குட்டித் தோழி - பகுதி - 1

இரயில் அரை மணி நேரம் தாமதம். எந்த ரயில் சரியான நேரத்திற்கு வருகிறது? இரயில் நிலையத்தில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. சென்ற வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் இந்த ஞாயிற்றுக்கிழமை அதிக கூட்டம். காட்பாடியில் இருந்து பெங்களூர் செல்ல எப்படியும் நான்கு மணி நேரம் பிடிக்கும். எப்படி நேரத்தை செலவு செய்வது? புதிதாய் வாங்கிய புத்தகம் இரண்டையும் வீட்டிலேயே விட்டுவிட்டேன். ஹிக்கின்போத்தம்ஸ் கடை எதிர் பிளாட்பாரத்தில் தான் இருந்தது. அங்கு சென்றுவர சோம்பேறித்தனம்!
"டங் டங். பயணிகள் கவனத்திற்கு, சென்னையில் இருந்து பங்காருப்பேட்டை வழியாக பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ஒன்றாவது பிளாட்பாரத்தில் வந்து சேரும்."
என்னுடைய சிறு வயதில், 'எப்படி இந்த அக்கா வார்த்தை தவறாமல், ஒரு தவறில்லாமல் அறிவிக்கிறாங்க'ன்னு அதிசயித்தது உண்டு.
வண்டி வந்தது. என் இருக்கையைத் தேடிப் பிடித்து உட்காருவதற்குள் பெரும் சிரமமாகிவிட்டது. எதிரிலே மூன்று நாள் தாடியுடன் முப்பத்தைந்து வயதான கணவன், முப்பதை சற்றே கடந்திருக்கும் மனைவி மற்றும் எல்லாம் வாழ்ந்து முடிந்தது போன்ற தோற்றத்தில் ஒரு பெரியவர். இரயிலின் சத்தத்தைவிட அதிகமாக அருகே அழுகுரல். குழந்தைகளின் சண்டை. சண்டையிட்டது ஒரு ஆறு வயது பெண்குழந்தையும் நான்கு வயது சிறுவனும்."விடுடா விடு" ஏதோ ஒரு விளையாட்டுப் பொருளுக்காக சண்டை. "மம்மி அந்தப் பையன் பீப்பீல எச்சி வெச்சிட்டான்". லேசான சிணுங்கல் அந்தப் பெண் குழந்தையிடம்.
"அமுதா.. இங்க வா. தம்பி தானே.. வா வந்து தாத்தாகிட்ட உட்கார்." அப்போது தான் தெரிந்தது அந்தக் குழந்தை எதிரே அமர்ந்திருந்த 35-30ன் குழந்தை என்று.
"தா அதை முதலில்; பையில் வைக்கிறேன். அமைதியா எங்காச்சும் இருக்கியா நீ?" இது அமுதாவின் அப்பா.
ஒரு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை. பயணம் முழுவதும் அமுதாவின் அட்டகாசங்களை மட்டுமே நோட்டமிட்டபடி நான். மடிக்கு மடி தாவினாள். தாத்தாவிடம் கொஞ்சினாள். அம்மாவிடம் அடாவடித்தாள். அந்தச் சிறுவனிடம் "உன் பேச்சு டூ" என்றாள். அப்பாவிடம் அடக்கமாக சில நிமிடம். என் மடிக்கும் வந்து சேர்ந்தாள்.
"பாப்பா பேரு என்ன?"
"பாப்பாவா? யாரு பாப்பா? I am a big girl"
"ஓ அப்படிங்களா மேடம்? சொல்லுங்க உங்க பேரு என்ன?
"அமுதா.. உங்க பேரு என்ன?" மழலைத் தமிழில் கேட்டாள்.
தமிழே அழகு! அதுவும் மழலைத்தமிழ் அழகோ அழகு..
"விழியன்"
"குட் நேம். ஹலோ விழியன். ஹவ் டு யு டு?" என் கையைக் குலுக்கினாள்.
அடடா எனக்கு இது தோன்றாமல் போச்சே. பக்கத்தில் கடன் வாங்கிய வார இதழை மூடி வைத்து விட்டேன். அடுத்த ஒரு மணி நேரம் என்னைப் படாதபாடு படுத்திவிட்டாள். கேள்வி மேல் கேள்வி. "நீங்க எங்க வேலை செய்யறீங்க. என்ன கேம்ஸ் விளையாடுவீங்க? ஏன் இவ்வளவு குண்டா இருக்கீங்க? எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?" சலிக்காமல் பதில் தந்தேன்.
ஒரு கட்டத்தில் அவள் கேள்விகளில் இருந்து தப்பிக்க அவளிடம் சின்ன விளையாட்டு விளையாடினேன்.
"அமுதா இது என்ன?"
"இது கூட எனக்குத் தெரியாதா? சர்க்கிள்"
"சரி. இந்த வட்டம் மாதிரி என்ன என்ன பொருள் உனக்குத் தெரியும்? சொல்லு பார்ப்போம்."
"இட்லி, தோசை, அம்மா வளையல், நிலா, சன், பாட்டி பொட்டு, ம்ம்ம் காயின், என் டாலர்... .." எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஆரம்பித்தவள் கூட்ஸ் வண்டிபோல சொல்லிக்கொண்டே போனாள்.
அதன் பின்னர் பாட்டு ஒன்றை சொல்லித் தந்தேன். அவளும் ஆடிக்கொண்டே பாட்டு பாடி என்னையும் ஆட வைத்தாள். பேசிப் பேசி என் சக்தியே குறைந்துவிட்டது. ரயில்வே கேண்டீனில் இருந்து பஜ்ஜி போண்டா வந்தது. ஒரு ப்ளேட் கொடுக்கச் சொன்னேன். மூன்று போண்டா பதினாறு ரூபாய். ஒன்றை எடுத்து அமுதாவிடம் கொடுத்தேன். அவள் அம்மாவைப் பார்த்து சாப்பிடட்டுமா என்று கேட்பாள் என எதிர்பார்த்தேன்.


எதிர்பாராத பதில்!
"அங்கிள். இது பேட் ஆயில்ல (bad oil) செய்து இருப்பாங்க. ஸ்டொமக் ப்ராப்ளம் வரும். நீங்க இப்பவே குண்டா இருக்கீங்க. இன்னும் சாப்பிட்டா அவ்வளவு தான்"
சுரீர் என்று மண்டை மீது அடித்தது போல இருந்தது. கேண்டீன் சர்வர் வேகமாக நடையைக் கட்டினார். மிகவும் நெருடலாகிவிட்டது. வாயில் வைத்ததை உண்டுவிட்டு மீதி இருந்த இரண்டு போண்டாவை அந்த வழியே யாசகம் கேட்டு வந்த ஒரு வயதான பாட்டியிடம் கொடுத்தேன்.
அமுதா என்னைப் பார்த்து அநாயசமாக, "அவங்க ஒடம்பு கெட்டுப்போனா பரவாயில்லையா?" எனக் கேட்டுவிட்டு அவள் அம்மாவின் மடியினில் குடிபெயர்ந்தாள்.
என்ன செய்வதென தெரியாமல் கண்ணயர்ந்தேன். குப்பம் ரயில் நிலையத்தில் ஜன்னலோர சீட் காலியானது. அமுதா மீண்டும் வந்து மடி மீது உட்கார்ந்து கொண்டாள்.


அவள் வகுப்புக் கதைகளைக் கூற ஆரம்பித்தாள். தன் தோழி ஜெனி·பர் வைத்திருக்கும் பென்சில் பாக்ஸ் முதல் அவள் வகுப்பு ஆசிரியை வரை ஓயாமல் பேசினாள். எத்தனை உன்னிப்பான பார்வைகள், நினைவுகள், கவனிப்புகள். அவள் பேசி எனக்குத் தாகம் எடுத்தது.
"அமுதா காபி, டீ, பால் ஏதாச்சும் குடிக்கறியா, இல்ல இதுக்கும் ஏதாச்சும் வெச்சிருக்கியா?"
"நீங்க குடிங்க"
டீ குடித்தேன். பிளாஸ்டிக் கப்பை கீழே போட வந்தேன், அமுதாவின் பார்வையில் ஏதோ இருப்பது புரிந்தது.
"கீழே போடாதே" என்ற எச்சரிக்கை கண்களாலே. நானும் என்ன செய்ய என்று கேட்டேன்.
உடனே தன் அம்மா அருகிலிருந்த கவரை எடுத்து நீட்டினாள். அதில் ஏற்கெனவே 4-5 கப்புகளும், பிஸ்கட் கவர்களும் இருந்தன. வார்த்தைகள் தேவையில்லை அவள் செய்கைக்கு. எத்தனை பாடங்களை சொல்லாமல் சொல்லித் தருகிறாள்.
அள்ளி அணைத்தபடி "யாருடா உனக்கு இதெல்லாம் சொல்லித் தந்தது?" ஆனந்த ஆச்சரியத்தில் நான். அவள் முகத்தில் புன்னகை. அப்பாவையும் அம்மாவையும் பார்த்தாள். அப்பாவிற்கு சந்தோஷம். மெல்லத் தலையாட்டியபடி என் காதருகே வந்து "எங்க புவனா மிஸ்" என்று ரகசியம் பேசினாள்.
இதன் நடுவே, காட்பாடியருகே ஒரு சிறுவனிடம் சண்டையிட்டாளே அந்தக் குடும்பம் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கியது. அமுதா ஓடிச்சென்று அந்தப் பீப்பீயை அவனுக்குப் பரிசளித்து வந்தாள்.
"உனக்கு இதே தொழிலாப் போச்சு". அமுதாவின் அப்பா தன் பணத்தை இப்படியே விரயப்படுத்துகிறாள் என்று வருத்தப்பட்டார்.

அங்கிள், நாம ஏதாச்சும் கேம் விளையாடலாமா?" என்றாள்.
நான் "இப்போ ஐந்து கண்ணாடிப் பொருள்களை சொல்லு பார்ப்போம்" என்றேன்.
"உங்க மூக்குக் கண்ணாடி" விழுந்து விழுந்து சிரித்தாள் கள்ளமில்லாமல். "ஜன்னல் கண்ணாடி" "கிஸான் பாட்டில்" "அப்புறம்..ம் ம்.. அதோ லைட் மேல கண்ணாடி" "அங்ங். அப்பா குடிப்பாரே அந்த old monk பாட்டில்.. .." நிசப்தம். எங்கள் உரையாடலை சுற்றி இருந்த அனைவரும் ரசித்துக் கொண்டிருக்க, அனைவருக்கும் ஆச்சர்யம்.
படால்..படால் என்று அமுதாவின் கன்னம் பதம் பார்க்கப்பட்டது. அவளைத் தன் பக்கம் இழுத்தார் அவள் அப்பா. "சார்.." என்று நான் தடுக்க..முறைத்தார்.
அமுதா அழுது அழுது தூங்கிவிட்டாள். கலகலவென இருந்த இடம் காலியானது போல இருந்தது.
கே.ஆர்.புரத்தில் வண்டி நின்றது. அந்தக் குடும்பம் இறங்கியது. இன்னமும் அம்மா தோள்மீது தூங்கியபடி அமுதா. பத்தடி நடந்த பின்னர், மெல்லக் கண்களைத் திறந்தவள் மெல்லிய சிரிப்பை என் மீது வீசிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள்.
அந்தக் குட்டித் தோழியை இனி எப்போது காண்பேனோ என்ற ஏக்கம் மனதை நிறைத்தது.

சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன.

ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர். போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் “இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியை தொடவே முடியாது! — சாத்தியமே கிடையாது!” என கூறினார்கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன.

மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியிலிருந்து நீங்கி கொண்டன

“இதில எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது” — கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து கொண்டேயிருந்தனர்.
இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக் கொண்டது. ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது.

எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது

சில வினாடிகளில் உச்சியை தொட்டு வெற்றியும் கண்டது
அனைவரும் வியந்து பொய் எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினாவினார்கள்

அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று.

“முடியாதவர்கள், அவர்களால் முடியாததை
உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள்.

சொல்லுபவர்கள் சொல்லட்டும். அவர்களிடம் நீ,
செவிடாக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது,”

அமாவாசை நெருங்க நெருங்க கோகிலிக்கு மனசு கெடந்து அடிச்சுக்கிட்டது. புருசன் அமுதராசு எல்லாத்துலயும் கெட்டிக் காரனாத்தேன் இருக்கறான்னு நினைச்சப்போ, அவளுக்குப் பெருமையாத்தேன் இருந்துச்சு. கல்யாணமாகி இந்த ஒரு வருசத்துல அவளை வெடுக்குனு ஒரு வார்த்தைகூட சொன்ன தில்லை. ரெண்டு பேரும் கவுறும் தோண்டி யுமா ஒண்ணுக்குள்ள ஒண்ணா பொருந்திப் போய்த்தேன் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க.
இவளை ஒரு குடம் தண்ணி எடுக்க சம்மதிக்க மாட்டான். அவ குத்தினா இவனுக்கு கை வலிக்கும். ஓடிவந்து உலக்கையை பிடுங்கு வான். இவ வரைக்கும் நல்லவன்தான். ஆனா, சோலைக்கிழவி விஷயத்துலதேன் இவளுக்கு அவனை பிடிக்காம போச்சு.
சோலை பாவம்… ஒரு பொண்ணாத்தான் பெறந்தாளே தவிர, ஒரு பொண்ணுக்குரிய எந்த விஷயமுமே இல்லாம ஒரு வெறுமை யான பொண்ணா வளர்ந்துட்டதால ஊருக்குள்ளருந்து ஒதுக்கப்பட்டுட்டா. அவளைப் போலவே அனாமத்தாக் கெடந்த அமுதராசு மேல கெழவிக்கு எப்பவும் ஒரு இரக்கத்தோட கூடின பிரியமிருந்துச்சு. அவனும் அவளுக்கு ஏண்ட வேல, எடுத்த வேல செஞ்சுக்கிட்டு அவ அணைவிலதேன் வளர்ந்தான்.கோகிலிக்கும் சொந்தம்னு யாருமில்ல. அரைக்கண் பார்வையோட பெத்த தாய் ஒருத்தி இருந்தா. அவளும் ஒருநாள் அம்மை நோய்ல குளுந்து போகவும், தன்னந்தனியா நின்ன இவளை சோலைப் பாட்டிதான் ஊர்க்காரங்ககிட்ட சொல்லி, அமுதராசுவுக்குக் கட்டி வெச்சா.
இவங்க கல்யாணம் முடிஞ்சு முப்பது நாள்தான் ஆகியிருந்துச்சு. சோலைக்கு நெஞ்சுக் குத்து வந்து, உயிருக்குப் போராடிக் கிட்டு இருந்தா. அவளோட சொந்தங்கள் அவ உயிரைக் காப்பாத்துறதை விடவும் அவ சொத்தை யார், யார் பங்கு போடுறதுனு தான் ஏடாசி போட்டுக்கிட்டு இருந்தாங்க.
சோலையும் சும்மா இருக்கல. அவளுக்குத் தக்கன ஒரு வீடு, அரக்குருக்கம் பிஞ்சை, காதுப் பாம்படம், அஞ்சாயிரம் ரூபாய்னு சேர்த்து வெச்சிருந்தா. அவ பணத்துக்கும், வீட்டுக்கும் ஏடாசி போட்டுக்கிட்டிருந்தவங்களோட வாயை நச்சுனு அடைக்கிற மாதிரி கிழவி ஒரு விஷயத்தைச் சொன்னா.
‘‘என் சொத்த யாருனாச்சிலும் எடுத்துக்கோங்க. ஆனா எனக்கொரு ஆச இருக்கு. அத என் சொத்த எடுத்தவங்க செஞ்சிரணும்’’னு ஒரு முடிச்சைப் போட, எல்லாரும் அவகாச்சியோட, ‘‘அது என்ன ஆச?’’னு கேட்டாங்க. கிழவியும் ரொம்ப சாவகாசமா, ‘‘என்ன பொதச்ச எடத்தில அமாவாசைக்கு அமாவாச ஒரு சூடத்தக் கொண்டு பொருத்திட்டு வரணும்’’னு சொன்னா.
எல்லாரும் திடுக்கிட்டுப் போனாங்க. ‘‘கிழவிக்கு ஆசயப் பாரு.. தண்ணிக்குள்ள கெடக்க தவள தாவி வானத்தத் தொடணுமின்னுச்சாம். அது கெணக்காவில்ல இவ அலயிதா. சூடம் பொருத்த போறவகள இவளே பேயா வந்து அடிச்சாலும் அடிப்பா’’னு சிலர் ஒதுங்கிக்கிட, மத்தவங்க, ‘‘நம்ம விடிஞ்சாக் காடு, பொழுதடஞ்சா வீடுன்னு ஒருவாக் கஞ்சிக்கு பரிதவிச்சிக்கிட்டு அலயிதோம் இதுல அமாவாசயக் கண்டமா? பாட்டுமயக் கண்டமா? இவ சொத்துக்கு ஆசப்பட்டு இன்னைக்கு ஆட்டுமின்னு சொல்லிட்டு நாள, பின்ன பொருத்தாம விட்டுட்டமின்னா, இருசியா சாவுத கிழவி. எதும் வாக்கு விட்டுட்டானா அம்புட்டுத்தேன். நம்ம புள்ள, குட்டி வெளங்காது’’னு சொல்லி, விலகிக்கிட, அமுதராசு மட்டும் நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு கிழவிகிட்ட வந்து, ‘‘நானு உனக்கு அமாவாசைக்கு, அமாவாச சூடத்த பொருத்தி வச்சி, கையெடுத்து கும்புடுதேன்’’னுட் டான்.
புருசன் சொன்னதைக் கேட்டதும் கோகிலி அலமலந்து போனா. புருசனை ஒதுக்கமா கூப்பிட்டு, ‘‘ஏ.. கூறுகெட்ட மனுசா.. என்ன பேச்சு பேசுத.. இதென்னா வெளாட்டுக் காரியமா? இன்னைக்கு செஞ்சிட்டு நாள விட்டுர்றதுக்கு? உம்ம உசுரு உள்ள தண்டியும் பொருத்தி வைக்கணும். பேசாம இரும்’’னு தடுத்தா.
இவ பேச்சை அமுதராசு காதுலயே வாங்கல. ‘‘பேசாம இருத்தா. மாத்தைக்கு ஒருக்கா சுடுகாட்டுக்குப் போயி ஒரு சூடத்த பொருத்தி வைக்கப் போறோம். கிழவி சொத்தக் கொடுக்காட்டாலும், என்ன அணச்சி, பசியில எரிஞ்ச வவுத்த குளுர வச்சவ.. நானு அவளுக்கு செய்யத் தேன் போறேன்’’னவன், பிடிசாதனையா சொன்னதோட, எல்லார் முன்னாலயும் கிழவியோட தலையில அடிச்சு சத்தியமும் செஞ்சுட்டான். கிழவியும் நிம்மதியா சத்தியம் வாங்கின சந்தோசத்துல உயிரை விட்டா.
ஆனா, ஆறு மாசம் வரைக்கும் கிழவி நினைவாவே அக்கறையா, சூடத்தை வாங்கிக்கிட்டு சுடுகாட்டுக்குப் போய், கிழவியை எரிச்ச இடத்துல பொருத்தி வெச்சதோட சரி.. அதுக்குப் பெறகு போகவே இல்ல. அவளும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டா. ரெண்டொரு முறை கழுத்துப் பிடியா தள்ளியும் பார்த்துட்டா. ஆனா, அவன் போகவே இல்ல. போகாதது மட்டும் இல்ல.
‘‘போத்தா போ, கிழவி சொன்னானு நீயும் மனுசன படுத்தாத.. அவளுக்கு நம்ம சொத்த எடுத்து இவுக ஆளவானு வவுத்தெரிச்ச.. அதேன் போற போக்குல ஒத்த சொல்ல எடுத்து எறிஞ்சிட்டுப் போயிட்டா. நீ அத முந்தானயில முடிஞ்சிக்கிட்டு அலயிதே, செத்து சாம்பலாப் போன கெழவி நமக்கு வாக்கு விடுதாளாக்கும்.. பேசாம இரு’’னு சொல்லிட்டான்.
ஆனா, கோகிலிக்கு சமாதானமாகல. கிழவிக்கு சத்தியம் செஞ்சி கொடுத்துட்டு, அத செய்யாம அவ சொத்த மட்டும் அனுபவிக்கறது நல்ல பாம்பை மடியில கட்டிக்கிட்ட மாதிரி இருந்துச்சு. இதனாலயே அவளுக்கும், புருசனுக்கும் மாசம் ஒரு தடவை சண்டை வந்தது. ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசாம, வெறைச்சுக்கிட்டு அலைவாங்க. பிறகு பேசிக்குவாங் இப்பவெல்லாம், அந்த சண்டை ரெண்டு, மூணு நாள் வரை நீடிக்க, ஆளுக்கு ஒரு மூலையில வெறும் வயித்தோட முடங்கிக் கிடந்தாங்க. ஆசை, ஆசையா காச்சின சோறும், குழம்பும் ஊசின வாடையோட தெரு நாய்க்காகக் காத்திருந்துச்சு.
வர, வர கோகிலிக்கு பயமா இருந்தது. ‘இந்த விஷயமே நம்ம வாழ்க்கையில ஒரு வெட்டுக் கத்தியா ஊடாடி புருசன், பொண்டாட்டியைப் பிரிச்சிடுமோ’னு நினைச்சு நடுங்கினா.
மறு மாசம்.. அமாவாசைக்கு முத நாள். நடுச் சாமம். சுருண்டு படுத்திருந்த கோகிலி திடீர்னு ஒரு அவயம் போட.. அமுதராசு மட்டும் இல்ல. அந்தத் தெருவே முழிச்சுடுச்சு. குபீர்னு எந்திருச்ச அமுதராசு விளக்கை பெரிசா தூண்டி விட்டான். பெரிசா எரிஞ்ச விளக்கோட வெளிச்சத்துல, சத்தம் வந்த திக்கம் பார்த்துத் திரும்பினவன் திகிலடிச்சுப் போனான். கோகிலி, கோகிலியா இல்ல.சிவந்த விழி பிதுங்கி, உருட்டி முழிக்க, தலைவிரி கோலத்தோட தீக்கோட்டையா நின்னவ, பல்லை நெருநெருனு கடிச்சுக்கிட்டே இவனை பார்த்து சிரிப்பும் சீறலுமா ஓடி வந்தா. அமுதராசுக்கு பயமாயிருந்தது. கதவைத் திறந்துக் கிட்டு வெளிய ஓடினான். கோகிலியும் விடாம துரத்த, ஊர்க்காரங்க அவளைப் பிடிச்சு நிறுத்தினாங்க.
மூர்க்கமா அவங்ககிட்டயிருந்து விடுபட முயற்சிச்ச கோகிலி வெறியாட்டத்தோட கத்தினா.. ‘‘அடேய்.. எனக்கு அமாவாசைக்கு, அமாவாச சூடம் பொருத்தி வைக்கேன்னு சத்தியம் செஞ்சவன் சொன்னபடி செய்யல. ஆனா, என் சொத்த மட்டும் அனுபவிச்சிக்கிட்டு இருக்கே. பாருடா.. இன்னைக்கிலருந்து எண்ணி எட்டு நாளையில உன் பொண்டாட்டிய என்னப் பொதச்ச ரக்குக்கே கொண்டு போவலனா… எம் பேரு சோல இல்லடா’’னு சொல்லிட்டு, மயங்கி விழுந்தா.
இப்பவெல்லாம் அமுதராசு கோகிலியை விட்டுப் பிரியுறதே இல்ல. பிரியத்தை கொட்டோ… கொட்டுனு கொட்டுறான். அமாவாசையை மறக்காம சுடுகாட்டுக்குப் போய் சூடம் பொருத்திட்டு வர்றான்.
புருசனை திருத்துறதுக்காக பொய்ச்சாமி ஆடின கோகிலிக்கு மட்டும் சிரிப்பு, சிரிப்பா வந்தது.


தாம்பரம் ரயில் நிலையம். காலை 8 மணி. ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தான் சந்துரு. நேற்று நடந்ததை எண்ணினான்.
மயிலை ரயில் நிலையத்தில் நேற்றுதான் அவளை முதன்முதல் பார்த்தான்.
5 அடி 8 அங்குலம் உயரம் அவள். கடலை மாவு நிறம், சுருள் முடி, சற்றே பெரிய நெற்றி. அதில் சின்ன வட்ட பொட்டு. காதில் தவழ்ந்துகொண்டிருந்த முடியைத் தாண்டி அவள் அணிந்திருந்த தங்கத்தோடு ஜொலித்தது. புன்னகையை அணிந்திருந்தன அவள் உதடுகள். நிலவைப் போல் வட்டமாக இருந்தது அவள் முகம்.
அவளைப் பார்த்த அந்த நொடியில் தன்னை மறந்தான் சந்துரு. அவள் அணிந்திருந்த கருப்பு நிற சுடிதாரைப் பார்த்ததும் “குயிலின் உடையணிந்து நடந்து வரும் மயிலே” என்று தன் மனதில் பட்டதை அவள் காதில் விழும்படி சொன்னான். அவளது புன்னகையை தனது ஹைக்கூ கவிதைக்குப் பரிசாகப் பெற்றான்.
நேற்று நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தபோது ரயில் வந்து சேர்ந்தது. அரக்க பரக்க உள்ளே ஏறி, காலியாக இருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந்தான்.
ஜன்னலோர இருக்கை, அதிவேகமாக போய்க்கொண்டிருக்கும் வண்டி, வெளியே விளம்பரப் பலகைகளுக்கு மத்தியில் மரங்கள், ஜில்லென்று காற்று. இந்த ரம்மியமான சூழ்நிலை அவனுக்கு மீண்டும் அவளை ஞாபகப்படுத்தியது.
நேற்று ரயிலில் கூட்டம் அதிகம். உட்கார இடமில்லை. கம்பியைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான். அவனுடைய வலது பக்கத்தில், அதே வரிசையில், இரண்டு ஆட்களுக்கு அடுத்ததாக அவளும் நின்று கொண்டிருந்தாள். அதை இப்போதுதான் கவனித்தான் சந்துரு.
என்ன தோன்றியதோ தெரியவில்லை. “ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் மயிலே” என்றான். இப்போதும் அவள் காதில் விழும்படி, கொஞ்சம் சத்தமாகவே சொன்னான்.
தன்னை ஒரு கவிஞனாக நினைத்து பெருமை கொண்டு, அவளிடம் என்ன ரியாக்ஷன் என்பதைப் பார்க்க எட்டிப் பார்த்தான். இவன் பார்ப்பதைப் பார்த்த அவள் ஒரு சின்ன புன்னகையை உதிர்த்தாள். சொக்கிப்போனான் சந்துரு.
நிகழ்காலத்துக்கு வந்தான். வண்டி ஒரு ரயில் நிலையத்தில் நின்றது. ஒரு கூடையில் மல்லிகைப்பூக்களை எடுத்து வந்தார் ஒரு பூ வியாபாரி..அத்தனையும் உதிரிப் பூக்கள். அதைப் பார்த்ததும் நேற்றைய நிகழ்வுக்கு அவன் நினைவு சென்றது.
நேற்றும் இப்படித்தான் ஒருவர் மல்லிகைப்பூக்களை எடுத்து வந்தார். சந்துரு கவிதைகளை கட்டவிழ்த்துவிடும் மனநிலையில் இருந்ததால், இந்த மல்லிப்பூக்களைப் பார்த்ததும் அவனுக்கு ஒரு கவிதை தோன்றியது.
“மல்லிகையும் மயிலும் மனம் கவர்கின்றன” என்றான். அடடா, என்னே ஒரு கவிதை என்று நினைத்த மறு நொடி இதற்கு அவளின் பதில் என்ன என்பதைப் பார்க்க ஆவலுடன் எட்டிப் பார்த்தான்.
சந்துரு எட்டிப்பார்த்ததைப் பார்த்த அவள், சட்டென்று தன் கையில் வைத்திருந்த கைப்பேசியில் எதையோ தேடுவதுபோல் நடித்தாள். இம்முறையும் அவள் உதடுகளில் புன்னகைப்பூ மல்லிகைப்பூபோல் மலர்ந்திருந்தது. இந்தப்பூவிலிருந்து மணம் வீசவில்லை.
இதைப் பார்த்ததும் வானத்தில் பறப்பதுபோல் உணர்ந்தான் சந்துரு. கம்பியை வலது கையில் பிடித்துக் கொண்டு, இடது கையை நீட்டி, வானத்தில் இருந்து விழுவது போல் சாய்ந்தான்.
அப்போது அவன் கை, அவனுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு வயதானவரின் மேல் பட்டது. “இந்தாப்பா தம்பி, பாத்து நில்லு. நான் இங்க இருக்கறது உன் கண்ணுக்குத் தெரியலயா? என்ன நெனப்புல இருக்க?” என்று அதட்டினார் அவர். தலைகுனிந்தான் சந்துரு.
“ச்சே, இப்படி ஒரு அவமானமா?” என சந்துரு நினைப்பதற்குள் அந்த வயதானவர் சொன்னதைக் கேட்டு யாரோ ஒரு பெண் சிரிப்பது கேட்டது. யாரென்று பார்க்க எட்டிப் பார்த்தான் சந்துரு. இவன் பார்ப்பதைப் பார்த்த அவள் டக்கென்று தன் சிரிப்பை அடக்கி தன் கைப்பேசியை நோண்ட ஆரம்பித்தாள்.
இவன் வழிந்துகொண்டு தலையை சொரிந்து கொண்டு அடக்க ஒடுக்கமாக நின்றான்.
“நாம செய்யறத, நமக்கு நடக்கறத, அவள் கவனிக்கிறாடா சந்துரு. அடுத்த கட்டத்துக்குப் போயிட்டே நீ. இப்படியே போனா, வெற்றி உனக்குத்தான்” என்று தன்னை ஊக்குவித்துக் கொண்டான்

அப்போது அவனுடைய கைப்பேசிக்கு ஏதோ அழைப்பு வந்ததால் மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்தான் சந்துரு. அழைப்பை ஏற்று “ஹலோ” என்று சொன்னவன் அடுத்த ஐந்து நொடிகளில் அழைப்பை துண்டித்தான். முகம் முழுவதும் கோபமும், வெறுப்பும் நிரம்பியிருந்தது.
“ச்சே, இவளுங்க தொல்லை தாங்க முடியல. சும்மா கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பர்சனல் லோனுன்னு உயிரை எடுக்கறாளுங்க” என்று மனதிற்குள் அலுத்துக் கொண்டான்.
உடனே அவனது நினைவு மறுபடியும் நேற்றைய நிகழ்வுக்குச் சென்றது.
எங்கே விட்டான்? ஆங், மல்லிகைப்பூ கவிதைக்குப் பிறகு அவமானப்பட்டது, அதற்கு அவள் சிரித்தது.
அந்த வயதானவருக்குப் பக்கத்தில் அடக்க ஒடுக்கமாக நின்றுகொண்டிருந்தபோது அவன் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான் சந்துரு.
“ஹலோ….”
மறுமுனையில் ஒரு பெண் குரல். “சார் நாங்க ஏபிசிடி பாங்குல இருந்து பேசறோம்”
“சொல்லுங்க மேடம்” இவ்வளவு கனிவாக யாரிடமும் பேசியதில்லை சந்துரு.
“உங்களுக்கு பர்சனல் லோன் வேணுமா சார்?”
அந்தப் பெண் முடிக்கும் முன்னரே, “எனக்கு லோன், கடன் எல்லாம் வேணாம். எங்கிட்ட காசு நெறைய இருக்கு மேடம். உங்களுக்கு லோன் வேணும்னா கேளுங்க. நான் தர்றேன்” என்றான் சந்துரு. இதைக் கேட்டதும் அந்தப் பெண் அழைப்பைத் துண்டித்தாள். கைப்பேசியை எடுத்து தன் பேண்ட் பாக்கெட்டினுள் நுழைத்தான் சந்துரு.
“அவ்ளோ காசு இருக்கறவரு எதுக்காக எலெக்ட்ரிக் டிரெயின்ல வரணும்? காருலயோ, ஆட்டோவுலயோ போயிருக்கலாமே?” என்றது ஒரு பெண் குரல்.
யாருடைய குரல் இது என்று வலது பக்கம் எட்டிப் பார்த்தான். இவன் பார்த்ததைப் பார்த்த அவள், விருட்டென தன் கைப்பேசியை எடுத்து காதில் வைத்து யாரிடமோ பேசுவது போல் பேச ஆரம்பித்தாள்.
அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தான் சந்துரு. அவளும் இவனைப் பார்த்து சிரித்துவிட்டு, கீழே குனிந்தாள். பயணம் முழுவதும் சந்துரு அவளை சிரித்துக்கொண்டே பார்ப்பது, அவளும் பதிலுக்கு சிரிப்பது என்றே போனது.
“லவ் வந்துடுச்சுடா சந்துரு. வாழ்த்துகள். சாதிச்சிட்டே நீ” என்று தன்னைத்தானே மனதுக்குள் தட்டிக் கொடுத்துக் கொண்டான்.
வண்டி தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்றது.. அவள் ரயிலை விட்டு இறங்க, அவளைப் பின் தொடர்ந்து சென்றான் சந்துரு.
இவன் பின் தொடர்வதைப் பார்த்தும் பார்க்காததுபோல் நடந்து கொண்டிருந்தாள் அவள்.
சாலையில் ஒரு வளைவு வந்தது. அந்த வளைவில் திரும்பியதும் “ஸ் ஸ்” என்று ஒலி எழுப்பினாள். சில அடிகள் பின்னால் வந்து கொண்டிருந்த சந்துரு அப்போதுதான் அந்த வளைவில் திரும்பினான், அவளைப் பின் தொடர்ந்தபடியே.
அப்போது திடீரென நான்கு பெண் கான்ஸ்டபிள்கள் அங்கு வந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர்.
“ஏண்டா, எவ்ளோ தைரியம் இருந்தா எங்க இன்ஸ்பெக்டர் மேடத்தையே பின் தொடர்ந்து வருவே?” என்றார் ஒரு கான்ஸ்டபிள்.
“என்னாது போலீஸா?” நடுங்க ஆரம்பித்தது சந்துருவுக்கு.“ஆமாடா. பின்ன, மயிலுன்னு நெனச்சியா?” என்றாள் சந்துருவின் மயில். அவள் குரலில் கிண்டல் இல்லை, கோபம் மட்டும்தான் நாட்டியமாடிக்கொண்டிருந்தது.
“சா.. சாரி மேடம்.. நீங்க யாருன்னு தெரியாம… இப்படியெல்லாம் பேசிட்டேன்…. மன்னிச்சிடுங்க ப்ளீஸ்” என்று வேண்டினான். சரளமாகக் கவிதை சொன்ன வாயிலிருந்து இப்போது வார்த்தைகள் வரவேயில்லை.

“உன்னை மாதிரி ஆளுங்க தொல்லை அதிகமானதாலதான் நானே இப்போல்லாம் ரயில்ல வந்து ஈவ் டீஸிங் பண்றவங்களைப் பிடிக்கறேன். இவனைத் தூக்கிட்டு ஸ்டேஷனுக்கு வாங்க” என்று கோபமாக சொல்லிவிட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த தன் டி.வி.எஸ். ஸ்கூட்டியில் ஏறிப் பறந்தாள்.
இன்றுதான் சந்துருவை காவல் நிலையத்திலிருந்து வெளியே விட்டிருக்கிறார்கள். மயில்களின் நடனம் போல் சந்துருவின் உடலில் நேற்று முழுவதும் காவலர்கள் தாண்டவமாடினார்கள் என்பதைச் சொல்லவா வேண்டும்?
மயிலை ரயில் நிலையத்தில் இறங்கி, நொண்டி நொண்டி நடந்தான். வலது காலில் பலத்த அடி போல.1 கருத்து: