்க..??"

"இவன் ஃபேஸ்புக் அக்கவுன்ட் பாத்திருக்கியா நீ..??"

"இ..இல்ல.. ஏன்..??"

"இருநூத்தி சொச்சம் ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க இவனுக்கு... அத்தனை பேரும் ஆம்பளை தடிப்பசங்க..!! இவன் செல்போனை எடுத்துப்பாரு.. அதுல மருந்துக்குகூட ஒரு பொண்ணு காண்டாக்ட் நம்பர் இருக்காது..!! நாம லவ் மேரேஜ்னு முடிவு பண்ணி என்ன பிரயோஜனம் பாரதி.. இவன் கொஞ்சமாவது முயற்சி எடுத்துக்க வேணாமா..?? இவன்தான் லவ்னாலே இன்ட்ரஸ்ட் இல்லாம இருக்கானே..??"

"நீங்க ஏன் அப்படி நெனைக்கிறீங்க..?? அவன் மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணை இதுவரை அவன் பாக்கலைன்னு நெனச்சுக்காங்க..!! இப்போ என்ன வயசாச்சு அவனுக்கு.. இருபத்தஞ்சு வயசுதான ஆகுது..?? இன்னைக்கோ நாளைக்கோ.. அவனுக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணை பாக்கப் போறான்.. அவ கூட பேசிப்பழக போறான்.. லவ் பண்ண போறான்.. பதிலுக்கு அந்தப்பொண்ணையும் இவனை லவ் பண்ண வைக்கப் போறான்..!!" பாரதி நம்பிக்கையாய் சொல்லிக்கொண்டிருக்க,

"கிழிச்சான்...!!!!" அண்ணன் மீது ஆத்திரத்தில் இருந்த சங்கீதா இடையில் புகுந்து கத்தினாள்.

"இவனலாம் எவ லவ் பண்ணுவா..?? இவன் மூஞ்சியும் மொகறைக்கட்டையும்..!! இவனை எவளாவது லவ் பண்ணுவான்னு வெயிட் பண்ணிட்டு இருந்தா.. நான் கெழவி ஆகுற வரை கல்யாணம் பண்ணிக்காம வெயிட் பண்ண வேண்டியதுதான்..!! இவனுக்குலாம் அரேஞ்ட் மேரேஜ்தான் சரி.. அதுவும், அப்பா அம்மாவுக்கு பயந்துக்கிட்டு மாடு மாதிரி மண்டையை மண்டையை ஆட்டுற எவளாவது மாட்டுனாத்தான் உண்டு..!!"


சங்கீதா ஆத்திரத்தில் அறிவில்லாமல் படபடவென பொரிந்து தள்ள, பெற்றோர்கள் இருவரும் ஸ்தம்பித்துப் போய் அவளை பார்த்தார்கள். தங்கையின் வார்த்தைகள் அசோக்கின் மனதை குத்திக் கிழிக்க.. அமைதியாக.. எதுவும் பதில் பேச தோன்றாதவனாய்.. ஒருவித வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தான்..!! அல்வாவை ஸ்பூனால் விண்டு எடுத்தவன், பிறகு அதை உதட்டுக்கு எடுத்துச் செல்ல வலுவில்லாது போன மாதிரி மீண்டும் தட்டிலேயே போட்டான். மகனின் மனக்காயத்தை பட்டென புரிந்து கொண்ட பாரதி, அவனுடைய முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எனக்கு போதும் மம்மி..!! தூக்கம் வருது.. நான் போய் படுக்குறேன்..!!"

அசோக் அமைதியாக சொல்லிவிட்டு, எழுந்து உள்ளே சென்றான். சங்கீதாவுக்கு உண்மையிலேயே அவள் செய்த தவறு புரியவில்லை. அசோக் தனது குரலை கேலி செய்வதும், தான் அவனது விளம்பரத்தை கேலி செய்வதும் மாதிரியேதான் இதையும் நினைத்தாள். தான் வீசிய வார்த்தைகள் எந்த அளவிற்கு அண்ணனின் மனதை புண்படுத்தியிருக்கும் என்று புரிந்து கொண்டாள் இல்லை. அதனால்தான் அவன் அவ்வாறு எழுந்து சென்றபோது,

"என்ன ஆச்சு இவனுக்கு திடீர்னு..??" என்று அம்மாவிடம் குழப்பமாக கேட்டாள். பாரதியோ பதிலுக்கு சீறினாள்.

"பேசுறதெல்லாம் பேசிட்டு என்னாச்சுன்னா கேக்குற..?? இன்னைக்கு அவன் பொறந்த நாளுடி.. இன்னைக்குப் போய் இப்படிலாம் பேசி.. அவனை..!! வாய்.. வாய்.. அப்படி வாய் உனக்கு..!! அந்த கொழுப்பெடுத்த வாயை அப்படியே கோணூசி வச்சு தைக்கணும்..!!"

படபடவென சொல்லிவிட்டு, அல்வா தட்டை எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு நகருகிற அம்மாவையே, சங்கீதா எரிச்சலாக பார்த்தாள். பிறகு அப்பாவிடம் திரும்பி முறையிட்டாள்.

"பாருங்க டாடி மம்மியை..!! அவன் ஏதோ லூசுத்தனமா பண்ணதுக்கு.. என்னைப் புடிச்சு திட்..!!' சங்கீதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"இல்லம்மா சங்கீதா.. நீ பேசுனது ரொம்ப தப்பு..!! அண்ணன்ட்ட அப்படிலாம் இனிமே பேசாத..!!"

மணிபாரதி அமைதியாக சொல்லிவிட்டு எழுந்து சென்றார். அப்பாவும் அந்த மாதிரி சொன்னதும்தான், 'நிஜமாகவே நான் செய்தது தவறுதானோ..?' என்ற சந்தேகமே சங்கீதாவுக்குள் எழுந்தது..!!

தனது அறைக்குள் நுழைந்த அசோக், விளக்கை கூட அணைக்காமல், வேறு உடை அணிந்து கொள்ளவும் தோன்றாமல், அப்படியே படுக்கையில் விழுந்தான். கண்களை இறுக்கி மூடிக்கொண்டான். சங்கீதா சிந்திய வார்த்தைகள் இன்னும் அவன் இதயத்தில் ஊசி போல பாய்ந்து, சுருக் சுருக்கென குத்திக் கொண்டிருந்தன. மூச்சை சீராக உள்ளிழுத்தும் வெளியிட்டும்.. துடிக்கிற நெஞ்சை அமைதிப்படுத்த முயன்றுகொண்டிருந்தான்..!!

"பொண்ணுககிட்ட எப்படி பேசனும்னே தெரியாதா உனக்கு..??"

அசோக் ப்ளஸ் டூ படிக்கையில், அவனுடன் படித்த இரட்டை ஜடை போட்டிருக்கும் ஒரு பெண், இவனை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தபடி வீசிவிட்டு சென்ற வார்த்தைகள், ஏனோ இப்போது அவன் காதுக்குள் ஒலித்தன. அந்தப் பெண்ணின் பெயர் கூட இப்போது அசோக்கிற்கு நினைவில்லை. ஆனால் அவள் உதிர்த்து சென்ற வார்த்தைகள் இன்னும் அவன் உள்ளத்துக்குள் உயிரோடிருக்கின்றன.

சில நிமிடங்கள் அவ்வாறு அமைதியாக சலனமில்லாமல் கிடந்திருப்பான். பிறகு அவனது தலைமுடியை யாரோ வருடுவது போலிருக்க, இமைகளை திறந்து பார்த்தான். அவனுக்கு அருகே பாரதி அமர்ந்திருந்தாள். காயப்பட்டு கிடக்கிற மகனையே பரிவுடன் பார்த்தபடி இருந்தாள்.


"எ..என்ன மம்மி..??"

"அவ ஏதோ வெளையாட்டுத்தனமா பேசிட்டா அசோக்.. அதெல்லாம் மனசுல வச்சுக்காத..!!"

"இ..இல்ல மம்மி.. அப்படிலாம் ஒன்னும் இல்ல.. எனக்கு எதும் வருத்தம்லாம் இல்ல..!!" அசோக் புன்னகையுடன் பொய் சொன்னான்.

"ம்ம்.. உனக்கு எதும் வருத்தம் இல்லன்னா சரிதான்..!!"

"அவ சொல்றதும் சரிதான் மம்மி.. எனக்குலாம் அரேஞ்ட் மேரேஜ்தான் சரி.. என்னல்லாம் எவ லவ் பண்ணுவா..??" அசோக் அந்தமாதிரி சுய இரக்கத்துடன் சொல்ல, பாரதிக்கு பொசுக்கென்று கோவம் வந்தது.

"இப்படிலாம் அறிவில்லாம பேசினா.. அறைஞ்சு பல்லை உடைச்சிடுவேன் அசோக்..!! பேசுற பேச்சைப் பாரு..!! உனக்கு என்னடா கொறைச்சலு..?? உனக்கு லவ் பண்ண தகுதி இல்லன்னா.. உலகத்துல யாருக்குமே அந்த தகுதி இல்லன்னு அர்த்தம்..!!"

அம்மா அந்தமாதிரி கோவப்பட்டது அசோக்கிற்கு மிகவும் இதமாக இருந்தது. அந்த கோவத்திற்குள் புதைந்திருந்த அவளது அதீத அன்பை அவன் உணர்ந்துகொண்டதுதான் அதன் காரணம். மெல்ல உதடுகள் பிரித்து கொஞ்சமாய் சிரித்தான். பிறகு சற்றே புரண்டு, அம்மாவின் இடுப்பை சுற்றி இரண்டு கைகளையும் போட்டு அவளை அணைத்துக்கொண்டு, அவள் மடிமீது தலைசாய்த்து படுத்துக் கொண்டான். பாரதி மென்மையாக அவன் தலைமுடியை கோதிவிட, அசோக் மெலிதான குரலில் சொன்னான்.

"எனக்கு இந்த லவ்லாம் வேணாம் மம்மி..!! நீயே ஏதாவது ஒரு பொண்ணு பாரு.. உனக்கு புடிச்சிருந்தா போதும்.. நான் கட்டிக்கிறேன்..!!"

"ப்ச்.. ஏன்டா இப்படிலாம் பேசுற..?? நீ லவ் மேரேஜ்தான் பண்ணிக்கனும்னு, நான் ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்குறேன்னு கூடவா உனக்கு புரியலை..?? காதல்ன்றது ஒரு அற்புதமான உணர்வு அசோக்.. அது ஒரு அழகான அனுபவம்..!! நம்ம குடும்பத்துல எல்லாரும் அதை அனுபவிச்சிருக்கோம்.. என் பையனுக்கும் அந்த அனுபவம் கெடைக்கணும்னு அம்மா ஆசைப்படுறேண்டா..!! அது தப்பா..??"

"ஹ்ம்ம்.. உன் ஆசைல ஒன்னும் தப்பு இல்ல..!! இப்போ என்ன.. உனக்கு உன் பையன் லவ் பண்ணனும்.. அவ்வளவுதான..?? சரி.. மேரேஜ் பண்ணிக்கிட்டு என் பொண்டாட்டியை லவ் பண்ணிக்கிறேன்.. போதுமா..??"

"ஹையோ.. மேரேஜ்க்கு அப்புறம் வர்ற லவ் வேற.. நான் சொல்ற லவ் வேற..!! மேரேஜ்க்கு அப்புறம் வர்றது, வேற வழி இல்லாம வர்றது.. கட்டி வச்சுட்டாங்களேன்னு கட்டாயத்தினால வர்றது.. அது எல்லாருக்குமே கெடைக்கும்..!! ஆனா நான் சொல்ற லவ் அப்படி இல்ல.. புரியுதா உனக்கு..??"

"ம்ம்.. புரியுது..!! ஆனா.. சும்மா சும்மா 'லவ் பண்ணு லவ் பண்ணு'ன்னு சொன்னா.. நான் யாரைப் போய் லவ் பண்றது..?? எனக்கு மனசுக்கு பிடிச்ச மாதிரி யாராவது கெடைக்க வேணாமா..??"

"நீ யார்ட்டயாவது பேசினாத்தான மனசுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு தெரியும்..?? நீதான் எந்த பொண்ணுட்டயும் பேசகூட மாட்டேன்றியே..??"

"எனக்கு எவ கூடவும் பேசணும்னு தோணல மம்மி.. அது என் தப்பா..??"

"பொய் சொல்லாத..!! அப்படிலாம் இருக்க வாய்ப்பே இல்ல.. ஸ்கூல்ல, காலேஜ்ல, இப்போ வொர்க் பண்ற இடத்துலனு.. இதுவரை ஒரு பொண்ணு கூடவா உன்னை அட்ராக்ட் பண்ணல..?? உண்மையை சொல்லு..!! எவளாவது ஒருத்தியாவது இருப்பா..!! 'அழகா இருக்காளே..'ன்னு தோணிருக்கலாம்.. 'நல்ல பொண்ணு மாதிரி தெரியுதே..'ன்னு நெனச்சிருக்கலாம்.. 'இவ கூட பேசிப் பழகினா எப்படி இருக்கும்'னு ஆசை வந்திருக்கலாம்..!! சொல்லு.. இதுவரை அப்படி எந்த பொண்ணையுமே நீ மீட் பண்ணது இல்லையா..??"

பாரதி அந்தமாதிரி கேட்கவும், பளிச்சென்று அசோக்கின் மனதுக்குள் தோன்றியது, சற்று முன் ஃபுட் கோர்டில் பார்த்த அந்தப்பெண் தான்..!! அம்மா சொன்ன மூன்று விஷயங்களுமே, அந்தப்பெண்ணைப் பார்த்தபோது தனக்குள் தோன்றியதை எண்ணி, அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது..!! உடனே அவன் உள்ளத்துக்குள் ஒரு புதுவித மாற்றம்..!! சங்கீதாவின் பேச்சால் மனதில் ஏற்பட்டிருந்த ரணம் உடனடியாய் ஆறிப்போய், இப்போது ஜிலுஜிலுவென ஏதோ தென்றல் வீசுவது மாதிரி சிலிர்ப்பாக இருந்தது..!!அவனையும் அறியாமல் அவன் உதடுகளில் ஒரு புன்னகை குடியேறியது..!! முகத்தை நிமிர்த்தி.. அம்மாவை ஏறிட்டு.. குரலில் ஒருவித குறுகுறுப்புடனே கேட்டான்..!!

"ஒருவேளை.. அப்படி யாராவது என்னை அட்ராக்ட் பண்ணினா.. நான் என்ன செய்யட்டும் மம்மி..??"

"ஹாஹா.. இது என்ன கேள்வி..?? போய் அந்த பொண்ணுட்ட பேசு..!!"

"ஆனா.. எனக்குத்தான் பொண்ணுங்கட்ட எப்படி பேசனும்னே தெரியாதே..??"

"எப்படி பேசணும்னா..?? எனக்கு புரியல..!!"

"எப்படின்னா.. ம்ம்ம்ம்... பொண்ணுங்களுக்கு எப்படி பேசினா புடிக்கும், எப்படி பேசினா புடிக்காது.. எதுக்கு சிரிப்பாங்க, எதுக்கு கோவப்படுவாங்க, எதுக்கு வெட்கப்படுவாங்க... எப்படி பேசினா 'ச்சோ.. ச்வீட்..'னு கொஞ்சுவாங்க.. இதுலாம் எதுவுமே எனக்கு தெரியாதே..?? அப்புறம் எப்படி அந்தப் பொண்ணுக்கு என் மேல லவ் வர வைக்கிறது..??"

"ஹாஹாஹாஹா..!! பொண்ணுங்களுக்கு லவ் வர வைக்கிறதுக்கு.. நீ சொல்ற மாதிரிலாம் இனிக்க இனிக்க பேசணும்னு அவசியமே இல்லடா கண்ணா..!!"

"அப்புறம்..??"

"நீ ரொம்ப அன்பானவன்னு அவளுக்கு புரிய வை.. உன்னை கட்டிக்கிட்டா நீ அவளை பத்திரமா பாத்துப்பேன்ற நம்பிக்கையை அவளுக்கு கொடு..!! இந்த ரெண்டு விஷயம் மட்டும் போதும்..!! எந்த மகாராணி மங்கம்மாவா இருந்தாலும்.. மயங்கித்தான் ஆகணும்..!!"

"நெஜமாவா..?? இது ரெண்டும் போதுமா..??" அசோக் இன்னும் நம்பிக்கை இல்லாமல் கேட்க,

"போதுண்டா..!! மம்மி சொல்றேன்ல.. நம்பு..!!" பாரதி உறுதியாக சொன்னாள்.

"இவ்வளவுதானா மம்மி..?? லவ்ன்றது இவ்வளவு சிம்பிளா..?? நான் ரொம்ப காம்ப்ளிகேட்டட்னு நெனச்சேன்..!!"

"ஹாஹா.. காம்ப்ளிகேட்டடான ப்ராப்ளத்துக்கு.. சொல்யூஷன் எப்போவுமே ரொம்ப சிம்பிள்தாண்டா மகனே..!!" சொல்லிவிட்டு பாரதி புன்னகைக்க,

"ம்ம்ம்...!!" அசோக்கும் அம்மாவை பார்த்து புன்னகைத்தான்.

"அதுசரி..!! இவ்வளவு விஷயம் கேக்குறியே.. அந்தமாதிரி ஏதாவது பொண்ணை பாத்துட்டு இருக்கியா..??" பாரதி குறும்பாக கேட்கவும், அசோக் தடுமாறிப் போனான்.

"ஐயோ.. அதுலாம் யாரும் இல்ல மம்மி..!!" என்று வெட்கத்துடன் சொன்னவாறு, அவளுடைய மடியில் முகத்தை புதைத்துக் கொண்டான்.

அம்மாவின் வருகைக்கு பிறகு, நம்பிக்கையூட்டும் விதமாய் அவள் பேசியபிறகு, அசோக்கின் மனது இப்போது லேசாகிப் போயிருந்தது. ஃபுட் கோர்டில் பார்த்த அந்தப்பெண், திரும்ப திரும்ப அவன் மனதுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தாள். ஒரு இதமான உணர்வு உடலெங்கும் பரவ, அந்த உணர்வு எப்போதும் நீடித்திருக்க வேண்டும் என்று அவன் மனம் விரும்பியது. மீண்டும் தலையை நிமிர்த்தி அம்மாவை ஏறிட்டான்.

"மம்மி..!!'

"ம்ம்..??"

"கொஞ்ச நேரம் இங்க இருக்குறியா..?? நான் தூங்குனப்புறம் போறியா..??" ஏக்கமாக கேட்ட மகனையே, பாரதி கனிவுடன் பார்த்தாள்.

"இருக்குறேண்டா கண்ணா.. படுத்துக்கோ.. தூங்கு..!!"

அசோக் அம்மாவின் மடிமீது தலைவைத்து படுத்துக் கொண்டான். அசோக்குக்கு அவனுடைய குடும்ப சூழலில் இருந்தும்.. நட்பு வட்டாரத்தில் இருந்தும்.. தனது தொழிலான விளம்பர உலகத்தில் இருந்தும்.. தனது லட்சியமான திரைப்பட உலகத்தில் இருந்தும்.. காதல் என்ற வார்த்தை எப்போதுமே ஒருவித நெருக்கடியையே அவனுக்கு தரும்..!! ஆனால் இப்போது பாரதி அவனது தலையை இதமாய் வருடிக்கொடுக்க.. அந்த நெருக்கடி எல்லாம் மறந்துபோய்.. கவலையெல்லாம் தீர்ந்து போனது போன்ற உணர்வுடன்.. மனதெல்லாம் நிம்மதி நிறைய ஆரம்பிக்க.. கொஞ்சம் கொஞ்சமாய் நித்திரையில் மூழ்கிப் போனான்..!!

அடுத்த நாள் காலை அசோக் கண்விழித்தபோது, அவனது தலைக்கடியில் இரண்டும், பக்கவாட்டில் இரண்டுமாய் நான்கு தலையணைகள் வைக்கப்பட்டிருந்தன. இரவு ஒரு மூலையில் கிடந்த அந்த போர்வை, இப்போது அவன் உடலை முழுவதுமாய் போர்த்தி, காலைக்குளிருக்கு இதமாக கதகதப்பை வழங்கிக் கொண்டிருந்தது. இரவில் பளிச்சென்று எரிந்த குழல்விளக்கு இப்போது அணைந்துபோயிருக்க, கண்ணை உறுத்தாத வெளிச்சத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தது இரவு விளக்கு ஒன்று..!!

கண்விழித்ததுமே மனதுக்குள் ஒரு புத்துணர்வும் புதிதாய் விழித்துக் கொண்டதை அசோக்கால் உணர முடிந்தது. தலையை திருப்பி மணி பார்த்தான். ஏழரை என்று காட்டியது கடிகாரம்..!! அவனுக்கும் அன்றிலிருந்து ஏழரை ஸ்டார்ட் ஆகப்போகிறது என்பதை அறியாதவனாய், படுஉற்சாகமாகவே படுக்கையை விட்டு எழுந்தான். பாத்ரூமுக்குள் புகுந்தவன் கால் மணி நேரம் கழித்து, கமகமவென வாசனையாக வெளிப்பட்டான். வேறு உடைகளை பரபரவென அணிந்துகொண்டு அவனுடைய அறையை விட்டு வெளியேறினான். கிச்சனுக்குள் நுழைந்தான். பொங்கிய பாலின் கொதிப்பை அடக்குவதற்காக, குனிந்து ஸ்டவ் ரெகுலேட்டர் திருகிக் கொண்டிருந்த பாரதி, மகன் உள்ளே நுழைந்ததும் அவனை ஏறிட்டு புன்னகைத்தாள்.

"என்னடா.. பொழுது விடிஞ்சிருச்சா..??"

"ம்ம்.. அரை மணி நேரத்துக்கு முன்னாடியே..!!"

"நல்லா தூக்கமா..??"

"செம தூக்கம்..!! தலை வச்சு படுத்தது என் மம்மி மடியாச்சே.. எந்த கவலையும் இல்லாம நிம்மதியா தூங்கினேன்..!!"


அசோக் அன்பு வழிகிற புன்னகையுடன் சொல்ல, பாரதி பதிலேதும் சொல்லாமல் தன் மகனையே அமைதியாக பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒருவித பெருமிதம் மிகுந்திருந்தது. பிறகு ஸ்டவ் மீதிருந்த பாத்திரத்தை கைப்பிடி பற்றி தூக்கி, தயாராக எடுத்து வைத்திருந்த கப் ஒன்றில் பாலை ஊற்றினாள். அசோக் இப்போது சற்றே நகர்ந்து சென்று, தன் அம்மாவை பின்புறமாக இருந்து மென்மையாக அணைத்துக் கொண்டான். அவளுடைய தோள்ப்பட்டையில் தன் தாடையை வைத்து அவன் தேய்க்க,

"ஹ்ம்ம்.. என்ன.. இன்னைக்கு அம்மா மேல ஒருத்தனுக்கு பாசம் பொங்கி வழியுது..??" பாரதி திரும்பி பாராமல் கப்புக்குள் ஸ்பூன் விட்டு கலக்கிக்கொண்டே கேட்டாள்.

"தேங்க்ஸ் மம்மி..!!" அசோக் சம்பந்தமே இல்லாமல் சொன்னான்.

"தேங்க்ஸா.. எதுக்கு..??"

"இல்ல.. எனக்கு கொஞ்ச நாளாவே மனசுல ஒரு கொழப்பம்.. எந்த நேரமும் போட்டு இம்சை பண்ணிட்டே இருந்தது..!! நேத்து உன்கிட்ட பேசினப்புறம் அந்த கொழப்பம்லாம் போய்.. மைன்ட் இப்போ ஃப்ரெஷ் ஆயிடுச்சு..!!"

"ம்ம்.. அப்படி என்ன கொழப்பம் உனக்கு..??"

"எப்படி சொல்றது.. ஹ்ம்ம்.... பொண்ணுகளை பத்தி.. அவங்கட்ட பேசுறதை பத்தி..
லவ்வை பத்தி.. அதுக்கான குவாலிஃபிகேஷன் பத்தி..!!"

அசோக் சொல்ல, பாரதி இப்போது திரும்பினாள். அசோக்கை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள். மகனுடைய கண்களையே சில வினாடிகள் உன்னிப்பாய் கவனித்து, ஏதோ உண்மையை அறிய முயன்றாள். அப்புறம் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், இதழில் ஒரு புன்சிரிப்புடன் கேட்டாள்.

"ஹ்ம்ம்.. எப்படியோ.. மனசு இப்போ தெளிவாயிடுச்சில..??"

"ம்ம்.. ஆயிடுச்சு..!!"

"அப்போ.. இன்னும் கொஞ்ச நாள்ல.. 'இவதான் மம்மி உன் மருமக..'ன்னு எவளையாவது
இழுத்துட்டு வந்து என் முன்னாடி நிறுத்துவேன்னு எதிர்பார்க்கலாமா.??" பாரதி குறும்பாக கேட்க,

"ஹாஹா..!! அந்த அளவுக்குலாம் இப்போ என்னால அஷ்யூரன்ஸ் குடுக்க முடியாது
மம்மி.. வேணுன்னா ஒன்னு மட்டும் சொல்லலாம்..!!" அசோக் சிரிப்புடன் சொன்னான்.

"என்ன..??"

"இப்போதைக்கு உன் புள்ள செம லவ் மூடுல இருக்கான்.. எவளாவது சிக்குனான்னு
வச்சுக்கோ.. பட்டுன்னு 'ஐ லவ் யூ..' சொல்லிருவான்..!! ஹ்ம்ம்.. எவளுக்கு லக் அடிக்கப் போவுதோ..??" அசோக் காலரை தூக்கிவிட்டவாறு எகத்தாளமாக சொல்ல, பாரதியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"ஹாஹாஹாஹா..!! பின்ன என்ன.. என் புள்ளை புருஷனா கெடைக்கிறதுக்கு.. பூர்வ
ஜென்மத்துல நெறைய புண்ணியம்ல பண்ணிருக்கனும் அவ..!!"

"ஹ்ம்ம்.. எங்க இருக்காளோ, என்ன பண்ணிட்டு இருக்காளோ.. அந்த புண்ணியவதி..!!"
அசோக் ஒரு பெருமூச்சுடன் சொன்னான்.

"அட.. ஏண்டா சலிச்சுக்குற..?? உனக்கு வரப்போறவ என்ன இனிமேலா பொறக்கப்போறா..??
அல்ரெடி எங்கயோ பொறந்திருப்பா.. அடிக்கடி உன் கண்ணு முன்னாடி கூட வந்து
போயிருப்பா.. உனக்குத்தான் அடையாளம் கண்டுபிடிக்க தெரியல..!! இனிமேயாவது உன்
கண்ணை நல்லா தெறந்து.. கொஞ்சம் சுத்திமுத்தி பாரு..!!"

அசோக்கின் கன்னத்தை பிடித்து செல்லமாய் திருகியவாறே சொன்ன பாரதி.. பிறகு
அந்தப்பக்கமாய் திரும்பி.. சற்றுமுன் பால் ஊற்றி கலக்கிய அந்த கப்பை எடுத்து.. இப்போது அசோக்கிடம் நீட்டினாள்..!!

"இந்தா.."

"என்ன.. கண்ணை தெறந்து பாருன்னுட்டு காபியை நீட்டுற..??"

"இது காபி இல்லடா.. பூஸ்ட்..!!"

"எதோ ஒன்னு.. எனக்கு வேணாம்..!!"

"இது உனக்கு இல்ல.. உன் தங்கச்சிக்கு...!! கொண்டு போய் கொடு போ..!!" பாரதி
சொல்ல, அசோக் இப்போது சற்றே நெற்றியை சுருக்கினான்.

"அவளுக்கா..?? அதுக்குள்ளயா எந்திரிச்சுட்டா அவ..??"

"ஆறு மணிக்கே அலாரம் வச்சு எந்திரிச்சுட்டா..!!"

அசோக்கிற்கு இப்போது நிஜமாகவே ஆச்சரியமாக இருந்தது. பள்ளியில் படிக்கிற காலத்திலேயே.. எக்ஸாம் டயத்தில் கூட.. எட்டு மணிவரைக்கும் இழுத்துப் போர்த்திக்கொண்டு.. சொங்கி மாதிரி தூங்குவாள் சங்கி..!! இன்று ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்திருக்கிறாள் என்றால்.. 'சங்கீதாவின் வாழ்க்கையிலேயே முதன் முறையாக..' என்று சன் டிவியில் விளம்பரம் போட்டால் கூட வியப்பதற்கு ஒன்றுமில்லை என்று தோன்றியது..!!

"எ..என்ன மம்மி சொல்ற..?? ஆறு மணிக்கே அலாரம் வச்சு எந்திரிச்சாளா..?? அப்படி என்ன வேலை பாக்குறா எந்திரிச்சு..??"

"ம்ம்...??? எல்லாம் நீ குடுத்த வேலைதான்..!! போ.. நீயே போய் அவ அட்டூழியத்தை பாரு..!!"

அசோக் குழப்பம் இன்னும் விலகாமலே, அம்மாவிடம் இருந்து காபி கப்பை வாங்கிக்கொண்டான். தங்கையின் அறை நோக்கி மெல்ல நடந்தான். பாரதி அசோக்கிடம் அந்த வேலையை ஏவியதற்கு மறைமுகமாக ஒரு காரணம் கூட உண்டு. பிள்ளைகள் இருவரும் நேற்று உரசி மனக்காயப்பட்டுக் கொண்டார்கள் அல்லவா..?? இன்று அவர்கள் இருவரையும் அருகில் இழுத்து வைத்து, அவர்களை கைகுலுக்கிக்கொள்ள வைப்பது மாதிரியான முயற்சி அது..!!

'அப்படி என்ன வேலை..??' என்று கேள்வியுடனே தங்கையின் அறைக்குள் நுழைந்த அசோக்கிற்கு, பால்கனியில் இருந்து ஹை பிட்ச்சில் ஒலித்த சங்கீதாவின் சத்தம், அவன் காதில் விழுந்த அடுத்த நொடியே எல்லாம் புரிந்து போனது.

"வாயை மூடு..!!! வாயை மூடுன்றேன்ல..???? நான் சொல்றதை கேளு..!!! ப்ச்.. இப்போ கேக்கப் போறியா இல்லையா நீ..????"

காதில் ப்ளூடூத் ஹெட்போனுடன் காளி மாதிரி கத்திக் கொண்டிருந்தாள் சங்கீதா. அவள் அப்படி கத்தியதும், அடுத்த முனை பட்டென ஆஃப் ஆகியிருக்க வேண்டும். இந்த முனையில் இவள் வாயைத் திறந்து படபடவென பொரிந்து தள்ள ஆரம்பித்தாள். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் வெடுக் வெடுக்கென நடந்தவாறே, வெடித்து சிதறினாள்.

"அப்போ இத்தனை நாளா எங்கிட்ட நடிச்சுட்டு இருந்திருக்க.. என்னை ஏமாத்திட்டு இருந்திருக்க.. அப்படித்தான..?? லவ் பண்றதுக்கு முன்னாடிலாம்.. என் பின்னாடி அப்படியே நாய் மாதிரி நாக்கை தொங்க போட்டுட்டு அலைவல.. அப்போ மட்டும் என் வாய்ஸ் லவ்லி வாய்ஸா இருந்தது... இப்போ லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம் நரி வாய்ஸ் ஆயிடுச்சா..?? கேக்குறேன்ல.. பதில் சொல்லு..!! ஹலோ... இருக்குறியா..?? பேசுடா..!!!! வாயில என்ன வச்சிருக்குற..???"

சங்கீதா கிஷோரை பேச சொல்லி கத்தினாள். ஆனால் அப்படி கத்தி முடித்த அடுத்த நொடியே 'வாயை மூடு..!!! வாயை மூடுன்றேன்ல..??' என்று மறுபடியும் எரிந்து விழுந்தாள். 'என்னாடி உங்க லாஜிக்கு..??' என்று கேட்கத் தோன்றியது அசோக்குக்கு..!! ஆனால் ருத்ர வடிவாய் நின்றிருந்த தங்கையை பார்த்ததும், எதுவும் கேட்காமல் வாயை அழுத்தி மூடிக் கொண்டான். 'இப்படி காதலனை திட்டுவதற்காகத்தான்.. காலங்காத்தாலேயே அலாரம் செட் பண்ணி எழுந்தாளா..?? கத்தி கத்தி மகள் களைப்பாகியிருப்பாள் என்று, இந்த அம்மா வேறு பூஸ்ட் கலக்கி அனுப்புகிறாள்..?? ஹ்ம்ம்.. கவலைக்கிடம்தான் என் நண்பனின் நிலைமை..!!'

அசோக்குக்கு கிஷோரை நினைக்கையில் பாவமாக இருந்தது. 'கொஞ்சம் ஓவராத்தான் அவனை பழி வாங்கிட்டமோ..??' என்று தோன்றியது. அப்புறம், 'அவன் மட்டும் அங்க நடக்குறதை இங்க உளறலாமா..?? நல்லா வாங்கட்டும்.. அப்போத்தான் அறிவு வரும்..!!' என்று மனதை சமாதானம் செய்து கொண்டான். கொஞ்ச நேரம் அமைதியாகவே நின்றிருந்தான். அப்புறம் கத்திக்கொண்டிருந்த சங்கீதாவே இவனை கவனித்தும் விட்டாள். ஃபோனில் பேசுவதை நிறுத்தாமல், அந்த ஆத்திரம் கொப்பளிக்கும் முகத்துடனே அண்ணணிடம் திரும்பி,

'என்ன..??' என்று சைகையால் கேட்டாள்.

'பூஸ்ட்..!!'

அசோக்கும் கிசுகிசுப்பான குரலில் சொன்னான். சங்கீதா பூஸ்ட் கப்பை கையில்
வாங்கிக் கொண்டாள். சத்தமே வராமல் உதட்டை மட்டும் அசைத்து

'தேங்க்ஸ்..' என்றாள். கப்பில் வாய் வைத்து கொஞ்சமாய் உறிஞ்சிக் கொண்டாள்.

'யாரு.. கிஷோரா..??' அசோக் தெரியாதவன் மாதிரி கேட்டான்.

'ம்ம்..' சங்கீதா தலையசைத்தாள்.

'நான் அவன்ட்ட கொஞ்சம் பேசணும்..!!'

அசோக் சைகையாலேயே சொல்ல, சங்கீதா ஓரிரு வினாடிகள் யோசித்தாள். பிறகு காதிலிருந்த ஹெட்போனை கழற்றி அண்ணனிடம் நீட்டினாள். அசோக் அதை வாங்கி தனது காதில் பொருத்திக்கொண்டு,

"ஹலோ..!!" என்று சொல்வதற்கும், அடுத்த முனையில்

"உன் கால்ல வேணாலும் விழறேன்.. ப்ளீஸ்...!!" என்று கிஷோர் பரிதாபமாக கெஞ்சுவதற்கும் சரியாக இருந்தது.
"ஹிஹி.. என்ன மச்சி இது..?? என் கால்ல போய் விழுறேன்ற.. அப்படி என்ன பெரிய
தப்பு பண்ணிட்ட நீ..??" அசோக் கிண்டலாக கேட்டான். உடனே

"ஓ..!! நீயா..???? சொல்லு..!!!"

அடுத்த முனையில் கிஷோரின் வாய்ஸ் உடனடியாய் முருக்கேறுவதை அசோக்கால் உணர முடிந்தது. 'பையன் என் மேல செம கடுப்புல இருக்கானோ..?' என்று ஒரு எண்ணம் ஓடியது. இருந்தாலும் அதெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல், கேஷுவலாகவே பேசினான். சங்கீதா பூஸ்ட் உறிஞ்சிக்கொண்டே, ஒரு கையை இடுப்பில் ஊன்றியவாறு, இவர்கள் பேசுவதை முறைப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஹேய்.. இன்னைக்கு காலைல மோகன்ராஜ் வர சொல்லிருந்தார்டா.. ஏதோ புது ப்ராஜக்ட் போல.. டிஸ்கஷன் கூப்பிட்ருந்தாரு..!! ஒன்பது மணிக்குலாம் வந்திருங்கன்னு சொன்னாரு.. போயிட்டு வந்துடு.. சரியா..??"

"ஓ.. இதை சொல்றதுக்குத்தான் இப்போ அவகிட்ட ஃபோன் வாங்கினியா..??"

"ம்ம்.. ஆமாம்..!! ஒருவேளை நீ மறந்திருப்பியோன்னு நெனச்சேன்.. அதான் ஞாபகப் படுத்தலாம்னு..!! சரி.. நீ போயிட்டு அப்படியே ஆபீஸ் வந்துடு.. அப்புறமா பேசிக்கலாம்..!!"

"இ..இல்ல மச்சி.. என்னால போக முடியாதுன்னு நெனைக்கிறேன்..!! எனக்கு பதிலா நீ போயிட்டு வந்துடுறியா..??"

"ஏ..ஏண்டா.. என்னாச்சு..??"

"இல்லடா.. காலைலேயே ஒரு அன்-எக்ஸ்பெக்டட் பர்சனல் வொர்க் ஆகிப்போச்சு.. எல்லாம் ஒரு பரதேசி பன்னாடை நாயால வந்தது..!! எப்படியும் நான் இன்னும் ஒரு டூ ஹவர்ஸ்க்காவது ரொம்ப பிஸியா இருப்பேன்னு நெனைக்கிறேன் மச்சி..!! ஸோ.. நீயே போயிட்டு வந்துடுடா.. ப்ளீஸ்..!!"

"ஓ.. அப்டியா..!!! ம்ம்ம்ம்.. ஓகேடா.. நான் பாத்துக்குறேன்.. விடு..!! ம்ம்.. ஆமாம்.. அப்படி என்ன திடீர்னு.. அன்-எக்ஸ்பெக்டட் பர்சனல் வொர்க்கு உனக்கு..??" அசோக் அப்பாவியாக கேட்க,

"ஏன்..??? உனக்கு தெரியாதா..???" அடுத்த முனையில் கிஷோர் பற்களை கடித்தவாறு கடுப்புடன் திருப்பி கேட்டான். அசோக் உடனே புரிந்து கொண்டான்.

"ஓ.. புரியுது புரியுது..!! ஓகே மச்சி.. நீங்க ஏதோ இன்ட்ரஸ்டிங் டிஸ்கஷன்ல இருந்தீங்கன்னு நெனைக்கிறேன்.. நான் நடுவுல வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.. ஸாரி..!! ஓகே.. நீங்க கண்டின்யூ பண்ணுங்க.. நான் அவகிட்ட குடுக்குறேன்..!!"

அசோக் ஹெட்ஃபோன் எடுத்து தங்கையிடம் நீட்டினான். இப்போது அவள் அதை வாங்கி தன் காதோடு பொருத்திக் கொண்டாள். அசோக் அங்கிருந்து நகர முயல, அவனுக்கு பின்னாலிருந்து 'டேய்..!!' என்று சங்கீதாவின் குரல் ஒருவித எரிச்சலுடன் ஒலித்தது. முதலில் கிஷோரைத்தான் அவள் அவ்வாறு அழைக்கிறாள் என்று அசோக் நினைத்தான். அப்புறம், சங்கீதா அவனுடைய கையை இறுக்கமாகப் பற்றி நகரவிடாமல் நிறுத்தியிருப்பதை உணர்ந்ததும், தன்னைத்தான் அழைக்கிறாள் என்று புரிந்துகொண்டான். தன் கையைப் பற்றியிருந்த தங்கையின் கையை ஒருமுறை பார்த்தான். அப்புறம் சற்றே குழப்பமாய் அவளுடைய முகத்தை ஏறிட்டான்.

"என்ன..??"

என்பது போல பார்த்தான். அவன் அவ்வாறு பார்த்ததும், இப்போது சங்கீதா தனது முகத்தை வேறெங்கோ திருப்பிக் கொண்டாள். சற்றே வீராப்பான, விறைப்பான குரலில் சொன்னாள்.

"ஸாரி..!!"

இப்போது அசோக்குக்கு மனதில் சில்லென்று ஒரு உணர்வு. அந்தப்பக்கமாய் திரும்பி நிற்கிற தங்கையையே அன்புடனும், உதட்டில் ஒரு புன்னகையுடனும் பார்த்தான். ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள்ளாகவே சங்கீதாவிடம் கிஷோர் ஃபோனில் ஏதோ கேட்டிருப்பான் போலிருக்கிறது. அசோக்கின் கையை பிடித்த பிடியை விடாமலே, சங்கீதா ஹெட்ஃபோனில் கத்த ஆரம்பித்தாள்.

"என்னது பரவால சங்கிம்மாவா..?? அப்படியே செவுளை சேர்த்து விட்டேன்னா..!! உன்கிட்ட போய் ஸாரி கேக்குறதுக்கு எனக்கு என்ன லூஸா பிடிச்சிருக்கு..?? நான் இங்க என் அண்ணன்ட்ட ஸாரி கேட்டேன்..!! உன்னை..????? நீ கொஞ்சம் வெயிட் பண்ணு.. நான் இங்க பேசிட்டு வரேன்..!! லைன்லேயே இரு.. கட் பண்ணிடாத.. புரியுதா..????"

கத்திமுடித்தவள், காதில் இருந்து ஹெட்போனை படக்கென்று கழற்றினாள். அப்புறமும் ஒருமாதிரி ரெஸ்ட்லசாய் அப்படியும் இப்படியுமாய் தலையை அசைத்தாள். பிறகு அசோக் பக்கமாய் திரும்பி பட்டென மீண்டும் சொன்னாள்.

"ஸாரிடா..!!"

"எதுக்கு ஸாரி..??"

"நே..நேத்து.. கோ..கோவத்துல.. நான் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்..!! என்னதான் இருந்தாலும் நான் அப்படி பேசிருக்க கூடாது.. நான் பேசினது தப்புன்னு லேட்டாத்தான் எனக்கு புரிஞ்சது..!! ஸோ.. ஸாரி.. மன்னிச்சுடு..!!"

தன் முகத்தையே ஏறிடாமல், தலையை அப்படியும் இப்படியுமாய் சிலுப்பிக்கொண்டு, குரலில் மட்டும் குற்ற உணர்ச்சியுடன், தங்கை தன்னிடம் மன்னிப்பு கேட்டவிதம், அசோக்கிற்கு சிரிப்பை வரவழைத்தது. உதடுகள் பிரித்து மெலிதாக புன்னகைத்தான். அப்புறம் சற்றே குறும்பான குரலில் சொன்னான்.

"பரவால போ.. மன்னிச்சுட்டேன்..!!" அசோக் அவ்வாறு ஏளனமாக சொன்னவிதம், சங்கீதாவுக்கு சற்று எரிச்சலை கிளப்பியிருக்க வேண்டும்.

"ஆனா ஒன்னு மவனே.. தங்கச்சி ஸாரி கேட்டுட்டா.. நமக்கு பணிஞ்சு போயிட்டா.. இனி நம்ம வழிக்கே வரமாட்டா... அப்படிலாம் தப்பு கணக்கு போட்டுடாத..!!"

"ஓஹோ..!! சரி சரி... நீயும் அப்படிலாம் எதும் தப்பா நெனச்சுடாத சங்கு.. அண்ணன்ட்ட ஸாரி கேட்டாச்சு.. அவன் அப்படியே உருகிப் போயிட்டான்.. இனிமே நம்மள வம்பிழுக்கவே மாட்டான்..!! அப்படிலாம் மனசுல ஏதாவது நெனைப்பு இருந்தா.. இப்போவே அதை அணுகுண்டு போட்டு அழிச்சிடு..!!"

அசோக் பதிலுக்கு பதில் பேசவும், சங்கீதா அவனையே சில வினாடிகள் உர்ரென்று முறைத்துப் பார்த்தாள். அப்புறம் முகத்தை அசிங்கமாக சுளித்தவாறு,

"ஏ ச்சே.. போடா..!!" என்று அவனை பிடித்து தள்ளி விட்டாள்.

"அடச்சீய்.. போடீ..!!"

அசோக்கும் பதிலுக்கு கத்திவிட்டு, அறை வாசலை நோக்கி நடந்தான். அவன் அந்தப்பக்கம் நகர்ந்ததுமே, சங்கீதா ஹெட்ஃபோனை காதில் மாட்டிக்கொண்டு, பாதியில் விட்ட வேலையை மீண்டும் தொடர்ந்தாள்.

"டேய்...!! இருக்கியா..?? ம்ம்ம்... என்னது என்னது...??? ஏய்.. இரு இரு இரு.. நீ மொதல்ல இருந்து வா.. ப்ச்.. மொதல்ல இருந்து வா..!! நான் உன்கிட்ட ஐ லவ் யூ சொல்றதுக்கு முன்னாடி.. நீ என் பின்னாடி நாய் மாதிரி நாக்கை தொங்கப்போட்டுட்டு திரிஞ்சியா இல்லையா..?? அதுக்கு மொதல்ல ஆன்சர் சொல்லு இப்போ.. கமான்.. பேசு..!!"

அசோக் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். வெளியே வந்ததுமே 'யப்பாஆஆ..' என்று தலையை ஒருமுறை உலுக்கிக்கொண்டான். தங்கை கிஷோரை பின்னி பெடலெடுப்பாள் என்று அவனுக்கு முன்பே தெரியும். ஆனால் எந்த அளவிற்கு என்பதை இன்றுதான் கண்கூடாக காண்கிறான். தனக்கென்று ஒரு பெண் தேர்ந்தெடுக்கும்போது, தங்கை மாதிரி ஒரு ராட்சஸியிடம் மட்டும் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று நினைத்துக் கொண்டான்.

சங்கீதாவின் அறையில் இருந்து ஹாலுக்கு வரும் வழியில்தான் தாத்தா பாட்டியின் அறையும் இருக்கிறது. அவர்கள் அறையை அசோக் கடக்கும்போது, உள்ளே இருந்து பாட்டியின் சத்தம் பெரிதாக ஒலிக்க, அசோக் அப்படியே ப்ரேக் போட்டான். பாட்டி என்ன சொல்லுகிறாள் என்று காதை கூர்மையாக்கி கேட்டான்.

"வாக்கிங் போனா நேரா வீட்டுக்கு வர வேண்டியதுதான..?? வர்ற வழில அங்க நின்னுக்கிட்டு.. அவ கூட என்ன பல்லை காட்டிக்கிட்டு பேச்சு வேண்டி கெடக்கு..??" பாட்டி இந்த வயதிலும் தன் பொசஸிவ் புத்தியால் தாத்தாவை போட்டு படுத்திக்கொண்டிருந்தாள்.

"போனவாரம் அவகிட்ட பல்லுவலின்னு சொல்லிருந்தேண்டி.. இப்போ எப்படி இருக்குன்னு கேட்டா.. அதான் பல்லை காட்டினேன்..!!" தாத்தாவும் பாட்டிக்கு பணிந்து போய்த்தான் பேசிக்கொண்டிருந்தார்.

"ம்க்கும்.. இப்படி பதிலுக்கு பதிலு பேசிட்டே இருங்க.. அப்புறம் இருக்குற நாலு பல்லையும் உடைச்சு போட்டுட வேண்டியதுதான்..!! பல்லும் இருக்காது.. வலியும் இருக்காது..!!"

"ஐயே.. இப்போ என்னாயிடுச்சுன்னு இப்படி கத்துற கோமளா..??"

"இங்க பாருங்க.. எனக்கு அதுலாம் தெரியாது.. இனிமே நீங்க வாக்கிங் போறதா இருந்தா இங்க வீட்டுக்குள்ளயே போங்க.. சொல்லிப்புட்டேன் ஆமாம்..!!"

பாட்டி முடிவாக சொல்லிவிட்டு, மூஞ்சியை திருப்பிக் கொண்டாள். பார்த்துக்கொண்டிருந்த அசோக் 'ஹ்ம்ம்.. எத்தனை வயதானாலும் பெண்கள் பெண்கள்தான்..!!' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான். வாசலுக்கருகே நின்றிருந்த அசோக்கை பாட்டி கவனித்துவிட்டாள்.

"என்னடா..??" என்று எரிச்சலாகவே கேட்டாள்.

ஒட்டுக்கேட்டதை பாட்டி பார்த்துவிட்டாள் என்று அசோக் முதலில் சற்று தடுமாறினான். அப்புறம் அந்த தடுமாற்றத்தை சமாளித்துக்கொண்டு, குரலில் ஒரு கேலியையும் கலந்துகொண்டு, அவர்களுடைய அறைக்குள் தலையை மட்டும் நீட்டியவாறு கேட்டான்.

"ஏன் பாட்டி.. தாத்தா இத்தனை நாள் பல்லை கடிச்சுட்டு ஓட்டிட்டாரு.. இனிமேலா பல்லுவலின்னு ஓடிடப் போறாரு..??" அசோக்கின் கேள்வியில் இருந்த குதர்க்கம் பாட்டிக்கு புரியவில்லை.

"என்னடா சொல்ற.. மண்டு..??" என்று முகத்தை குழப்பமாய் சுருக்கினாள்.

"புரியலையா..?? சரி விடு..!! தாத்தா உன்மேல உயிரையே வச்சிருக்காரு பாட்டி..
தேவை இல்லாம அவரைப்போட்டு இப்படி டார்ச்சர் பண்ணாத..!!"

"அடப்போடா.. என் புருஷனை பத்தி எனக்கே சொல்ல வந்துட்டான்..?? எல்லாம் எனக்கு தெரியும்.. நீ உன் வேலையை பாத்துட்டு போ..!!"

பாட்டி முகத்தை வெட்டியவாறு சொன்னாள். அசோக் சலிப்பாய் தலையசைத்துக் கொண்டான். 'இந்தப் பெண்களே இப்படித்தான்.. தனக்குரியவனை தானும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.. தன்னைமாதிரி அவனை புரிந்து கொள்ள வேறு ஆளே இல்லை என்று அடமும் பிடிப்பார்கள்..!!' எப்படியோ போங்க என்று மனதுக்குள் முனுமுனுத்தவாறே அசோக் டைனிங் ரூமுக்கு வந்தான். அங்கே அவனுடைய அப்பா அமர்ந்திருந்த நிலையை பார்த்து சற்றே துணுக்குற்றான்.

கன்னத்தில் கைவைத்து.. கவலையே உருவாக.. தட்டில் கிடந்த தோசையை உண்ணக்கூட மனம் இல்லாமல்.. உறைந்து போய் அமர்ந்திருந்தார் மணிபாரதி..!! 'என்னாயிற்று இந்த அப்பாவிற்கு..?? இப்படி இடிந்து போய் அமர்ந்திருக்கிறார்..?? அம்மா எதுவும் அவரை திட்டிவிட்டாளா..?? இன்று என்ன.. பெண்கள் ஆண்களை வறுத்தெடுக்கிற தினமா..??'

"டாடிக்கு என்னாச்சு மம்மி.. நீ ஏதும் திட்டிப்புட்டியா..??" அசோக் கிச்சன் பக்கமாக திரும்பி அம்மாவிடம் கேட்டான்.

"அட.. நான்லாம் ஒன்னும் அவரை திட்டலை..!!"

"அப்புறம்..??"

"அவரோட அர்ர்ருமை ரசிகர்ட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு.. அதை படிச்சதுல இருந்து இப்படி ஊமை மாதிரி உக்காந்திருக்காரு..!!"

"யாரு.. அந்த ஸ்ரீனியா..??"

"ம்ம்.. ஆமாம்..!!"

"மறுபடியும் இவரை திட்டி லெட்டர் போட்டிருக்கானா..??"

"ஆமாண்டா..!!"

பாரதி கடுப்புடன் சொல்லிவிட்டு கல்லில் தோசை மாவை ஊற்றி விரவி விட, அசோக் 'ஹ்ம்ம்ம்..' என்று பெருமூச்சு விட்டவாறே தன் அப்பாவிடம் சென்றான்.

"என்ன டாடி.. ரொம்ப திட்டிட்டானா...??"

"ஆமாண்டா.. கன்னாபின்னான்னு திட்டுறான்.. கண்கொண்டு பாக்க முடியலை அந்த லெட்டரை..!! டாடி இத்தனை வருஷமா கதை எழுதிருக்கேன்டா அசோக்.. இந்த அளவுக்கு எவனும் என்னை கேவலமா திட்டுனது இல்ல..!!" மணிபாரதி மிகவும் சோகமாக சொன்னார்.

"ஹ்ம்ம்.. அவனுக்கு என்னதான் பிரச்னையாம்..??"

"என்னத்த சொல்றது.. நான் இனிமே லவ் ஸ்டோரியே எழுதக் கூடாதாம்.. எழுதுன வரை போதுமாம்..!! இனிமேயும் எழுதினா.. பப்ளிக் ந்யூஸன்ஸ்னு என் மேல பொதுநல வழக்கு போடப்போறதா மிரட்டுறான்..!! நான் கதை எழுதுற பேனாவை.. கூவத்துல தூக்கி கடாச சொல்றான்.!!"

"இதுலாம் ரொம்ப ஓவர் டாடி.. உங்க ஸ்டோரி பிடிக்கலைன்னா படிக்காம விட வேண்டியதுதான.. ஏன் இப்படிலாம் பண்றான்..?? நீங்களும் பதிலுக்கு அவனை தாறுமாறா திட்டி ஒரு லெட்டர் போடுங்க..!!"

"இல்ல அசோக்.. அவனை அப்படி திட்டுறதுக்கு எனக்கு மனசு வரலை..!!"

"ஏன்..??"

"ஒருகாலத்துல இந்த ஸ்ரீனி என்னை எப்படிலாம் பாராட்டுவான் தெரியுமா..?? என்னை தெய்வம்னுவான்.. என்னை மாதிரி எழுத ஆளே இல்லைன்னு சொல்வான்..!!"

"ஓ.. அப்புறம் ஏன் இப்போ இப்படி திட்டுறான்..??"

"ஹ்ம்ம்... அப்போ லவ் பண்ணிட்டு இருந்தான்.. பாராட்டுனான்..!! இப்போ லவ் ஃபெயிலியர் ஆகிப்போச்சு.. திட்டுறான்..!!"

"இது என்ன டாடி அநியாயமா இருக்கு..?? அவனுக்கு லவ் ஃபெயிலியர் ஆனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க..?? விட்டா.. படிக்கிறவங்க வீட்டுல பவர் ஃபெயிலியர் ஆனா கூட உங்களை திட்ட ஆரம்பிச்சுடுவாங்க போல..??" அசோக் கிண்டலாக கேட்க மணிபாரதி மகனை ஏறிட்டு முறைத்தார்.

"ஏன்டா உனக்கு இப்படி ஒரு கெட்ட எண்ணம்..??""என்னாச்சு டாடி..??"

"பின்ன.. ஒருத்தன் திட்டுறதையே தாங்க முடியல.. பவர் ஃபெயிலியர்குலாம் திட்ட ஆரம்பிச்சா.. மொத்த தமிழ்நாடேல என் மொகத்துல காறி துப்பும்..!!"

"ஹாஹா..!! ஹ்ம்ம்.. என்னவோ போங்க..!! எனக்கு டைம் ஆச்சு.. உங்க தோசையை நான் எடுத்துக்குறேன்.. நீங்க அப்புறமா சாப்பிட்டுக்கங்க..!!"

அப்பா முன்பிருந்த ப்ளேட்டை இப்போது அசோக் எடுத்துக் கொண்டான். அப்படியே நின்றவாறே சாப்பிட ஆரம்பித்தான். தோசையை விண்டு சட்னியில் நனைத்து தொண்டைக்குள் போட்டான். ஆவி பறக்கிற தோசையை தாங்கிய கரண்டியுடன், டைனிங் ரூமுக்குள் நுழைந்த பாரதி, மகன் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை பார்த்ததும் பட்டென்று முகம் மாறினாள். அவனுடைய தலையில் நறுக்கென்று குட்டியாவாறே சொன்னாள்.

"அறிவு கெட்டவனே..!!"

"ஆஆஆஆ..!! இன்னைக்கு என்னாச்சு.. யாராவது யாரையாவது திட்டிட்டே இருக்கீங்க..?? நீ எதுக்கு இப்போ என்னை திட்டுற..??" அசோக் தலையை தேய்த்தவாறே அம்மாவிடம் திரும்பி கேட்டான்.

"எத்தனை தடவை சொல்றது.. குளிச்சுட்டுத்தான் சாப்பிடனும்னு..!!"

"ஐயோ.. குளிச்சுட்டேன் மம்மி..!!"

"குளிச்சுட்டியா..?? பொய் சொல்லாத.. பாத்தா அப்படி தெரியல..!!" பாரதி குழப்பமாய் அசோக்கையே மேலும் கீழும் பார்த்தாள்.

"ஆமாம்.. உனக்கு ஒன்னும் தெரியாது..!! தோசையை குடு.. போய் இன்னும் ரெண்டு போட்டு எடுத்துட்டு வா.. போ..!!"

எரிச்சலாக சொன்ன அசோக் தோசையைப் பறித்து தன் தட்டில் போட்டுக் கொண்டான். பாரதி தயங்கி தயங்கியே கிச்சனை நோக்கி நகர்ந்தாள். கிச்சன் வாசலுக்கு சென்றவள், மீண்டும் திரும்பி அசோக்கை ஒரு நம்பிக்கையில்லா பார்வை பார்க்க, அவன் இப்போது வாயில் தோசையுடன் பரிதாபமாக கத்தினான்.

"ஹையோ... நம்பு மம்மி..!! குளிச்சுட்டேன்..!!"
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக