http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 50

பக்கங்கள்

திங்கள், 22 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 50

 மறுநாள்


வேலையில் என்னை முழுகடித்து, வாழ்க்கை எனக்களித்த எதிர்பாராத அதிர்ச்சியில் இருந்து, என்னை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்துக் கொண்டு இருந்தேன். மனது கொஞ்சம் தெளிவடைந்து இருந்தாலும், ஏதோ ஒரு ஏக்கம் ஒட்டிக் கொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லை. மாலை மூன்று மணியளவில், நேத்ரா NGO குழவினருடன் வந்திருந்தாள். இந்த வருடம் அவர்களுக்கு அளித்த நன்கொடைக்கக்காக நன்றி சொல்ல வந்திருந்தார்கள். சிறிது நேரம் பேசிவிட்டு, அவர்களை அனுப்பிவிட்டு மீண்டும் என் அறையில் நுழைந்த நேத்ரா, 

"என்ன டா இது?? பர்ன் இஞ்சூரி ஆயின்மெண்ட்??" என் டேபிளில் இருந்த ஆயின்மெண்ட் டப்பாவை கையில் எடுத்து வைத்துக் கொண்டு என்னைப் பார்த்து கேட்டாள்.

 


நேற்று வெண்ணீரல் குளித்ததன் பலனாக, தோள்களின் இருபுறமும், மேல் முதுகிலும், மார்பிலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக தோலில் வெடிப்பு ஏற்பட்டு, கொப்பலங்களாக ஆகியிருந்தது. காலை அலுவலகம் வந்ததுமே, அதற்கு மருத்துவம் பார்க்க, ஒரு தோல்நிபுனரை வர வைத்திருந்தேன். அவர் பரிந்துரைத்த மருந்தில் ஒன்றைத்தான், கையில் வைத்துக் கொண்டு கேட்டாள் நேத்ரா. 

“சும்மா, நேத்து க்லோவேஸ் போடாம வெயிட் அடிச்சேன், அதுக்குத்தான்!!” புண்ணாயிருந்த கைகளை காட்டினேன். 

“அதுக்கு எதுக்கு டா, பர்ன் இஞ்சூரி ஆயின்மெண்ட்??” 

"உன்ன மாதிரி, ஒரு படிச்ச டாக்டர் பிரிஸ்கரைப் பண்ணனதுதான்!!" சிரித்தேன், முறைத்தாள்.

"சரி, அதை விடு!! காபி சாப்பிடுறியா?" நேத்ராவிடம் கேட்டுவிட்டு, உதவியாளருக்கு அழைத்து,

"நான் சொல்ற வரைக்கும், யாரையும் அலவ் பண்ணாதீங்க!!" என்று சொல்லிவிட்டு, அறையிலிருந்த மற்றொரு கதவைத் திறந்து, என் தனி அறைக்குள் நுழைந்தேன். என்னை தொடர்ந்து உள்ளே வந்தாள், நேத்ரா.

"என்ன சாப்பிடுற?" என்று கேட்டவாறு, அங்கிருந்த கிச்சன் நோக்கி நடந்தேன்.

"நீ இரு!! அந்த கைய வெச்சிகிட்டு, காபி போடப் போறியா??" என்றவள், என்னை தாண்டி நடந்தாள்.

இருவருக்கும் சேர்த்து காபி போட்டவள், என்னிடம் கப்பை நீட்ட, வாங்கிக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தேன். 

“அஞ்சு மாசம் இல்ல?” நேத்ராவின் மேடிட்ட வயிரை பார்த்துக் கேட்டேன். 

“ஆமா!!” சிரித்தாள், மேடிட்ட வயிற்றை வாஞ்சையாக தடவினாள். மதுவுக்கும்

மதுவுக்கும் குழைந்தை இருக்குமோ? ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்ன பெயர் பெயர் வைத்திருப்பாள்? அல்லது நெதராவைப் போல கற்பமாக இருப்பாளோ? என்ற என்ன எண்ணத்தை, நேத்ராவின் கேள்வி கலைத்தது.

"என்னது இது?" என்றவாறு காபி கப்பை டேபிளில் வைத்தவள், அதிலிருந்த பார்சலைப் எடுத்தாள்.

"....................." உதடு பிதிக்கினேன்.

“என்ன சொல்றார், குழந்தையோட அப்பா? என்ன குழந்தை வேணுமாம்?” 

“ரெண்டு பேருக்கும் பையன் தான் வேணும்!!” சிரித்தவளின் கவனம் பாரசாலைப் பிரிப்பதிலேயே இருந்தது.

இன்று காலை தான் அந்த பரிசு வந்திருந்தது. கருத்தரங்கத்தில் கலந்து கொண்டதற்காக, நன்றிக் கடிதத்துடன், இந்த பரிசையும் அனுப்பியிருந்தது அந்த கருத்தரங்கை நடத்திய ஊடக நிறுவனம். பிரித்துப் பார்த்தவள் "வாவ்" என்றவாறு, அதை என்னைப் பார்த்து காட்டினாள். கருத்தரங்கத்தில் காட்டப்பட்ட அதே புகைப்படம், பெரிதாக பிரேம் செய்யப்பட்டிருந்தது.

"அழகா இருக்கடா இதுல!! எப்ப எடுத்தது?" என்றவள், எழுந்து, அறையைச் சுற்றி பார்த்தவாரே, சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைக் கழட்டி, அந்த இடத்தில், போட்டோவை மாட்டினாள்.

"தெரியல, காலையிலிருந்து நிறைய பேரு நன்றி சொல்லிகிட்டே இருக்காங்க!!, எதுக்கு தேவை இல்லாம, உங்க NGO கும்பலை கூட்டிட்டு வந்து, இந்த ட்ராமா?? அதுவும் இந்த நிலமையில!! பிரதீப் எதுவும் சொல்லமாட்டான??" பேச்சை மாற்றினேன்.

“அவன் என்ன சொல்லணும்?” என்று கேட்டு, என்னைப் பார்த்தவள். 

"உனக்கு நன்றி சொல்றதுக்கெல்லாம், அவங்கள கூட்டிட்டு வரேல!!" என்னை நக்கலா பார்த்து சிரித்தவாறு, மீண்டும் வந்து சோபாவில் அமர்ந்தாள்.

"லாஸ்ட் டைம், நீ செக் குடுதப்பவே, யாராலயும் நம்ப முடியாம எப்படின்னு கேட்டப்ப!!, நீ, நான் பார்த்து வளர்ந்த பையன்னு சொன்னா, யாருமே நம்பல!! அதான் சும்மா ஒரு பந்தாக்காக, "நாங்களாம் யாருன்னு தெரியுமானு?” அவங்களுக்கு காட்டுறதுக்கு கூட்டிட்டு வந்தேன்" காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு பெரிதாக சிரித்தாள். நானும் லேசாக மனதுவிட்டு சிரித்தேன். இருவரும் காபியை அருந்த ஆரம்பித்தோம்.

"பானுவ பாத்தியா?" எதைப் பற்றிப் பேசுவதற்காக, அவளை உள்ளே அழைத்து வந்தேனோ, அதைப்பற்றி அவளே பேச ஆரம்பித்தாள். மறுப்பாகத் தலையசைத்து விட்டு.

"அவ புருஷனைப் பாத்தேன்!!" சிரிக்க முயன்றேன்.

"ஓ" போட்டவள் தலையாட்டினாள், பலத்த சிந்தனையுடன். அந்த உரையாடலை எப்படி தொடர்வது என்று தெரியாமல் தவித்திருந்தேன்.

"அவள்ட பேசேன்!!" தயங்கியவாறு, அவளிடம் கேட்டேன். என்னையே உற்று நோக்கினாள்.

"இல்ல, ஜஸ்ட் அவ எப்படி இருக்கனு தெரிஞ்சிக்கணும்!!" தலையை குனிந்து, விரல்களை ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டேன். பின் நிமிர்ந்து அவளைப் பார்த்து

"என்னால முடியல...…..." பாதியில் நிறுத்திய என்னை, அதிர்ச்சியாக பார்த்தாள்.

"ச்சீ!!.... நீ நெனைக்கிற மாதிரி இல்ல!!.... அவ நல்லா இருக்கான்னு தெரிஞ்சா, கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்!!" அவசர அவசரமாக அவள் பார்வையின் அர்த்தத்தை மறுத்தேன்.

என்னை சில நொடி இமைக்காமல் பார்த்தவள், மொபைலை எடுத்து நோண்டினாள். "டிங்" என்ற ஒலி என் மொபைலில் இருந்து வந்தது. என் மொபைலை பார்த்து கண்ணை காட்டினாள். ஆனால் அதை எடுத்துப் பார்க்கும் தைரியம் என்னிடம் இல்லை. சிறிது நேரம் பொருத்தவள், பின் அவள் மொபைலை என்னை பார்த்து நீட்டினாள். தொடுதிரையில் மாலையும், கழுத்துமாக ரஞ்சித்தும், மதுவும் அமர்ந்து இருக்க, ரஞ்சித்தின் அருகே அவனது அண்ணன் மான்ஜீத், மதுவின் அருகே, இன்னொரு பெண். மான்ஜீத் சிங்கின் மனைவியாக இருக்கலாம். அவள் கையிலிருந்து மொபைலை வாங்கி, மீண்டும் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அதில் மது, சிரித்த முகமாக இருந்தாலும், அதில் சின்னதாக இலையோடிய வலி, எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. சில நொடிக்கு முன் அவள் சந்தோஷத்தை அறிந்து கொள்ள விரும்பியது உண்மையா? என்ற சந்தேகம் எனக்கே வந்தது. 

"Sometimes it's better not to revisit, the past!!. அடுத்த நாளே, இந்த போட்டோவ எனக்கு அனுப்பிட்டா, டேட் வேணும்னா செக் பன்னிக்கோ!!... நான்தான், உன்னை தேவையில்லாமல் கஷ்டப்படுத்த வேண்டாம்னு அனுப்பல!!..... கண்டிப்பா, சந்தோஷமாதான் இருப்பா, கல்யாணத்துக்கு முன்னாலேயே ரஞ்சித்துக்கு, உங்கள பத்தி எல்லாம் தெரியும்!!.... தேவை இல்லாததப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு, உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும், காம்ப்ளிகேட் ஆக்கிடாத!!" நிதானமாக நேத்ரா சொல்லச் சொல்ல, ஆமோதிப்பாக தலையாட்டினேன்.

"இந்த லவ் பண்ணி பிரிஞ்சு போனதுக்கு அப்புறம், ஃப்ரெண்ட்ஸ் ஆகி, பேசிப் பழகுவது எல்லாம், படத்துல வேணாம் ஒர்க் அவுட் ஆகும்!!..... நிஜத்துல இரண்டு பேர் வாழ்க்கைளையும், தேவையில்லாத பல பிரச்சனைகள் கொண்டுவரும்!!... அதுவும் இல்லாம, நானே பலதடவை நினைச்சிருக்கேன், நாம மூணு பேரா லவ் பண்றமோனு!!" சிரித்தாள், விரக்தியாக நானும் சிரித்தேன்.

"அதனாலதான் சொல்றேன்!!, move on!!..... சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ!!.... அதுதான் எல்லோருக்கும் நல்லது!!" என்றவள், என்னை நெருங்கி அமர்ந்து என் கையை பிடித்துக் கொண்டாள். சிரித்தேன், அதன் உணர்வு என்ன என்பது எனக்கே புரியவில்லை. சுதாகரித்துக்கொண்டு 

"நீ கேட்டியே அந்த சின்ன பையன், எப்படி இருக்கான்??" அவள் சிறிது நேரத்திற்கு முன் மாட்டிய போட்டோவை பார்த்து கேட்டேன். சிரித்தாள்.

"டைமாச்சு, நான் கிளம்புறேன்!!" என்றவள், என் தலையை ஆதரவாக தடவினாள்.

அந்த அறையிலிருந்து வெளியேறினோம்.

"அவகிட்ட நான் பேசாம இருக்குறதுக்கு வேற காரணம் இருக்கு!!.... எங்க ரெண்டு பேரொட பெர்சனல்!!.... ரெண்டு நாள் டைம் எடுத்து யோசி, மறுபடியும் அந்த போடோவ பாரு!!.... அதுக்கப்புறமும், அவளப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சுன்னா, எனக்கு கூப்பிடு!!.... நான் அவ கிட்ட பேசுறேன்!!" என்றவள், வெளியேறினாள்.

எனது இருக்கையில் அமர்ந்தேன். நீண்ட நேரமாக, என் மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தேன். நேத்ரா, அனுப்பிய புகைப்படத்தை ஒரு 10 நொடி பார்த்தேன், நேற்றில் இருந்து என் மனநிலையை சிறிது யோசித்தேன், நேத்ரா சொன்னதுதான், சரி என்றுபட்டது. . கண்களை மூடி, விரல்களால் தொடுதிறையின் பொத்தானை தேடி, அதை அனைத்து வைத்தேன். நீண்டதாக ஒரு பெருமூச்சு விட்டேன்.

அடுத்த நாள் மாலை, 

நேற்று எடுத்த உறுதியை இழந்தேன். என் மனம் குரங்கைப் போல், மீண்டும் என் நினைவுகளை இறுக கட்டிக்கொண்டது, இறுக்கமாக உணர்ந்தேன். அந்த இருக்கம்தான், மீண்டும் என்னை மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றது. காலையிலேயே டென்னிஸ் கோர்ட்டை சரி செய்யச் சொல்லி இருந்தேன். காலையில் கொஞ்சம் தெளிவாக இருந்தா போது, என் மனதின் ஏக்கத்திற்கு, இறுக்கத்திற்கு டென்னிஸ் தான் காரணம் என்று என்னை நானே கன்வின்ஸ் செய்தேன். டென்னிஸ் கோர்ட்டை சுத்தம் செய்யப்பட்டு, வலை மாற்றப்பட்டு, விளையாடுவதற்கு தயாராக இருந்தது. அதைக் கண்டதும் என் மனதில் சின்னதாக ஒரு மகிழ்ச்சி. மீண்டும், டென்னிஸ் ஆட வேண்டும் போலிருந்தது. சில நிமிடங்களிலேயே, அந்த எண்ணம் அடக்க முடியாத ஆசையாக மாறியது.

ஒரு மணி நேரம் கழித்து,

டென்னிஸ் பந்துகள், நான்கு ராக்கெட்டுகள் சகிதம் அந்தக் கடையில் இருந்து வெளியேறி காரில் ஏறியதும், கார் புறப்பட்டது. இருபது நிமிடப் பயணத்திற்குப் பின், எதேச்சையாக என் கண்கள் எங்கள் டெண்ணிஸ் அகடமி மீது விழுந்தது. தினமும் அலுவலகத்திற்கு அக்கடமீயைத் தாண்டிதான் சென்று கொண்டிருந்தேன். ஆனால், என்றுமே கவனித்ததில்லை. டிரைவரிடம், காரை டெண்ணிஸ் அகடமிற்குள் செலுத்தும்படி சொன்னேன். இறங்கி சுற்றிப் பார்த்தவாறு நடந்தேன், என் வாழ்வில் ஐந்தில் ஒரு பங்கை, இங்குதான் வாழ்ந்திருக்கிறேன், மிகவும் மகிழ்ச்சியாக. நிறைய மாறியிருந்தது. வழக்கமாக இந்த நேரம், அனைத்துக் கோர்ட்டுகளிலும் சிறியவர்களும் பெரியவர்களுமாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இப்பொழுது மொத்த கிரவுண்டிலம் வேலையாட்கள், வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஏதோவொரு டோர்னமெண்ட்க்காண, தயாரிப்பு என்று புரிந்தது. அலுவலகத்திற்குள் நுழைந்ததுமே, என்னை கவனித்துவிட்ட சுந்தர் சார், எழுந்து வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டார்.

இரண்டு மணி நேரம் கழித்து

ஒரு சின்ன குழப்பத்துடன், வீட்டின் ஹாலில், சோபாவில் அமர்ந்திருந்தேன். முதலில், நானும் சுந்தர் சார் மட்டுமே, பேசிக் கொண்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமாக கூடிய கூட்டம் அரை மணி நேரத்தில் அந்த அறை கொள்ளாத அளவிற்கு பெருகியது. நான் தொழிலில் வெற்றி பெற்றதை பற்றி பாராட்டி அல்லது அதற்காக சந்தோஷப்பட்டு, ஆச்சரியப்பட்டு ஆரம்பிக்கும் பேச்சு, சில நொடிகளுக்குளாகவே, நான் டென்னிஸ் ஆடிய காலத்தில் தான் வந்து நிற்கும். விளையாட்டில் மோகம் கொண்டவர்களின் உலகம் வித்தியாசமானது, வெற்றி தோல்வியைக் காட்டிலும், “expressing oneself” தன் திறமையை காட்டுவதே, அங்கே ஓங்கி நிற்கும். தன் முழுத் திறமையையும் காட்டி விளையாடிய பின், ஒருவன் தோற்றுப் போனால், அதற்காக பெரிதாக வருந்த மாட்டான். பெரும் போராட்டத்திற்குப் பின் தோல்வியுற்ற ஒருவனின் ஆட்டம், வெற்றி பெற்றவரின் ஆட்டத்திற்கு, நிகராக வைத்து பேசப்படும். தோல்வியும்.... இன்பத்தை கொடுப்பது, விளையாட்டில் மட்டும்தான்.                         

அகாடமியின் தோற்றம்தான் மாறியிருந்தது ஆட்கள் மாறவில்லை, போலித்தனம் கொஞ்சமும் இல்லாத, அதே அன்பு. மனதில் இருந்த இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது, கிளம்பலாம் என்று நினைக்கையில் தான், "என்ன டோர்ணமெண்ட்?” என்று விசாரித்தேன். அகாடமி சார்பில் சீனியர் மெம்பர்களுக்கான டோர்னமெண்ட் என்று சொன்னார்கள். சுந்தர் சார்தான் கேட்டார் "விளையாடுறியா?" என்று. யோசிக்காமல் தலையசைத்து விட்டேன். போட்டியில் கலந்து கொள்வதற்கு, பதிவு செய்வதற்கான காலக்கெடு முடிந்த பின்னரும், என்னையும் சேர்த்துக் கொண்டு, மொத்த அட்டவணையும் அரை மணி நேரத்தில் மாற்றி அமைத்து இருந்தார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பினேன். டோர்னமெண்ட் தொடங்குவதற்கு இன்னும் மூன்று நாட்கள் தான் இருந்தது, டோர்ணமெண்ட்ல் ஆடும் அளவிற்கு, மனதளவில் தயாராக இருக்கிறேனா? என்ற குழப்பம் என் மனதில். 

***************

சுவற்றில் பட்டு, தன்னை நோக்கி வரும் பந்தை, தன் முழு பலத்தோடு திருப்பி சுவற்றை நோக்கி அடித்துக் கொண்டிருந்தான், மணி. நிஜமான டெண்ணிஸ் மேட்ச் ஆடுவது போலவே அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தாலும், இந்த பயிற்சியின் உத்வேகம் அவனுக்கு போதவில்லை. பந்தை அடிக்கும் விசை, அது சுவற்றில் பட்டு, எந்த திசையில் எவ்வளவு, வேகத்தில் திரும்பி வரும் என்பதை அவன் எளிதாக கணித்து விடுவதால், எதிராளியுடன் ஆடும் உத்வேகத்திற்கு, சுவரால் ஈடுகொடுக்க முடியவில்லை. போதும் என்று தோன்றவே ஆடுவதை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினான். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இன்று மீண்டும் டென்னிஸ் விளையாட போகிறான். அதன் தாக்கமோ?? என்னவோ?? காலையில் இருந்தே கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தான். டென்னிஸின் தயவும், நேத்ராவின் போதனையும், அவன் மானசஞ்சலத்தை கொஞ்சம் மட்டுப்படுத்தியிருந்தது. 

"எத்தனை மணிக்கு தம்பி உன்னோட மேட்ச்?" குளித்து முடித்துவிட்டு, காலை உணவை உண்டு கொண்டு இருக்கையில், மணியின் தாத்தா கேட்டார்.

"ஈவினிங் ஆறு மணிக்கு!!" தொழில்முறையில் டோர்ணமென்ட் இல்லை என்பதாலும், வயது வந்தவர்களுக்கு வசதியாக இருக்கும் என்பதாலும், மாலை ஐந்து மணியிலிருந்து தான், போட்டிகள் ஆரம்பித்தன.

இரண்டு நாட்களுக்கு முன், மணி மீண்டும் டென்னிஸ் விளையாட ஆரம்பித்ததில் இருந்தே, மொத்தக் குடும்பமும் மகிழ்ச்சியாய் இருந்தது. அதிலும் டோர்னமெண்ட்டில் கலந்து கொள்ளப் போகிறேன் என்று அவன் சொன்னதும், அந்த மகிழ்ச்சி இரட்டிப்பானது. கடந்த சில வருடங்களில் தனக்கென்று அவன் செய்த முதல் காரியம் இதுதான். டோர்னமெண்ட் முடிந்ததும் கல்யாணத்தைப் பற்றிப் பேசலாம் என்று கூட, கூடிப் பேசி முடிவு செய்து இருந்தார்கள். தொழில்முறையில் ஆடிய போதெல்லாம், இவன் கெஞ்சிக் கேட்டும் வராதவர்கள், இன்று, இவன் விளையாடுவதைப் பார்ப்பதற்கு நேற்றில் இருந்தே தயாராக ஆரம்பித்தார்கள்.

"தாத்தா!!" கொஞ்சம் தயக்கமாக ஆரம்பித்தான் மணி.

"இன்னைக்கு, நீங்க யாரும் வரவேண்டாமே!!" என்ற மணி மூவரும் கேள்வியோடு பார்க்க

"ரொம்ப நாள் கழிச்சு ஆடுறேன், கொஞ்சம் டென்ஸ்டா, நீங்க எல்லாரும் வந்தால இன்னும் அண்கம்பர்டபில இருக்கும்!! அடுத்த மேட்ச்ள இருந்து ஓகே!!" என்ற மணியைப் பார்த்து சிரித்தார், அவனது தாத்தா."சரிப்பா!!" என்றவர், வேறு எதுவும் சொல்லவில்லை. சுமாவுக்கு, அவர் அப்படி ஒத்துக் கொண்டதில் சம்மதம் இல்லை என்பதை அவள் முகம் காட்டி கொடுத்தது. தன் மகன் சார்ந்த எல்லா விஷயத்திலும், தன் பங்கு இல்லாமல் இருக்கக்கூடாது என்ற மனநிலையில் இருந்தால், அவள்.

*************

அன்று மாலை,

மணியின் இதயத்துடிப்பு நொடிக்கு நொடி எகிறிக் கொண்டிருந்தது. அகாடமியின் ஒரு அலுவலக அறையில் அமர்ந்து இருந்தான். திடீரென்று மதியத்தில் இருந்து மழை பெய்யவே, வெளியே அரங்கத்தில் திட்டமிடப்பட்ட போட்டிகள் அனைத்தும் உள்ள அரங்கத்திற்கு மாற்றப்பட்டது. உள்ள அரங்கத்தின் எண்ணிக்கை போதாமையால் அடுத்தடுத்த போட்டிகள தள்ளிப் போயின. தன்னை மொத்தமாக மீட்டுக்கொள்வதற்கு, இதைவிட சிறந்த வாய்ப்பு எனக்கு கிட்டாது என்பதில் உறுதியாக இருந்தான். அந்த உறுதிதான் இந்த படபடப்பிற்கு துவக்கப் புள்ளியே. தொழில்முறை போட்டிகளில் ஆடிய தனக்கு, பொழுது போக்கிற்காகவும், உடல் நலத்திற்காகவும் விளையாடுபவர்கள் விளையாடும் இந்த போட்டிகளில் கொஞ்சம் சவால் விடக்கூடிய ஆட்கள் இருப்பது கூட வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருந்தும், கொஞ்சம் பதட்டமாகவே இருந்தான். மீண்டும் நேர் செட்களில் மிகவும் எளிதாக வென்று விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தும், இந்த காத்திருப்பு அவன் படபடப்பை அதிகரிக்கத்தான் செய்தது. 

அவன் போட்டிக்கான அழைப்பு வந்ததும், அரங்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான். உள்ளங்கைகள் வியர்க்க ஆரம்பித்தன. இதயம், அவன் மார்புக் கூட்டுக்குள் இல்லாமல், ஏதோ சட்டைப்பையிலிருந்து துடிப்பதை போல் தோன்றியது அவனுக்கு. அரங்கத்தில் நுழைந்ததுமே, இதயத்தின் துடிப்பு இன்னும் கொஞ்சம் எகிறியது. அவன் ஷூ-அணிந்த உள்ளங்கால்கள், வியர்க்க தொடங்கியது. டாஸ் முடித்து, தனக்கான பக்கத்தில் சென்று நின்றவன், மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டான். காயம் காரணமாக இரண்டு வருடங்கள் ஆடாமல் இருந்துவிட்டு, மீண்டும் முதல் போட்டியில் ஆடுவதற்கு முன் இருந்த பதட்டத்தை காட்டிலும், பல மடங்கு அதிக பதட்டத்தில் இருந்தான். வலது காலை தூக்கி ராக்கெட்டால் அதைத் தட்டி, தன் உணர்வுகளை எழுப்ப முயன்றான். ஏங்கே மயங்கி விழுந்து விடுவோமோ? என்ற என்ற எண்ணம் தோன்ற, "இன்னும் கொஞ்சம் தாக்குப் பிடிச்சுக்கோ" என்று திரும்பத் திரும்ப தனக்குள் சொல்லிக் கொண்டான்.

"Are you ready?" இன்று ரெபரி கேட்ட பொழுது, அவன் கைகள் நடுங்க ஆரம்பித்தன, ராக்கெட் கைநழுவி விடுமோ என்ற பயத்தில் அதை இறுக பற்றி கொண்டு, ஆமோதிப்பாக தலையசைத்தான். ரெபரி விசிலை வாய்க்கு கொண்டு செல்ல,

"இன்னும் பத்து செகண்ட் தான்!!” பற்களைக் கடித்தவாறு, திரும்பத் திரும்ப தனக்குள் சொல்லிக் கொண்டான். விசில் ஊதப்பட்ட சத்தம், அவன் காதுகளை எட்டவில்லை, அவன் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் என்று அவன் பெரிதும்நம்பிய பந்து அடிக்கப்படும் "டப்" என்ற ஓசையும் கேட்கவில்லை. எதிராளி பந்தை அடிக்கும் முன்னமே, உயிரற்ற பிணம் போல், முகம் தரையில் மோத, பொத்தென்று விழுந்தான். அவன் ஆடும் போதெல்லாம் கைதட்டலில் அதிர்ந்தத அரங்கம், அதிர்ச்சியில் அதிர்ந்தது, முதன்முதலாக. முதலுதவி செய்யும் முன்னமே கூட்டம் கூடிவிட்டதால், அரங்கத்திலிருந்து அகாடமியின் அலுவலகத்திற்குள் தூக்கிச் செல்லப்பட்டான். பெரிதாக சிகிச்சை என்று அவனுக்கு தேவைப்படவில்லை, தண்ணீர் தெளிக்கப்பட்ட முப்பது வினாடிகளிலேயே, எழுந்து அமர்ந்தான். உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது, கைகள் நடுங்கியது. சுற்றி பார்த்தவளின் கண்களில் அவன் உதவியாளர் படவும், கண் காட்டினான், அருகில் வந்ததும் எழுந்து நின்றவன், முதல் உதவியை மறுத்துவிட்டு, வண்டியை எடுத்துக் கொண்டு வரச் சொல்லிவிட்டு, அகாடமியின் வாயிலை நோக்கி நடந்தான்.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டும் போல் இருந்தவன் மனதில் தோன்றியது "சிகரெட்”. உடன் வந்த உதவியாளரை, சிகரெட் வாங்க பணித்தான். வாயில் நின்றவாறு திரும்பி, தன் கார் வருகிறதா என்று பார்த்தவனின் கண்களில் பட்டது அந்த கார், மஞ்சள் கலர் மினி கூப்பர். மதுவின் கார். சற்று அடங்கியிருந்த படபடப்பு மீண்டும் அதிகரித்தது. என்ன?? ஏது?? என்று யோசிக்கும் முன்னமே, அவன் கண்களில் பட்டாள், மது, உடன் ரஞ்சித்தும்


அவன் போட்டிக்கான அழைப்பு வருவதற்கு முன்,

பதட்டமான மனநிலையில் தன்னையறியாமல் அல்லது உள்ளுணர்வின் தூண்டுதலால், ஒருமுறை தற்பொழுது மது பார்க்க எப்படி இருக்கிறாள் என்று பேஸ்புக்கை திறந்தவன், அவளது ப்ரோஃபைலை திறக்க, மூன்று மாதங்களக்கு முன் அவள் பதிவிட்டிருந்த புகைப்படம் தான் முதலில் இருந்தது. “HBD Puzzle!!. It’s been five long years but I am yet to solve this puzzle!!” (இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - புதிர்!!. ஐந்து வருடங்கள் கழித்தும் இன்னும் நான் புரிந்து கொள்ள முடியாத புதிர்!!”) என்று உதடு குவித்து வைத்து, கண்களை சுருக்கி, மூக்கிற்கும், மேல் உதடுக்கும் நடுவில் ஆட்காட்டி விரலை மடக்கி வைத்தவாறு, அருகில் சிறத்தாவாறு இவளைப் பார்க்கும் ரஞ்சித்தை பார்த்துக் கொண்டிருந்தாள் மது. மதுவின் முகபாவனையை ரசித்துக் கொண்டிருந்தவன் முகத்தில் ஒரு சின்ன மலர்ச்சி தோன்றி, பின் மலர்ந்த முகம் சுருங்கியது. எனோ அவனுக்கு புகைப் படங்களுக்கான பகுதில் சென்று வெறும் புகைப்படங்களை பார்க்க எனோ தயங்கினான். அப்படியே தொடுதிரையை மேல் நோக்கி இழுத்தவன் கண்களில் பட்டதெல்லாம் மருத்துவம் சம்பந்தமான பகிர்தல்கள். அப்படி தொடுதிரையை உருட்டிக் கொண்டிருந்தவன் கண்களில் பட்டது வெறும் “HBD.” என்ற பதிவி. அதைப் பார்த்த நொடியே அவனுக்குத் தெரியும் அந்த வாழ்த்து தனக்கானது என்று, அது பதிவிடப்பட்ட தேதி அதை உறுதி செய்தது.

மானதெல்லாம் இதமான ஒரு உணர்வு பரவ, தொடுதிரையை அனைத்துவிட்டு, கண்களை முடி அமர்ந்திருந்த சேரில் தலைசாய்ந்தான். மணி தேடியது, மதுவின் மகிழ்ச்சியை அல்ல என்பதே அவனுக்கு அப்பொழுதுதான் புரிந்தது. மதுவின் நினைவில் எங்கோ ஒரு ஓரத்தில் நான் இருக்கிறேன் என்ற எண்ணத்தில், அவன் உடலும் உள்ளமும் சில நொடி சிலிர்த்து அடங்கியது. அதுவரை இருந்தா பதட்டம் நீங்கி போட்டிக்கு தாயாராக இருந்தான். அப்பொழுதுதான் மதுவின் மருத்துவம் சம்பந்தமான பதிவுகளை ஜீரணித்த மூளை, அதில் தொண்ணூறு சதவிகிதம் கற்பமுறுதல், அதில் உள்ள சிக்கல் சம்பந்தமான பதிவு என்று அவனுக்கு உணர்த்த, அவனது முகமும், மனமும் இருக்கியது. அதிவேகத்தில் செயல்பட்ட மூளை, தன்னால் சிந்திக்க முடிந்த அத்தனை செய்திகளையும் அவனுக்கு சொல்ல, அதில் சில, அவன் உயிரைப் பிடித்து ஆட்டியது. “இல்லை!!, இல்லை!!, அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை, தேவை இல்லாமல் கற்பனை செய்யாதே!!" என்று மனதிற்கு கடிவாளம் போட அது அடங்கவில்லை. கைகளில் வேர்க்க ஆரம்பித்து. நல்ல வேலையாக அந்த நேரம் பார்த்து அவன் ஆட்டத்திற்கான அழைப்பு வர, எண்ணங்களை உதறிக் கொண்டு நடக்க ஆரம்பத்தான், கால்கள் வேர்க்க தொடங்கியது. இதய துடிப்பு எகிறியது.

"இன்னும் கொஞ்சம் தாக்குப் பிடிச்சுக்கோ"

"இன்னும் பத்து செகண்ட் தான்!!” என்று விடியலுக்கு காத்திருந்தவனின் வானம், மொத்தமாக இருட்டியது. சூரியனை விழுங்கும் நிலவு போல.

"சிகரெட்” என்று சொல்லிவிட்டு திரும்பியவன் கண்களில் முதலில் மதுவின் கார் பட, என்ன?? ஏது?? என்று யோசிக்கும் முன்னமே, அவன் கண்களில் பட்டாள், மது. அழுகிறாள் என்பது, அடிக்கடி இடதுகையால் கண்களை துடைப்பதில் இருந்தே தெரிந்தது, வலது கையைப் பற்றிய படி, அவளுடன் நடந்து வந்து கொண்டிருந்தான் ரஞ்சித். இல்லை, இல்லை, மதுவைக் காட்டிலும், அவனது நடையின் வேகம் சற்று அதிகமாக இருந்தது, மதுவை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டுவந்தான். அந்த மினி கூப்பர் காரின் அருகில் வந்ததும் நின்றவள், ரஞ்சித்திடம் இருந்து கைகளை உருவிக் கொண்டவள், மறுப்பாக தலையசைத்தவாரே அவனிடம் ஏதோ சொல்ல, அவள் கண்களில் இருந்து நிற்காமல் வழிந்தது கண்ணீர். இடுப்பில் கையை வைத்து, கொஞ்சம் பின்னால் சாய்ந்து, பின் நேராக நின்று அவளிடம் கைகளை இங்கும் அங்கும் ஆட்டியவாறு, ஆக்ரோசாமாக பேசினான். மீண்டும் அவள் மறுப்பாக தலையசைத்தவாரே கெஞ்சும் பாவனையில் அவனிடம் சொல்ல, அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்று காரின் கதவைத் திறந்து, அவளை உள்ளே தள்ளினான், கதவை அடைத்தவன், வேகமாக சென்று டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை எடுத்தான். சில நொடிகளில் கார் மணியை கடந்து சென்றது, காரில் அமர்ந்திருந்த மதுவையே பார்த்துக் கொண்டிருந்தான் மணி. இருவரது கண்களும் ஒரு நொடி சந்திக்க, அந்த நொடி மணியின் இதயத் துடிப்பு மொத்தமாக வேலை நிறுத்தம் செய்தது. ஆனால் அவளின் கண்களோ அவனை பார்த்ததாற்கான எந்தவித, உணர்வுகளையும், அசைவையும் காட்டவில்லை. உருக்குலைந்து போனான்.

சிலை போல் அவன் நின்றிருக்க, அவன் தோளை யாரோ தொட, உணர்வு பெற்றவனாய் திரும்பிப் பார்த்தான்.

“சுத்தி நிறைய பேர் பார்க்கிங் பன்னிருந்தாங்க!!....., அதுதான் சார் லேட்!!” என்று பவ்வியமாக சொன்ன அவனது டிரைவர், மணி அமருவதற்கு, காரின் கதைவைத் திறந்தார்.

திறந்திருந்த கதவை கண்டுகொள்ளாமல் சென்றவன், டிரைவர் இருக்கையில் சென்று அமர, கதவை அடைத்த டிரைவர், அவன் பக்கம் செல்ல எத்தனிக்கும் போதே, அந்த கார் அங்கிருந்து நகர்ந்தது. எதுவும் புரியாமல் டிரைவர் குழம்பிப் பொய் நிற்க, எந்த குழப்பமும் இல்லாமல், அதே சமயம் எந்தவித சிந்தனையும் இல்லாமல், வெறுமையாய் மனதும் மூளையும் இருக்க, கருப்பாய் விரிந்து கிடந்த தார் சாலையை மட்டுமே எண்ணத்தில் கொண்டு, இலக்கு இல்லாமல் பயணித்து அந்த கார்.

**************

இரண்டு மணி நேரம் கழித்து,

அந்தக் கார் சென்று சேரும் இலக்கிலலாமல் மிதமான வேகத்தில் ஏதோ ஒரு சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது. மழை பெய்து ஓய்ந்ததற்கான சாட்சியாக சாலையெல்லாம் நீர் கோர்த்து இருந்தது. மணி தான் அந்த காரை ஒட்டிக்கொண்டு இருந்தான். கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்கள் கழித்து, இன்று தான் கார் ஓட்டுகிறான். சீராக துடித்துக் கொண்டிருந்தது அவன் இதயம், அவன் கைகள் நடுங்க வில்லை, உடல் வியர்க்க வில்லை, உள்ளம் படபடக்கவில்லை, மாறாக அது கொதித்து கொண்டிருந்தது. ரோட்டோரத்தில் ஒரு கடை தென்பட்டதும் வண்டியை நிறுத்தினான். இறங்கிச் சென்று ஒரு சிகரெட் பாக்கெட் மற்றும் லைட்டர் வாங்கிவன், மீண்டும் எடுத்தான். ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தவன், என்ன நினைத்தானோ, அதை வைத்துவிட்டான். வண்டியை ஓரம் கட்டியவன், GPSல் "தெங்குமரஹாடா" தேடியவன், காரை எடுத்தான். "நேத்ரா சொன்னதுதான் சரிநான் அவளை பற்றி தெரிந்து கொள்ள முயற்சித்திருக்க கூடாதுஎன்ற எண்ணம் தோன்ற, அதுவரை மிதமாக சென்று கொண்டிருந்த கார், வேகம் எடுத்தது.


                         


ஒரு மணி நேரம் கழித்து,

ஒன்றரைமணி நேரம் ஆகும் என்று காட்டிய தூரத்தை நாற்பது, நாற்பத்ததைந்து நிமிடங்களில் வந்தடைந்திருந்ததான். அவன் அமர்ந்திருந்த காரின் இன்ஜின் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. கண்ணாடியில் "சட்!! சட்!!” என்று விழுந்து கொண்டிருந்த தூரல்களின் மீது தன் மொத்த கவனத்தையும் வைத்திருந்தான். எண்ணம் சிதருறும் போதெல்லாம் "அவ உன்ன கவனிச்சிருக்க மாட்டா!!” என்று சமாதானப் படுத்திக் கொண்டு மீண்டும் கண்ணாடியில் விழும் மழைத்துளியின் மீது தன் கவனத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். கடந்த ஒரு வாரமாக தன் கட்டுப்பாட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து தான், தன்னை தனிமைப் படுத்திக்கொண்டு, நீலகிரி மலையின் கிழக்கு சரிவின் அடிவாரத்தில் வந்துவிட்டான். பத்தொன்பது வயதில், இதே போல ஒருமுறை தன்னை இழந்ததால், அவன் ஏற்படுத்திய, ஏற்படுத்திக் கொண்ட காயங்களை நினைத்தவன், எங்கே அப்படி மீண்டும் ஒருமுறை நடந்தால்? என்று யோசித்தவன், அதற்கு மேல் யோசிக்கவில்லை.

அவனுக்கு நன்றாக தெரியும், அவன் மீண்டும் ஒரு எமோஷனல் பிரேக்டவுனின் விழும்பில் இருக்கிறான் என்பது. அப்படி மனம் சஞ்சலப்படும் போதெல்லாம், இந்த பள்ளத்தாக்கும், அந்த காட்டாரும் தான் அவனை கட்டுப்படுத்தி, சமாநிலைக்கு கொண்டுவரும். ஒன்றரை வருடங்கள் கழித்து, மீண்டும் அந்த காட்டில் தன்னை தொலைத்துக் கொள்ளும்வரை, அந்த டென்னிஸ் அக்கடமியில் நடந்த நிகழ்வை தள்ளி வைத்திருக்க படாத பாடுபட்டான். வயது முதிர்ச்சியோ, அல்லது வாழ்க்கைப் பாடாமோ, அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றிருந்தான். அமர்ந்திருந்த சீட்டை சரித்தவன், காரின் கூரையை வெறித்தான். அடுத்த நொடி, இது போன்ற எத்தனையோ இரவுகளில், மதுவும் அவனும், கொஞ்சிக்கொண்டும், உரசிக்கொண்டும் இருந்த நினைவுகள் மடைதிறந்த வெள்ளம் போல அவன் மனதை நிரப்பிக் கொண்டது. அடுத்த மூன்று நொடிகளில், சிகரெட்டையும, லைட்டரையும் எடுத்துக் கொண்டு, காரில் இருந்து இறங்கி, எதிரே கிடந்த மண் பாதையில் நடக்க ஆரம்பித்திருந்தான். எதுக்கு மது அங்க வந்த??” என்று அவன் மனது புலம்ப ஆரம்பிக்க அவனது கால்கள் வேகம் எடுத்தது. ஓட்டமும் நடையுமாக அவன் அந்தக் காட்டை நோக்கி நடக்க, அதுவரை அவன் மனதில் அடக்கி வைத்திருந்த எண்ணங்கள் கட்டவிழ்ந்தது.

"மதுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஏதாவது சிக்கல் இருக்குமோ?"
இல்ல, இல்ல, தேவை இல்லாம எதுவும் யோசிக்காதீங்க.

"அதுக்கு, லவ் பண்ணும்போது எடுத்துக்கிட்ட கர்ப்பத்தடை மாத்திரை தான் காரணமாய் இருக்குமோ?" அய்யோ என்று அலறியது அவன் மனம்.

அவனது நடை ஓட்டம் ஆக மாறியது.

"தேவையில்லாம எதையும் யோசிக்காத, அப்படி எல்லாம் ஒன்னும் இருக்காது, கல்யாணம் முடிஞ்சு ஒன்றரை வருஷம் தான் ஆறது" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு மனதை சமாதானப்படுத்த முயன்றார்.

சிறிதாக தூறல் விழ ஆரம்பித்தது. பளீரென்ற மின்னல் வெட்டும் வானத்தை வெடி வைத்து வெடிக்க வைத்ததைப் போல அதைத் தொடர்ந்து வந்த இடியின் சத்தமும் அவனை ஒரு நிமிடம் திடுக்கிட வைத்தது. மின்னல் வெளிச்சத்தில், தெரிந்த அந்த காடும், மலையும், அதன் பிரமாண்டமும், அவனுக்குள் அச்சத்தையும், அது தனக்குள் புதைத்து வைத்திருக்கும் ஆபத்தையும் உணர்த்தியது. இருந்தும் காட்டை நோக்கி நகரும் அவன் கால்கள் நிற்கவில்லை. தூரத்தில், அந்த காட்டுக்குள், ஆயிரம் பேர் "ஓ" வென்று கத்திக் கொண்டு ஓடுவதைப் போன்ற இரைச்சல் அவன் காதுகளை எட்ட, எதேனும் நடந்து, இந்த காற்றோடு காற்றாக, இந்த இருளோடு இருளாக கரைந்து போய்விடக் கூடாத என்று எங்கியது அவன் உள்ளம். அவன் காட்டுக்குள் நடக்க நடக்க அந்த இரைச்சல் அவனை நோக்கி வருவது போல் தோன்ற, பயம் அவன் உள்ளத்தை கவ்விக் கொண்டது.

அவனுள், பல இரவு இதேபோன்று, அலைந்து திரிந்தததைப் போல மிகவும் பழக்கபட்ட, அதே நேரம் பெரும் தவறு நிகழப் போகிறது என்ற உணர்வு. இதேபோன்றதொரு பயம் அப்பிய இரவில் தான், யாரேனும் ஒரு வார்த்தை ஆறுதலாய் சொல்லி விட மாட்டார்களா?? என்று அநாதையாய் அலைந்து திரிந்து, அது கிட்டாமல் போய் விரக்தியுற்று, பெரும் பாவத்தை, இந்த நொடிவரை அவனை இரையாய் கேட்கும் சாபத்தை அவன் பெற்றது அவன் நினைவுக்கு வந்தது. அவனுக்கு கதறி அழ வேண்டும் போல் தோன்றியது முயற்சி செய்தும் முடியவில்லை. ஆனால் "ஓ"வென்ற ஓலம் அவன் காதுகளில் ஒலித்தது. அவனால் முடியாத அழுகையை, அவனுக்காக அழுது கொண்டிருந்தது அந்த காட்டாறு. இல்லாத ஒளியை, வெள்ளை வெளேரென்று பிரதிபலித்தவாறு, "ஓ" என்று ஓலமிட்டு, மணியின் மனதைப் போலவே கொந்தளித்துக் கொண்டிருந்தது, அந்த காட்டாறு.

அன்று பகலில் பெய்த பெரு மழையின் காரணமாக, இயற்கை தனக்கு போட்டிருந்த வேலியை எல்லாம் உடைத்துக் கொண்டு, பெரும் பாய்ச்சலில் பாய்ந்து கொண்டு இருந்தது அந்தக் காட்டாறு. அந்த காட்டாற்று வெள்ளம் எல்லாம் தன் கண்ணீர் தான் என்று நினைத்தவன் கொஞ்சம் முன்னகர்ந்து, தண்ணீரின் விழும்பில் நின்று கொண்டான். அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

அழுதுகொண்டிருந்த மதுவை, இழுத்துக் கொண்டு வந்து காரில் வழுக்கட்டாயமாக ரஞ்சித் ஏற்றியது நினைவுக்கு வர

“ஒரேவேலை, அவன் என் மதுவை அடிப்பானோ?, பொது இடம் என்பதால்தான் கட்டுப்பாடுடன் இருந்தானோ?” என்று யோசித்து அய்யோ என்று கதறியது அவன் உள்ளம்.

ரஞ்சித், மதுவை காயப்படுத்துவானோ? என்று நினைக்கும் பொழுதே அவன் மனதில் ஆத்திரம் தோன்ற,

“அப்படியெல்லாம் இருக்காது. மது அடிமை போன்று அடங்கிப்போகும் பெண்ணல்ல!!” தனக்கு தானே சமாதானம் சொல்லி ஆத்திரத்தை ஓதுக்கி தள்ளியவன்

“மது அழும் போது ஆறுதல் சொல்லாமல், எப்படி அவனால் கல்நெஞ்சத்துடன் நடந்து கொள்ள முடிந்தது? முரடனிடமா என் மது சிக்கியிருக்கிறாள்?” என்று மீண்டும் அலறியது அவன் உள்ளம்.

“ஒரு புருஷன், முன்னால் காதலனுக்காக அழும் தன் மனைவியை திட்டாமல், கொஞ்சுவானு எதிர்பாக்கிறையா?” என்ற எதிர் கேள்வி, அவனை துடிக்க செய்தது.

“எதுக்கு மது அங்க வந்தே?” ஓலமிட்டுக் கொண்டிருந்த நதியில் அவன் பார்வை நிலைத்திருக்க, மீண்டும் ஆரம்பித்த கேள்வியிலேயே வந்து நின்றது அவனது மனம்.

அவள் தேடிவந்த பொழுது மறுதலித்திருக்க கூடாதோ என்று எண்ணினான். இப்படி துன்பப்படுவதற்கு பதில் அவளை மணந்து கொண்டிருந்தால், அவளின் இன்பத்திலாவது தான் தேடும் ஆறுதல் கிட்டியிருக்குமோ என்று முதல் முறையாக தன்னையே கேள்வி கேட்டான்.

மதுவின் விழிகள் தன் மீது ஒரு நொடி விழுந்ததை நினைத்தவன்

"என் முகமே அவளுக்கு மறந்துவிட்டதா? என்று எழுந்த கேள்வி அவனை மொத்தமாக நொறுக்கி போட்டது.

“அவள் அழும் போது ஆறுதல் சொல்லக் கூட வக்கற்று நின்றேனே?”

அவளின் வாழ்வில் முதன்மையான ஆணாக இருந்திருக்க வேண்டிய தன்னை ஒரு வழிபோக்கனாய் மாற்றிய வாழ்வை நினைக்கையில் “போதும்!! இந்த ஆற்றில் குதித்து விடு!!” என்று உள்ளிருந்து ஒரு குரல் சொல்ல, "நோ" என்று இன்னொரு குரல் அவனை தடுத்தது. இந்த முறை ஆற்றில் இறங்கினால் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அவனை எச்சரித்து அவனது மூளை. அப்படியே சோர்ந்து அமர்ந்தான். உள்ளங்கைகளுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டான்.

பின் என்ன நினைத்தானோ எழுந்து நின்றான், பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவன், அந்த காட்டில் இருந்து வெளியேறும் எண்ணத்துடன் இரண்டி எடுத்து வைத்த போது, சருகுகள் சலசலக்க, ஏதோ ஒரு மிருகத்தின் காலடியோசை, அவன் காதுகளில் கேட்டது. சட்டென ஓசை வந்த திசை பார்த்து அவன் கண்களில் எதுவும் புலப்படவில்லை, இருந்தும் அந்த ஓசையை அவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. தன்னிச்சையாக காலடி ஓசையின் எதிர் திசையில் வேகமாக அவன் கால்கள் நகர, ஆபத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்ள, அந்த ஆற்றுக்குள் இறங்கினான். "ஆற்றில் பெருவெள்ளம்" என்று அவன் மூளை உணர்த்திய அதே நொடியில், அவனை இழுத்துச் சென்றது அந்தக் காட்டாற்று வெள்ளம். அறிவையும், ஆற்றலையும் ஒன்றுமில்லாமல் செய்வதில் உணர்வு பெருகும்!! வெள்ளப் பெருக்கும்!! ஒன்று. காட்டாற்று வெள்ளத்தில் நீந்துவது என்பது மீன்களால் கூட முடியாது. வெள்ளம் அவனை வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றது.

என்ன நடக்கிறது என்று உணரும் முன்னமே, அவனது விலாஎழும்பு ஒரு பாறையில் மோத, தானாகத் திறந்த வாயினுள் புகுந்தது ஆற்று வெள்ளம். சில நேரத்திற்கெல்லாம் மூர்ச்சையாகி தண்ணீரோடு தண்ணீராக கரைந்து போனான். நினைவு வந்தபோது ஏதோ ஒரு பாறையில் அவனைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்தது, அந்த காட்டாறு. பெரிதாக இருந்த பாறையின் நடுவில் இருந்த ஓரடி பிளவின் இழுப்பால், அவன் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருந்தது. பாறையைப் பற்றிக்கொண்டு தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் உடல் வலுவும், உள்ளத்தில் உறுதியும் சுத்தமாக இல்லை அவனிடம். மொத்தமாக தன்னை அந்தக் காட்டாறுக்கு ஒப்புக்கொடுத்து இருந்தான். மூச்சுக் குழாயில் இருந்த தண்ணீர் அவன் மூச்சு விடுவதை அனுமதிக்கவில்லை. அந்த காட்டாற்று வெள்ளத்தின் பேரிரைச்சல் அவன் காதுகளை எட்ட வில்லை. வலதுபுற இடுப்பு எலும்பில் ஏதோ ஒன்று அழுத்த, அதன் வலி மட்டுமே அவன் உணர்ந்த ஒரே உணர்வு. அந்தப் பாறையின் பிளவில் சிக்கியிருந்த ஒரு மரக் கொம்பு, அவன் இடுப்பில் அழுத்திக் கொண்டிருந்தது.மூச்சுவிடும் சிரமத்துக்கு இடையில், ஒரு பக்கமாக அவன் இடுப்பு எலும்பை உடைப்பது போல அந்த கட்டை அழுத்த, இடுப்பு எலும்பின் கடுப்பில், வலி தாங்காது, அவன் உதடு துடித்தது. அந்த நிலையிலும் அவனது மனமும், "இப்படி ஒரு சாவுதான் உனக்கு சரியானது" என்று அவனை எள்ளி நகையாடியது. ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஒரு மரம் அவன் பின் மண்டையை தாக்க, அதன் விசையால் அடி வயிறு வரை அந்தப் பாறையின் மேல் இழுத்து போடப்பட்டு இருந்தால். அருகிலிருந்த மற்றொரு பாறையில் அந்த மரத்தின் தண்டு சிக்கிக் கொள்ள, அந்த மரம் அவனது முதுகில் விழுந்து அவனை பாறையோடு அழுத்திப் பிடித்துக்கொண்டது. அவன் இடுப்பில் குத்திக் கொண்டிருந்த அந்தக் அட்டையோ அவனது தொடையில் நாலு இஞ்சுக்கு ஒரு கோடு கிழித்து இருந்தது.

பளீரென்ற வெளிச்சம், கண்களைக் கூசச் செய்யாத, பார்வைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பெரு வெளிச்சம் அவனைத் தாக்க, அவன் உடல் வலியை எல்லாம், அந்த வெளிச்சம் எடுத்துக் கொண்டு, கண நொடியில் நீங்க, அண்டம் விழுங்கும் இருள் அவனை கவ்விக்கொண்டது. இருள் தின்னும் வெளிச்சமும், வெளிச்சம் புகா இருளும், அந்த மரத்தின் உபயம். ஆற்று வெள்ளத்தின் இழுப்பை அவன் உணரவில்லை, உடல் சில்லிட்டது, ஆனால் அதற்கு காரணம் ஆற்று நீர் இல்லை. ஆகாயத்தில் மிதப்பதை போல உணர்ந்தவனுக்கு, இதுதான் உடல் அற்ற உயிரின் உணரவோ என்று தோன்றியது.


4 கருத்துகள்:

  1. மது மணி சேர்வது தான் கரெக்ட் .மாத்தி சேர்த்து வச்சுட்டீங்க கதை படிக்கவே கஷ்டமா இருக்கு. தயவுசெய்து இந்த கதை போல் எழுத வேண்டாம். சேர்த்து வைக்கிற மாதிரி எழுதுங்க ரொம்ப கஷ்டமா இருக்கு

    பதிலளிநீக்கு
  2. Ithu sari illa... Mani enna thappu pannan... First time padichen... Athuvum bad ending... Ithu sari illa. Marubadium First la irunthu eluthuna

    பதிலளிநீக்கு