http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : அன்புள்ள ராட்சசி - பகுதி - 6

பக்கங்கள்

சனி, 22 ஆகஸ்ட், 2020

அன்புள்ள ராட்சசி - பகுதி - 6

அந்த நாளும் அடுத்த நாளும் அசோக்கிற்கு ஒருவித பிரம்மையும் பிரச்னையுமாகவே கழிந்தன..!! ஆசைஆசையாக பேச சென்றவனின் மனதை.. அந்தப் பெண்ணுடைய அனல் கக்கும் பார்வையும்.. அவள் கழற்றி கையிலெடுத்த செருப்பும்.. அந்த செருப்பின் அகலமான அடிப்புறமும்.. அதில் ஓரமாய் ஒட்டியிருந்த பபிள்கமும்.. என எல்லாமும் சேர்ந்து.. ரொம்ப.. ரொம்பவே பாதித்துவிட்டன..!! அந்த பாரதிக்கு.. 'பார்க்கும் மரங்கள் எல்லாம் பச்சை நிறம்' தோன்றிய மாதிரி.. இந்த பாரதி மைந்தனுக்கு.. காணும் இடங்கள் எல்லாம் கலர் கலராய் செருப்புகள்தான் தோன்றின..!!

"என்னடா.. வெறும் சாதத்தையே சாப்பிட்டுட்டு இருக்குற.. இந்தா.. இதை கொஞ்சம் கடிச்சுக்கோ..!!" என்றவாறு, அசோக்கின் அம்மா அவனுடைய வாய்க்கருகே செருப்பை நீட்டினாள்.

"மம்மீஈஈ..!!!!" அலறியே விட்டான் அசோக். அவனுடைய முகம் பட்டென வியர்த்துப் போனது.

"அ..அசோக்கு... அசோக்கு... என்னப்பா ஆச்சு..??" பாரதி பதற்றமும் பயமும் தொற்றிக்கொண்டவளாய் கேட்டாள்.

"ஒ..ஒன்னும்.. ஒ..ஒன்னும் இல்ல மம்மி..!!"

அம்மாவின் கையில் இருப்பது அப்பளம்தான் என்று புரிந்ததும், சற்றே நிம்மதியடைந்த அசோக், சமாளிக்கும் விதமாய் சொன்னான். ஆனால் அப்புறமும் பாரதி சமாதானம் ஆகாமல்,

"எ..என்னடா நீ... இந்தா.. இந்த தண்ணியை கொஞ்சம் குடி..!!"

என்றவாறே, தண்ணீர் டம்ளரை எடுத்து அவளே தன் மகனுக்கு நீர் புகட்டினாள். அன்று மாலை அசோக் வீடு திரும்பியதில் இருந்தே, அவனிடம் ஒரு வித்தியாசத்தை உணர்ந்திருந்த பாரதி, 'எம்புள்ளைக்கு என்னாச்சுன்னு தெரியலையே..?? எதைப்பாத்து பயந்தான்னு புரியலையே..?? ஒத்தை ஆளா எத்தனை பேய்ப்படம் வேணா பார்ப்பானே..?? இன்னைக்கு அப்பளத்தை பாத்தாலே அனகோண்டாவை பாத்தவன் மாதிரி அலர்றானே..?? காளியாத்தா மாரியாத்தா.. காமாட்சி மீனாட்சி.. கருமாரி மகமாயி.. நீங்கதான் எம்புள்ளைக்கு தொணை இருக்கணும்டியம்மா..' என்று மனதுக்குள்ளாகவே கவலையும் ரகசியமுமாய் வேண்டிக்கொண்டாள்.


அசோக்கிற்கு காணும் இடங்கள் மட்டும் அவ்வாறு அல்ல..

அந்தப்பெண் ஏற்படுத்திய டென்ஷன் தாங்காமல்.. சலம்புகிற மைன்ட் சனியனை சமாதானம் ஆக்கலாம் என்று.. ஆபீஸை விட்டு வெளியேறி.. அடுத்த தெருவில் இருக்கும் பெட்டிக்கடைக்கருகே.. ஆகாயத்தை வெறித்தபடி.. புகை இழுத்து விட்டுக்கொண்டிருந்தான்..!! புகையின் நடுவினிலும்.. அவளுடைய பூமுகமே மசமசப்பாய் தெரிந்துகொண்டிருந்த வேளையில்.. வந்து சேர்ந்தான் அவன்..!! முழங்காலுக்கு மேலே ஏற்றிக்கட்டப்பட்ட லுங்கியும்.. முழங்கைக்கு மேலே சுருட்டிவிடப்பட்ட சட்டையும்.. முகம் நிறைய தாடியும்.. வாயில் நீட்டிய பீடியுமாய்..!!

"ஸார்.. கொஞ்சம் செருப்பு குடுக்குறீங்களா..??"

"என்னது..????' அசோக் அதிர்ந்து போய் அந்த ஆளைப் பார்த்தான்.

"செருப்பு ஸார்.. செருப்பு செருப்பு செருப்பு..!!!!"

அந்த ஆள் கண்ணை சிமிட்டிக்கொண்டே, திரும்ப திரும்ப அந்த வார்த்தைகளை உச்சரித்த விதம், அசோக்கை கேலி செய்வது போல இருக்க, கடுப்பான அசோக் கண்ட்ரோல் இழந்து போய், அந்த ஆளுடைய சட்டையை பிடித்துவிட்டான்.

"என்னடா கேட்ட..?????" என்று பற்களை கடித்தான். அந்த ஆளோ அசோக்கின் திடீர் கோவத்தில் மிரண்டு போனான்.

"ஸார்.. என்னா ஸார் இது.. நெருப்புதான கேட்டேன்..?? இஷ்டம்னா குடுங்கோ.. இல்லனா விடுங்கோ.. எதுக்கு சொக்காலாம் புடிக்கிறீங்கோ..??" அசோக்கை ஒருமாதிரி ஏற இறங்க பார்த்தவாறே, அந்த இடத்தை விட்டு அகன்றான்.

எஸ்...!!! கேட்கும் ஒலிகளில் கூட..!!
அசோக்கின் நண்பர்கள் அன்று முழுக்க செம குஷியில் இருந்தார்கள்..!! 'மாட்டுனான்டா ஒரு மானஸ்தன்' என்பது மாதிரியான குஷி..!! அன்று முழுதும் அந்த செருப்பு மேட்டரை சொல்லியே, அசோக்குக்கு வெறுப்பு மேல் வெறுப்பு ஏற்றினார்கள்..!! 'கூந்தல் கருப்பு.. குங்குமம் சிகப்பு..' பாடலை ரீமிக்ஸ் செய்து பாடி.. கடுப்பு மேல் கடுப்பு கூட்டினார்கள்..!! சாலமன் பாட..

"டி-ஷர்ட்டு கருப்பு..!!"

"ஆஹா..!!" வேணு ஒத்து ஊதினான்.

"அவ கையில செருப்பு..!!"

"ஓஹோ..!!"

"அடங்கிப்போச்சு.. பையன் கொழுப்பு..!!"

"ஓஹொஹோஹஹோ.. ஹோஹஹஹொஹோ..!!"

"ஹாஹாஹாஹாஹாஹா..!!"

கிஷோர் மட்டும் கிண்டலில் கலந்து கொள்ளாமல் சிரிக்க மாத்திரம் செய்தான். அன்று அவர்கள் காட்டில் அடைமழை என்பதை உணர்ந்து கொண்ட அசோக்கும், அமைதி காப்பதே நலம் என்று முறைப்போடு மட்டும் நிறுத்திக் கொண்டான். வாய் திறந்து வார்த்தைகள் எதுவும் சிந்தவில்லை. அசோக்கின் அமைதி அவர்களுக்கு மேலும் உற்சாகத்தையே தந்தது. சீண்டலும் கேலியும் தொடர்ந்தன.

அத்தனை எரிச்சலிலும்.. கிஷோர் கிண்டல் செய்யாமலிருந்தது.. அசோக்குக்கு ஒரு சிறு நிம்மதியை தந்திருந்தது..!! ஆனால்.. அன்று மாலை அவன் வீட்டுக்கு சென்றபோது.. அந்த சிறு நிம்மதியும் சீட்டுக்கட்டு கோபுரமாய் சரிந்து போனது..!! 'அமைதியா இருக்கான் பாரு.. அவன்தான்டா என் நண்பன்..' என்று கிஷோரை பற்றி நினைத்திருந்தான்..!! அப்புறந்தான் தெரிந்தது அவன் ஆப்பை வேறிடத்தில் வைத்திருக்கிறான் என்று..!!

"ஏண்டா.. ஒரு பொண்ணைப்பாத்து.. அவ கண்ணு அழகா இருக்கு, காது அழகா இருக்குன்னு சொல்லலாம்.. சிரிப்பு கூட அழகா இருக்குன்னு சொல்லிருக்கலாம்..!! போயும் போயும் அவ செருப்பு அழகா இருக்குன்னு சொன்னியாம்.. அவளும் செருப்பை கழட்டி 'யா.. லுக் அட் மை ப்யூட்டிஃபுல் செப்பல்..'னு உன் மூஞ்சிக்கு முன்னாடி நீட்டுனாளாம்..??"

சங்கீதா சிரிப்பை அடக்கிக்கொண்டே கிண்டலாக கேட்டபோது.. அசோக்குக்கு அவள் மீது கோவம் வந்தது என்றால்.. கிஷோர் மீது கொலைவெறியே வந்தது..!! சங்கீதாவுக்கு தன் மீதிருந்த வெறுப்பை மறக்கடிக்கவே.. கிஷோர் அந்த செருப்புக்கதையை உபயோகித்திருக்கிறான் என்று புரிந்து கொண்டான்..!! தங்கையை சில வினாடிகள் முறைப்பாக பார்த்தவன்,

"ஒன்னு சேந்துட்டிங்களாக்கும்..??" என்றான் கடுப்பாக.

"ம்ம்... யெஸ்..!!" சங்கி இமைகள் மூடி, சைனீஸ் பொம்மை போல் தலையாட்டினாள்.

"ஹ்ம்ம்..!! இந்த செருப்பு மேட்டர்லாம் உன்னோட வச்சுக்கோ சங்கு.. டாடிட்டயோ மம்மிட்டயோ சொல்லிட்டு இருக்காத.. புரியுதா..??" கெத்தான குரலிலேயே கெஞ்சினான் அசோக்.

"ம்ம்ம்...!! அது.. அந்த பயம் இருக்கணும்..!!"

சங்கீதா திமிராக சொன்னாள். அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேச விருப்பம் இல்லாதவனாய், அசோக் அந்த இடத்தை விட்டு நகர முயன்றான். சங்கீதா அவனுக்கு குறுக்காக ஓடி வந்து வழி மறித்தாள்.

"ஏய்ஏய்ஏய்.. இருடா.. எங்க கெளம்பிட்ட.. உங்கிட்ட நான் என்னன்னவோ கேக்கனும்னு நெனச்சேன்..!!"

"என்ன..??"

"அந்தப்பொண்ணைப் பத்தி கொஞ்சம் சொல்லேன்..?? அவ பாக்குறதுக்கு எப்படி இருந்தா..?? ஹைட்டா குள்ளமா.. கலரா கருப்பா..??"

சங்கீதா அவ்வாறு ஆர்வமாக கேட்கவும், அசோக்கிற்கு பட்டென அவனுடைய மனது லேசாகிப்போனது மாதிரி ஒரு உணர்வு..!! இதயத்தை அந்தப் பெண்ணுடைய ஞாபகம் வந்து ஈரமாய் நனைத்தது..!! அவனையும் அறியாமல்.. உதட்டில் ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது..!! தலையை சற்றே சாய்த்து.. ஏதோ அந்தரத்தில் பார்வையை நிறுத்தி.. குரலில் ஒரு மென்மையை கூட்டிக்கொண்டு.. ரசனையுடன் சொல்ல ஆரம்பித்தான்..

"அ..அவ.. அவ எப்படின்னா.. அவளை பத்தி சொல்லனும்னா.. அவ ஒரு.." அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சங்கீதா அவனை இடைமறித்து,

"டேய்.. இரு இரு..!! ரொம்ப கஷ்டப்படாத.. அவளை பத்தி நமக்கெதுக்கு இப்போ..?? விடு.. நீயே அவளை ஒழுங்கா பாத்தியோ இல்லையோ..?? நீநீநீ..." என்று இழுத்தவள், அப்புறம் பட்டென

"அந்த செருப்பை பத்தி சொல்லு.. எப்படி இருந்துச்சு அந்த செருப்பு..?? ப்ளாக்கா.. ப்ரவுனா..?? பேட்டாவா.. பேரகனா..??"

என முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்கவும், அசோக் இப்போது உலகமகா கடுப்புக்கு உள்ளானான். தங்கையை ஏறிட்டு வெறுப்பாக முறைத்தான். அவளோ சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, அப்படியும் முடியாமல் கொஞ்ச சிரிப்பை உதடுகள் வழியே சிந்திக்கொண்டு, அண்ணனையே குறும்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். அசோக் எதுவும் பேசவில்லை. தன் வலது உள்ளங்கையை அகலமாக விரித்து, அதையே பார்த்தான்.

"என்னடா.. நான் கேட்டுட்டு இருக்கேன்.. நீ கையையே பாத்துட்டு இருக்குற..??" சங்கீதா சீண்டினாள்.

"இங்க பாரு சங்கு.. இப்படியே ஒரு அறை வுட்டேன்னு வச்சுக்கோ.. நாலு நாளைக்கு எந்திரிக்க மாட்ட..!! காது பஞ்சர் ஆயிடும்.. அப்புறம் நீ பாடுற பாட்டை உன்னாலேயே கேட்க முடியாது..!!"

அசோக் அந்த மாதிரி டென்ஷன் ஆனது சங்கீதாவுக்கு ஒரு குதுகலத்தையே அளித்தது. வாயைப் பொத்திக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள். நாக்கை வெளியே துருத்தி பழிப்பு காட்டினாள். அசோக்கால் அவளை எதுவும் செய்ய முடியவில்லை. அமைதியாக அந்த இடத்தை விட்டு அகன்றான்.

என்ன செய்வது..?? அசோக்கிற்கு அப்படிப்பட்ட ஒரு நாளாக அது அமைந்துபோனது. எப்போதும் டிவியில் விளம்பரங்கள் ஓடுகையில் யாரையும் சேனல் மாற்ற விடமாட்டான். அடுத்தவர்கள் வெறுப்பாக இவனை முறைக்க, இவன் விருப்பமாக விளம்பரங்கள் பார்த்து ரசிப்பான். ஆனால் அன்று.. அந்த டிவியில் விளம்பரத்தை பார்த்ததும் எரிச்சலின் எல்லைக்கே சென்றான்.

"பேரகன் எந்தன் தோழன்.. எந்தன் தோழன் பேரகன்..!!"

"ஷ்ஷ்ஷ்ஷ்.... அந்த சேனலை மொதல்ல மாத்துங்க தாத்தா..!!"

என்று தாத்தாவிடம் எரிந்து விழுந்தான். பேரனையே ஓரிரு வினாடிகள் வியப்பாக பார்த்த தாத்தா, அப்புறம் சேனலை மாற்றினார். மாற்றப்பட்ட சேனலில் ஏதோ சீரியல் ஓடியது. அசோக் சற்றே நிம்மதியடைந்தவனாய்.. கண்களை மூடி.. தலையை சோபாவில் சாய்த்து.. அலைபாய்ந்த மனதை ஆசுவாசப்படுத்தலானான்..!! அரை நிமிடம் கூட ஆகியிருக்காது..

"இவனைலாம் செருப்பாலேயே அடிக்கணும்..!!" பாட்டி திடீரென வெறுப்பாக சொல்ல, இவன் பதறிப்போய் படக்கென நிமிர்ந்து அமர்ந்தான்.

"யா..யாரை சொல்ற பாட்டி..??" என்று பாட்டியை பார்த்து கலவரமாக கேட்டான்.

"இந்த செல்லம்மா புருஷனைத்தான் சொல்றேன்.. பாவிப்பய..!!" பாட்டி சீரியலில் வரும் கேரக்டரை சீரியஸாக திட்டினாள். அசோக் நொந்து போனவனாய் தலையை பிடித்துக் கொண்டான்.

இந்த மாதிரி ஆளாளுக்கு அசோக்கை போட்டு பாடாய் படுத்தி, அவனுடைய நிலையை மிகக் கவலைக்கிடமாய் ஆக்கி வைத்திருந்தனர். அவனுடைய மனது ஒருவித குழப்பத்தில் சிக்கி தவித்தது. 'பேய் இருக்கா இல்லையா.. பாத்திருக்காய்ங்களா பாக்கலையா.. நம்பலாமா நம்பப்படாதா..?' என்று வடிவேலுவுக்கு வந்த சந்தேகம் மாதிரி, அசோக்குக்கும் 'அவ பொண்ணா பிசாஸா.. அவ மேல எனக்கு லவ் இருக்கா இல்லையா.. இதை கண்டின்யூ பண்ணலாமா வேணாமா..' என்று சந்தேகம் வந்திருந்தது. 'ஒரு நாள் பேசணும்னு நெனச்சதுக்கே செருப்பு லெவலுக்கு வந்துடுச்சே.. இதை கண்டின்யூ பண்ணினா எங்க போய் முடியும்னு தெரியலையே..??'

இந்த மாதிரி குழப்பமான எண்ணங்கள் அன்றைய அவனது தூக்கத்தை வெகுவாக பாதித்தன. சரியாக உறக்கம் இல்லாமல்.. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்..!!

அடுத்த நாள் காலை.. அசோக்கின் அறை..!! அசோக் அப்போதுதான் குளித்து முடித்து ஃப்ரெஷாக இருந்தான். ஆடை அணிந்து கொண்டிருந்தான். சட்டையை அணிந்து பட்டன்கள் இட ஆரம்பித்தபோது, அறைக்கதவு தட்டப்பட்டது. பட்டன் போடுவதை நிறுத்தி, பனியன் மூடிய மார்புடனே அசோக் சென்று கதவை திறந்தான். பாரதி வெளியே நின்று கொண்டிருந்தாள்.

"என்ன மம்மி..??"

"பால் இல்லடா.. காலைல பால் பாக்கெட் போடாமலே போயிருக்கான்.. என்னன்னு தெரியல..!! உனக்கு காபி வேணும்னா சொல்லு.. மம்மி கடைல போய் பால் பாக்கெட் வாங்கிட்டு வரேன்..!!"

"இல்ல மம்மி.. காபிலாம் ஒன்னும் வேணாம்.. நீ டிபன் ரெடி பண்ணு.. எனக்கு டைமாச்சு.. சாப்பிட்டு கெளம்புறேன்..!!"

"ம்ம்.. சரிடா..!!"

சொல்லிவிட்டு நகர நினைத்த பாரதி, எதேச்சையாக மகனின் தலையை பார்த்தாள். உடனே அவளுடைய முகத்தில் ஒருவித சலிப்பும் எரிச்சலும்..!! அறைக்குள் நுழைந்தவள், அசோக்கின் தலையில் 'நறுக்' என்று ஒரு குட்டு வைத்தாள்.

"ஆஆஆஆ..!!! என்ன மம்மி...??" அசோக் தலையை தேய்த்தவாறே கேட்டான்.

"பனை மரத்துல பாதி நிக்கிற.. தலை எப்படி தொவட்டனும் கூட தெரியாதா உனக்கு..??"

"அ..அதுலாம் நல்லா தொவட்டியாச்சு..!!"

"என்னத்த நல்லா தொவட்டுன.. ஒரே ஈரமா இருக்கு..!!" அசோக்கின் தலைமுடியை கலைத்து விட்டவாறே சொன்ன பாரதி,

"உக்காரு.. நான் தொவட்டி விடுறேன்..!!"

என்று அசோக்கை தோள்ப்பட்டையை பிடித்து அமுக்கி, வலுக்கட்டாயமாக அவனை கட்டிலில் அமர வைத்தாள். அருகில் இருந்த டவலை எடுத்து அவனுடைய தலையை, ஈரம் நீங்க துவட்டி விட ஆரம்பித்தாள்.

"அப்படியே ஈரத்தலையோட போக வேண்டியது.. அப்புறம் இருமலு காச்சலுனு வந்து நிக்க வேண்டியது..!!"

அம்மா அந்த மாதிரி அன்பான அர்ச்சனையுடன் தலை துவட்டிவிட, அசோக்குக்கு திடீரென குழந்தையாகிப் போன மாதிரியான உணர்வு..!! 'மனதில் இருக்கும் குழப்பத்தை அம்மாவிடம் சொல்..' என்று அந்த குழந்தை மனம் அவனை உந்தித் தள்ளியது. பாரதியின் கை அசைவுக்கு ஏற்ப, அவனது தலையும் அப்படியும் இப்படியுமாக ஆடிக்கொண்டிருக்க, அதனுடனே மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.

"மம்மீ..!!!"

"ம்ம்..!!"

"உன்கிட்ட ஒன்னு கேக்கணும்..!!"

"என்ன..??"

"அ..அந்தப் பொண்ணு இல்ல.." என்று இழுத்தான்.

"எந்தப் பொண்ணு..??"

"அ..அதான்.. அன்னைக்கு நீ கேட்டியே.. 'இதுவரை யாருமே உன்னை அட்ராக்ட் பண்ணினது இல்லையா..'ன்னு.. அப்போ என் மனசுல பட்டுன்னு ஞாபகத்துக்கு வந்த பொண்ணு..!!"

அசோக் அந்த மாதிரி குழந்தை குரலில் குழைந்தவாறே சொல்ல, பாரதிக்கு சுரீர் என்று இருந்தது. மகன் பேசப் போகிற விஷயத்தின் தீவிரத்தை உடனடியாய் உணர்ந்து கொண்டாள். தலை துவட்டுவதை ஓரிரு வினாடிகள் நிறுத்தி வைத்திருந்தவள், இப்போது மீண்டும் அதை தொடர்ந்தாள். கவனம் முழுவதும் மகன் பேசப் போகிற விஷயத்தில் நிலைத்திருக்க, குரலில் மட்டும் அந்த ஆர்வத்தை காட்டிக்கொள்ளாமல் மிக இயல்பாக கேட்டாள்.


"ஓ..!! யாரு அவ..??"

"அவ பேர்லாம் தெரியாது மம்மி.. அவ கூட நான் பேசினது கூட கிடையாது..!!"

"ம்ம்.. அப்புறம்..??"

"நாங்க டெயிலி லஞ்ச் சாப்பிட போவோம்ல.. அந்த ஃபுட் கோர்ட்கு அவளும் வருவா.. அப்போ அவளை அடிக்கடி பாத்திருக்கேன்..!!"

"ஓ..!! சரி.. இப்போ அவளுக்கு என்ன பிரச்னை..??"

"ஐயோ.. அவளுக்கு ஒன்னும் பிரச்னை இல்ல மம்மி..!!"

"அப்புறம்..??"

"அ..அது.. எப்படி சொல்றது...?? ம்ம்ம்ம்.... அன்னைக்கு நீ சொன்னேல..?? 'யாராவது பொண்ணை பாத்து.. அழகா இருப்பான்னு தோணிருக்கும்.. நல்ல பொண்ணா இருக்காளேனு தோணிருக்கும்.. பேசிப்பழகலாம்னு தோணிருக்கும்..' அப்டின்னு மூணு விஷயம் சொன்னேல..??"

"ஆமாம்..!!"

"அந்த மூணுமே எனக்கு அவளை பாத்து தோணுச்சு மம்மி..!!"

"ம்ம். நல்ல விஷயந்தான..??"

"ஆ..ஆனா.."

"ஆனா..??"

"ஆனா.. இப்போ.. நேத்துல இருந்து.. மனசுக்குள்ள ஒரு சந்தேகம்..!!"

"என்ன சந்தேகம்..??"

"அந்த மூணு விஷயத்துல ரெண்டாவது விஷயம்..!!"

"எது..?? அந்தப் பொண்ணு நல்ல பொண்ணா இல்லையான்னா..??"

"அ..அப்படி சொல்ல முடியாது..!! அந்தப் பொண்ணு எனக்கு ஒத்து வருவாளா இல்லையான்னு..!!"

"ஓ.. ஏன் அப்படி நெனைக்கிற..??" பாரதி அப்படி கேட்கவும், அசோக்கும் ஏதோ ஒரு ஆர்வத்தில்

"செருப்ப எடுத்து இப்படி காட்டுறா மம்மி.. இப்படி.. இங்க.. மூஞ்சிக்கு முன்னாடி..!!"

என்று தன் முகத்துக்கு நேராக கை நீட்டிக்காட்டி சொல்லியே விட்டான். பாரதி சற்றே அதிர்ந்து போனாள்.

"யாரு..?? உன் மூஞ்சிக்கு முன்னாடியா..??" என்று அவள் அவசரமாய் கேட்கவும், அசோக் இப்போது சுதாரித்துக் கொண்டான்.

"ஐயையே.. எ..என் மூஞ்சிக்கு முன்னாடி இல்ல மம்மி..!! யா..யாரோ.. வேறொரு பையன்.. அவன் மூஞ்சிக்கு முன்னாடி..!! நான் கொஞ்சம்.. தூரமா இருந்து.. இதெல்லாம் பாத்துட்டு இருந்தேன்..!!"

"ஓ..!! அதுசரி.. அவ ஏன் அப்படி பண்ணினா..??"

இப்போது அசோக் முந்தைய நாள் நடந்த அந்த சம்பவத்தை, பாரதிக்கு பொறுமையாக எடுத்துரைத்தான். நண்பர்கள் வைத்த பந்தயத்தையும், செருப்பு நீண்டது தன் முகத்துக்கு முன்புதான் என்பதையும் மட்டும் மறைத்து விட்டான். மகனுக்கு தலை துவட்டுவதை நிறுத்திவிட்டு, எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டாள் பாரதி. கேட்டு முடித்து சில வினாடிகள் யோசனையாய் இருந்தவள், பிறகு அசோக்கை ஏறிட்டு நிதானமான குரலில் கேட்டாள்."ம்ம்ம்...!! சரி.. இதுக்கும்.. அந்த பொண்ணு உனக்கு ஒத்துவருவாளான்னு உனக்கு சந்தேகம் வந்ததுக்கும் என்ன சம்பந்தம்..??"

"என்ன மம்மி இப்படி கேக்குற..?? ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல.. அவ்வளவு பேர் பாத்துட்டு இருக்குறப்போ.. ஒருத்தனை செருப்பை கழட்டி அடிக்கப் போறா..!! யப்பா.. எனக்கு அவளை பாக்குறதுக்கே.. அப்படியே திக்குன்னு இருந்தது..!!" அசோக் அவ்வாறு ஒரு மிரட்சிப் பார்வையுடன் சொல்ல,

"ஹாஹாஹாஹாஹாஹா..!!" பாரதி சிரித்தாள்.

"ப்ச்.. என்ன மம்மி.. நான் சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்.. நீ சிரிக்கிற..??"

"பின்ன என்ன..?? நீ சொல்றதை கேட்டா சிரிப்புதான் வருது..!! ம்ம்ம்ம்.... அம்மா ஒன்னு சொல்லவா..??"

"என்ன..??"

"பாவம் செஞ்சவங்கதான் சாமியை பாத்து பயப்படனும்.. தப்பே செய்யாதவங்க எதுக்கு பயப்படனும்..?? நீ பயப்படுறதும் எனக்கு அந்த மாதிரிதான் இருக்கு..!! மனசுல தப்பான எண்ணம் இருக்குறவங்கதான்.. அந்தப் பொண்ணை கண்டா மெரளனும்.. நீ எதுக்கு மெரள்ற..?? நல்லவங்களுக்கு சாமி எப்போவுமே கைக்கொழந்தை மாதிரி..!!"

"என்ன மம்மி நீ.. அவளை போய் சாமி கூட கம்பேர் பண்ணிட்டு இருக்குற..??"

"ஏன்.. என்ன தப்பு..?? தப்பை தட்டிகேக்குற எல்லாருமே சாமிக்கு சமானம்தாண்டா..!!"

"அப்போ.. அவ அந்த மாதிரி நடந்துக்கிட்டது சரிதான்னு சொல்றியா..??"

"அதுல என்ன உனக்கு சந்தேகம்..?? அம்மா இன்னொன்னு சொல்லவா..??"

"சொல்லு..!!"

"ஆம்பளைங்களுக்கு அழகுன்னு ஒரு பழமொழி சொல்வாங்களே.. தெரியுமா..??"

"ம்ஹூம்..!!"

"அதாண்டா.. ஏதோ புருஷலட்சணம்னு சொல்வாங்க..!!"

"ஆமாம்.. உத்தியோகம் புருஷலட்சணம்..!!"

"ம்ம்ம்.. கரெக்ட்..!! ஆம்பளைங்களுக்கு அழகு உத்தியோகம்.. அதாவது உழைப்பு...!! அதுமாதிரி பொம்பளைங்களுக்கு எது அழகு தெரியுமா..??"

"எது..??"

"தைரியம்..!!!!!" பாரதி சற்றே அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

"ம்ம்..!!"

"தைரியமா இருக்குறவதாண்டா பொம்பளை.. அந்த தைரியமே அவளுக்கு ஒரு தனி அழகை கொடுக்கும் தெரியுமா..!! அவ்வளவு பேர் இருக்குற ஒரு பொது எடத்துல.. ஒருத்தன் செஞ்ச தப்பை தாங்கிக்க முடியாம செருப்பை கைல எடுத்தா பாத்தியா.. அவதாண்டா பொண்ணு... எந்தப் பொண்ணுக்குமே அந்த தைரியம் அவசியமா இருக்கணும்..!!"

"ம்ம்..!!"

அம்மா சொல்கிற விஷயங்கள் அசோக்கின் புத்திக்குள் இறங்கிக் கொண்டிருக்க, அவன் அமைதியாக 'உம்' கொட்டிக் கொண்டிருந்தான். பாரதியோ இப்போது பட்டென பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள். எங்கேயோ பார்த்தபடி தனது இளமைப்பருவ அனுபவத்தை மகனிடம் சொன்னாள்.

"அப்போ... எங்க வீட்டுக்கு பின்னாடி வைகை ஆறு ஓடும் அசோக்.. பக்கத்துல இருக்குற ஆத்துக்கு தண்ணி எடுக்குறதுக்கு கூட.. எங்க வீட்டுல என்னை தனியா அனுப்ப மாட்டாங்க..!! அதே பாரதிதான்.. ஒத்தை ஆளா.. உசுரை கைல புடிச்சுட்டு.. தன்னந்தனியா மெட்ராஸ் வந்து சேர்ந்தேன்..!! எப்படி..?? தைரியம்..!!!"

"ம்ம்..!!"

"உங்க தாத்தா வீட்டுல.. காம்பவுண்டு சுவர் நல்லா ஏழடி உசரத்துக்கு இருக்கும்.. சுவர் மேல கொஞ்சம் கூட இடைவெளி விடாம.. கண்ணாடி பீங்கான் வச்சு பூசிருப்பாங்க.. அந்த சுவரை ஏறி குதிக்கனும்னா எவ்வளவு ரத்தத்தை கீழ சிந்தனும் தெரியுமா..?? கை கால்லாம் கிழிஞ்சுபோய்.. ரத்தக்களரியாதாண்டா உன் அப்பாகிட்ட வந்து சேர்ந்தேன்..!! ஏன்..?? தைரியம்..!!!"

"ம்ம்..!!"

"அன்னைக்கு எனக்கு அந்த தைரியம் இருந்ததாலதான்.. இன்னைக்கு எனக்கு கைல வச்சு தாங்குற புருஷன் கெடைச்சிருக்காரு.. கண்ணுமணிக மாதிரி ரெண்டு புள்ளைங்க கெடைச்சிருக்கீங்க.. கவலைன்னா என்னன்னே தெரியாத மாதிரி ஒரு குடும்பமும், வாழ்க்கையும் கெடைச்சிருக்கு..!!"பாரதி மிக உணர்ச்சிவசப்பட்டுப்போய் சொல்லிக்கொண்டிருந்தாள். அசோக்கோ எந்த உணர்ச்சியும் காட்டாமல், அந்தப் பெண்ணின் நினைவில் மூழ்கியிருந்தான். கொஞ்ச நேரம் இடைவெளிவிட்ட பாரதி மீண்டும் ஒரு நீண்ட பெருமூச்சுடன் ஆரம்பித்தாள்.

"ம்ஹ்ஹ்ஹ்ம்...!! உங்க தாத்தா.. பச்சைக்கலர்ல பட்டையா ஒரு பெல்ட் இடுப்புல கட்டிருப்பாரு.. ட்ரன்க் பெட்டிக்குள்ள நான் ஒளிச்சு வச்சுருந்த போஸ்ட் கார்ட்லாம் அவர் கைல கெடைச்ச அன்னைக்கு என்ன செஞ்சாரு தெரியுமா.. அந்த பெல்ட்டை கழட்டி.."

"ஐயையையெ... போதும் மம்மி.. மொக்கை தாங்க முடியல..!!" அசோக் இப்போது பொறுமையில்லாமல் சொன்னான். பாரதி சலிப்பானாள்.

"ம்க்கும்... ஏண்டா சொல்ல மாட்ட.. நான் பட்ட வேதனைலாம் உனக்கு மொக்கையாத்தான் தெரியும்..!!"

"ப்ச்... உன் கதையை விடு மம்மி.. அந்தப் பொண்ணை பத்தி சொல்லு..!!"

"இன்னும் அவளை பத்தி என்ன சொல்லனும்..?? நான் சொல்லவேண்டியதுலாம் சொல்லிட்டேன்.. இனிமே நீதான் நல்லா யோசிச்சு முடிவெடுக்கணும்..!! நான் போய் சட்னியை அரைக்கிறேன்.. நீ சட்டுன்னு கெளம்பி வா..!!"

சொன்ன பாரதி அவசரமாய் அங்கிருந்து நகர்ந்தாள். வாசலை அடைந்தவள் ஒருகணம் தயங்கி நின்றாள். பிறகு அப்படியே திரும்பி மகனை பார்த்து, புன்னகையுடன் சொன்னாள்.

"எனக்கென்னவோ.. அந்தப் பொண்ணு மருமகளா வர்றதுக்கு.. இந்த வீடு குடுத்து வச்சிருக்கணும்னு தோணுது அசோக்..!! உன்னால முடிஞ்சா.. அந்த பாக்கியத்தை இந்த குடும்பத்துக்கு குடு..!!"

அம்மா அந்தமாதிரி தெள்ளத்தெளிவாக சொல்ல, அசோக்கும் இப்போது மனக்கலக்கம் நீங்கியவனாய் அவளைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தான். அந்தப் பெண்ணை மீண்டும் சந்திக்க நேர்ந்தால், அவளுடன் பேசுகிற வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அவளை மீண்டும் சந்திக்கிற வாய்ப்பு கிட்டுமா என்று ஒரு கேள்வியும் கூடவே மனதில் எழுந்தது. எனக்கென விதிக்கப்பட்டவளாய் இருந்தால், நிச்சயம் என் எதிரே தோன்றுவாள் என்று அந்த மனதை சமாதானம் செய்தான். 'அவளை அனுப்பி வை..!!' என்று ஆண்டவனிடம் ஒருமுறை வேண்டிக் கொண்டான்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக